தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்
தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள்
ஜெ,
இவ்வாண்டு நாதஸ்வர நிகழ்வின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது. இது ஒரு மரபாக ஆகிவிட்டிருப்பதை எண்ணி நிறைவுகொள்கிறேன். தமிழர்கள் தமிழிசை, தமிழ் மரபு என்றெல்லாம் பேசுவார்களே ஒழிய எந்தவகையிலும் அவற்றுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தமாக உள்ளது. தமிழ் மரபின் இசைக்கலைஞர்கள் இங்கே எந்தவகையான கவனமும் பெறாமல்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டின் இசைக்கலைஞர்களான விஜய் கார்த்திகேயன் பிரகாஷ் இளையராஜா ஆகியோரை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இவர்களுடன் ஒப்பிட ஒரு சாதாரணப் பாடகருக்கு இருக்கும் பெரும்புகழை எண்ணிப்பார்க்கையில்தான் இந்த உண்மை தெரிகிறது. தமிழ்விக்கி– தூரன் விருதுக்குழுவினரின் இந்த முயற்சி மிகுந்த மதிப்புக்குரியது. காலத்தால் செய்யும் மிகப்பெரிய பண்பாட்டுச்சேவை இது.
ஆ. கணபதிசுப்ரமணியம்
அன்புள்ள ஜெ
இந்த ஆண்டும் தூரன் விருதுவிழாவை ஒட்டி நாதஸ்வர இசைநிகழ்வு நடக்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தூரன் பிறந்த மண். தமிழிசையின் தலைமகன்களில் ஒருவர் அவர். ஆனால் இங்கே ஒரு நல்ல நாதஸ்வர இசையினை கேட்கவே முடியாது. திருமண நிகழ்வுகளில் மங்கல இசையாக நாதஸ்வரம் ஒலிக்கும். ஆனால் முதன்மையான குழுக்கள் அழைக்கப்பட்டு உரிய முறையில் கௌரவிக்கப்படுவதே இல்லை. கோடிக்கணக்கில் செலவிடப்படும் திருமணங்களில்கூட இதுதான் நிலை. இங்கே இத்தகைய அற்புதமான நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது
ஆர்.கே. பழனிக்குமார்