இலங்கையில் இருந்து ஒரு கடிதம்

அன்பும் மதிப்புமிகு ஜெயமோகனுக்கு,

உங்களின் யானை டாக்டர் படித்தேன். மனசு மத்தாளமானது.உங்களைக்காண வந்த எஸ்.எல்.எம்.ஹனீபா மூலம் கிட்டியது.
ஒட்டமாவடி அறாபத்

ஊமைச்செந்நாய்க்கு நிகரான படைப்பு.இன்றைய தமிழ்ச் சூழலில் ஜெயமோகன் என்கின்ற உங்களால் மட்டும்தான் இவ்வாறு எழுத முடியும். இது முகஸ்துதியோ புகழ்ச்சியோ அல்ல,சத்தியம்.உங்களைக்கண்டு வந்த எஸ்.எல்.எம்.என்னிடம் ஜெயமோகன் என்கின்ற புத்தனைக்கண்டு வந்தேன் என்றார்.புத்தனின் மறு பெயர் ஈரம்.யானை டாக்டரின் ஒவ்வொரு பத்தியிலும் அந்த ஈரம் சொட்டுகிறது.
இலங்கையில் 6200 யானைகள் வாழ்ந்தாலும் எங்கள் காடு 2200 யானைகளுக்கே போதுமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள்.

புலிகளுடனான சண்டைமுடிவுக்கு வந்த வேளை,  யானைகளுடனான சண்டை ஆரம்பம்.எங்கள் வாழ்விடங்களிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் யானைகளின் குடியிருப்பு. எங்களுர் மக்களுக்கு யானைகளுடன் தீராப்பகை.ஒவ்வொரு வருடமும் யானைகள் பலரின் உயிரைப் பறித்து விடும். இந்தச்சூழலில் யானை டாக்டர் கதை எங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என நான் சொல்லத்தேவையில்லை.

இலங்கையில் எழுத்தாளர்கள் என்று கோலம் போடுபவர்களின் அடியேனும் ஒருவன். மூன்று  சிறு கதைத்தொகுதிகளைக் கொண்டு வந்திருக்கின்றேன்.அதில் அடையாளம் பதிப்பகம் ” உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி “ என்ற தொகுதியைக் கொண்டு வந்திருக்கின்றது. அந்தத் தொகுதியிலிருந்து இரண்டு கதைகளை உங்களுக்கு அனுப்புமாறு எஸ்.எல்.எம் வேண்டிக்கொண்டார்.உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றேன்.
உங்களைக்காண இன்ஷா அல்லாஹ் பார்வதிபுரம் வருவேன்.

அன்புடன்
அறபாத்- இலஙகை

அன்புள்ள அறபாத்

நான் ஆபிதீனின் பக்கங்களில் உங்கள் கதைகளையும் கடிதங்களையும் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.  தொகுப்பு வாசித்ததில்லை. அடையாளம் சாதிக் நல்ல நண்பர்தான். பெரும்பாலான நூல்களை அனுப்பித் தருவார். இந்நூலையும் அனுப்பச் சொல்கிறேன்.

உங்கள் கதைகளில் உள்ள சாதாரண மனிதனின் வாழ்வுக்கான ஏக்கத்தை மிகுந்த நெருக்கத்துடன் உணர்ந்தேன். குறிப்பாக ரெயில்வே ஸ்டேஷன் கதையில் சரசரவென வந்துமறையும் முகங்கள். காலம் ஒரு ரயில் போல ஜன்னல்முழுக்க முகங்களுடன் ஓவென அலறி இரும்புப்பேரொலியுடன் கடந்து மறைந்ததைக் காட்டிய கதை அது.

ஒரு எழுத்தாளன் அவன் கைக்குள் சிக்கக்கூடிய ஒரு வாழ்க்கைக்குள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் காட்ட முயலவேண்டும் என நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் அளவும் அகலமும் அல்ல அது எதைச்சுட்டி நிற்கிறது என்பதே நல்லகதைகளை அடையாளப்படுத்துகிறது.

