பெண்பேராற்றல்

திரௌபதி – இமாசலப்பிரதேசம்
  1. மானஸாவின் காலடியிலிருந்து…
  2. மழைப்பாடகர்கள்
  3. எஞ்சும் நிலங்கள்
  4. தெய்வத்தளிர்

பண்பாடு செயல்படுவதில் உள்ள எத்தனையோ விந்தைகளில் ஒன்று, திரௌபதி கேரளப் பண்பாட்டில் சித்தரிக்கப்பட்டுள்ள விதம். கேரளம் பகவதிகளின் நிலம். பெண்வழிச்சொத்துரிமை திகழ்ந்த சமூகம்.பல சிற்றரசுகளை பெண்களே ஆட்சி செய்திருக்கிறார்கள். புகழ்பெற்ற அரசிகள் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு இல்லத்திலும் மூதன்னையர் ஆற்றலுடன் இருந்திருக்கின்றனர். அனைத்தையும்விட ‘பகுஃபத்ருத்வம்’ என கேரளத்தில் சொல்லப்படும் ஒரே சமயம் பலகணவர்களுடன் வாழ்வதும் கேரளத்தில் சென்ற தலைமுறைக்காலம் வரை இருந்துள்ளது.

ஆனால் திரௌபதி அங்கே ஒரு பெரிய கதாபாத்திரம் அல்ல.கேரளத்தின் புகழ்பெற்ற மகாபாரத வடிவங்களில் திரௌபதிக்கு பெரிய இடமில்லை, அவை கேரளத்தில் வைணவ பக்தி இயக்கம் வேரூன்றியபின் உருவானவை. அபலையான பெண்ணாகவே வருகிறார். கேரளத்தில் புகழ்பெற்ற மகாபாரதக் கதை ‘கல்யாண சௌகந்திகம்’ ‘துரியோதன வதம்’ இரண்டும்தான். இரண்டிலும் திரௌபதி பாதிக்கப்படும் கதாபாத்திரம்.திரௌபதிக்காக பீமன் பழி வாங்குவதுகூட பீமன்தான்.

Sarbani Dasgupta “திரௌபதி’

என் பாட்டி திரௌபதிக்கு இன்னொரு கதாபாத்திர உருவகம் வைத்திருந்தார். அதைத்தான் என்னிடம் அவர் சொன்னார். அந்த திரௌபதி தன் வாழ்வை தானே வடிவமைக்கும் ஆற்றலும் உறுதியும் கொண்டவள். அரசனின் இயல்பு ஆசை, அவன் ஆற்றலும் அங்கிருந்தே. அரசனின் சிறப்பு கருணை, அவன் ஆசையை கட்டுப்படுத்தும் எதிர்விசை அதுவே. திரௌபதி எல்லா வகையிலும் அரசி.

சக்ரவர்த்தினி என்னும் சொல்லை பாட்டி பயன்படுத்துவார். அவள்தான் என்னுள் இருந்த திரௌபதி. ஆனால் நான் வாசித்த மகாபாரத மறுபுனைவுகள் எல்லாமே எனக்கு ஏமாற்றத்தை அளித்தன. சிறுமைகொண்ட, காமம் நிறைந்த பெண் எம்.டி.வாசுதேவன் நாயரின் (இரண்டாமிடம்) திரௌபதி. வஞ்சமும், தத்தளிப்பும் கொண்ட துயர்நிறைந்த பெண் பி.கே.பாலகிருஷ்ணனின் திரௌபதி (இனி நான் உறங்கலாமா?)  எஸ்.எல்.பைரப்பாவின் திரௌபதி சாமானிய மனைவி. ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவள். (பர்வா). பிரதீபா ராயின் திரௌபதி இன்றைய முதிராப்பெண்ணியம் பேசும் அபத்தமான அதிகப்பிரசங்கி (திரௌபதி)

நான் என் உள்ளத்தில் உறைந்த திரௌபதியை உருவாக்க விழைந்தேன். அவளை முழுமையாக உருவாக்கி நிறுத்தும் அளவுக்கு வெண்முரசுக்குப் பக்கங்கள் இருந்தன. ஆகவே சிறுமியென அறிமுகமாகி மூதன்னையென அவள் மறைவது வரை இந்நாவலில் விரிகிறது. யதார்த்தவாதமும் மிகுகற்பனையும் தொன்மமும் வரலாறும் கலந்து அவள் ஆளுமை திரண்டு வருகிறது. ஒற்றைப்படையாக அல்ல. முரண்பாடுகளின் வழியாக, குழப்பங்களினூடாக தெளிந்தெழும் ஓர் ஆளுமை. தீபச்சுடர்களின் ஒளியிலெழும் கருவறைத்தெய்வம்.

