(14 மற்றும் 15 ஆகஸ்ட்டில் ஈரோட்டில் நிகழும் தமிழ்விக்கி -தூரன் விருதுவிழாவில் எம்.என்.காரஸேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்)
“எழுத்தச்சன் சொல்கிறார் ராமனின் கதையென்று. எடுத்தெழுதிய மாப்பிளை சொல்கிறார் சீதையின் கதை என்று”. எம்.என்.காரஸேரி எழுதிய மலையாளராமாயணம் என்னும் நூலைப் பற்றி ஒரு பகடி விமர்சனம். அதை காரஸேரியே எடுத்து ’வாட்ஸப் ஸ்டேட்டஸ்’ ஆக வைத்திருந்தார்.
மலையாளத்தில் அவ்வப்போது இப்படிப்பட்ட புன்னகைக்க வைக்கும் விமர்சனங்கள் வருவதுண்டு, அது ஒரு பஷீரியன் உலகம். நான் அதைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் சிரித்தபடிச் சொன்னார். “அதற்கு முன்பு வேடனும் சீதையின் கதை என்றுதான் சொன்னான்”
எம்.என்.காரஸேரி எழுதி, மாத்ருபூமி வெளியிட்டுள்ள மலையாள ராமாயணம் ஒரு சுருக்கமான, அழகான நூல். அவருக்கே உரிய ஒழுக்கான நடையில், ராமாயணக் கதையை திரும்பச் சொல்கிறார். ஆனால் இது வான்மீகி எழுதிய ராமாயணக் கதையை அணுக்கமாகப் பின்பற்றி, கதைமாந்தர்கள் வழியாகக் கதையைச் சுருக்கிச் சொல்கிறது.
நூலின் முகவுரையில் ராமனையும் ராமாயணத்தையும் பற்றி நடக்கும் சமகால அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை என்கிறார் காரஸேரி. ராமனின் கதை என்றென்றும் நிலைகொள்ளும் இதிகாசம் என்றும், அதன் அறமதிப்பீடுகளையும் உணர்வுகளையும் மட்டுமே முன்வைப்பதாகவும், குறிப்பாக அனைத்து மதத்தவரும் வாசிப்பதற்காக அதை எழுதியதாகவும் சொல்கிறார். மதங்களிடையே அவநம்பிக்கை நிறைந்துள்ள சூழலில் அந்த எல்லைகளைக் கடப்பதற்காக ராமனின் கதை உதவும் என்கிறார்
பலவகையிலும் முக்கியமானது இச்சிறுநூல். இன்றைய வாசகர்களுக்கு, அதுவும் இந்து அல்லாத வாசர்களுக்கு அணுக்கமாகும் மொழிநடை கொண்டது. மலையாளச் சூழலில் இதிகாசங்களும் புராணங்களும் சம்ஸ்கிருதம் மண்டிய மொழிநடையில் அமைவதே வழக்கம்.காரஸேரி அதை எளிய சமகால மொழிக்கு கொண்டுவருவதுடன், கூடுமானவரை சம்ஸ்கிருதத்தை தவிர்க்கிறார். கிரௌஞ்சப் பட்சி என்பதை குரரிப்பறவை என்றும், சிம்ஸபா விருட்சம் என்பதை இருவுள் மரம் என்றும் குறிப்பிடுகிறார்.
அதேசமயம், மூலராமாயணத்திலுள்ள பிராமண பக்தி, பதிபக்தி, பசுபக்தி போன்றவற்றை அவ்வண்ணமே நிலைநிறுத்தியிருப்பதாகவும், அவற்றை மாற்றுவது மூலத்திற்கு நியாயம் செய்வதாகாது என்றும் காரஸேரி சொல்கிறார். ஒரு நல்ல சமகால வாசகன் அவற்றை இன்றைய அற – ஒழுக்கப் பார்வையுடன் அணுகமாட்டான், அவை நான்காயிரமாண்டுகளுக்கு முன்பு, சமூக உருவாக்கம் நிகழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று புரிந்துகொள்வான் என்கிறார்.
