இந்தியர்கள் வரலாறற்றவர்களா ?

(திருப்பூர் அறம் அறக்கட்டளை உரை. காணொளிகள்)

2013 ஆகஸ்ட் 15 அன்று திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்ந்து நிகழ்த்தப்பட்ட சுதந்திரநாள் கொண்டாட்டத்தில் ஆற்றப்பட்ட உரை. எழுத்துவடிவம் விவேக்ராஜ் 

நாம் இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நம் மக்கள் எவரிடத்திலும் நமக்கு எப்படி, என்ன சுதந்திரம் கிடைத்தது என்று கேட்டால் வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது என்று ஒருவரியில் பதில் சொல்வார்கள். பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து, அரசியல் அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் கிடைத்தது என்றெல்லாம் சொல்கிறோம். அம்பேத்கர் ஒரு சொற்பொழிவில்இது ஜனநாயகத்துக்கான சுதந்திரம்என்றார்.

எங்கிருந்து சுதந்திரம் கிடைத்தது என்பதில், நாம் எங்கே செல்வதற்கான சுதந்திரம் என்ற அர்த்தம் உள்ளது. ஜனநாயகத்தை சமத்துவத்தை தன்னிறைவை நோக்கி செல்வதற்கான சுதந்திரத்தை நம் முன்னோடிகள் நமக்கு வழங்கியுள்ளனர். நேற்று எங்கிருந்தோம் என்பதைவிட, இந்த சுதந்திரத்தைக் கொண்டு எங்கே செல்லப்போகிறோம் என்பதே முக்கியம். சமாதானம், சுதந்திரம், சமத்துவம் என்கிற விழுமியங்களை சுதந்திரம் என்ற சொல்லோடு இணைத்துக்கொண்டால் மட்டுமே அது பொருளுடையதாகிறது. சுதந்திரம் என்று சொன்னாலே உடனே வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் என்று சொல்வதை விடவேண்டும். ஜனநாயகத்துக்கான சுதந்திரத்தை நாம் அடைந்துள்ளோம்.

அந்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது நமக்கு தெரியவில்லை. அதை வைத்துக்கொண்டு கடந்தகாலங்களில் நாம் பொருளாதார தன்னிறைவையும், சமத்துவத்தையும் அடைந்திருக்கிறோமா என்ற கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் சுதந்திரத்துக்கான சுதந்திரத்தை அடைந்துள்ளோம். கட்டற்ற சுதந்திரத்தை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

நான் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். சுதந்திரத்தை இந்த அளவுக்கு கொண்டாடக்கூடிய வேறொரு நாடு கிடையாது. சுதந்திரம் என்பது அதன் எல்லைகளைக் கடந்து பொறுப்பின்மை என்பதற்குள் சென்றுவிட்ட நாடு இது. இங்கு யாரும் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சாலையில் குப்பைகளை கொட்டலாம், பிறரிடம் பூசலிடலாம். அதன் ஒரு பகுதிதான் சுதந்திரமே கிடைக்கவில்லை என்று சொல்லும் சுதந்திரம்.சமூக வலைதளங்களில், சுதந்திரமே கிடைக்கவில்லை என்றும் கிடைத்தது சுதந்திரமே அல்ல என்றும் பிலாக்கணம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்தியா ஒரு தேசமே அல்ல என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குரல் பெருகியுள்ளது. நம்மில் பலரும் இவ்வாறு சொல்பவர்களை எதிர்கொண்டிருப்போம். அதற்கு பதில் சொல்லும் பயிற்சி பெரும்பாலும் நம்மிடையே இருப்பதில்லை. ஆனால் அவ்வாறு சொல்லும் தரப்பினர் சாதாரணமானவர்கள் அல்லர். இந்தியா ஒரு தேசமே அல்ல என்று சொல்லும் அத்தனைபேரும் ஏதேதோ கருத்தியல் சக்திகளால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள். அத்தகைய கருத்தியல் பயிற்சியை அளிப்பதற்கு பல்வேறு நிதியுதவிகள் இந்த நாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன. அதற்காக பல்வேறு கல்வி நிறுவனங்கள் இங்கு நடத்தப்படுகின்றன. அவர்கள் இந்தியா ஒரு தேசமே அல்ல என்று கற்பிக்கிறார்கள். அதை பெற்றுக்கொண்டவர்கள் நம்மிடம் வந்து அதையே  சொல்கின்றனர். நம்மில் பலருக்கும் அதற்கு எதிர்வினையாற்றத் தெரியவில்லை. இந்தியா ஒரு தேசம்தானா என்பதை நாமே புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நான் இப்படியொரு உரையை ஆற்றப்போகிறேன் என்று சொன்னபோது, மலையாள திரைத்துறையை சார்ந்த இடதுசாரி நண்பர் ஒருவர் என்னிடம், ‘இந்தியா ஒரு தேசம் கிடையாது. இது வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்புஎன்றார். அதற்கு நான், ‘இது எல்லா இடதுசாரிகளும் ஒரு மைக் கிடைத்தால் சொல்லும் வரி’ என்றேன். வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு இந்தியா பல்வேறு நிர்வாக அமைப்புகளாக சிதறிக்கிடந்தது. இங்கு ஒரு ஒற்றை அரசாங்கம், ஒற்றை நிர்வாக அமைப்பு என்பது இருந்ததில்லை. ஆகவே இந்தியா ஒரு தேசமல்ல என்று பொதுவாக இடதுசாரிகள் சொல்வர்.

ஆனால் அன்றைய காலகட்டத்தில் உலகில் எங்கு அவ்வாறான ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பு இருந்தது ? இன்று நாம் காணும் அத்தனை தேசங்களும் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுவாக்கில்தான் இப்போதைய வடிவத்தை அடைந்தன. அப்படியெனில் உலகில் தேசமே இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கும் என்றேன்.

அதற்கு அவர், ‘இல்லை, அது கொஞ்சம் மக்கு இடதுசாரிகள் சொல்லக்கூடிய வாதம். நிர்வாக அமைப்பை வைத்து நான் இதை சொல்லவில்லை. ஆனால் இந்தியாவுக்கு ஒரு ஒருங்கிணைந்த வரலாறு கிடையாதுஎன்றார். ஒரு தேசம் என்றால் அதற்கொரு ஒருங்கிணைந்த வரலாறு வேண்டும். அப்படிப்பட்ட வரலாறு இந்தியாவுக்கு கிடையாது என்பது அவருடைய வாதம்.

