அன்புள்ள ஜெ,
அன்னா ஹஸாரே தன் அறப்போராட்டத்தை ஆரம்பித்ததும் பெரும்பாலானவர்களைப் போல நானும் சந்தேகமும், அவநம்பிக்கையும், என்ன தான் நடக்கிறதென்று பார்க்கும் வெறும் குறுகுறுப்புமாகத்தான் இருந்தேன். உங்கள் முதல் இரண்டு கட்டுரைகளைப் படித்ததும் அடிப்படையான சந்தேகங்களும், குழப்பங்களும் ஒழிந்து ஒரு ஆசுவாசம் வந்தது. அவருடன் இருப்பவர்களின் நேர்மை மற்றும் நோக்கம் பற்றி நான் கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. அவர்களைப் பற்றி நீங்களும், நண்பர்களும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை வெறுமனே மற்ற நண்பர்களுக்கு விளக்கும் பொருட்டு மட்டுமே படித்தேன். என் மனதில் அன்னாஜி மட்டுமே முக்கியமாகப்பட்டார்.
ஒரு கட்டத்தில் வெகு இயல்பாக நானும் உங்கள் எண்ணங்களைத் தொடர்வதாக அமைந்தது. உதாரணமாக பொதுவாக உங்களிடம் வைக்கப்பட்ட சந்தேகம் நிறைந்த கேள்விகளுக்கு என் மனதில் தோண்றிய பதில்களும், உங்கள் விளக்கங்களும் ஒன்றாகவே இருப்பதைக் கண்டு நான் சிந்திக்கும் வழியை நினைத்துத் திருப்தியடைந்தேன். ஏதோ ஒரு பொழுதில் நான் அன்னாவை மனதார நம்ப ஆரம்பித்துவிட்டிருந்தேன். யோசித்துப் பார்க்கையில் அது காந்தி மீது இருக்கும் நம்பிக்கை என்று உணர்ந்துகொண்டேன், நான் காந்தியை முழுமையாக நம்புவதற்குக் காரணம் உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை தான். ஏன் உங்களை நம்புகிறேன் என்று கேட்டுக்கொண்ட போது, என் மனத்தின் ஆழத்தில் இருக்கும் நன்மையின் மீதான நம்பிக்கை என்று அறிந்தேன்.
உங்கள் மீதான நம்பிக்கை ஒரே நாளில் வந்துவிடவில்லை. அது ஐந்து வருடங்களாக உங்கள் படைப்புகளின் வழியாக தொடர்வதால் உங்கள் எண்ணத்தின், எழுத்தின் மற்றும் செயல்களின் மீது உண்டான நம்பிக்கை என்று உணர்கிறேன். இந்த நம்பிக்கைத் தொடரின் எந்தக் கண்ணி உடைந்தாலும் ஆழ்மனதில் உறையும் நல்லனவற்றின் மீதான நம்பிக்கை உடையாமல் இருக்கவே வேண்டிக்கொண்டேன் – அதன் மூலம் பிற எல்லாவற்றையும் மீட்டு இணைத்துவிடலாம் என்பதால்.
(அன்னா ஹசாரே) இன்றைய காந்தியைக் காட்டித் தந்ததற்கு நன்றி.
எங்கள் வறட்டு சிந்தனைகள் இளகி, நன்மையின் மீதான நம்பிக்கை விதை தளிர்க்க மெய்மையென்னும் மழையாய் வருவதற்கு மனமார்ந்த நன்றி.
– பிரகாஷ்
—
www.jyeshtan.blogspot.com
================================
வணக்கம்,
சோம்நாத் சட்டர்ஜி NDTV இல் சொன்னது:
//”அண்ணா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் நாடாளுமன்றத்தை விமர்சிக்கின்றனர். நாடாளுமன்றம்
சட்டங்களை இயற்றாமல், தெருவில் போகிறவர்களா சட்டங்களை இயற்றவது?”//
இதைக் கேட்டவுடன் எனக்கு வியப்பாக இருக்கிறது.
இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் மேதை. அறிவாளிகள் மிக பெற்ற வங்காளத்திலிருந்து வருகிறவர்.
அவரிடமிருந்து இப்படி ஒரு வாக்கியத்தை எதிர்பார்கவில்லை.
மக்கள் பிரதிநிதிகள், மக்கள் கருத்தை அரசின் அவைகளில் எடுத்துச் சொல்லத்தான், மக்களால் தேர்வு செய்ய படுகிறார்கள் என்பது என் புரிதல். மக்கள் என்பது தெருவில் போகிறவனையும் சேர்த்துதானே?.
