அன்புள்ள ஜெ
சி.சரவணக்கார்த்திகேயன் எழுதிய மைத்ரி மதிப்புரை இது. இதில் இறுதியில் ஒற்றுகள் பற்றி சொல்லப்பட்டிருப்பதை என்ன நினைக்கிறீர்கள். விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்திருப்பதனால் இந்தக் கேள்வி
ராஜ்குமார்
மைத்ரி மதிப்புரை
சி.சரவணக்கார்த்திகேயன்
அஜிதனின் முதல் நாவல். முதலில் நல்ல விஷயங்களைச் சொல்லி விடலாம். மிக அற்புதமான மொழி மற்றும் ஆற்றொழுக்கு நடை. முதல் நூலை எழுதும் கை என்று எவரும் கண்டறிந்து விட முடியாத எழுத்து.
ஹரன் என்ற தென்னிந்திய இளைஞன் இமய மலைப் பகுதிக்குப் பயணம் செல்கிறான். அப்பகுதியைச் சேர்ந்த மைத்ரி என்ற பெண்ணைச் சந்திந்துக் காதல் கொள்கிறான். அவள் அவனைத் தன் சொந்த ஊருக்கு மலைப்பாதையில் அழைத்துப் போகிறாள். பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.
இச்சிறிய நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார். முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் ஹரன் – மைத்ரி இடையேயான காதல் மற்றும் அதன் உணர்வெழுச்சி நன்றாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே முதலில் வாசகனைச் சட்டென உள்ளே இழுத்துக் கொள்ளும் நாவல் கடைசியில் அவனைத் திருப்தியுடனேதான் வெளியே அனுப்புகிறது.
ஆனால் இரண்டாவதும் மிக நீண்டதுமான பகுதி ஹரனும் மைத்ரியும் கோவேறு கழுதைகளில் அமர்ந்து மலையேறி மைத்ரியின் சொந்த ஊருக்குச் செல்வதை மிக விரிவாக, விலாவாரியாக விவரிக்கிறது. மலை, மரம், விலங்கு, உணவு, மக்கள், கோயில் என ஒவ்வொன்றையும் விளக்கமாக ஆவணப்படுத்தும் இப்பகுதி வாசிக்க அலுப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தகவல்களாகக் கொட்டிக் கிடக்கும் அந்த ஆறு அத்தியாயங்களையும் கடக்கச் சிரமப்பட்டேன் என்றே சொல்ல வேண்டும். (இடையில் பெரியம்மா வரும் பகுதிகள் மட்டும் ஆசுவாசம்.)
நாவலில் வரும் பாத்திரங்கள் முழுக்க முழுக்க நேர்மறைத்தன்மையைக் கொண்டுள்ளன. எல்லோருமே நல்லவர்களாகவும், புரிந்து கொள்பவர்களாகவும், உதவுபவர்களாகவும், கள்ளமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அது நாவலுக்கு ஓர் ஒற்றைப்படைத் தன்மையை அளித்துச் சுருக்குகிறது. (ஒரே விதிவிலக்கு அந்த மிலிட்டரிக்காரர். அவர் கூட ஆபத்தற்ற பொய்கள்தாம் சொல்கிறார்.) இன்னொன்று இவ்வளவு அவசரமான காதலை இலக்கியம், சினிமா என எதிலும் கண்டதில்லை. அவ்வளவு instant-ஆன கண்டதும் உண்டாகும் காதல்.
இன்னொரு பெரிய let down – நாவல் முழுக்க வரிக்கு வரி சந்திப் பிழைகள். பிழை என்று சொல்வதை விட நான் சந்தியே இட மாட்டேன் எனக் கங்கணம் கட்டினால் ஒழிய இவ்வளவு விடுபாடுகள் சாத்தியமே இல்லை. இதை ஏன் இவ்வளவு கடுமையாகச் சுட்டுகிறேன் எனில் அப்பிழைகள் ஒரு கட்டத்தில் வாசிக்கவே தடையை உண்டாக்கி விடுகின்றன.
புத்தகம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு வாழ்த்துக்கள்!