இத்தகைய வாதத்தை நாம் பல இடங்களில் எதிர்கொள்கிறோம். இந்தியாவுக்கு இன்றுள்ள வரலாறு என்பது இங்கு வந்த வெள்ளையர்களால் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி அளிக்கப்பட வரலாறுதான். அதை நாம் தகவலாக தெரிந்துவைத்திருக்கிறோம். மற்றபடி நமக்கு அப்படியொரு வரலாறு கிடையாது என்று இடதுசாரிகளும் அவர்களால் இயக்கப்படும் வேறு சக்திகளும் மீண்டும் மீண்டும் நம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

ஒருவகையில் இது உண்மைதான். 1858 இல் மாமல்லபுரத்தைப் பார்க்கும் வெள்ளையர்கள் அங்குள்ள மக்களிடம் அதை கட்டியது யார் என்று கேட்கிறார்கள். அந்த மக்கள் எவருக்கும் பல்லவர் என்ற வார்த்தையே தெரிந்திருக்கவில்லை. அவை பஞ்சபாண்டவர்களால் கட்டப்பட்டவை என்கின்றனர். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை காட்டியது யார் என்று அப்பகுதி மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. பூதங்கள் கட்டியது என்கிறார்கள். வெள்ளையர்கள்தான் இங்குள்ள ஒவ்வொரு கல்வெட்டாகப் படித்து ஒவ்வோர் இடங்களையும் அடையாளப்படுத்தினர். நமக்கு இன்றிருக்கும் புறவய வரலாறு என்பது வெள்ளையர்களால் நமக்கு அளிக்கப்பட்டதே. ஜே.எச்.நெல்சன் (J.H.Nelson) என்ற மதுரை ஆட்சியர்   ‘The Madura country – A Manual’ என்ற நூலை எழுதினார். முதன்முறையாக தென்தமிழகத்தின் ஒருங்கிணைந்த வரலாற்றை ஒரே நூலில் எழுத முயன்றவர் அவரே. அந்த வரலாற்றைதான் நாம் விரித்து விரித்து எழுதிக்கொண்டிருக்கிறோம். 

ஏன் நாம் வரலாறற்ற மக்களாக சொல்லப்படுகிறோம் ? ஏனெனில் இந்தியாவின் வரலாற்றை எழுதிய வெள்ளையர்களில் கணிசமானவர்கள் நம்மை வரலாறற்ற மக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இன்று ஆப்பிரிக்காவைப் பற்றியும் பல இனவெறி வெள்ளையர்கள் வரலாறற்ற தேசம் என்கின்றனர். குலமற்றவன், ஊர் பேர் தெரியாதவன், அடையாளமற்றவன் என்பதாக இன்று நாம் சொல்லும் பொருளில் அன்று வரலாறற்ற மக்கள் என்பதாக அவர்களால் சொல்லப்பட்டது. இந்தியாவிற்கு தங்களால்தான் வரலாறே கொடுக்கப்பட்டது என்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் இந்திய அறிஞர்கள் பலர் உள்ளனர்.

நாம் வரலாறற்று இருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. நான் துறவியாக அலைந்துகொண்டிருந்த காலத்தில் நானும் மற்றொரு துறவியும் ஆந்திரம் பகுதியில் திரிந்துகொண்டிருந்தோம். அன்று இந்திராகாந்தி மீண்டும் பதவியேற்ற நாள். நான் அதிகாலை செய்தித்தாளுக்காக காத்திருந்து அதை வாங்கிப்படித்து அவரிடம் கொடுத்தேன். அப்போது அவர் தன்னை சுட்டிக்காட்டி, ‘இதுக்கு ராஜ்ஜியம் கிடையாதுஎன்றார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக நமக்கு இப்படியொரு மரபு உள்ளது. வரலாறற்ற, அடையாளமற்ற மனிதனாக தன்னை உணர்வதுதான் விடுதலை என்று நம் மரபு சொல்லிவந்திருக்கிறது. அது நமது தரிசனம். சட்டையை கழற்றுவது போல அனைத்து அடையாளங்களையும் கழற்றிப்போடும்போதுதான் நாம் விடுதலை அடைகிறோம் என்கிறது. ரமணர், ராமகிருஷ்ணர், நாராயணகுரு போன்றோர் இந்தியர்களா என்று கேட்டால் அவ்வாறு சொல்லமாட்டேன். கிட்டத்தட்ட மனிதர்கள் அல்லது அதற்கும் மேல் என்றே சொல்லலாம். அப்படியொரு விடுபட்டநிலை பற்றிய பெருங்கனவு நமக்கு உள்ளது.

நான் யார்என்கிற புத்தி ஒருவனுக்கு எப்போது வருகிறது என்று ஒரு ஐரோப்பியரிடம் கேட்டால் அதற்கு அவர் ஒருவிதமாக பதில் சொல்வார். ழாக் லக்கான் (Jacques Lacan) என்ற உளவியலாளர் ஒரு குழந்தை தனது பதினெட்டாவது மாதத்தில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துஇது நான்என்று உணரும்போதுதான் (Mirror stage) அதற்கு தன்னுணர்வு வருகிறது, அதுவரைக்கும் அக்குழந்தைக்கு தனக்கும் மற்ற பொருள்களுக்குமிடையே வேறுபாடு தெரியாது என்கிறார். இன்றைய நவீன உளவியலாளர்களும் கிட்டத்தட்ட இதையே சொல்வர்.

ஆனால் நமது மரபில் தன்னுணர்வு பற்றி வேறுவிதமாக சொல்லப்படுகிறது.  ஒரு குழந்தை பிறப்பதற்கும் கரு புகுவதற்கும் முன்பே, பார்த்திவ பரமாணு என்ற அணுவாக இருக்கும்போதே அதற்குநான் இருக்கிறேன்என்ற உணர்வு உண்டு. நான் வளரவேண்டும், அன்னத்தை உண்டு அன்னமயமான உடலை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற விழைவு அதற்கு ஏற்பட்டுவிடுகிறது. அந்த விழைவாலேயே அது கருபுகுந்து உடலாக ஆகி வளர்கிறது. அந்த அணுவின் தன்னுணர்வைத்தான் ஆணவமலம் என்கின்றனர். அந்த ஆணவமலம் கர்மமலமாகவும் மாயாமலமாகவும் பெருகுவதாக சைவசித்தாந்தம் கற்பிக்கிறது. இந்த ஆணவமலமாகிற தன்னுணர்விலிருந்து விடுபடவேண்டும் என்றுதான் நம் மரபு பல நூற்றாண்டுகளாக சொல்லிவந்துள்ளது. 

