பெருங்கலையின் அறைகூவல்!
விஷ்ணுபுரம் பதிப்பகம் Ph: 9080283887
கோவை புத்தகக் கண்காட்சி விஷ்ணுபுரம் அரங்குக்கு வந்த எஸ்.ராமகிருஷ்ணன் வெண்முரசு முழுத்தொகுதிகளின் அச்சு, கட்டமைப்பு ஆகியவை மிகச்சிறப்பாக அமைந்திருப்பதாகச் சொன்னார். அதுவே என் எண்ணமும். நூல்வடிவமைப்பாளர் ‘நூல்வனம்’ மணிகண்டன் சென்ற ஓராண்டாகவே இதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். தமிழில் இன்றுள்ள மிகச்சிறந்த நூல்வடிவமைப்பாளர் என மணிகண்டனை ஐயமறச் சொல்லலாம். (நூல்வனம் இணையப்பக்கம் )
நூல்வனம் மணிகண்டன் இளைஞராகவே எனக்குத் தெரிந்தவர். வசந்தகுமாரின் அணுக்கத்தொண்டராக தமிழினி பதிப்பகத்தில் பணிக்கு வந்தார். அப்போதே நல்ல பழக்கம். நூல்வனம் பதிப்பகம் சார்ந்து அவர் வெளியிட்டுள்ள நூல்கள் தமிழ்நூல் அச்சாக்கத்திற்கான தலைசிறந்த மாதிரிகள். சென்ற ஆண்டு யுவன் சந்திரசேகரின் கவிதை நூலுக்கு முந்நூறு வண்ண அட்டைகள் போட்டு கவனத்தை ஈர்த்தார். (புத்தகத் திருவிழா 2023 | புத்தகச் செய்நேர்த்திக்கு வரவேற்பு இருக்கிறது: மணிகண்டன் )
இந்த நூல் வெளியீட்டை விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் பங்குதாரரும் நிர்வாகியுமான மீனாம்பிகை பொறுப்பேற்று நடத்தி முடித்தார். இந்நூல்வரிசையை வெளியிடும் சுமை அவருக்கு அளித்த பதற்றம் என் வரைக்கும் கடத்தாமல் பார்த்துக்கொண்டார். மீனாம்பிகை என் வாசகராக அறிமுகமானவர். நல்ல வாசகர். குறிப்பிடத்தக்க கட்டுரைகளையும் எழுதியுள்ளார். (ஞானி நினைவுகள். மெய்யாசிரியனுடன் ஒரு நாள்)
விஷ்ணுபுரம் பதிப்பகம் வெண்முரசுக்காக ஒரு புதிய கிடங்கு எடுக்கவேண்டியிருந்தது. விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை உள்ளிட்ட வேறு பெரிய நூல்களும் இருந்தமையால் அது பெரியநூல்களின் திகைப்பூட்டும் அடுக்குகளாக ஆகியது. ஊழியர்களும் கூடுதலாக வந்து சேர்ந்தார்கள். ஹேமா, ரூபேஷ் ஆகியோர் இந்த பணியில் தொடர்ச்சியாக உடனிருந்தனர். நண்பரும், பதிப்பகப் பங்குதாரரும், முன்னாள் விளையாட்டுவீரரும் . வினாடிவினா நிபுணரும், அனைத்தையும் விட என்னைப்போலவே நல்ல மீன்ரசிகருமான செந்தில்குமாரின் வழிகாட்டுதல் இருந்தது.
நான் இவற்றில் மறு அச்சு ஆன நூல்களுக்கெல்லாம் இன்னொரு முன்னுரை எழுதியதற்கு அப்பால், அட்டை மற்றும் வடிவமைப்பு உட்பட எதிலும் எந்த தலையீட்டையும் செய்யவில்லை.என்னுடைய வெற்றிகரமான பலமுனைச் செயல்பாடு என்பதே அவ்வாறுதான். ‘இதனை இதனான் இவன் முடிப்பான் என்று அதனை அவன்கண் விடல்’ என் வழி. உரியவர்களிடம் பொறுப்பை அளித்தபின் விளைவை மதிப்பிடுவதை மட்டுமே எப்போதும் செய்து வருகிறேன்.