வெண்முரசு நாவல் வரிசையில் ஆசிரியன் எங்குமே வெளிப்படவில்லை. ஆசிரியன் கூற்று என ஒரு வரியும் இல்லை. வெவ்வேறு கதைமாந்தர்களின் பார்வை வழியாகவே மொத்த நாவல் தொடரும் விரிகிறது. அவர்களின் பார்வையின் எல்லை புனைவின் மர்மங்களை வடிவமைக்கிறது. அவர்களின் பார்வையின் கூர்மை புனைவின் செல்தொலைவை முடிவுசெய்கிறது.

பெரும்பாலும் சிறிய கதைமாந்தர் வழியாக பெரிய கதைமாந்தர் விரிகின்றனர். விளைவாக பெரியகதைமாந்தர் பல்வேறு கோணங்களில், பலவகையாக வெளிப்பட முடிகிறது. அவர்களின் மாறுபட்ட முகங்கள் தோன்றுகின்றன. அந்த ஆளுமைகளின் பரிணாமம் பதிவாகிறது. சிலசமயம் அந்த முகங்கள் நடுவே முரண்பாடுகளும் உள்ளன, மானுடர் எவரும் அவ்வாறே தெரியவருகிறார்கள்.

விளைவாக நேரடியாக, முழுக்க வெளிப்படுவது சிறியகதைமாந்தரின் அகம்தான். உதாரணம் சாத்யகி. ஆனால் எல்லா கதைமாந்தரின் உள்ளமும் சற்றேனும் நேரடியாக வெளிப்பட்டிருக்கும். பெரிய கதைமாந்தர்களில் அர்ஜுனன் மிக அதிகமாக நேரடியாக வெளிப்படுபவன். இரு நாவல்களில் அவனே நாயகன். கர்ணன் இரு நாவல்களில் மையம். பீமனும், யுதிஷ்டிரனும் ஒவ்வொரு நாவல்களில் மையமென வெளிப்படுகிறார்கள்.

துரியோதனன், சகுனி போன்ற பெரிய கதைமாந்தர்கள் குறைவாகவே நேரடியாக வெளிப்படுகிறார்கள். சற்றே காட்டி, பெரிதும் மறைத்து அவர்களின் ஆளுமை சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆழ்ந்த அகப்போராட்டங்கள் இல்லாத இரும்புவார்ப்புச் சிலைபோன்ற கதைமாந்தர்கள் அவர்கள். முழுக்க வெளிப்பட்டால் அங்கே முடிந்துவிடுவார்கள். இந்நாவல்களில் அவர்களைச் சொல்லி, மறைத்து, விரித்துள்ளேன்.

முற்றிலும் அகம் சொல்லப்படாமலேயே விடப்பட்ட கதைமாந்தர்கள் இருவர். இளைய யாதவனும் திரௌபதியும்.  அவர்களைப் பற்றி ஏராளமான கோணங்கள் பிறர் நோக்கில் வருகின்றன, அவர்கள் எவர் என நேரடியாக புனைவு வெளிப்படுத்தவில்லை. இந்தியா உருவாக்கிய மாபெரும் புதிர் என கிருஷ்ணனை நடராஜ குரு சொன்னார். நான் திரௌபதியும் அவ்வாறே என எண்ணுகிறேன். கூடுதலாக நானே உருவாக்கிய பெரும்புதிர் கணிகர்.

அந்த பெரும்புதிர்களில் ஒன்று தோன்றும் நாவல் பிரயாகை. ஆகவே வெண்முரசு நாவல்களில் இது ஓர் உச்சத்தொடக்கம். இதை எழுதுகையில் இயல்பாகவே என் மரபின் பகவதிகள் என்னுள் உருவாயினர். பகவதியின் பெருந்தோழி அவளுடைய மாயை வடிவம். அல்லது சாயை (நிழல்) வடிவம். அதுவும் அவளே. அந்த இருமை இந்நாவலில் இயல்பாக உருவானதுமே என் வரையில் அன்னை எழுந்துவிட்டாள்.

இந்நாவலின் முதற்கட்ட’ப் பதிப்புகளை வெளியிட்ட கிழக்கு பிரசுரத்திற்கும், இப்பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி

ஜெ

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887)
பிரயாகை, நிலைபேறும் பறந்தலைதலும் – கலைச்செல்வி
பிரயாகையில் சங்கமித்தல்
பிரயாகை முடிவில்…
பிரயாகையின் பெண்
பிரயாகை, வாசிப்பு
பிரயாகையின் உணர்வுத் தருணங்கள்-இரம்யா
பிரயாகையின் துருவன் – இரம்யா
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
பிரயாகை
பிரயாகை -சுரேஷ் பிரதீப்
பிரயாகை- கேசவமணி
பிரயாகை முடிவு
முந்தைய கட்டுரைஐ.மாயாண்டி பாரதி
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வனுக்கு விருது