அறிகணம்

 

  1. மானஸாவின் காலடியிலிருந்து…
  2. மழைப்பாடகர்கள்
  3. எஞ்சும் நிலங்கள்
  4. தெய்வத்தளிர்
  5. பெண்பேராற்றல்
  6. முகிலில் எழுதல்!
  7. எண்முக அருமணி
  8. வில்துணை வழிகள்
  9. அளித்துத் தீராதவன்
  10. களம் அமைதல்

  11. படைக்கலமேந்திய மெய்ஞானம்
  12. காட்டின் இருள்
  13. முடிவிலி விரியும் மலர்
  14. மயங்கியறியும் மெய்மை
  15. தளிர் எழுகை
  16. அன்னைவிழிநீர்  

வெண்முரசு எழுதுவதற்கு முன்பு நான் பகவத்கீதையைப்பற்றி சில கட்டுரைகள் எழுதத்தொடங்கினேன். ஒரு நூலாக அக்கட்டுரைகளைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இன்றைய சூழலில் பக்தி அல்லது சரணாகதி ஆகியவற்றை முன்வைக்கும் ஒரு நூலாகவே பகவத்கீதை வாசிக்கப்படுகிறது. இந்தியாவை ஆட்கொண்டுள்ள பக்தி நிறுவனங்களும் வெவ்வேறு துணை மத அமைப்புகளும் கீதையை அவ்வாறு பெருக்கி பரப்பியிருக்கின்றன.

கீதையை வேதாந்த நோக்கில் வரலாற்று அடிப்படையில் தத்துவ ஒருமைப்பாட்டை உருவாக்கிய ஒரு நூலாகவும் முரணியக்கம் வழியாக தத்துவத்தைக்கடந்து தரிசனத்தை சென்றடையும் யோகநூலாகவும் முன்வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் அக்கட்டுரைகள் உருவாக்கிய எதிர்வினைகள் பகவத்கீதைக்கு ஒரு உரையாகவே அவற்றை எழுதவேண்டுமே ஒழிய தனிக்கட்டுரைகளாக அல்ல என்ற எண்ணத்தை நான் சென்றடையவைத்தன. ஆகவே கீதைக்கு ஓர் நீண்ட உரை எழுதத்தொடங்கினேன்.

மூன்று அத்தியாயங்கள் சென்றடைந்ததும் அந்த உரை முன்செல்ல முடியாதென்பதைக்கண்டேன். இவை நான் இதையே மிக விரிவான ஒரு வரலாற்றுப்பரப்பில் மிக நுட்பமான ஒரு வாழ்க்கைக்களத்தில் பெரும்பாலும் மெய்யனுபவங்களின் ஒளியில் முன்வைக்க விரும்பினேன். புனைவெழுத்தாளனாகிய அதை புனைவு வழியாகவே செய்ய முடியும் என்பதைக்கண்டேன். புனைவென எழுந்தபின் அதற்கு நான் ஒரு தத்துவ உரையும் எழுதலாகும். ஆகவே என் நெடுநாள் கனவான மகாபாரதத்தை முழுமையாகவே எழுதுவது என்னும் எண்ணத்தை மீட்டுக்கொண்டேன். இயலுமா என்னும் தயக்கம் மீண்டும் காலம் கடக்கச் செய்தது.

எண்ணியிராத ஒரு நாளில் வெண்முரசு தொடங்கியது, தன் போக்கில் அது விரிந்து நீண்டது. அதில் பகவத்கீதை எங்கு வரப்போகிறது என்ற ஐயம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. பகவத்கீதையை மகாபாரதம் ஒரு நாடகீய தருணத்தில் அமைத்திருக்கிறது. போருக்கு முன் உளச்சோர்வுற்றமர்ந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் அளித்த தத்துவ மெய்ஞானம் அது. பெரும்பாலான ஆய்வாளர்கள் சொல்வது போல மிகப்பிற்காலத்தில் பகவத்கீதை மகாபாரதத்தில் பொருத்தப்பட்டது. பெருங்கலைஞர்களுக்குரிய உள்ளுணர்வுடன் மிகச்சரியான இடத்தில் அது பொருத்தவும் பட்டது. அந்தத் தொடக்கம் கீதைக்கு ஒரு உபநிடத்தத்தின் தன்மையை அளித்தது. இன்றும் கீதை இத்தனை போற்றி படிக்கப்படுவதற்கு அதன் உள்ளடக்கமாக அமைந்த மெய்ஞானம், தத்துவம் ஆகியவற்றுக்கு நிகராகவே அந்தத்தொடக்கத்தின் நாடகீயத்தன்மைக்கும் ஒரு பங்கு உண்டு. இந்தியா முழுக்க பார்த்தசாரதி ஆலயங்கள் உள்ளன. கீதோபதேச ஓவியங்கள் தொடர்ந்து வரையப்படுகின்றன. நிகழ்த்துகலைகளில் கீதோபதேச சரணம் மீண்டும் மீண்டும் நடிக்கப்படுகிறது. கீதோபதேசம் பற்றிய இலக்கிய குறிப்புகள் பெருகிக்கிடக்கின்றன. ஆனால் வெண்முரசின் எதார்த்த தன்மைக்கு அந்த தருணத்தில் கீதையைப்பொருத்துவது இயல்பாக இல்லை.