புதுமைப்பித்தனுடைய கயிற்றரவு எனும் சிறுகதை இதைப்பற்றி பேசும் சிறந்த கதை. அதில் குழந்தையான பரமசிவம் பிள்ளையை தூக்கிவைத்து அவனது தந்தைஅப்பா யாரு?’ என்று கேட்கிறார். குழந்தை தன்னை சுட்டிக்காட்டுகிறது. அதற்கு அப்பாமுட்டாப்பயலே, நான்தாண்டா அப்பா! நீ பரமசிவம் பிள்ளைஎன்கிறார். மீண்டும் அதனிடம்பரமசிவம் யாரு?’ என்று கேட்கிறார். குழந்தை தன்னை சுட்டிக்காட்டுகிறது. ‘போடு பக்காளிஎன்று தூக்கி கொஞ்சுகிறார். குழந்தை பரமசிவம் பிள்ளையாகியது. பின்பு நெடுநாள் கழித்து தனக்குநான்என்ற உணர்வு எப்படி வந்தது என்று மலம் கழித்துக்கொண்டே பரமசிவம் பிள்ளை சிந்திப்பதாக அக்கதை முடிகிறது. நெடுநாட்களாக நமக்கு இத்தகைய விடுபட்ட தன்னிலைதான் (Liberated self) சுயம், சிக்கிக்கொள்ளும் நிலை அல்ல என்றே சொல்லப்பட்டுள்ளது. இங்கு எங்கேனும் ஒரு தியான வகுப்புக்கு சென்றாலும் அதுதான் சொல்லப்படும். 

ஆனால் கடந்த முன்னூறு ஆண்டுகளில் நாம் மறந்த ஒரு விஷயம் உண்டு. இந்த விடுபட்ட நிலை பற்றிய பேச்சு ஒருவித விசேஷ நிலையை சார்ந்ததே. அது சாமானிய தளத்தில் பேசப்படும் ஒன்றல்ல. அசாதாரணமான தத்துவார்த்தமான பேச்சுகளெல்லாம் விசேஷ நிலையை சார்ந்தவையே. சாமானிய நிலையில் ஜெயமோகன் யார் என்றால், ஜெயமோகனுடைய உறவுகளும் மண்ணும் மனிதர்களும்தான். இந்த வேறுபாட்டை உணராதவர்களாக நாம் இருந்ததால்தான் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரலாறற்ற மக்களாகவும் வரலாறு தெரியாத மக்களாகவும் ஆகிப்போனோம். நமது வீதிகளில் உள்ள கோபுரங்களை யார் கட்டியது என்று கேட்டபோது, ‘தெரியவில்லை, யாரோ பூதங்கள் கட்டியதுஎன்று சொல்லும் மக்களாக நாம் ஆனதற்கு காரணம் இந்த வேறுபாட்டை மறந்ததே.

விடுபட்ட நிலை, முக்தி நிலை என்று ஒன்று உண்டு. ஆனால் அவ்வாறு முற்றிலும் விடுபடாத நிலையில் நமக்கு வரலாறும் அரசியலும் வேண்டும், சுற்றமும் சூழலும் வேண்டும். எனது நண்பரிடம்பொதுவாக மார்க்சிஸ்டுகள் சொல்வதையே நீங்களும் சொல்கிறீர்கள். இந்தியா வரலாறற்ற தேசமா?’ என்று கேட்டேன். அவர், ‘இந்தியா வரலாறுள்ள தேசம்தான். ஆனால் இங்கு குலக்குழு வரலாறு மட்டும்தான் உள்ளதுஎன்றார். நம்முடைய வரலாறு என்பது சாதிகளின் / இனக்குழுக்களின் வரலாறாகவே நம்மிடம் உள்ளது. அதனால் ஒருவரிடம் அவர் யார் என்று கேட்டால், தான் சார்ந்த சாதியையோ அல்லது அதில் இருக்கும் உட்பிரிவையோதான் சொல்வார். தமிழன் என்றோ இந்தியன் என்றோ சொல்லமாட்டார். ஏனெனில் அந்த இனக்குழு வரலாறுதான் நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய தன்னிலையைத்தான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் இதுமட்டுமே நம்மை வரலாறற்றவர்களாக ஆக்கிவிடுமா ? இந்த வரலாற்றில் என்ன இருக்கிறது ? இதுகுறித்து எனது சில அனுபவங்களை சொல்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன், எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, என் அம்மா எங்கள் குலதெய்வக் கோவிலுக்கு அழைத்துச்சென்றார். எங்கள் கோவில் இடிந்துபோன ஒரு பழைய வீட்டிற்கு அருகில் உள்ளது. நமது மரபில் மூதாதையரை தென்புலத்தார் என்பர். அதனால் மூதாதை வழிபாடான குலதெய்வக் கோவில்கள் பொதுவாக தென்திசையில் இருக்கும். அந்தக் கோவில் ஓலைக்கூரை வேயப்பட்ட ஒரு சிறிய கோவில். நாங்கள் சன்னிதியின் முன்பு நின்றுகொண்டிருக்கும்போது குலப்பூசாரி வந்து வாசலை திறந்தார். நான் உள்ளே எதிர்பார்த்தது ஒரு சிலையை. ஆனால் அவர் விளக்கை ஏற்றும்போது அந்த வெளிச்சத்தில் தெரிந்தது ஓர் ஓவியம். சுவரில் நீலம், சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்டு வரையப்பட்டிருந்தது. அதில் இருந்தது ஒரு பெண்ணின் முகம். அவளுடைய கூந்தல் பறந்துகொண்டிருந்தது. கீழே பலவிதமான விலங்குகளின் உருவங்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு தேர்ச்சியான ஓவியன் வரைந்ததைப் போன்றும் இல்லை. அதேசமயம் ஒன்றும் தெரியாமல் வெறுமனே வரைந்ததைப் போன்றும் இல்லை. பெருமளவுக்கு நீல நிறத்தில் தெரியும் ஓவியம். என் அம்மாவிடம்இது யார்என்று கேட்டேன். ‘இது நம் குலதெய்வம் நீலிஎன்றார். அவள் நீலமாக இருப்பாள், கண்கள் சிவப்பாக இருக்கும், முத்துபோன்ற பற்கள் இருக்கும், உடலும் தலைமுடியும் சிவப்பாக இருக்கும், நம் குலத்திற்கெல்லாம் அன்னை என்றார். ஒரு சிலந்தி நூற்றுக்கணக்கான முட்டைகளை தனது பையில் வைத்திருப்பதைப் போன்று எல்லாக் குலங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கும் ஓர் அன்னை என்று கற்பனை செய்துகொண்டேன். அன்றுமுதல் இன்றுவரை, இந்த ஐம்பது ஆண்டுகளில் நான் சலிக்காமல் எழுதிவரும் பிம்மம் இந்த நீலி. எனது பெரும்பாலான படைப்புகளில் நீலியை வேறுவேறு வடிவங்களில் எழுதியிருக்கிறேன்.