நாவலின் அழகிய மொழிக்காகவும், மைத்ரியின் கனாக்காதலுக்காகவும் இந்நாவலை வாசிக்கலாம்.
சி.சரவணக்கார்த்திகேயன்
அன்புள்ள ராஜ்குமார்,
விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் எந்தப் பணியிலும் என் பங்களிப்பு என ஏதுமில்லை. அட்டைவடிவமைப்பு, மெய்ப்பு நோக்குவது எதிலுமே. என் படைப்புகளில்கூட நான் தலையிடுவதில்லை. நான் அவற்றில் ஈடுபட்டால் என்னால் எழுத முடியாது. என் பணிகள் எல்லாமே இப்படித்தான். அந்தந்த பொறுப்பாளர்களிடம் முழுமையாக நம்பி ஒப்படைத்துவிடுவேன்.
ஒற்று பற்றி எனக்கு ஒரு கொள்கை உண்டு. அதை தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன். நம்முடைய ஒற்று சார்ந்த இலக்கணக் கொள்கை என்பது செய்யுள் இலக்கணத்தில் இருந்து உருவானது. அதை இரும்புவிதியாகக் கொள்வது என்பது மொழியைத் தேங்கச் செய்யும். இலக்கணத்தில் பிடிவாதம் கொண்ட மொழிகள் அழியும். இன்று ஒற்று போடுவதை உச்சரிப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கவேண்டும். இயந்திரத்தனமாக வல்லினம் மிகும் இடங்களில் எல்லாம் ஒற்று போடவேண்டியதில்லை.
உதாரணமாக, மேலே வந்த முதல் சொற்றொடரை ‘அதைத் தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன்’ என எழுதவேண்டியதில்லை. அங்கே ஒற்று வரக்கூடாது. ஏனென்றால் செவியில் அப்படி ஒலிப்பதில்லை. முற்காலத்தில் ஏன் அப்படி அங்கே ஒற்று போட்டனர் (ஒற்றுப் போட்டனர் அல்ல) என்றால், அன்று இப்படி சொற்களை பிரித்து எழுதும் வழக்கமே இல்லை. ‘அதைத்தொடர்ச்சியாகச்சொல்லிக்கொண்டு‘ என்றே எழுதுவார்கள். நாம் வார்த்தை வார்த்தையாக பிரித்து எழுதுவதே பண்டைய இலக்கணமுறைக்கு மாறானதுதான். அங்கேயே இலக்கணம் மாற ஆரம்பித்துவிட்டது.
ஏன் ஒற்று போடுவதை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டும்? இன்று சொற்களை மேலும் மேலும் பிரித்து எழுத ஆரம்பித்திருக்கிறோம். நூறாண்டுகளுக்கு முன்புதான் சொற்றொடர்களில் சொற்களை தனித்தனியாக பிரிக்க ஆரம்பித்தோம். இன்று அனேகமாக எல்லா சொற்களையும் தனித்தனியாகவே எழுதுகிறோம் இருபத்தைந்து ஆண்டுக்கு முன்புள்ள உரைநடையுடன் இன்றைய உரைநடையை ஒப்பிட்டாலே வேறுபாடு தெரியும். சொற்களைப் பிரிப்பது இந்திய மொழிகளின் இயல்பல்ல. ஆங்கிலத்தில் இருந்து நாம் ஏற்றுக்கொண்டது இது. மலையாளத்தில் பலர் இன்றும் சொற்களைச் சேர்த்துச் சேர்த்தே எழுதுகிறார்கள். நான் தமிழ் போல சொற்களை பிரித்து மலையாளத்தில் எழுதி ஒரு புதிய நடையையே அங்கே உருவாக்கினேன். அது விரும்பவும் படுகிறது, விமர்சிக்கவும்படுகிறது
சகட்டுமேனிக்கு ஒற்று போடும்போது ஒவ்வொன்றும் வேறுவேறு சொற்கள் ஆகிவிடுகின்றன. உதாரணமாக, முந்தைய சொற்றொடரை ‘ஒற்றுப்போடும்போது’ என எழுதினால் ப் இருக்கலாம். ஆனால் ஒற்றுப் போடும்போது என பிரித்து எழுதினால் ஒற்று என்பது ஒருசொல்லும் ஒற்றுப் என்பது இன்னொரு சொல்லும்போல் ஒலிக்கிறது. தமிழ் கற்க முனையும் அனைவருமே இந்த இடத்தில்தான் விழிபிதுங்குகிறார்கள். ஆற்றூர் ரவிவர்மா என்னிடம் ஒருமுறை ‘ஆகச்’ என்றால் என்ன என்று கேட்டார். நான்குமுறை தொலைபேசியில் பேசி தெளிவடைந்தபின் நான் புரிந்துகொண்டேன் ‘ஆகச் சிறந்த’ என்று.
