- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
- அளித்துத் தீராதவன்
- படைக்கலமேந்திய மெய்ஞானம்
- காட்டின் இருள்
- முடிவிலி விரியும் மலர்
- மயங்கியறியும் மெய்மை
- தளிர் எழுகை
- அன்னைவிழிநீர்
- அறிகணம்
- ஊழ்நிகழ் நிலம்
- எங்குமுளப் பெருங்களம்
- மைவெளி
- ஊழின் விழிமணி
- அனைத்தறிவோன்
- விழிநீரின் சுடர்
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்திற்கு இணையாக ஒரு நாலடுக்கு விடுதி உள்ளது. அதன் ஓர் அறையில் இருந்து ஆலயக்கோபுரத்தை மிக அருகே என காணலாம். அங்கிருந்து பார்த்துக்கொண்டிருக்கையில் கோபுரத்தின் மடிப்புக்குள் ஓர் அற்புதமான சிற்பத்தைக் கண்டேன். அந்தச் சிற்பம் அங்கிருப்பதை குடமுழுக்கை ஒட்டி சாயம்பூசும் தொழிலாளர் அன்றி எவரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.எனில் எதன்பொருட்டு அந்த அழகு? அந்த கலைப்பெரும்பணி:
ஏனென்றால், பார்ப்பதற்காக அது உருவாக்கப்படவில்லை. அது அங்கிருக்கவேண்டும். அது ஓர் உடலின் உறுப்பு. அந்த உறுப்பின்றி அவ்வுடல் முழுமை பெறாது. ஆகவே அது திகழ்கிறது. செடிகளில் மலர்கள் எவரும் பார்ப்பதற்காக விரிவதில்லை. மகரந்தச் சூல்கொண்டு கனியாவதற்குக்கூட அத்தனை மலர்கள் தேவை இல்லை. அவை மலர்வது அவை மலர்ந்தாகவேண்டும் என்பதற்காகவே.
இந்த விந்தையான நாவலை நான் எழுதும்போது அந்த மனநிலையை விரிவாக்கிக்கொண்டேன். ஏனென்றால், இந்நாவல் மாபெரும் மகாபாரதப்போருக்குபின், பேரழிவுக்குப் பின், கிட்டத்தட்ட கதை முடிந்தபின் நிகழ்கிறது. அதுவரை உத்வேகமாக வாசித்துவந்த வாசகர்களில் சில ஆயிரம்பேர் விட்டுவிட்டுச் செல்வார்கள் என எனக்குத் தெரியும். ஆனால் இது இருந்தாகவேண்டும். ஏனென்றால் இது மீண்டெழலின் கதை. மாபெரும் காட்டுநெருப்புக்குப் பின் அடுத்த மழையில் காடு மேலும் பசுமைகொள்வதை நான் கண்டிருக்கிறேன். அது உயிரின் இயல்பு. அது நிகழும்போதே இந்நாவல்நிரை முழுமையடைகிறது.
அவ்வாறே எழுத எழுத சில வாசகர்கள் சலிப்புகொண்டு விலகினர்.நான் முன்னரே ஒரு முடிவுசெய்திருந்தேன். இந்நாவல் வாசகர்களுடனான உரையாடலாக உருவாவது அல்ல. இந்த வாசகர்கள், இவர்கள் எத்தனை தீவிரமும் விரிவும் கொண்டவர்களானாலும் இக்காலத்தைச் சேர்ந்தவர்கள். வெண்முரசு போன்ற ஒரு நாவல் காலம் கடந்து நிலைகொள்வது. என்றுமுள வாசகனிடம் பேசுவது. வாசகர்களின் உளநிலை பல தற்காலிக, சமகால உணர்வுநிலைகளால் ஆட்கொள்ளப்படுவது. ஆகவே வாசக எதிர்வினையை கவனிக்காதபடி என் உள்ளத்தை அமைத்துக் கொண்டேன்.
ஆனால் எழுதி முடிக்க முடிக்க வாசித்துவந்தவர்கள் ஒரு மாபெரும் அகவிடுதலையை அடைந்ததாகச் சொன்னார்கள். அப்போருக்குப் பின்னர் இப்படி ஒரு நாவல் எழவில்லை என்றால் மொத்தப்புனைவும் பொருளிழந்திருக்கும் என்று உணர்ந்தனர். ஏனென்றால் அழிவல்ல வாழ்க்கை, ஆக்கமும்தான். ஆக்கம் என்றும் எப்போதும் எழும். புல் அழியாத வேர்களாலும் விதைகளாலும் வாழ்கிறது. சிலர் இந்நாவல் முடிவில் கண்ணீருடன் எழுதிய கடிதங்களை நினைவுகூர்கிறேன்.
இந்நாவலில் அஸ்தினபுரியின் மீட்சி படைக்கலம் ஏந்திய அன்னைவடிவான பெண் ஒருத்தியினூடாக நிகழ்கிறது என்பதும் எனக்கு நிறைவூட்டியது. ஏனென்றால் அந்த அழிவிற்கு பெண்கள் ஒரு காரணம். அந்த அழிவால் அழிந்தவர்களும் அவர்களே. மீண்டெழுவதும் அவர்களாக இருக்கையில்தான் காவியம் தன் நிறைவை அடையமுடியும். இதெல்லாம் முன்னர் வகுத்துக்கொண்டவை அல்ல, அப்போது அவ்வாறு இயல்பாக உருவாகி வந்தவை.
இந்நூலை மறுபதிப்பாக வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு நன்றி
ஜெ
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)
மீண்டெழுவன
களிற்றியானை நிரை – ஆதன்
களிற்றியானை நிரை
‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்