அன்று அவளை வெறும் ஒரு படமாகவே கண்டேன். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வரலாற்றுக்குள் செல்லும்போது யார் இவள் என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் முழுக்க வெவ்வேறு நீலிகள் உள்ளனர். பழையனூர் நீலி கதை பரவலாக அறியப்பட்ட ஒன்று. நீலம் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் நீலி. நீலம் என்பது காட்டின், இருளின், அறியமுடியாமையின் நிறம். அத்தகைய நிறத்தைக் கொண்டவளான நீலி ஒரு முதன்மைத் தெய்வமாக நம் மரபில் இருக்கிறாள். அதன்பின், சமண சமயத்தில் பல்வேறு நீலகேசிகள் இருப்பதை காணலாம். ஐம்பெருங்காப்பியத்தில் நீலகேசி என்பதும் ஒன்று. இந்த நீலி எனும் ஒரு பிம்பத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்திய வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.  

அதன்பின் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளையரான டி.எச்.கோர்டான் (D.H.Gordon) எனும் ஆசிரியரைப் பற்றி படித்தேன். அவர் இந்தியாவுக்கு வந்து இங்கு கர்னலாக பணியாற்றியவர். தனது ஓய்வு நேரத்தில் இங்கிருக்கும் குகை ஓவியங்களையெல்லாம் ஆவணப்படுத்தினார். 1858 முதல் சுமார் இருபதாண்டுகாலம் இந்தியாவிலுள்ள முக்கியமான குகை ஓவியங்களை ஆவணப்படுத்தியவர் அவரே. தமிழகத்தில் மல்லப்பாடி (கிருஷ்ணகிரி), கீழ்வாலை (விழுப்புரம்) போன்ற இடங்களில் குகை ஓவியங்கள் உள்ளன. கருக்கியூர் (நீலகிரி) என்ற இடத்தில் தமிழகத்தின் மிகப்பழமையான குகை ஓவியங்கள் உள்ளன. அது ஏறத்தாழ பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. இன்று நாம் பேசக்கூடிய மொழியோ மதமோ கடவுளோ எதுவுமே தோன்றுவதற்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஓவியங்கள் அவை.

கருக்கியூர்

ஓராண்டு முன்னால் நானும் எனது நண்பரும் அந்த ஓவியங்களை பார்க்கச்சென்றோம். (கருக்கியூர் பயணம்) மலை வழியே நடந்து செடிகொடிகளையெல்லாம் பிடித்து கீழிறங்கி அங்கு சென்றோம். அது ஒரு சரிவான குகை அல்லது ஒரு பாறையின் நீட்சி என்று சொல்லலாம். அதன் அடிப்பகுதி முழுக்க ஓவியங்கள் வரைந்திருந்தனர். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தை மட்டும் கொண்டு அவை வரையப்பட்டிருந்தன. அதன் முன்பு நிற்கும்போது ஒருவித காலம் கடந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. தியானத்தின் போதுதான் அவ்வாறான கால இடமற்ற உணர்வு வரும். அப்போது எனக்கும் அந்த ஓவியங்களுக்கும் இடையில் வரலாறே கிடையாது. நம்மிடமிருக்கும் எழுதப்பட்ட வரலாறுகளைவிடவும் பழமையான அந்த ஓவியங்கள் காலத்தைக் கடந்து எனக்கு அருகில் இருந்தது. ஏனெனில் அதில் இருக்கும் பெரும்பாலான விஷயங்கள் நானறிந்தவை. அதில் பெண்கள் ஒருவர் தோள்மீது மற்றொருவர் கைவைத்து ஆடிக்கொண்டிருக்கின்றனர். இன்றும் இறந்தவர் இல்லங்களில் இந்த ஆட்டம் உள்ளது. ஒரு மாட்டை நான்கைந்துபேர் சூழ்ந்து நின்று பிடிக்கின்றனர். இன்னும் நாம் ஜல்லிக்கட்டு விளையாடிக்கொண்டிருக்கிறோம். பதினைந்தாயிரம் ஆண்டுகள் நமக்குள்ளே ஒரு வரலாறு அறுபடாமல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஆல விதையினுள் ஓர் ஆலமரம் உள்ளது. அது வெறும் கூழாங்கல் அல்ல. பல ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கக்கூடிய ஆலமரத்தின் ஒரு கூறு அந்த விதையில் இருக்கிறது. அதுபோல இங்கிருக்கும் நம் ஒவ்வொருவருள்ளும் வரலாறு இருக்கிறது. அந்த வரலாறை எங்கோ நாம் உணர்ந்து கொண்டுதானிருக்கிறோம். ஒரு குலதெய்வத்தின் வரலாறை அறியவேண்டுமென்றால் ஒரு வட்டாரத்தின் வரலாறை, தமிழகத்தின் வரலாறை, இந்தியாவின் வரலாறையே அறியவேண்டியிருக்கும். 

நான் அந்த நீலியை நேரில் கண்ட தருணம் உள்ளது. இந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது என் அக்கா ஒருவருடன் வேறொரு நீலி கோவிலுக்கு சென்றிருந்தேன். அக்கா எனது கையை பிடித்திருந்தார். காற்றில் என் தலைமுடி அலைந்துகொண்டே இருக்க, ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை சீப்பைக் கொண்டு அதை சீவிவிட்டபடியே வந்தார். அவர் சேலையின் ஒருபகுதி என்மீது பட்டுக்கொண்டிருந்தது. அது அப்போது எனக்கு ஒரு பரவசமான அனுபவம். அந்த இளம் பருவத்தில் முதிர்ந்த அக்காக்களைப் போல அணுக்கமானவர் வேறொருவர் இருக்கமுடியாது. கிட்டத்தட்ட அம்மா, அல்லது இளமையான அம்மா என்று சொல்லலாம். அந்த அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு கோவிலுக்கு சென்றேன்.

