அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா கோவையில் மையமான இடத்தில் , ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. தூரன் விருதுவிழா நிகழுமிடம் ஈரோட்டில் இருந்து சற்று அப்பால் உள்ளது. பேருந்தில் ஏறி அங்கே வந்து சேரவேண்டியிருக்கிறது. ஈரோட்டிலேயே உள்ள அரங்குகளில் அவ்விழாவை நிகழ்த்த முடியுமா என்று பார்க்கலாம் என்பது என் எண்ணம். தவறாக நினைக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்
முருக. சண்முகதாஸ்
தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா, தங்குமிடம் முன்பதிவு
அன்புள்ள சண்முகதாஸ்
நிகழ்ச்சி நடைபெறும் ராஜ்மகால் திருமண மண்டபம் (கவுண்டச்சிப்பாளையம், சென்னிமலை சாலை) ஈரோட்டில் இருந்து தொலைவில் உள்ளது அல்ல, ஈரோட்டில் இருந்து ஒரே பேருந்தில் அல்லது ஆட்டோ ரிக்ஷாவில் வந்துவிட முடியும்.
இம்முறை அங்கே வரவிரும்புபவர்கள் பேருந்து நிலையத்திற்கு மிக அருகே உள்ள விஷ்ணுபுரம் அலுவலகத்திற்கு வருவார்கள் என்றால் அங்கிருந்து வண்டியில் இலவசமாக ராஜ்மகாலுக்கு கொண்டு சென்று சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த இடம் ஈரோடு வழக்கறிஞர் நண்பர் செந்திலுக்குச் சொந்தமானது. அவர் இதை இலவசமாக அளிக்கிறார். இப்படி வெவ்வேறு கொடைகள் வழியாகவே இந்நிகழ்வு நடைபெறுகிறது. நாங்கள் பொருள்வளம் மிக்க அமைப்பினர் அல்ல.
அத்துடன் இன்னொரு யதார்த்தமும் உள்ளது. ஈரோடு ஒரு வணிகநகரம். அங்கே கலையிலக்கியத்திற்கான ஆர்வம் மிகமிகக் குறைவு. அங்கிருந்து எங்கள் நிகழ்வுக்கு சென்ற முறை வந்தவர்கள் பத்துக்கும் குறைவானவர்களே. நாங்கள் பொதுமக்களை ஈர்க்கும் கலைநிகழ்ச்சிகளோ பட்டிமன்றமோ நடத்தவில்லை. இது ஓர் அறிவார்ந்த நிகழ்வு. அதில் சமரசம் இல்லை. தூரன் ஈரோட்டின் மைந்தன் என்பதனால் ஈரோட்டில் நடத்துகிறோம், அவர் நினைவு வாழவேண்டும் என்பதற்காக.
இந்நிகழ்வில் பெரும்பாலானவர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து 14 ஆம் தேதி மாலைமுதலே தங்கி விழாவில் பங்கெடுப்பவர்கள். அனைவருமே எங்கள் இலக்கிய நண்பர்கள். இது நாங்கள் ஒன்றாகக்கூடி, பேசி சிரித்து கொண்டாடும் ஒரு விழா. அதற்கு எங்களுக்கு இரண்டு நாட்கள் இடம்தேவை. அத்தகைய இடம் ஈரோட்டில் நகருக்குள் என்றால் பெருஞ்செலவிலேயே கிடைக்கும். பொதுவாக தமிழகத்தில் அறிவார்ந்த நிகழ்வுகளுக்கு செல்வந்தர்கள் ஆதரவளிப்பதில்லை, சலுகை காட்டுவதுமில்லை.
ஆகவே ராஜ் மகாலில் நடைபெறுகிறது. நீங்கள் வரவிரும்பினால் அலுவலகத்தை தொடர்புகொண்டு வண்டிக்கு ஏற்பாடு செய்துகொள்லலாம்(தொ எண்: 9500384307)
ஜெ