வீடு போர்த்திய இருள் கதையும் என்னைத் தனிப்பட்டமுறையில் பாதித்தது.  காலம் இதழில் நான் அக்கதையை வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட அதே தளத்தில் ஒருகதை ‘அம்மன் மரம்’எழுதியிருக்கிறேன்.

நாம் சந்திக்கும்போது சிறுகதை பற்றி இன்னும் நிறையப் பேசமுடியுமென நினைக்கிறேன்.  தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிக்கவேண்டும்

எழுதுகிறேன்

ஜெ

அன்புமிகு ஜெயமோகன்

உங்கள் கடிதம் என்னை உற்சாகப்படுத்தியது.ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுத்துப்போய்விடுகிறது. எழுதி என்ன செய்ய என்று மனம் அலுத்துக்கொள்ளும்.உங்களைப்போன்ற சிகரங்களின் எழுத்துக்கள் அதை மீண்டும் புத்துயிரூட்டும். நெரிசல்மிகு வாழ்க்கையில் வாசிப்பும் எழுத்தும்தான் புனித ஜிஹாத் என்பேன்.நான் அந்தப் புனித யுத்தத்தைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்திக்கொண்டிருக்கின்றேன்.

என்னுடைய கதைகள் பற்றிய தங்கள் மதிப்பீடு மிகுந்த மன எழுச்சியைத்தருகிறது.என்னைப்போன்றவர்களின் படைப்புக்களை நீங்கள் வாசிப்பதற்கு அவகாசம் கிடைக்காது என்பது என் எண்ணமாக இருந்தது,

நேற்று என் தோட்டத்தில் இருந்த போது மாமரத்திலிருந்து நழுவி என் கையில் விழுந்த புழு ஒரு கைக்குழந்தையாகத் தவழ்ந்தது. என்ன ஒரு  உயிர்ப்பான வார்த்தைகள். உங்களின் யானை டாக்டரைப்படித்த பின் நான் இப்படித்தான் புழுக்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். இன்னும் அந்தக்காட்டிலிருந்து மீளவும் என் கிராமத்திற்கு வரமுடியவில்லை.

இலங்கையில் தற்போது புழுக்கத்தில் இருக்கும் 1000 ரூபா நோட்டில் யானையுடன் ஒரு பாகனும் இருப்பார்கள். அது எங்கள் ஊருக்குப்பக்கத்திலுள்ள கிராமத்து  முஸ்லிம் ஒருவரால் தலதா மாளிகைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட யானை. பாகன் தலையில் குல்லாய் போட்டிருப்பார் .கிடைத்தால்  பாருங்கள் புரியும்.

நூற்றாண்டுகள் கடந்தாலும் மஹிந்த அரசு அந்த வரலாற்றைப்பேணி வருவதற்கு காரணம் அது அவர்களின் பவுத்த மதத்தின் அடையாளம் என்பதால்.
அன்புடன்
அறபாத்.

அன்புள்ள அறபாத்
உங்கள் மனநிலை எனக்குப்புரிகிறது.
எழுத்தாளனுக்குச் சோர்வு புறச்சூழல்களினால் ஏற்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குமேல் அது நீடித்தால் அது அவனுடைய பிழை. நீண்டகாலத்துக்கு நீடித்தால் அவனுடைய குற்றம்.
எழுத்துத்திறன் என்பது ஒரு இயற்கைக் கொடை. அல்லா உங்களுக்கு அதை ஒரு காரணத்துக்காகவே அருளியிருப்பான். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதற்கான விளக்கத்தை அல்லாவிடம் கோர உரிமை கிடையாது.
ஆக, முடிந்தவரை தீவிரத்துடன் ,உத்வேகத்துடன் எழுதிக்கொண்டிருப்பதே முக்கியமானது. அத்துடன் நம் கடமை முடிகிறது. எழுதுங்கள்.
ஜெ

முந்தைய கட்டுரைமூவருக்கு தூக்கு தள்ளிவைப்பு
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே சாதிவெறியரா?