நடுகற்கள் நிறைந்த ஒரு பெரும் பொட்டலுக்கு நடுவே அந்தக் கோவில் இருந்தது. அங்கு மையத்தில் இருந்த சிவன் கோவிலுக்கு அருகே ஒரு வளைப்பு. அதனுள் பெரிய கற்கள் நீட்டிக்கொண்டிருந்தன. ஏதோவொரு ராட்சச வாயினுள் இருக்கும் கோரமான பற்கள் போல. அந்த இடத்தை தாண்டி வரும்போது திடீரென்று பெரும் கூச்சலுடன் அக்கா கத்தினாள். நான் பயத்தில் அவள் கைகளை விட்டுவிட்டு பின்னால் சென்றுவிட்டேன். அப்போது அங்கு இருந்தது அக்கா அல்ல, அது நீலி. பார்ப்பதற்கு அவள் வேறுவிதமாகத் தெரிந்தாள். பொதுவாக மனிதக்கண்கள் எதையோ ஒன்றைத்தான் பார்க்கும். காலத்திற்கு அப்பால் பார்க்கும் ஒரு கண் மனிதமுகத்தில் தெரிவதைத்தான் சன்னதம் என்று சொல்கிறோம். அந்த அக்கா சன்னதம் வந்து ஆடியபோது அங்கிருந்த ஆண்களையெல்லாம் வெளியே செல்லும்படி என் அம்மா சொன்னாள். அதன்பின் சிறிது நேரத்தில் நீலி மலையேறிவிட்டாள். அந்தக் கல்லருகே வந்தபோது அவளுக்கு ஏன் சன்னதம் வந்தது என்ற கேள்வி எனக்கு பல ஆண்டுகளாக இருந்தது. 

ஃபூட்

அதன்பின் நெடுநாட்கள் கழித்து ராபர்ட் புரூஸ் ஃபூட் (Robert Bruce Foote) என்ற வெள்ளையரின் நூல் ஒன்றை படித்தேன். விக்டோரியா அரசியின் காலகட்டத்தில் அவர் திருச்சியில் நில அளவையாளராக இருந்திருக்கிறார். சென்னைக்கருகே ஒரு ஆற்றங்கரையில் சென்றுகொண்டிருந்தபோது தற்செயலாக அங்கு ஒரு கல்லைக் கண்டார். அந்தக் கல்லை எடுத்து பார்த்தபோது அது கற்கால அரைக்குரங்கு மனிதர்கள் பயன்படுத்தியது என்பது தெரியவந்தது. இன்றும் சென்னை அருங்காட்சியகத்தில் அதை வைத்துள்ளனர். அந்த கற்கருவிகள் அச்சூலியன் முறைப்படி தயாரிக்கப்பட்டவை (Acheulean Stone Tools) என்று சொல்கிறார்கள். ஒரு கருவியைத் தயாரிப்பதற்கான அறிவோ கையமைப்போ இல்லாத ஹோமோ எரக்டஸ் எனும் குரங்கு மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட கற்கள் அவை. ஒரு கல்லைக் கொண்டு மற்றொரு கல்லை வெட்டி அதை கூர்தீட்டி ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். அதை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டுசெல்வது பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதனால் ஒரு கருவியை உருவாக்கி, அதை பயன்படுத்திவிட்டு அங்கேயே விட்டுச் சென்றிருக்கின்றனர். அருங்காட்சியகத்தில் அந்த கற்களை காணும்போது ஒரு பெரும் பரவசம் ஏற்படுகிறது. இராமேஸ்வரம் கோயிலின் மகத்தான பிராகாரத்தைக் கட்டிய கலை ஏறத்தாழ இரண்டுலட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த கற்கருவிகளில் இருந்து தொடங்குகிறது. நம் மூதாதையர் அந்த கற்கருவிகளை செய்யத்தொடங்கிய காலம் முதல் இன்றுவரை ஒரு தொடர் வரலாறு நமக்குண்டு. அந்த வரலாற்றை யாரும் கற்பிக்க தேவையில்லை. அது நமக்குத் தெரியும். அது நம் மூளைக்கு தெரியாது, நம் ஆழ்மனதுக்கு தெரியும். அதை நாம் சிந்தித்து அறியமுடியாது, தியானித்து அறியலாம். 

தமிழகத்தில் கிட்டத்தட்ட முன்னூறு இடங்களில் பெருங்கற்கள் என்ற அமைப்பு இருக்கின்றன. அவை கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் யாரென்றே தெரியாத, எவ்வகையிலும் புரிந்துகொள்ள முடியாத நமது மூதாதையரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள். ஒரு பெரியவரோ மன்னனோ இருந்தால் அங்கு இந்த கற்களை நாட்டுகிறார்கள். எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில் மிகப்பெரிய கற்களை மலைகள்மீது கொண்டுசென்று நிறுவியிருக்கிறார்கள். அந்தக் கற்கள் வெளியே எவ்வளவு உயரம் இருக்கிறதோ மண்ணுக்குள்ளும் அவ்வளவு உள்ளது. அதனால்தான் அவை இத்தனை ஆண்டுகாலம் சரியாமல் இருக்கின்றன. அக்கற்களை நாட்டியவர்கள் அச்செயல் வாயிலாக எதிர்கால சந்ததியினரை நோக்கி பேசுகிறார்கள். அது எதிர்காலத்தை நோக்கிய அறைகூவல். இறந்தவர்களுக்கு கல்லை நாட்டிவைக்கும் வழக்கம் அங்கிருந்து  தொடங்கியது. இன்று நாம் தமிழகம் முழுக்க நடுகற்களை பார்க்கலாம். பல இடங்களில் சுமைதாங்கிக் கற்கள் என்று நாம் கருதும் அவை பெருங்கற்கால நாகரீகத்தின் தொடர்ச்சி. இன்றும் அத்தகைய பழக்கம் நம்மிடம் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது. ஆந்திரப் பகுதியின் மலைக்கோயில்கள் இருக்குமிடங்களில், அங்கு வழிபட்டுவிட்டு வரக்கூடிய மக்கள் கற்களை அடுக்கி கோபுரம் போன்று வைத்துவிட்டுச் செல்வதை பார்க்கமுடிகிறது.  

அத்தகைய அறுபடாத மரபு நம்மிடம் உள்ளது. அந்த மரபுதான் ஒரு பெண்ணுக்குள் இருந்து புராதனமான நீலியை வெளிக்கொண்டுவருகிறது. இந்த வரலாறு நமக்கு உள்ளே இருக்கும் வரலாறு. வெளியே இருக்கும் வரலாற்றை நமக்கு மீட்டுத்தந்தவர்கள் வெள்ளையர்கள். அந்த புறவய வரலாற்றில் இந்த அகவய வரலாற்றை பொருத்திப்பார்த்து புரிந்துகொள்கிறோம். நம்மிடம் இருப்பவை வண்ணங்கள். அவர்கள் அளித்தது சுவர். அதில் நாம் வரைந்துகொள்கிறோம். அதனால் நாம் வரலாறற்ற மக்களல்ல. வரலாறை மறந்த மக்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வரலாறு உள்ளது. அந்த வரலாறை எழுதும் கலையை நாம் கற்கவில்லை. அதை நமக்கு கற்றுத்தந்த வெள்ளையர்கள் நம் வணக்கத்திற்கு உரியவர்களே.