ஆகவே உச்சரிப்பில் ஒலிமிகாத இடங்களில் ஒற்றை தவிர்ப்பது என் வழக்கம். அதில் தொடர்ச்சியான உறுதியுடன் இருக்கிறேன். அதை தொடர்ச்சியாக விளக்கி வருகிறேன். நான் எழுதும்போது அப்படித்தான் எழுதுவேன். ஆனால் பலசமயம் என் பதிப்பாளர்கள் ஒற்று சேர்த்துவிடுவார்கள். பிழைநோக்குபவர்கள் ஒற்று போடுவார்கள். ஒவ்வொருவரிடமும் என் கொள்கையை நான் விளக்கிப் புரியவைக்க முடியாது. இத்தனை பக்கங்களுக்கு நான் பிழைநோக்கவும் முடியாது. எனக்கு இந்தவகையான மொழி விவகாரங்களில் பெரிய ஈடுபாடு இல்லை. இலக்கியம் எனக்கு இலக்கியத்துக்கு அப்பாலுள்ளவை நோக்கிச் செல்வதற்கான பாதைதான்.
அஜிதன் ஆங்கிலம் வழியாக படித்து வந்தவன். தமிழில் நிறைய வாசிக்கத் தொடங்கியதே இருபத்தைந்து வயதுக்குமேல்தான். அதன்பிறகுதான் எழுத ஆரம்பித்தான். ஆனால் மொழிசார்ந்து நுண்ணுணர்வு உண்டு. அவனுக்கான கொள்கைகள் உள்ளன. அவற்றை பதிப்பாளர் மைத்ரி நாவலுக்கு மெய்ப்பு நோக்கியபோது வலுவாக முன்வைத்தான். ஒரு நீண்ட விவாதம் நிகழ்ந்து கடைசியில் பதிப்பாளர் அவனுடைய தரப்புக்கு விட்டுக்கொடுத்தார். ஆகவே சரவணக்கார்த்திகேயன் சுட்டிக்காட்டுபவை ‘பிழைகள்’ அல்ல, அவனுடைய கொள்கைகள். உண்மையில் ஏராளமான இளம் வாசகர்கள் இந்த மொழிநடை இயல்பானதாக, எளிதானதாக இருப்பதாகச் சொன்னார்கள்.
அவன் பார்வையில் கூடுமானவரை ஒற்று தவிர்க்கப்படவேண்டும்.ஒற்று என்பதே தேவையில்லாத பழங்கால இலக்கணம். ஒரே சொல்லை ஒற்றுகள் போடுவதன் வழியாக வெவ்வேறு உச்சரிப்புகள் கொண்ட வெவ்வேறு சொற்களாக ஆக்குவது தமிழை புதியதாகக் கற்று வரும் இளையதலைமுறை வாசகர்களிடம் குழப்பத்தை உருவாக்குகிறது. இன்று முப்பது வயதுக்குள் இருக்கும் வாசகர்களுக்கு தமிழில் உள்ள பெரும் பிரச்சினையே இந்த ஒற்றுச் சிக்கலும், சொற்களைச் சேர்த்துச் சேர்த்து எழுதுவதும்தான். அந்தச் சிக்கலை எளிமையாக்கவில்லை என்றால் அடுத்தடுத்த தலைமுறையில் தமிழில் வாசிப்பது குறையும்.
