- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
- அளித்துத் தீராதவன்
- படைக்கலமேந்திய மெய்ஞானம்
- காட்டின் இருள்
- முடிவிலி விரியும் மலர்
- மயங்கியறியும் மெய்மை
- தளிர் எழுகை
- அன்னைவிழிநீர்
- அறிகணம்
- ஊழ்நிகழ் நிலம்
- எங்குமுளப் பெருங்களம்
1980 முதல் போர் படைப்புகளை விரும்பி பார்த்தும் வாசித்தும் வந்தேன். நான் முதன் முதலில் பார்த்த ஒரு பெரும் போர்ச்சித்திரம் என்பது பத்தாவது வகுப்பில் படிக்கும்போது நாகர்கோவில் வந்து பயனியர் முத்து தியேட்டர் திரையரங்கில் பார்த்த ‘The Guns of Navarone’ என்கிற படம். அன்று அந்தப் படம் திரும்பத் திரும்ப நாகர்கோவிலில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தது. கிரிகரி பெக்குக்கு தனிப்பட்ட ரசிகர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் அதைவிட முதன்மையான காரணம் என்று இன்று தோன்றுவது அதிலுள்ள போர்க்களக்காட்சிகள். நாகர்கோவில் என்ற சின்னஞ்சிறு ஊரிலுள்ள புற உலகமே அறியாத பல்லாயிரம் பேருக்கு திகைப்பும் கனவும் அளிக்கும் அனுபவமாக இருந்தது என்பதே.
நான் அந்தப்படத்தை அக்களத்தின் உள்ளே அமர்ந்திருப்பவன் போலப் பார்த்தேன். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அச்சத்தில் என் உடல் முழுக்க மயிர்க்கால்கள் எழுந்தன. பல தருணங்களில் எழுந்து வெளியே ஓடிவிடுபவன் போல இருக்கையில் இருந்து எழுந்து அருகிலிருந்த நண்பர்களால் பிடித்து அமரவைக்கப்பட்டேன். ஒரு மாதத்திற்கு மேலாக அந்த திரைப்படத்தின் போர்க்களக்காட்சிகள் என்னை பித்தனைப்போல் என்னுள் நிறையச்செய்தன. பின்னர் போர்த்திரைப்படங்களை தொடர்ந்து பார்க்கத் தொடங்கினேன். ஆனால் திரைப்படங்களை விட என்னை பெரிதும் ஆட்கொண்டவை புனைவுகள். ‘Gone With The Wind’. நான் வாசித்த முதல் போர் நாவல் என்று சொல்லலாம். அன்று ஆங்கிலம் படிப்பது கடினமாகையால் ஒவ்வொரு நாளும் பலமணிநேரம் எடுத்துக்கொண்டு இரண்டு அத்தியாயங்களை படிப்பேன். அது ஒரு வகையில் நல்லது, இரண்டு மாதங்களுக்கு மேலாக அப்புனைவின் உலகில் நான் வாழ முடிந்தது.
பின்னர் போரும் அமைதியும். முதலில் ஆங்கிலத்திலும் பிறகு டி.எஸ்.சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் தமிழிலும். போரும் அமைதியும் படிக்கும்போது ஒருநாள் ஒரு வினாவை எனக்குள் எழுப்பிக்கொண்டேன். எதனால் போருடன் நம் உள்ளம் அத்தனை விசையுடன் சென்று இணைந்து கொள்கிறது. நமக்கு முற்றிலும் அயலான ஒன்று ஏன் நமக்கு அத்தனை அணுக்கமாக இருக்கிறது. முன்பு எப்போதோ போரை அறிந்திருக்கிறோமா? முற்பிறவிகளில்… இங்கே எனது மண் இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் ஒரு நாள் கூட போர் நிகழாமல் இருந்ததில்லை என்று சொல்லத்தக்கது. மார்த்தாண்ட வர்மா 1738ல் ஆட்சியைப்பிடித்த பிறகு தான் போர் இல்லாமலாகியது. அதன் பிறகு பல உள்நாட்டுப்போர்கள் நிகழ்ந்தன. இறுதியாக பிரிட்டிஷ் படையெடுப்பு.
அப்போர்களைப் பற்றிய சித்திரங்கள் இப்பகுதியின் இலக்கியத்திலேயே இல்லை. வால்டர் ஸ்காட்டின் நாவல்களைத் தழுவி திருவிதாங்கூர் அரசவம்சத்தின் கதையை எழுதிய சிவிராமன் பிள்ளை கூட போர்க்களக்காட்சிகளை எழுதவில்லை. நமது நாட்டார் பாடல்களில் போரின் அழிவுகளும் இல்லை, போர்க்களக்காட்சிகளும் இல்லை. எளிய வெற்றிச்சித்திரங்கள் மட்டுமே உள்ளன. போரைப்பற்றிய பாடலான இரவிக்குட்டிப்பிள்ளை கதைப்பாடல்கூட போர் விவரிப்புகளை அளிப்பதில்லை. போரைச்சொல்லி சொல்லி நிலைநிறுத்தும் வழக்கம் நம்மிடம் இல்லை. ஆகவே தான் பெரும் போர்கள் கூட சில ஆண்டுகளிலேயே முற்றிலும் மறக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் உண்மையில் மறக்கப்பட்டுவிடுகின்றவா? எங்கோ நம் ஆழுள்ளத்தில் அவை நிலைகொள்கின்றனவா? கனவுகளில் திரும்பி வருகின்றனவா?