அந்தத் தெருவில் போகிறவன் ஓட்டு போட்டுத்தானே அரசியல்வாதிகளைப் பிரதிநிதிகளாக அனுப்புகிறார்கள்.
மக்கள் வோட்டு போட்டுவிட்டு அதைப் பற்றி அடுத்த ஐந்து வருடத்துக்கு மறந்துவிடவேண்டும் என்று சட்டபூர்வமாக அரசியல் வாதிகள் கருதுகிறார்களோ?
இவர்கள் பதவிக்கு வந்தவுடன் தங்களை பிரபுக்களாக பாவித்துக்கொள்வதுதான் இதற்கெல்லாம் காரணம் போலிருகிறது!.
மக்களின் கருத்தை மக்கள் பிரதிநிதிகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாதபோது, தெருவில் போகிறவன்தான் கேள்வி கேட்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
அண்ணா ஹசாரே தன் அடுத்த பணியாக சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.
//மக்கள் பங்கேற்ப்பு சீர்திருத்தம் -நாட்டு மக்களே முக்கியமான பிரச்சனைகளில் வாக்களித்து முடிவுகளை
எடுக்க வகை செய்வது. இதனைத் தேர்தல் கமிஷன் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தலாம். //
இதுதான் உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம். காசு வைத்திருக்கும், மக்களின் பிரச்சினைகள் தெரியாத
அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத, தகுதியற்ற நபர்கள் , அரசியலை ஒரு லாபம் தரும் ஒரு தொழிலாக
எண்ணிக் கொண்டு மக்கள் அவைகளுக்கு செல்லும்போது அங்கு மக்களின் தேவைகள் பிரதிநிதித்துவம்
பெறுவதில்லை.
அண்ணாவின் சிந்தனை சரியான திசையில் செல்வதாகத்தான் எனக்கு படுகிறது.
அன்புடன்
குருமூர்த்தி
லாகோஸ்
அண்ணா ஹசரே போராட்டம் குறித்த எனது கருத்துக்கள்.
1) எனது கருத்துக்கள் பெரும்பாலும் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறது.
2) கார்ப்பரேட் எஜமானர்களின் குரல் என்று எழுதியுள்ளீர்கள். எனக்கு சோ வின் கருத்து ஒத்துப் போகவில்லை. ஆனால் நீங்கள் கூறும் காரணம் அவசரத்தில் எடுத்ததாக தோன்றுகிறது.
3) இது கொஞ்சம் ஆழமானது. ஒரு கவலை.
காந்தி அவர்கள் சொல்லும் எல்லா விஷயத்துடனும் நான் ஒத்துப் போகவில்லை. போராட்ட முறையோ, அரசியலோ அல்ல. ஆன்ம சிந்தனை. ஒழுக்கம் குறித்த விஷயங்களில் ஒரு ஆழம் இல்லாததாகவே நான் உணர்கிறேன் . . மேலோட்டமான morals தான் இருப்பதாக தோன்றுகிறது.
அண்ணாவைக் குறித்தும் அதே கவலை.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் corruption, bad state of affairs என்ற நிலையில் ஒரு மாறுதலாகவே புறப்பட்ட ஒன்று.
அது முரட்டு மிருகத்தனமாக ஆனதற்குக் காரணம், மக்களின் ஆதரவு, மற்றும் குரானில் இருந்த முரட்டுத்தன மேலோட்டமான ஒழுக்கம், இதில் இருந்து தான்.
யாரும் பாட்டு கேட்க கூடாது, பெண்களின் அடக்குமுறை இன்னும் பல.
நம்முடைய வேதமும், சரியாகப் புரியாமல் இருப்பவர்கள், இந்து தர்மம் என நினைப்பது, மேலோட்டமான narrow morals, women repression, இவற்றையே.
அதன் விசாலம் புரியாதவர்கள், அதன் liberal thoughts on everything including sex, drugs, alcohol, meat eating, dancing, engaging in pleasure activities குறித்த விசாலமான
பார்வையை உணராத ஒரு குற்ற உணர்ச்சியை (கிறித்துவ நெறி போல) ஏற்படுத்த முயல்பவர்கள்.
அதனால் ஒரு புறம்,சுயநலவாத கேளிக்கை
இன்னொரு புறம, ஒழுக்க ஆதாரத்தில் இருந்து வரும் நற்குணம். ஆனால் ஒழுக்கம் என்று சொல்லிக் கொண்டு அது தனி மனித சுதந்திரத்தைப் பறிக்க முயலக்கூடிய ஒரு சாத்தியம்.
