எழுத்தும் பயிற்சியும், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

எழுதுதல் பற்றி நீங்கள் எழுதியுள்ள நூல்களை சென்ற ஆண்டு நான் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அதன்பின் நான்கு முறை பிரதிகளை வாங்கி பல்வேறு நண்பர்களுக்கு அளித்திருக்கிறேன். நாங்கள் என்ன எழுத்தாளராகவா போகிறோம், எங்களுக்கு எதற்கு என்று பலர் சொன்னார்கள். ஆனால் என் வாழ்க்கையில் அந்நூல்கள் திருப்புமுனையாக அமைந்தன.

இன்றைய நவீன வாழ்க்கையில் நாம் அனைவருமே பேசவேண்டியிருக்கிறது. எழுத வேண்டியிருக்கிறது. அது சாதாரணமான உரையாடலாக இருக்கலாம். அல்லது ஒரு சின்னக் கூட்டத்தில் நாலைந்து வரி பேசுவதாக இருக்கலாம். கடிதங்கள் எழுதவேண்டியிருக்கிறது. நம் சிந்தனைகளை நாமே தொகுத்து எழுதவேண்டியிருக்கிறது. நானெல்லாம் மாதம் ஒரு அறிக்கை எழுதவேண்டிய வேலையிலே இருப்பவன்

எனக்கு எழுதுவது பற்றிய நூல்கள் மிகப்பெரிய பயிற்சியை அளித்தன. ஒரு கட்டுரையை எப்படி எழுதுவது என்று எழுதுக நூலில் இருந்து கற்றேன். அதைவிட சிறுகதையை எப்படி எழுதுவது என்பதுதான் எனக்கு கடிதங்கள், கட்டுரைகள் எல்லாம் எழுத மிகப்பெரிய வழிகாட்டியாக அமைந்தது. அந்த நூல்களைப்போல என் வாழ்க்கையை மாற்றிய இன்னொரு நூல்களைச் சொல்லமாட்டேன்.

எழுதுவது பிரசுரத்துக்காக இல்லாமலிருக்கலாம். நான் வாட்ஸப்பில்தான் எதையாவது எழுதுகிறேன். ஆனால் சுவாரசியமாகவும், சரியான வடிவத்திலும் எழுத அந்த வடிவப்பயிற்சி அற்புதமாக வழிகாட்டியது. நான் எழுதுவனவற்றுக்கு வரும் பாராட்டும் ஒவ்வொருநாள் காலையையும் மகிழ்ச்சியானதாக ஆக்கியது.

அன்புடன்

ஜி.தங்கவேல்

அன்புள்ள ஜெ

எழுதுக ஓர் அழகான நூல். இளைஞர்களுக்கு மிக உதவியானது. அவர்கள் வாசிக்கும் கதைகளை வடிவரீதியாகப் புரிந்துகொள்வதற்கு வழிகாட்டுவது. நான் ஆங்கில இலக்கியம் கற்பிக்கிறேன். எளிமையான இந்த நூல்கள் ஆங்கில இலக்கிய வடிவங்களை புரிந்துகொள்ள மிகமிக உதவியானவை.

மெய்.கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைதெய்வம் தேவைப்படும் இடம்
அடுத்த கட்டுரைஅறம் எனும் அறைகூவல், பதிவு