அல் கிஸா வாங்க
அல்கிஸா வாங்க
நான் அஜிதனை வாசிக்கத் தொடங்கியது அல் கிஸாவில். அவரது திருமண வரவேற்பு நிகழ்வில் அவர் ஜெயமோகனின் மகன் என்ற வகையில் கலந்து கொள்வது உவப்பாகத் தோன்றவில்லை. எனவே அந்நிகழ்வின் நிமித்தம் மேற்கொண்ட பெங்களூரு டூ கோவை பேருந்துப் பயணத்தில் அவரது இரண்டாம் நாவலான அல் கிஸாவை வாசித்து முடித்தேன் – அவரது வாசகனாகவும் சக படைப்பாளியாகவுமே வாழ்த்தி வந்தேன்.
நல்ல நாவல். முன், பின் இணைப்புகள், ஓவியங்களைக் கழித்து விட்டுப் பார்த்தால் 80 பக்கம் கொண்ட சிறுநாவல் அல் கிஸா. மைத்ரி போலவே இதுவும் சிறப்பான மொழி மற்றும் நடை. கவிஞர் அபி அதன் பின்னுரையில் “எழுதித் தேர்ந்த கதை எழுதியது போல் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். அதுவே எனக்கும் ஆங்காங்கே தோன்றியது.
கிஸா என்றால் Cloak எனப்படும் ஆளை மொத்தமாக மூடும் மேலாடை எனப் பொதுவாகக் குறிக்கிறார்கள் (போர்வை என நாவல் சொல்கிறது). இஸ்லாமிய மரபில் உள்ள ஒரு கதையில் இறைத்தூதர் முகமது நபி தன் கிஸாவினுள் தன் மகள், மருமகன், இரு பேரர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறார். அந்நிகழ்வு எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் இறையின் அளவற்ற அருள் பொலியும் என்பது மார்க்க நம்பிக்கை.
நாவல் அடிப்படையில் ஒரு காதல் கதை. அஜ்மீருக்குத் தனித்தனியே தம் குடும்படுத்துடன் வரும் பதினெட்டு வயது ஹைதர் மற்றும் சுஹாரா இருவரும் தொலைவிலேயே பார்த்துக் கொண்டு, பித்தேறிக் காதலில் விழுகிறார்கள். மர்ஸியாவை (நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் ஹுசைன் கர்பலா போர்க்களத்தில் செய்யும் உயிர்த் தியாகம்) விவரிக்கும் பாடல்களின் கச்சேரி ஒன்றினை பிரபலமான உஸ்தாத் படே குலாம் அலி கான் அன்றைய இரவில் அஜ்மீர் தர்காவில் பாடுகிறார் (அவரை வைத்துத்தான் கதை அறுபதுகளில் நடப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது). அதைக் காண / கேட்க வரும் நாயகனும் நாயகியும்தான் காதலில் விழுகிறார்கள்.
நாவல் மாறி மாறி பாடலாக வரும் போர்க்கள நிகழ்வுகளையும் ஹைதர் – சுஹாராவின் காதல் மனவோட்டங்களையும் விவரிக்கிறது. இரண்டுமே அலுப்பே தராமல் ஒரு விதக் காவிய உயரத்தில் தீட்டப்பட்டிருக்கிறது. எதிரெதிரான தியாகத்தையும் காதலையும் இணைத்திருப்பதுதான் இந்நாவலின் தனித்துவம். அவ்வழி அன்பும் ஆன்மீகமும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கிறது.
நபிகள் நாயகம் பரம்பரையின் வரலாறு அபுனைவு போல் சொல்லப்படும் அத்தியாயம் வேணாட்டின் வரலாற்றைச் சொல்லும் குமரித் துறைவியின் முதல் அத்தியாயத்தை நினைவூட்டியது. பின் பாடல் கச்சேரி தொடங்கியதிலிருந்து சட்டெனக் கனிந்து நாவல் உணர்ச்சிகரமாகி விடுகிறது.
உண்மையில் எவ்வித மிகையும் இல்லாத மிக எளிமையான ஒரு காதல் கதை இது. இதில் இறைச் செயல் எனப்படுவது வெறும் தூரப் பார்வை மட்டுமே தொடர்பு எனினும் ஒரே தீவிரத்துடன் இருவரும் காதலில் இருந்து, பரஸ்பர அடையாளத் தகவல் கூட ஏதுமில்லாவிடினும் அவர்கள் சேர வாய்ப்பு அமைவது மட்டுமே. அவர்களுக்கு மணமாகிப் பிள்ளை பிறக்கையில் தம் காதலுக்குச் சாட்சியாக அவ்விரவின் பாடலின் வழி நின்ற ஹுசைன் பெயரைத் தேர்ந்தெடுக்கின்றனர். எப்படி அந்த மாயம் நிகழ்கிறது? பாடல் கச்சேரியின் பகுதியாக மேற்சொன்ன கிஸாவின் கதை வருகிறது. அதைக் கேட்போர் எல்லோர் மீதும் இறைவனின் ஆசி பொழியும், அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும், அவர்களின் ஆசைகள் பூர்த்தி செய்யப்படும். அந்நம்பிக்கைப்படிதான் ஒன்று சேர்கிறார்கள்.
அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமாவின் கையின் (ஹம்சா எனப்படும்) ஓவியத்தைப் பயன்டுத்தி இருக்கிறார்கள். அதற்கும் நாவலுக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை என்றாலும் கிஸாவின் கீழிருந்த ஐவரை இந்த ஐவிரல்களும் குறிப்பதாக எடுத்துக் கொள்ள வாசகச் சுதந்திரம் உண்டு.
நாவலில் பயின்று வரும் இஸ்லாமியச் சொற்களின் விளக்கப் பட்டியலில் நாவலுக்கென தகவல்ரீதியாக நிறைய மெனக்கிட்டிருக்கிறார் எனத் தெரிகிறது.
இஸ்லாமியப் பின்னணியில் ஆன்மீக மற்றும் தத்துவப் பார்வையில் சொல்லப்பட்ட நாவல்களில் லக்ஷ்மி சரவணகுமாரின் ரூஹ் நாவலுக்கு அடுத்தபடி அல் கிஸாவை வைக்கலாம். அளவில் சிறியதெனினும், மைத்ரியை விடச் செறிவான நாவல் அல் கிஸா. இரண்டுமே காதல் கதைகள்தாம் எனினும் இதில் தத்துவ ஆழம் கூடுதல்.
காதலில், ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்ட சகலரும் நிச்சயம் வாசிக்கலாம்.
சி.சரவணகார்த்திகேயன்