இதை நான் அந்த மார்க்சிய நண்பரிடம் சொன்னேன். அதற்கு அவர், ‘இதுகூட இந்தியாவின் வரலாறு அல்ல. ஒரு வட்டாரத்தின் வரலாறு, ஒரு சமூகத்தின் வரலாறுதான்என்றார். அதற்கு நான் பதிலளித்தேன். இங்கு புதுக்கோட்டைக்கு அருகில் பெருங்கற்கால நாகரீகத்தை சார்ந்த ஒரு கல் வளையம் உள்ளது. அங்கிருந்து ஒருவன் கட்டுச்சோற்றை கட்டிக்கொண்டு நடந்துசென்றால் காஷ்மீர் வரைக்கும் அதுபோன்ற அமைப்புகளை முப்பது கிலோமீட்டருக்கு ஒருமுறை பார்த்துக்கொண்டே செல்லலாம். ஆதிச்சநல்லூரில் இருந்து கிளம்பி கொடுமணல், நாகார்ஜுனகொண்டா, லோத்தல் வழியாக பயணித்து மொகஞ்சதாரோ வரை சென்றுவிட முடியும். ஐயாயிரம் ஆண்டு பழமையான ஒரே நாகரீகம் இந்தியாவில் உள்ளது. நமக்கு பள்ளிப்பாடத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டது, ஹரப்பா, மொகஞ்சதாரோ என்ற இரண்டு நாகரீகங்கள் இருந்தன என்றும் அவை திராவிடர்களுடையதாக இருக்கலாம் என்பது போன்று. இந்தப் பொய்களெல்லாம் உடைத்து கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் நாம் அவற்றையே கேட்டுக்கொண்டிருக்கிறோம். இன்று தமிழகத்தில் வரலாறு பற்றி பேசும் பலருக்கு இந்தியா முழுக்க ஹரப்பா காலகட்டத்தை சார்ந்த அல்லது அதைவிடப் பழமையான நூறு நகரங்கள் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவல் தெரியாது. ஆகையால் எங்கிருந்தோ வந்தவர்கள் குடியேறிய நாடு அல்ல இது. காமரூபம் முதல் காந்தாரம் வரை, தெற்கே ஆதிச்சநல்லூர் வரை ஒரே படலமாக ஒரு பெரிய நாகரீகம் உள்ளது. ஒரு பெரிய கோலத்திற்கான புள்ளிகளாக அவை உள்ளன. அவற்றை இணைத்து கோலம் வரைவதற்கான வரலாற்று அறிவு நமக்கு இல்லை. 

இந்தியா ஒரு தேசமா என்று மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்த கேள்விக்கு நான் நூறுமுறையாவது பதில் சொல்லியிருப்பேன். ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகுஎன்று சும்மாவா சொன்னான் என்பார்கள். எட்டாம் அல்லது பத்தாம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு பனம்பாரனார் எழுதிய உரையில் வரும் வரி அது. அதுபோல சிலப்பதிகாரத்தில் அவ்வாறான வரி உண்டு. ஆனால் அதுவும் ஐந்தாம் நூற்றாண்டு நூல். ஆனால் அதற்கெல்லாம் எழுநூறு ஆண்டுகள் பழமையானது புறநானூறு. அதில் முதல் பதினாறு பாடல்கள் இருப்பதிலேயே மிகப்பழமையானவை. அதில் இரண்டு இடங்களில் இந்தியாவின் நில எல்லை வந்துவிடுகிறது. ”வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்…” என்று பாண்டிய மன்னனைப் பற்றிய பாடல் உள்ளது. வடக்கில் உள்ள பனிமலை முதல் தெற்கில் உள்ள குமரி வரைக்கும் கிழக்கும் மேற்கும் கடலால் சூழப்பட்டது உன் நாடு என்று பாண்டியனை போற்றுவதாக அப்பாடல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எல்லையை தெளிவாகவே சுட்டிக்காட்டுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு இருக்கும் ஒரு பண்பாட்டைப் பற்றி, அது ஒரு தேசமாக உருத்திரண்டதைப் பற்றியே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.   

அதுபோல எங்கும் காதில்விழும்  மற்றொரு வரி உண்டு. ‘சுதந்திரம் கிடைத்ததால் என்ன பயன் ?’,  வெள்ளையன் போய் கொள்ளையன் வந்தான்என்று அடைமொழி வசனங்களை பேசுவார்கள். கொஞ்சம் தங்களை புத்திசாலிகளாக கருதிக்கொள்பவர்கள் சற்று வேறுவிதமாக, வெள்ளைக்காரர்கள்தான் சாலை போட்டனர், ரயில்பாதை அமைத்தனர் என்பதாக பேசுவார்கள். அவர்கள் நம் நாட்டை நன்றாகத்தான் வைத்திருந்தார்கள், நம் ஆட்கள் வந்தபிறகுதான் நாடே சீரழிந்தது என்பார்கள். இந்த சுதந்திர தினத்தில்கூட டீக்கடையில் நான்குபேர் இவ்வாறு பேசிக்கொண்டிருப்பர். இப்படிப்பேசுவது ஒரு மோஸ்தர். இவர்களை யாரும் தட்டிக்கேட்பது கிடையாது என்பதால்தான் இவ்வாறு பேசுகின்றனர். அந்த இடத்தில் யாரேனும் எதிர்த்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பேன். யாரும் பேசமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கும் தெரியாது. மேடைகளில் பணம் பெற்றுக்கொண்டு பேசும் அசடர்களின் சொற்களைத்தான் நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கான பதிலை நாம் சொல்வதில்லை. 