என் தேர்வுகள் எப்போதுமே பிழையானதில்லை. இன்றுவரை ஒருவரை நான் நம்பி, அது பிழையாகச் சென்றதே இல்லை. அதேசமயம் தொடக்கத்திலேயே ஐயமும், மெல்லிய் விலக்கமும் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அதை நிரூபித்துமிருக்கிறார்கள். இன்றுவரையிலான என் அனுபவத்தில் தன் சாதி , தன் மதம் சார்ந்த பற்றை முதன்மையாக வைத்துக்கொள்பவர்கள் நீடித்த நட்புக்கோ, இணைச்செயல்பாட்டுக்கோ பொருத்தமானவர்கள் அல்ல. அவர்களின் எல்லா செயல்பாடுகளிலும் உள்ளுறை நோக்கம் இருக்கும். அவர்களுக்கு கலை, இலக்கியம், இலட்சியவாதம், ஆன்மிகம் எதுவுமே பொருட்டு அல்ல. அஅவர்களை நிறைவுசெய்யவே முடியாது, எங்கோ எதற்காகவோ புண்பட்டு விலகிச்செல்வார்கள்.
வெண்முரசு நூல்களின் தொகுப்பைப் பார்க்கும்தோறும் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் நூல்களை வாங்குவோர் எவர் என்னும் குழப்பம் எல்லா எழுத்தாளர்களுக்கும் உண்டு. ஏனென்றால் மொத்த தமிழகமும் அறிவுச்செயல்பாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லாமல், சாப்பாடு சினிமா என்று வாழ்வதே கண்கூடான உண்மை. அவ்வப்போது அந்த உண்மையை எவரோ மண்டையிலறைந்தாற்போல நம்மிடம் சொல்லிக்கொண்டும் இருப்பார்கள்.
இங்கே எழுத்தாளனை எவருக்கும் தெரியவில்லை என எவரோ ஊடகங்களில் குதூகலம் அடைவதை தொடர்ந்து பார்க்கலாம். எந்த எழுத்தாளன் பற்றி எந்தப்பேச்சு வந்தாலும் ‘யார் அவர்? கேள்விப்பட்டதே இல்லையே’ என ஒரு கேள்வி எழும். ஓர் எழுத்தாளனை கேள்விப்படாமல் இருப்பதே ஒரு வகையான தகுதி என நினைப்பவர்கள் வேறெந்த பண்பாட்டிலாவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எதன்பொருட்டு எந்த எழுத்தாளன் தாக்கப்பட்டாலும் வந்து கும்மியடித்து மகிழும் கும்பல் இன்னொரு பக்கம்.
ஆனால் எங்கோ எவரோ நூல்களை வாங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். புத்தகக் கண்காட்சிகளில் ஒரு தனித்தன்மையைக் காண்கிறேன். என் நூல்களை வாங்குபவர்கள் பெரும்பாலானவர்கள் குடும்பமாக வருகிறார்கள். மனைவி குழந்தைகளை எனக்கு அறிமுகம் செய்கிறார்கள். மிகச்சிலரே உயர்நடுத்தர வர்க்கத்தினர். கணிசமானவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். அவர்களின் குழந்தைகள் ஒவ்வொருவரையும் நான் தழுவி, முத்தமிட்டு, வாழ்த்தி அனுப்புகிறேன். அவ்வண்ணம் ஒரு ஆழ்ந்த தொடர்பும் இங்கே சாத்தியமாகிறது.
வெண்முரசு நூல்களின் தொகுப்பின் விலை ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு பெரும் சுமைதான். ரூ 50000 என்பது அவர்களில் பலரின் ஓராண்டுச் சேமிப்பாகக் கூட இருக்கலாம். வேடிக்கையாக ஒருவர் “இ.எம்.ஐ உண்டா சார்?” என்று கேட்டார். ஆனால் இந்த தாள், இந்த கட்டமைப்பில் இந்நூல்களை போட்டாகவேண்டும். ஏனென்றால் இதை வாங்குபவர்கள் பல ஆண்டுகள் இந்நூல்கள் உடனிருக்கவேண்டும் என விரும்புகிறார்கள்.