வெண்முரசு அனைத்து கற்பனை விரிவுகளும் அகம்நிகழ்த்தும் மாயங்கள் அனைத்தையுமே தன்னுள் கொண்டதாயினும் அடிப்படையில் புறவய எதார்த்தமான தர்க்கமொன்றை பேணிக்கொண்டுதான் கதையை சொல்லிப்போகிறது. அந்த எதார்த்த களம் தான் அதிலுள்ள அனைத்து மாயங்களுக்கும் அர்த்தம் அளிக்கிறது. அந்த எதார்த்தப் பார்வையில் பார்த்தால் அர்ஜுனன் அவ்வண்ணம் போர்க்களத்தில் உளம் தளர்வதென்பது பல்லாயிரம் பக்கங்கள் வழியாக உருவாக்கிக்கொண்டு வந்த அர்ஜுனனின் ஆளுமையை முற்றாக மறுப்பதேயாகும்.

திசைவென்று மீண்ட பெருவீரன் அவன். சிவனை சந்தித்து பாசுபதம் பெற்று வந்தவன் அவனுக்கு அத்தகைய ஓர் உளச்சோர்வு போர்முனையில் எழுவதென்பது புனைவின் ஒருமைக்கு உகந்ததல்ல. முழுமகாபாரதத்தை படிப்பவர்களுக்கும் மகாபாரதத்தில் படிப்படியாக முழுமை பெற்று வரும் அர்ஜுனன் என்ற கதாபாத்திரம் அல்ல கீதையின் உளச்சோர்வடைந்த பார்த்தன் என்பது எளிதில் புரியும். மேலும் இரு தரப்பும் போருக்கென எழுந்து நின்றிருக்கும் அத்தருணத்தில் ஒரு நீண்ட பேருரையை கிருஷ்ணன் நிகழ்த்தினான், அந்தப்பேரிரைச்சல் கொந்தளிப்புகள் நடுவே பார்த்தனுக்குத் தன் தத்துவ மெய்ஞானத்தை விரித்துரைத்தான், பேருருக்காட்டி ஆட்கொண்டான் என்பது ஒருவகை மாயப்புனைவு மட்டுமே.

எனில் இதை எங்கு பொருத்தலாம்? அத்தருணம் நெருங்க நெருங்க ஒரு தவிப்பை அடைந்தேன். ஆனால் எப்போதும் போல அதை என் உள்ளுணர்வுக்கே விட்டுவிட்டேன். எப்படியோ அது எழுந்து வந்து இயல்பாகப் பொருந்திக்கொள்ளும் என்று நம்பினேன். ஏனெனில் அவ்வாறு பலநூறு கதைகள் மிகச்சரியாக வந்துபொருந்திய அனுபவம் எனக்கு அதற்குள் வெண்முரசில் இயல்பாகியிருந்தது. எண்ணியது போலவே போர் ஒருக்கங்கள் முடிந்து படைகள் எழுந்த தருணத்தில் ஒன்று தோன்றியது. அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்குமான அந்த உரையாடல் வேறொரு வெளியில் நிகழ்ந்திருக்கும் காலம் புறவயமான தர்க்கத்தை உதறி விரிந்து பெருகவும் சுருண்டு இன்மையென்றாகவும் வாய்ப்புள்ள அகத்தில் மொத்த கீதையுமே ஒருகண நேரத்தில் நிகழ்ந்திருக்கலாம். ஆசிரியனிடமிருந்து மாணவனுக்கு மின்னல் போல வானையும் மண்ணையும் இணைக்கும் பேரொளியாக அது கடந்திருக்கலாம்.

கணம் எனும் சொல் என்னை ஆட்கொண்டது. அதையே என்னுள் மீள மீள சொல்லிக்கொண்டிருந்தபோது இமைக்கணம் என்னும் சொல்லாக மாறியது. அடுத்தகணமே நாவலின் முழுவடிவமும் என்னுள் தோன்றிவிட்டது. இமைக்கணம் – நிமிஷாரண்யம். நிமி என்றால் இமை. இமைகளின் காடு என்று அது சொல்லப்படுகிறது. நைமிஷாரண்யத்தில்தான் சூததேவர் மகாபாரதத்தின் கதையை முனிவர்களுக்குச் சொன்னார். அழியாத ஒன்றை இமைக்கணக்காட்டில் உரைத்தார்.