இந்தியப்பஞ்சம் 1887

1750 களில்தான் இந்தியாவில் வெள்ளையர்கள் காலெடுத்து வைக்கின்றனர். 1770 களில் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய பஞ்சம் இந்தியாவில் ஏற்படுகிறது. மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒருபங்கு பேர்கிட்டத்தட்ட இரண்டரை கோடிபேர்இறந்தனர். அத்தகைய பஞ்சங்கள்பற்றி இன்று விரிவாக ஆய்வுசெய்து எழுதப்பட்டிருக்கிறது. ராய் மாக்ஸம் (Roy Moxham) என்ற வெள்ளையர் இதுகுறித்து ஆய்வு செய்து The great hedge of India (தமிழில்: உப்புவேலி) என்ற முக்கியமான நூலை எழுதியிருக்கிறார். அதுகுறித்துஇந்தியாவின் மாபெரும் வேலிஎன்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரிசா முதல் காஷ்மீர் வரை ஒரு மாபெரும் முள்வேலியை அமைத்திருந்தனர். இந்தியாவின் வடபகுதிகளுக்கு தேவையான உப்பு குஜராத், ஒரிசா பகுதிகளில் இருந்துதான் செல்லவேண்டும். அதைக் கட்டுப்படுத்தி சுங்கம் வசூலிக்கும் பொருட்டு அவ்வாறு வேலி அமைத்திருந்தனர். அந்த வேலிதான் பஞ்சத்தில் இத்தனை பேரை கொன்றது. இந்தியாவில் மழைக்காலத்தில் ஒரு பகுதியில் அதிகமாக விளைவதும் மற்றொரு பகுதியில் பஞ்சம் ஏற்படுவதும் இயல்பு. பஞ்சம் ஏற்பட்ட பகுதியின் மக்கள் செழிப்பான பகுதிகளுக்கு செல்வர். அவ்வாறு மாறிமாறி சென்றுகொண்டிருப்பது வழக்கமான ஒன்று. மொகலாய ஆவணங்களில் இத்தகைய நிகழ்வுகளை காணலாம். இந்த மாபெரும் வேலி அவ்வாறான இடப்பெயர்வை தடுத்து நிறுத்தியதே பஞ்சத்தில் மக்கள் பெருமளவுக்கு இறந்ததற்குக் காரணம். 

அதன்பிறகு அடுத்த நூறாண்டுகளில் பதின்மூன்று பஞ்சங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 1884 ஐ தொடர்ந்து ஆறு ஆண்டுகளில் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய பஞ்சமான இரண்டாவது தாதுவருடப் பஞ்சம் ஏற்பட்டது. அதில் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்தனர். இத்தனைபேர் சாகிறார்கள் என்ற தகவல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சொல்லப்பட்டபோது அன்றிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர் சொன்னார், ‘போன பஞ்சத்தில் ஒன்றரை கோடிபேர் இறந்ததாக சொன்னீர்கள். அப்படியிருக்க இந்த பஞ்சத்தில் இவ்வளவு சாவு ஏற்படுவதற்கு ஆட்கள் எங்கிருந்து வந்தனர் ? இந்தியர்கள் எலிகளைப் போல. அவர்கள் பெருகுவார்கள்‘.

உலகில் எந்தவொரு பஞ்சத்திலும் இத்தனைக்கோடி பேர் இறந்தது கிடையாது. ஆங்கிலேய ஆவணத்தின்படி கோவையில் ஒரு நாளைக்கு 22,000 பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டன. வெள்ளையர்கள் இங்கு சொர்க்கத்தை உண்டாக்கி வைத்திருந்ததாக நாம் கருதிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அனைத்து ரயில் பாதைகளும் இங்கிருந்து உணவு தானியங்களை வெளியே ஏற்றுமதி செய்யும்பொருட்டு துறைமுகங்களை நோக்கி அமைக்கப்பட்டவை. பஞ்சகாலத்தில் சில தேச நலன்விரும்பிகள், பிரிட்டிஷ் மனிதாபிமானிகள் மக்களை காக்கும்பொருட்டு ஆறுமாத காலத்திற்கு இத்தகைய உணவு ஏற்றுமதியை தடுத்து நிறுத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்றாடினார். ஆனால் இந்தியர்களின் சாவை தடுப்பதற்காக உணவு ஏற்றுமதியை நிறுத்தினால் தாங்கள் எகிப்திலும் அரேபியாவிலும் நடத்திக்கொண்டிருக்கும் போர்களுக்கு தானியம் இல்லாமல் போகும் என்று சொல்லி மறுத்துவிட்டனர்

இந்தியாவில் ஊழல் என்பது வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்திலேயே தொடங்கியது. கோலட் என்ற சென்னை கவர்னர் செய்த ஊழல் தொகையை இன்று கணக்கிட்டால் இங்கு உள்ளவர்கள் எல்லாம் சும்மா ஏதோ சம்பாதித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவர்கள் யோக்கியர்கள், நாம் ஊழல்வாதிகள் என்று நம்மவர்கள் நம்மிடையே சொல்கிறார்கள். சென்னை கவர்னராக மூன்றுமுறை இருப்பது என்பது அடுத்த ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதற்கே. பஞ்சத்தின்போது  இங்கே ஆண்டுகொண்டிருந்தவர் பக்கிங்ஹாம் பிரபு. பக்கிங்ஹாமின் மூதாதையர் போரில் அனைத்து சொத்துகளையும் இழந்துவிட்டனர். தனது பொருளாதார நிலையை மீட்டெடுப்பதற்காக அதிக வருவாய் வரக்கூடிய சென்னை மாகாணத்திற்கு கவர்னராக வருகிறார் பக்கிங்ஹாம் பிரபு. அவர் இங்கிருந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டிய செல்வத்தைப் போன்று நம் இந்திய அரசியல்வாதிகள் எவரும் ஈட்டியதில்லை. ஊழலில் நிபுணத்துவம் வாய்ந்த வெள்ளை ஆட்சியாளர்களைப் போல ஒரு அரசியல்வாதியைக் கூட சுதந்திர இந்தியா உருவாக்கவில்லை.

பக்கிங்ஹாம் ஆட்சியில் இருக்கும்போது மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இருக்கும் பண்ணை முதலாளிகள் இந்தியாவில் நிலவும் பஞ்சத்தை நிறுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் குறைந்த கூலிக்கு தங்கள் பண்ணைகளுக்கு வேலையாட்கள் வருவது குறைந்துவிடும் என்றும் கோருகிறார்கள்.  இங்கு பஞ்சமும் வறுமையும் இருந்தபோது குறைந்த கூலிக்கு தோட்ட வேலைகள் செய்யும்பொருட்டு மக்கள் பெருமளவுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். நூறுபேரை அழைத்துச்சென்றால் அதில் பத்து பேர்தான் தேறுவார்கள். மற்றவர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுவர். லட்சம் பேரை அழைத்துச் சென்றால்தான் ஆயிரம் பேராவது அங்கு மிஞ்சுவார்கள். அவ்வளவு பேரை அழைத்து செல்லவேண்டுமென்றால் இங்கு பஞ்சம் இருக்கவேண்டும். ஆகையால் பஞ்சத்தை நிறுத்தக்கூடாது என்று சொல்லி பக்கிங்ஹாமுக்கு லஞ்சம் கொடுக்கின்றனர்.