எவர் வெண்முரசு தொகுதிகளை வாங்குகிறார்கள் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். இந்த புத்தகக் கண்காட்சியில் முன்று முழுத்தொகுதிகள் விற்கப்பட்டன. வெண்முரசு தொகுதிகள் வாங்குபவர்களில் கணிசமானவர்கள் ஏற்கனவே முழுமையாகவோ, ஓரளவோ வாசித்தவர்கள். அதன் மதிப்பை உணர்ந்தபின் பிறருக்குத் தேவைப்படும் என்பதனால் வாங்குகிறார்கள். குறிப்பாக தங்கள் பெற்றோர் அதை வாசிக்கமுடியும் என நினைக்கிறார்கள். ஒரு சாரார் முழுமையாக வாசித்தபின், அப்படி இலவசமாக வாசிப்பது சரியில்லை என்பதற்காக வாங்குகிறார்கள். பரிசளிக்கும்பொருட்டு வாங்குபவர்களும் உண்டு.
கார்த்திக் என்னும் நண்பர் பொறியியலில் அமெரிக்கப் பல்கலையில் முனைவர் ஆய்வு செய்து அண்மையில் முடித்திருக்கிறார். அவர் கடுமையான பணிச்சுமை கொண்ட பொறுப்பில் இருப்பவர். இளம்குழந்தைகளும் உண்டு. அதன் நடுவே இந்த ஆய்வை தன்னால் செய்ய முடியுமா என்னும் தயக்கம் இருந்தமையால் பல ஆண்டுகள் அதை ஒத்திப்போட்டதாகச் சொன்னார். நான் பிடிவாதமாக வெண்முரசை எழுதி முடித்ததையும், கூடவே மேலும் பல நூல்களையும் திரைப்படங்களையும் எழுதியதையும் கண்டபின் தன்னால் முடியும் என்னும் உணர்வை அடைந்ததாகக் குறிப்பிட்டார்
அவர் அரங்கில் வந்து வெண்முரசு முழுத்தொகுதி வாங்கினார். இந்த ஆண்டுக்குள் வாசிக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் என்றார். விஷ்ணுபுரம் அரங்கிலேயே அத்தொகுதிகளுக்குக் கையெழுத்திட்டு அளித்தேன்.
இந்த ஆண்டில் மனநிறைவூட்டும் பல விஷயங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன, இன்னும் நிகழவிருக்கின்றன. என் நூல்களின் ஆங்கில- சர்வதேசப் பதிப்புகள் வரவுள்ளன. இவையனைத்திலும் முதன்மையானது வெண்முரசு முழுத்தொகுப்பு வெளியானதுதான். ஏற்கனவே பல பதிப்புகள் வெளிவந்தாலும் ஒட்டுமொத்தமாக வெளிவந்துள்ள இந்த நூல்வரிசை ஓர் தனிப்ப்பட்ட மகிழ்வை அளிக்கிறது.
இந்நூல்களுக்காக முருகேசன் என்னும் நண்பர் அழகிய நூலக அடுக்கு ஒன்றை உருவாக்கியிருந்தார். அதைத்தான் விஷ்ணுபுரம் அரங்கில் காட்சியாக வைத்திருந்தோம். பலர் அதன் முன் நின்று தற்படம் எடுத்துக்கொண்டார்கள். பலர் இல்லங்களில் வெண்முரசு நூலகம்போல அடுக்கப்பட்டிருக்கும் படங்களைக் கண்டேன்.
கிருஷ்ணன் ஒரு சொற்றொடரைச் சொன்னார். “நான் நூல்களை வாசிப்பதில்லை. நூலகங்களை வாசிக்கிறேன்” வெண்முரசு வாசித்தவர்கள், வாசிப்பவர்கள் சொல்லிக்கொள்ள ஒரு நல்ல மேற்கோள்