அனைவருக்குமான ஒரு விழா- கடிதம்

தூரன் விழா, உளப்பதிவுகள்
தூரன் விழா விருது உரைகள்
தமிழ் விக்கி -தூரன் விருது விழாவில்…
தமிழ்விக்கி தூரன் விருதுவிழா- இசை

அன்புள்ள ஜெ

தமிழ்விக்கி தூரன் விருதுவிழா இன்னொரு விஷ்ணுபுரம் விருதுவிழாவாக உருமாறிக்கொண்டிருக்கிறது. இந்த விழாவும் அதேபோல இரண்டுநாள் கொண்டாட்டம். நண்பர்களுடனான அளவளாவல். இரவு சேர்ந்து தங்கும்போது நிகழும் முடிவில்லாத விவாதங்கள். காலையில் ஒரு சின்ன நடை. (அருகே ஒரு பறவைச்சரணாலயம் உள்ளது. அற்புதமான இடம் அது).

தூரன் விருதுவிழாவுக்கு அதற்கான தனித்தன்மைகள் உள்ளன. விஷ்ணுபுரம் விழாவில் இளம் படைப்பாளிகளுக்காக அரங்கம் என்பது ஒரு பெரிய கவர்ச்சி. ஆனால் தூரன் விருது விழாவிலுள்ள நாதஸ்வர இசைநிகழ்வு ஒரு மிகப்பெரிய நிகழ்வு. சென்ற ஆண்டை மறக்கமுடியாத ஒன்றாக ஆக்கியது அதுதான். நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது அதைப்பற்றியேதான் பேசிக்கொண்டு சென்றோம்.

தமிழில் இலக்கியத் திருவிழாக்களாக நிகழ்பவை உண்மையில் இந்த இரண்டு விருது நிகழ்வுகளும்தான். சென்னையில் கவிஞர் குமரகுருபரன் விருதுவிழா நிகழ்கிறதென்றாலும் இந்த அளவுக்கான கொண்டாட்டம் இல்லை. சென்னையில் பங்கேற்பாளர்கள் குறைவு. தூரன் விருதுவிழாவுக்கு பல ஊர்களில் இருந்து வந்து தங்கிக் கொண்டாடுகிறார்கள். இலக்கியம் என்பது இந்தவகையான அற்புதமான கூடுகைகள் வழியாகத்தான் நினைவில் நீடிக்கிறது. ஓர் ஆண்டு முடியும்போது மனதில் மிஞ்சியிருப்பது அந்த ஆண்டு நிகழ்ந்த இத்தகைய கொண்டாட்டங்கள்தான்.

 

தூரன் விருது விழா, 2022
தமிழ் விக்கி – தூரன் விருதுவிழா, ஈரோடு, முதல்நாள்

நான் பார்த்தவரை எந்த வகையான குழுமனநிலையும் இல்லாமல், இலக்கியத்தின் எல்லா தரப்புகளையும் கணக்கில்கொண்டு நிகழும் விழா இது. சென்ற ஆண்டு விருது பெற்றவர்களில் இளங்கோவன் பாரதிதாசன் மரபைச் சேர்ந்தவர், தனித்தமிழியக்க ஆர்வலர். சிவசங்கர் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் இந்த விழாவை தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட குழுவின் நிகழ்வாக முத்திரைகுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அதை நம்பி இவற்றை தவிர்ப்பவர்கள் அவர்களுக்கே இழப்பு என உணர்வதில்லை

சென்ற ஆண்டு நிகழ்ந்த அரங்குகள் போல அத்தனை அறிவார்ந்த , செறிவான அரங்குகள் தமிழகத்தில் இன்றைக்கு எங்கேயுமே நிகழ்வதில்லை என்பதுதான் உண்மை. இதை உணர்ந்தவர்கள் இந்த விழாவை தவறவிடமாட்டார்கள்

சிவக்குமார் மாரியப்பன்.

 

தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா, தங்குமிடம் முன்பதிவு

முந்தைய கட்டுரைகாணொளிகள் பற்றி…
அடுத்த கட்டுரைகோட்பாடுகளைப் பேசுதல்,கடிதம்