இந்த விஷயத்தில், corrupt india is better than strict talibanized version என்றே தோன்றுகிறது.
மெதுவாக பதில் எழுதவும். ஒன்றும் அவசரமில்லை.
ஸ்ரீதர் விஸ்வநாத்
=================
அன்புள்ள ஜெ. மோ.
வணக்கம். தொடர்ந்து உங்களது பதிவுகளை வாசித்துவருபவன் என்ற முறையில், அண்ணா ஹசாரே, அவரது தன்னலமற்ற போராட்டங்கள், அவை குறித்த உங்களது வலிமையான கருத்துப் பதிவுகள் அனைத்தும், அய்யத்திற்கிடமின்றி ஏற்கத்தக்கதும், ஆதரிக்கத்தக்கதுமாகும்.
ஊழலை எப்படி ஒழிப்பது என்பது பற்றி நாம் பார்த்த அளவுக்கு, ஊழலுக்கான உண்மையான ஊற்றுக்கண் எது என்பது குறித்தும் பார்த்திருக்க வேண்டும் என்பது எனது பணிவான கருத்து. அரசாங்கத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க மூலதனமுடையவர்களால் உலகம் முழுவதும் கையாளப்படும் பழைமையான மற்றும் வெற்றிகரமான ஆயுதம்தான் ஊழல்.
ஊழலின் ஊற்றுக்கண்ணே இந்த மூலதனவாதிகள்தான். நாமிருக்கும் சமூகம் பன்னாட்டு, உள்நாட்டு மூலதன வாதிகளால் பல நூறு வழிகளில் வழிநடத்தப்படுவது மட்டுமல்ல கட்டுப்படுத்தப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது என்பது தாங்கள் அறிந்ததே. தமது கட்டுப்பாட்டை அரசியல்வாதிகள் மீதுஉறுதி செய்து கொள்ளவே, ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்திட மூலதனக் கூட்டங்கள் முயலும். எனவே மூலதனத்தின் விருப்பங்களுக்கு மாறாக செயல்படும் அரசாங்கத்தால் மட்டுமே ஊழலின் ஊற்றுக்கண்ணைத் தூர்த்து தீர்வு காணமுடியும். நமது அரசாங்கங்களின் நேர்மை என்னவென்று ஊரறியும்.இந்த நிலையில் லோக்பால் இதில் எந்த அளவுக்கு வெற்றி பெறமுடியும்? இதுதான் எனது அடிப்படையான சந்தேகம்.
ஊழலுக்கு எதிரான மக்களுடைய உணர்வு மேற்கூறிய அடிப்படையில் உருவானதல்ல, மாறாக, அன்றாட வாழ்வில் அரசாங்கத்துறைகளிடம் அவர்கள் அடைந்த கசப்பான அனுபவங்களால் உருவானதாகும். அவமானம், அலைக்கழிப்பு, சால்ஜாப்புகள், சிவப்புநாடா முறைகளால் ஏற்படும் காலதாமதம் போன்றவற்றை சுலபமாகத் தவிர்த்து தனக்கானதை முந்திப்பெற்றுவிட,விருப்பமில்லாமல் லஞ்சம் கொடுத்து வந்தார்கள். இப்போது அண்ணா ஹசாரே வந்தவுடன், லஞ்சம் கொடுக்காமலேயே அவைகளைத் தவிர்த்து விடலாம் எனக் கருதி ஆதரிக்கின்றனர். குறிப்பாக அரசாங்கத்திடம் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தொடர்ந்து செல்லவேண்டிய நிலையில் உள்ளவர்கள் ஜன் லோக்பாலைத் தீவிரமாக ஆதரிக்கின்றனர். மெத்தப்படித்து பைநிறைய ஊதியம் வாங்குபவர்களை விட சாதாரண ஏழை மக்கள்தான் ஆர்வத்துடன் எதிர்பார்த்து ஆதரிக்கின்றனர். அவர்களது அன்றாடப் பிழைப்பின் காரணமாகத் தெருவுக்கு வந்து போராடமுடியவில்லை.
எதைப்பற்றியும் கவலைப்படாமல், தனது பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளமுடியுமென்ற நம்பிக்கையில், தனித்தீவாக வாழ்ந்து வந்த நடுத்தர வர்க்கத்தை,பொதுப்பிரச்சினைக்காக தெருவில் இறங்கி நம்பிக்கையுடன் முழக்கமிட வைத்த மகத்தான சாதனைக்காகவே அண்ணா ஹசாரே தமது முயற்சியில் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புகின்றேன்.நன்றி.
E.L. SRIDHARAN.