இதே கருத்துகொண்ட வேறு இளம்வாசகர்களையும் நான் சந்திக்கிறேன். அதாவது ‘அதைக் கொடுத்தான்’, ‘அதைச் சொன்னான்’, ‘அதைப் பார்த்தான்’ என எழுதும்போது அதைக்,அதைச், அதைப் என மூன்று வெவ்வேறு சொற்கள் உருவாகின்றன. இது சொற்களைக் கூட்டி எழுதும் பழையமுறையில் உள்ள இலக்கனத்தை சொற்களைப் பிரித்து எழுதும் புதியவகையில் கண்மூடித்தனமகாக் கடைப்பிடிப்பதனால் உருவாகும் தேவையற்ற குளறுபடி என்கிறார்கள்.
ஒற்றை தவிர்ப்பதனால் உச்சரிப்புக் குழப்பங்கள் உருவாகின்றனவா? பொருட்குழப்பங்கள் உருவாகின்றனவா? மொழியியல் தெரியாதவர்களின் இலக்கண அடிப்படைவாதம் அது என்கிறார்கள் ஒற்றை மறுப்பவர்கள். மொழி என்பது எப்போதுமே ஒரு பொதுப்புரிதலால் உருவாவது. எந்த மொழியிலும் உச்சரிப்பை அப்படியே எழுதிவிட முடியாது. எந்த மொழியிலும் பொருட்குழப்பமே இல்லாதபடி எழுத முடியாது. இதை இப்படி எழுதவேண்டும், இப்படி உச்சரிக்கவேண்டும், இப்படி பொருள்கொள்ளவேண்டும் என்னும் பொதுப்புரிதல் ஒரு பண்பாட்டில் உருவாகி அதன் அடிப்படையிலேயே எந்த மொழியும் இயங்குகின்றது. எந்த மொழியும் ஒரு தலைமுறைக்குள் அதன் இலக்கணங்களை மாற்றிக்கொண்டுதான் முன்னகர முடியும்.
நான் இதில் விவாதிக்க விரும்பவில்லை. முந்தைய தலைமுறையினருக்கு முன் நான் என் மீறலை முன்வைத்தேன் . ஆகவே அடுத்த தலைமுறைக்கு முன் மாற்றங்களை எதிர்ப்பவனாக, என் தரப்பே சரி என நினைப்பவனாக நான் நிற்க விரும்பவில்லை. அதுவே அதன் வழியைக் கண்டடையட்டும் எனபதே என் எண்ணம்.
இப்படி இலக்கணத்தை மாற்ற விரும்புபவர்களும் அதை பிடிவாதமாக முன்வைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன், அவர்கள் ஒன்றச் சொல்லிப்பார்க்கிறார்கள். அது எப்படி எதிர்கொள்ளப்படுகிறது, அது உருவாக்கும் சிக்கல்கள் என்ன என்னும் அடிப்படையில் அவர்கள் தங்கள் தரப்பில் முன்னும் பின்னும் நகரலாம்.
என் படைப்புகளின் ஆங்கில மொழியாக்கங்களைப் பார்க்கையில் அவற்றில் கணிசமான சொற்றொடர்கள் என் பார்வையில் இலக்கண மீறல்கள் என தோன்றுகின்றன. குறிப்பாக right? என எங்கெல்லாம் வருகிறதோ அந்தச் சொற்றொடரெல்லாம் என் பழைய கண்களுக்கு இலக்கணப்பிழைகள் என தெரிகின்றன. Stories Of The True மொழியாக்கம் எனக்கு இலக்கணப்பிழைகள் கொண்டதாக தோன்றியது. ஆனால் அதைச் செய்தவர் நவீன வாசிப்பு கொண்ட புதியதலைமுறைக்காரர். ஆகவே நான் வாயை மூடிக்கொண்டேன். அதன் மொழியாக்கம் இன்று உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது, அப்படியே சர்வதேசப்பதிப்பு வெளிவரவிருக்கிறது. நல்லவேளை உளறாமலிருந்தேன் என நானே நினைத்துக்கொண்டேன்.
அவ்வளவுதான், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே’ என்றுதான் பவணந்தி முனிவர் இலக்கணம் வகுத்துள்ளார்.
ஜெ