வெண்முரசு முழுத்தொகுப்புகள் ஈரோட்டில் நிகழும் தூரன் விருதுவிழாவில் கிடைக்குமா? என் நிறுவனத்திற்காக வாங்கலாமென்னும் எண்ணம் இருக்கிறது.
ரவி சக்திவேல்
அன்புள்ள ரவி,
வெண்முரசு முழுத்தொகுப்பை ஈரோட்டில் நிகழும் தமிழ்விக்கி – தூரன் விருதுவிழாவில் வாங்கலாம். வெண்முரசு நூல்கள் எல்லாமே அங்கே கிடைக்கும். விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள் விற்பனைக்கு இருக்கும். முந்தைய ஆண்டுபோலவே நண்பர்களின் பதிப்பகங்களும் அங்கிருக்கும்.
ஜெ
ஒரு மாபெரும் கனவு இன்று நிறைவேறியது. என் லைப்ரரிக்கு புதிய சிறகு முளைத்தது என்றே கூறலாம். இப்படி முழுத் தொகுப்பை மாதம் ஒன்றாக வாங்க நினைத்து, முடியாமல் போனது ஒரு காலம். கிடைத்த பிரதிகள், ஓவியங்கள் இல்லாமல் திருப்தி தரவில்லை. கடந்த ஜனவரியில் முழுத்தொகுப்புக்கான முன் பதிவு அறிவிப்பை வெளியிட்டார் ஜெயமோகன். அதற்கு என் பதிவில் EMI யில் கிடைக்குமா என்று கூட கேட்டிருந்தேன். அதற்குச் சிலர், ஏன் அப்படிக் கேட்கறீங்க… உங்களை யார் வாங்கிப் படிக்கச் சொல்றாங்க..
அதான் free ஆவே கிடைக்குதே என்றும் கூறினர். நான் கொஞ்சம் கஷ்டப்படாமல் வாங்கவே, கிண்டலாக அப்படி கேட்டேன். பின்பு எப்படியோ, இரண்டு தவணையில் கட்டினேன். இன்று இரண்டு பார்சல்களாக 26 தொகுதிகள், அவற்றில் சில இரண்டு பாகங்கள் வந்து சேர்ந்தன. புத்தகங்களின் தரம் அருமை. கையில் வைத்து வாசிப்பது கஷ்டம் என்று பதிப்பாளருக்குத் தெரிந்ததால், ஒரு “புத்தகத் தாங்கி “ இலவச இணைப்பாக வந்துள்ளது. அதுவும் நன்றாகவே உள்ளது.