அதுபோல உள்ளூரில் கட்டுமான வேலைகளுக்கு குறைந்த கூலிக்கு ஆட்களை பெறும்பொருட்டு பஞ்சத்தை நிறுத்தவேண்டாம் என்று கோரப்படுகிறது. சென்னை முதல் விசாகப்பட்டினம் வரை கடற்கரை வழியாக மக்களைக் கொண்டு தோண்டி அமைக்கப்பட்டதுதான் பக்கிங்ஹாம் கால்வாய். அங்கு வேலைசெய்த மக்களுக்கு தினமும் ஒருவேளை கஞ்சி உணவாகக் கொடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ஒருவேளை கஞ்சிக்காக வந்து வேலை செய்தனர். இப்படி கட்டப்பட்ட அந்த கால்வாய் எட்டே ஆண்டுகளில் பயனற்றுப்போனது. இன்று பக்கிங்ஹாமின் பெயரை சொல்லிக்கொண்டு தூர்ந்துபோய் கிடக்கிறது. சென்னையில் இருக்கும் பழமையான பெரிய கட்டிடங்கள் பஞ்சகாலத்தில் மக்களை சுரண்டி கட்டப்பட்டவையே.

1947 இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது எந்த நிலைமை மாற்றமும் இல்லை. 1950 களில் பீகாரில் பெரும் பஞ்சம் நிலவியது. ஆனால் அந்த பஞ்சத்தில் ஒருவரைக்கூட சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் சாகவிடவில்லை. அதற்கு முக்கிய காரணமான இரண்டு நபர்கள் ஜவாஹர்லால் நேருவும் ஜெயபிரகாஷ் நாராயணனும். ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கிய கஞ்சித்தொட்டி இயக்கம் பிகார், .பி. முழுக்க பல்லாயிரக்கணக்கான மக்களை பஞ்சத்தில் இருந்து காத்தது. உண்மையில் இது சாத்தியம்தான். இயல்பில் அவ்வளவு எளிதாக பட்டினியால் யாரும் செத்துவிடமாட்டார்கள். ஏனெனில் மனித உடல் இருபது நாட்கள் வரைக்கும்கூட எந்த உணவும் இல்லாமல் இருக்கும். அதற்குள் ஒரு கைப்பிடி கஞ்சி கிடைத்தாலும் பிழைத்துக்கொள்வார்கள். அதைக்கூட அளிக்காமல் மக்களை சாகவிட்ட பஞ்சம் என்பது இயற்கையானது அல்ல, செயற்கைப் பஞ்சமே. சொல்லப்போனால் அது ஒரு கொலை. 

நான் கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு இந்தியவியல் நூல்கள் இருக்கும் பகுதியில் நேரு எழுதிய கடிதம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது அப்போதைய பிரதமர் நேரு உலகின் பல அரசாங்கங்களுக்கு உதவிகேட்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார். எனது பிச்சைப் பாத்திரத்தை உங்கள் காலடியில் வைக்கிறேன் என்கிற அளவுக்கு அவர் எழுதியிருக்கிறார். அமெரிக்காவின் கலிஃபோரினியா மாநிலத்தார் நமக்கு பெரும் உதவியை செய்தனர். நேரு அதற்கு நன்றிக்கடனாக இந்தியவியல் தொடர்பான சில நூல்களை கலிஃபோர்னியாவுக்கு அனுப்பிவைத்தார். அந்தக் கடிதத்தை அவர்கள் அங்கு வைத்திருந்தனர்.

என்னுடன் இருந்த மென்பொருள் துறையை சார்ந்த இந்தியர் ஒருவர், ‘பார்த்தீங்களா வெள்ளைக்காரன் திமிரை! நேரு கெஞ்சியதை ஃபிரேம் போட்டு வைத்திருக்கிறான். நம்மை கேவலப்படுத்துகிறார்கள்என்றார். அதற்கு நான், ‘ஒரு தலைவன் தன் மக்களை சாகவிடக்கூடாது என்பதற்காக கெஞ்சுகிறான். அப்படிப்பட்ட தலைவனைப் பெற்றதற்கு நீங்கள் பெருமையல்லவா படவேண்டும்என்றேன். நம்மை இருநூறாண்டுகள் ஆண்டவர்கள், நாம் இங்கே பஞ்சத்தில் செத்துக்கொண்டிருந்தபோது கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஆடம்பரமான விருந்துகளை நடத்திக்கொண்டிருந்தனர். ஆனால் நமக்கென்று ஒரு தலைவன் வந்தபோது இங்கு ஒருவரையும் அவன் சாகவிடவில்லை. இதுதான் இந்திய சுதந்திரம் சாதித்தது.

இந்திய சுதந்திரம் நமக்கு ஜனநாயகத்துக்கான சுதந்திரத்தையும் வெற்றிக்கான சுதந்திரத்தையும் கொடுத்தது. அந்த சுதந்திரத்தை பயன்படுத்தாமல் இருப்பது அதை வாங்கிக்கொடுத்தவர்களின் தவறு அல்ல. நாம் நமது சுயநலத்தாலும் அறியாமையாலும் அற்பத்தனத்தினாலும் நமது பொறுப்பை மற்றவர்கள் தலையில் போடுகிறோம். காந்தி சுதந்திரம் வாக்கிக்கொடுக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பேசுகிறோம்.

ஒவ்வொரு முறையும் இதை சொல்லும்போதும் மண்மறைந்த நம் மூதாதையர் அத்தனை பேரின் முகத்திலும் காறி உமிழ்கிறோம். சுதந்திரம் நமக்கு எதைக் கொடுத்தது என்ற கேள்விக்கு நான் சொல்லும் பதில் இதுதான். நமக்குள்ளே இருக்கும் வரலாறு நம்மை ஒரே தேசமாகத்தான் வைத்திருந்தது. அந்த அகவயமான வரலாறை புறவயமான தரவுகள் வழியாக நமக்கு உணர்த்தியவர்கள் வெள்ளை ஆய்வாளர்களே. அதற்கு அவர்களை நாம் வணங்குவோம். ஆனால் நாம் வரலாறற்ற மக்களல்ல. வரலாற்றில் ஒவ்வொரு கணமும் வாழும் மக்கள். அந்த வரலாற்றை மீட்டெடுத்து ஒரு பெரும் பொற்கனவை இங்கு உருவாக்கினோம். அதை நமது அற்பத்தனத்தினால் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது.

***

முந்தைய கட்டுரைசு.கி.ஜெயகரன்
அடுத்த கட்டுரைஇளங்கோ கிருஷ்ணனுக்கு விருது