கதையைச் சுருக்குவதற்கு காரஸேரி கடைப்பிடித்திருக்கும் வழிமுறை கதைமாந்தரை, கதைநடக்கும் இடங்களை மையமாக்கி அத்தியாயங்களுக்கு தலைப்பிட்டு, அந்த அடிப்படையில் கதையை தொகுத்திருப்பது. இந்நூல் ‘நாரதன்’ ‘விஸ்வாமித்திரன்’ ‘மேனகா’ என ஐம்பது அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது புதியவாசகன் கதையைச் சுருக்கிக்கொள்ள உதவியானது.
சுவாரசியமான பல சிக்கல்கள் கொண்டது இந்த நூல். மாரீசமானை துரத்திச் சென்ற ராமனின் ஓசைகேட்டு, அண்ணனை தேடிக்கிளம்பும் லட்சுமணன் ஒரு கோடு வரைந்து அதை சீதை கடக்கலாகாது என்று சொல்லிவிட்டு சென்றதாகவும், அதை சீதை கடந்தாள் என்றும், ராவணன் அவளை கவர்ந்துசெல்ல அதுவே காரணம் என்றும், ஒரு புகழ்பெற்ற கதை உண்டு. லட்சுமணரேகை ஒரு பெரிய படிமம். ஆனால் இந்தக்கதை வால்மீகி ராமாயணத்தில் இல்லை. பிற்காலக்கதை இது. அத்யாத்மராமாயணத்தில் உள்ளது. காரஸேரி அதை இந்நூலில் சேர்க்கவில்லை.
அதேபோல வானரங்களும் பிறரும் இலங்கையை கடக்க சேதுப்பாலம் அமைக்கையில் ஓர் அணில் அவர்களுக்கு உதவியதனால் ராமன் அதன் முதுகில் தடவினான் என்றும், அதனால் முதுகில் கோடு விழுந்தது என்றும் சொல்லப்படுவது ஒரு நாட்டார்க்கதை, அதுவும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. காரஸேரி அதை தவிர்த்துவிட்டிருக்கிறார்.
சொல்வலர்களில் முன்னிலையில் நிற்பவரான நாரதரிடம் தவத்தாரான வால்மீகி கேட்டார். “இந்த உலகில் நற்குணம் கொண்டவனும், வீரம் நிறைந்தனும், அறச்செல்வனும், உண்மையானவனும், நோன்புகொண்டவனும், ஆற்றல்கொண்டவனும், அனைவருக்கும் பிரியமானவனுமான மாமனிதன் யா?”.
நாரதன் சொன்னார். “இக்ஷுவாகு குலத்தில் பிறந்தவனும் மக்களால் ராமன் என அழைக்கப்பட்டவனுமாகிய ஒருவனே அத்தகுதி கொண்டவன்”
என்று ஒரு நாவல் போல ஆரம்பிக்கிறது காரஸேரியின் இந்நூல். இந்த தொடக்கம் பற்றி அவர் ஓர் உரையில் ராமாயணத்தில் வால்மீகி ராமனைப் பற்றிச் சொல்லும் ஒரு வரியை தன்னை மிகக்கவர்ந்த ஒன்று என்கிறார். ராமனை இன்சொலன் என்று சொல்லும் வால்மீகி அவனை “பூர்வபாஷி” என்கிறார். அதாவது எவரிடமும் முதலில் தானே சென்று பேசுபவன். எங்கும் முதல்சொல் எடுப்பவன். அது மிகப்பெரிய ஒரு பண்பு என வால்மீகி சொல்வது தன்னை வெகுவாகச் சிந்திக்கச் செய்தது என்கிறார்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கே.சி.நாராயணன் “ மகாபாரதம் ஒரு ஸ்வதந்த்ர சாஃப்ட்வேர் ” என்னும் நூலை எழுதினார். மகாபாரதத்தைச் சுருக்கி மறுவடிவில் எழுதப்பட்ட அந்நூல் மகாபாரதம் மீதான கூரிய பார்வைகள் கொண்டது. பெரும்பாலும் அழகியல்நோக்கில் மகாபாரதத்தை வகுக்க முற்படுவது. தன் அணுக்கமான நண்பராகிய கே.சி.நாராயணன் எழுதிய அந்நூலுக்கு காரஸேரி தான் எழுதிய இந்நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார்.