வளர்ப்புநாய்கள், குறிப்பாக கொஞ்சிவளர்க்கப்படும் நாய்கள், வளராத குழந்தைகள். அவற்றை வளர்ப்பவர்களுக்கும் அந்த எண்ணம்தான். அவர்களுக்கு தீராதவிளையாட்டும் அணையாத பெரும்பாசமும் கொண்ட ஒரு குழந்தை தேவைப்படுகிறது. நாய் ஒருபோதும் விளையாடிச் சலிப்பதில்லை. ’தீயால் அறுத்துச் சுடினும் மாளாக்காதல்’ இப்புவியில் அந்த ஓர் உயிரிடம் மட்டுமே உள்ளது.
தெருநாய்கள் வேறொருவகை. தெரு கொடூரமானது, அடர்காட்டைவிட. காட்டில் ஒளிந்துகொள்ள, ஓடித்தப்ப இடமுண்டு. உணவும் உண்டு. தெருவில் உணவு குறைவு. அதன்பொருட்டு பெருங்கூட்டம் சமர்புரியவேண்டும். நாய்கள் மட்டுமே கொண்ட உலகம் அது. அங்கே தொற்றுநோய்கள் மிகுதி. அத்துடன் எங்கும் எப்போதும் அபாயம்.
தெருநாய்கள் இரண்டு வகை. மிகப்பெரும்பாலானவை உடலெங்கும் அச்சமும் பணிவும் கொண்டவை. குழைந்து, வளையும் உடல். ஒடுங்கித்தழைந்த தலை. பின்னால் மடிந்த காதுகள், நம் பார்வையை தவிர்க்கும் கண்கள், அடிவயிற்றிலொட்டிய வால். அவை அடிமைகள். வதையே வாழ்வெனக்கொண்டவை. பசி, வலி, அவமதிப்பு.
இன்னொரு வகை தெருநாய்கள் சண்டியர்கள். தெருவை ஆள்பவை அவைதான். உடலெங்கும் கடிவாங்கிய விழுப்புண் தழும்புகள். கிழிந்த காதுகள். முரட்டு உடல். அதிகாரத்துடன் தூக்கிய தலை. சொடுக்கிச் சொடுக்கித் திரும்பும் காதுகள். திமிரான நிதானமான நடை, ஆனால் தெருமூலையில் ஐயத்திற்குரிய ஏதேனும் தட்டுபட்டால் முழங்கும் குரலுடன் விசைகொண்டு ஓடி அங்கே செல்லும்.
சண்டியர்களுக்கு இரண்டு முகம். சகநாய்களிடம் கேள்விக்கே அப்பாற்பட்ட ஆதிக்கம். தெருவை ஆக்ரமிப்பவர்களிடம் குரூரம். ஆனால் விருந்தினர் என நம்மை எண்ணிவிட்டால் கம்பீரமான, அளவான முகபாவனைகளால் வரவேற்று முகமனுரைத்து உடனிருந்து உபசரித்து வழியனுப்புவார்கள். அப்படி பலரை எங்கள் பயணங்களில் சந்தித்திருக்கிறோம்.
தெருநாய்களிடம் உள்ள முதிர்ச்சி, மதியூகம், அமைதி வீட்டுநாய்களிடம் இருப்பதில்லை. தெருநாய்களில் தென்படும் அத்தனை வேறுபட்ட குணாதிசயங்கள், ஆளுமைமாறுபாடுகளும் அவற்றில் இல்லை. தெருநாய்கள் போராடி வளர்ந்தவை, சுதந்திரமானவை. ஆகவே அவற்றின் உள்ளியல்புகள் முழுக்க வளர்ச்சியடைந்துள்ளன. வீரம், கோழைத்தனம், சூழ்ச்சி எல்லாமே.
மூன்றாம் வகை நாய்கள் உண்டு. அவை வீடு கொண்டவை, ’உரிமையாளரால்’ உணவிட்டு வளர்க்கப்படுபவை. ஆனால் கட்டிப்போட்டு, கட்டிடவளைப்புக்குள் நிறுத்தப்படுவதில்லை. உரிமையாளரின் வேலை என்பது உணவிடுவது மட்டுமே. மற்றபடி முற்றிலும் சுதந்திரமானவை அவை. ஆகவே தெருநாய்களுக்குரிய ஆளுமைத்திறன் கொண்டவை. ஆனால் தெருநாய்களின் குரூரமும், ஒடுக்கமும் அற்றவை.
அத்தகையவன் கருப்பன். எங்கள் மலைத்தங்குமிடத்திற்கு அருகே மாதையன் என்பவரின் நாய். நிகழ்வுகள் தொடங்கி மக்கள் வர ஆரம்பிக்கும்போது, பெரும்பாலும் வெள்ளியன்று காலை உள்ளே வருவான். அனைவருடனும் இணைந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்துவிட்டு ஞாயிறு மாலையில் கிளம்பிச் செல்வான். அங்கே நான் இருந்தால் என்னுடனேயே இருப்பான். ஆனால் அருகே வருவதில்லை, போதிய தொலைவு விட்டு பார்த்துக்கொண்டு படுத்திருப்பான்.
கருப்பன் மிகமிக அகமுதிர்ச்சி கொண்டவன். மிக அவசியம் இருந்தாலன்றி குரைப்பதில்லை. பெரும்பாலானவர்கள் அவன் குரலைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. எவரிடமும் அவனாகச் சென்று கொஞ்ச முற்படுவதில்லை. எவரிடமும் ஒரு குறிப்பிட்ட தொலைவைப் பேணுவான்.
கருப்பனுக்கு மற்றநாய்களுடன் நல்லுறவு. ஏனென்றால் அவனுக்கு உணவுப்போராட்டம் தெரியாது. நல்ல வேட்டையன். ஆகவே எவரையும் நம்பி இல்லை. அவன் மனிதர்கள் மேல் கொண்ட அன்பினால்தான் தேடி வருகிறான். உணவை அவனே தேடிக்கொள்ள முடியும். பிறநாய்களைக் கண்டால் “வா வா, சோறு இருக்கு” என்று அவனே அவற்றை கூட்டி வருவதுண்டு.
என்னுடன் கருப்பனுக்கு மதிப்பும் அணுக்கமும் கொண்ட உறவு. ஒருநாளில் ஒரு முறை அல்லது இருமுறை அவன் மண்டையைத் தொடுவேன். நாங்கள் இருவருமே வாழ்க்கையை பார்த்து, கொஞ்சம் முதிய நிலையில் இருப்பவர்கள். முதியோருக்கிடையே உள்ள அளவான அணுக்கம்.
கருப்பன் கூட்டமாக மக்கள் இருக்கும் இடங்களில் இருக்க விரும்புபவன். வகுப்புகளுக்குள் வந்து ஆசிரியரின் அருகே அமர்ந்துகொள்வதுண்டு. பசவமடம் சுவாமிஜியின் வகுப்பில் அவர் அருகே அவன் அமர்ந்தபோது எவரோ ஸூ ஸூ என துரத்தினர். “துரத்தவேண்டாம். ஜன்மவலையில் ஏன் அவன் இங்கிருக்கிறான், அவனுக்கு என்ன புரிகிறது என்றெல்லாம் நாம் என்ன கண்டோம்? சிவநாமம் கேட்கும் பாக்கியம் இருக்கலாம் அல்லவா?” என்றார்.