அங்கு இந்தக் கதை நிகழ்வது போல எண்ணலானேன். இந்நாவல் புனைவினூடாக கீதைக்கு அளிக்கப்பட்ட பெருவிளக்கம். கீதையின் பதினெட்டு பகுதிகளும் பதினெட்டு வெவ்வேறு ஆளுமைகளுக்குரியவையாக இதில் முன்வைக்கப்படுகின்றன. அவர்கள் அனைவருமே ஓர் இமைக்கணத்தில் இதில் தங்களுக்குள் நிகழப்பெறுகிறார்கள். அனைவருமே தங்களை கண்டடைகிறார்கள். இங்கு மனிதர்கள் வாழ்வது ஒரு வாழ்வை. ஆனால் பல்லாயிரம் வாழ்வுக்கான வாய்ப்புகளில் ஒன்றே அவர்களுக்கு அமைகிறது. எஞ்சியவை நிகழாமலேயே சென்றுவிடுகின்றன. வாழாத வாழ்வுகளை அந்த இமைக்கணப்பொழுதில் வாழ்ந்து வாழ்ந்த வாழ்வின் பொருளறிகிறார்கள். முடிவின்மை என்பது தெய்வத்தின் கையில் உள்ளது. காலமாகி நம்முடன் அது உரையாடுகிறது. அக்காலத்தரிசனமே இந்நாவல்.

கீதையை பதினெட்டு பார்வைகளினூடாக இது ஆய்கிறது. பதினெட்டு பெருவழிகளும் நகர்மையத்திற்கு சென்று சேர்கின்றன. கீதையை மகாபாரதத்தின் மையமென்றே நான் கருதுகிறேன். வெண்முரசும் அவ்வாறே அதை முன்வைக்கிறது. அது மகாபாரதத்தின் ஒரு தருணமல்ல, உச்சம். மகாபாரதப்போரே கீதையின் பொருட்டு நிகழ்ந்தது தான். மகாபாரதப்போரில் பாண்டவர்களோ கிருஷ்ணனோ வெல்லவில்லை, வென்றது கீதை. எஞ்சிய பாரதவரலாற்றை அது பின்னர் தன் சொற்களில் இருந்து உருவாக்கி எடுத்தது. அது வேதாந்தத்தின் வெற்றி. வேதாந்தம் தன் தலையில் சூடிய மணிமுடியின் வைரம். இந்நாவல் கீதையின் வெற்றியை வெண்முரசின் பெரும்போர்க்களத்தில் நிறுத்திக்காட்டுகிறது. வெண்முரசின் தரிசனமென்ன என்ற வினாவிற்கு இந்நாவலே விடையுமாகும் இந்நாவலுக்கு முன்பும் பின்புமென புனைவு வந்து குவிந்து இதைவந்து சேர்ந்திருப்பதை இன்று வாசகர்கள் உணரலாம்.

எதன்பொருட்டு மகாபாரதப்போர்? கிருஷ்ணனெனும் பிறப்பின் செயல்நோக்கமென்ன? போருக்குப்பின் எஞ்சியதென்ன என்னும் அனைத்து வினாக்களுக்கும் விடையாக இந்நாவல் அமைந்துள்ளது. வாசகர்கள் இந்நாவலிலிருந்து மீண்டும் வெண்முரசை முற்றிலும் புதிய விரிவான கோணத்தில் மறுதொகுப்பு செய்து கொள்ள முடியும். அவ்வாறு நிகழ்வதாக.

இந்நாவலை முதலில் வெளியிட்ட கிழக்கு பிரசுரத்திற்கும் மெய்ப்பு நோக்கி செம்மைப்படுத்த உதவிய ஸ்ரீனிவாசன் – சுதா தம்பதி இணையருக்கும், முதலில் மெய்ப்பு பார்த்த ஹரன் பிரசன்னா ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இருவருக்கும் என் நன்றிகள். இப்போது இந்நூலை மெய்ப்பு பார்த்த மீனாம்பிகைக்கும் வெளியிடும் செந்தில்குமாருக்கும், விஷ்ணுபுரம் பதிப்பகத்தாருக்கும் எனது நன்றி.

ஜெ

விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887) 

இமைக்கணத்தில் நிகழ்ந்தது

இமைக்கணம் என்னும் மெய்நிகரி


 

முந்தைய கட்டுரைசு. வெங்கடேசன்
அடுத்த கட்டுரைவால்நட் கிரீக் சந்திப்பு, அறிவிப்பு