ஆண்டுதோறும் நிகழும் தமிழ்விக்கி– தூரன் விருதுவிழாவில் பெரியசாமி தூரன் அவர்களின் தமிழிசைப்பாடல்களை நாதஸ்வர இசையாக நிகழ்த்தும் இசையரங்கை அமைத்து வருகிறோம்.
இரண்டு நோக்கங்கள் இதில் உள்ளன. ஒன்று, தூரனின் தமிழிசைப்பாடல்களை மீண்டும் செவிக்கு அணுக்கமாக்குவது. இரண்டு, தமிழின் தனித்துவமான இசைக்கருவியான நாதஸ்வரத்தை இளைய தலைமுறைக்கு மீண்டும் அளிப்பது.
நாதஸ்வரம் இங்கே எல்லா நிகழ்வுகளிலும் ஒலிக்கிறது. ஆனால் அது ஒரு பின்னணி மங்கல ஓசையாகவே அணுகப்படுகிறது. இங்கே நாங்கள் அதை அவைகூடி அமர்ந்து இரண்டு மணிநேரம் கேட்கும் நிகழ்வை ஒருங்கிணைக்கிறோம். இசையரங்குக்கு உரிய வகையில் செவிக்கு அணுக்கமான ஒலியமைப்பு இருக்கும். அவையில் பேச்சு, பிற சத்தங்கள் இருக்காது.
நாதஸ்வரக் கலையில் தொடர்ச்சியாக ‘மாஸ்டர்கள்‘ எனப்படும் பெருந்திறனாளர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். இளையதலைமுறையில் பலர் உள்ளனர். ஆனால் பிறகலைஞர்களை கவனிப்பதுபோல தமிழ்ச்சமூகம் இவர்களை கவனிப்பதோ, கௌரவிப்பதோ இல்லை. இந்நிகழ்வின் நோக்கம் அவர்களை அடையாளம் காட்டுவது
இந்நிகழ்வுக்காக தமிழின் தலைசிறந்த நாதஸ்வரக் கலைஞர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வுசெய்து அறிமுகம் செய்கிறோம். அதற்காக இசைநிபுணர்களின் குழு உள்ளது. இது அவர்களின் தேர்வும் வரிசையுமாகும்.
இந்த விழாவுக்கான பாடல்கள் அறிவிக்கப்படும். அவற்றை கேட்டுவிட்டு வரும் ஓர் இசைரசிகர், அவர் நவீன சினிமா இசையின் ரசிகராக இருந்தால்கூட, ஒரு பெரும் இசையனுபவமாக அமையும். தமிழிசையின், தமிழரிசையின் உலகுக்குள் நுழைவதற்கான ஒரு வாசல் இது.
இவ்வாண்டின் இசைக்கலைஞர்கள்
”பெருவங்கிய கலையரசர்கள்”