பிறிதொரு விளக்கம் எனக்குத் தோன்றியது. போர் என வெளியே நிகழ்வதை உணர்வுகளாக நாம் அகத்தே அறிந்துகொண்டுதான் இருக்கிறோம். பெரும்போர்கள் நிகழும் களமே உள்ளம். விழைவுகளுக்கும் குற்ற உணர்வுகளுக்கும் நடுவேயான போர். இருளுக்கும் ஒளிக்குமான போர். எல்லா அகமும் தேவர்களும் அசுரர்களும் மோதிக்கொள்ளும் களமே. போரை நம்மை அறியாமலேயே அவ்வண்ணம் விரிவாக்கிக்கொள்வதனால் தான் நம்மால் அத்தனை அகத்தீவிரத்துடன் போருக்குள் நுழையமுடிகிறது. போரின் ஒவ்வொரு கணத்தையும் நம்முடையதே என அறியமுடிகிறது.
மகாபாரதப் பெரும்போரை வெண்முரசில் எழுதத்தொடங்கி நான் படிப்படியாக அதற்குள் சென்றதென்பது என்னுள மானுடப்போருக்குள் நுழைந்து உப்பக்கம் கண்ட ஒரு பயணமேயாகும். அங்கே ஆணவங்களின் விழைவுகளின் அச்சங்களின் ஐயங்களின் கொந்தளிப்பையே போரென கண்டேன். கார்கடலெனும் தலைப்பையே முதலில் சென்றடைந்தேன். நாற்பதாண்டுகளுக்கு முன்பு என்னுடைய நண்பர், வாசகர் பாலகிருஷ்ணன் அவர்கள் சுங்கத்துறையில் ஆணையராக பணியாற்றியபோது அவரிடம் கடலுக்குள் இரவில் செல்லவேண்டுமென்ற என் விருப்பத்தைத் தெரிவித்தேன். இரண்டு காவலர்களுடன் ரோந்து படகில் இரவில் பலமணிநேரம் ஆழ்கடலில் அலைந்தேன்.
இரவில் தெரியும் கடல் பிறிதொன்று. அது கடலே அல்ல, கொந்தளிக்கும் இருள். மையிருள் என்போம். மையாலான பெரும்பரப்பென கடல் மாறிவிடுகிறது. அதன் ஒளிகூட கருமையின் ஒளிதான். அதன் நெளிவுகள் குழைவுகள் அலைகள் அனைத்தும் கன்னங்கருமையே. அந்தப் பெரும் படிமத்தில் விழிவிரிந்து உளம் அமைந்து ஓர் இரவு அமர்ந்திருந்தேன். இன்றுவரை எனக்கு கனவுகளில் தொடரும் ஒரு காட்சி அது. கார்கடல் என்னும் தலைப்பினூடாக நான் முன்வைத்தது அந்தப் பெரும்படிமத்தையே. இருள் இப்பிரபஞ்சத்தை மூடியுள்ளது. ஒளி என்பது சிறு துளிகளே. சுடர்விடும் விண்மீன்கள் கூட பிரபஞ்சப் பெருவெளியில் சிதறிய ஒளித்துளிகள் அன்றி பிறிதல்ல. அப்பேரிருள் மானுட அகத்திலும் நிறைந்திருக்கிறது. அதுவே அனைத்துப்போர்களும் நிகழும் பரப்பென திகழ்கிறது.
மகாபாரதப்போரினூடாக அந்த ஆழிருளை எழுத முயன்ற நாவலே இது. இதில் ஒவ்வொருவரின் இருளும் வெளிவந்து ஓங்கி பேருருவம் கொண்டு நிலைகொள்வதை நான் காண்கிறேன். இருளுடன் இருள் மோதும் வெளியென இது இங்கே திகழ்கிறது. இத்தனை இருளுக்குப்பின் தோன்றுவதனால் தான் ஒளி அத்தனை அரிதானது. அத்தனை இனியது அத்தனை பெருமை கொண்டது. ஒளியை வணங்குகிறேன். ஒளி என்றும் நம்முடன் இருப்பதாகுக!
ஆம் அவ்வாறே ஆகுக!
ஜெயமோகன்
நாகர்கோவில்
18.04.2024