என் பிரச்சினை சலிப்பும் அதிலிருந்து வரும் உளர்சோர்வும். ஆகவே நான் சமூகவலைத்தளங்களிலேயே வாழ்கிறேன். என் உளச்சோர்வை அவை பெருக்குகின்றன என எனக்கு நன்றாகவே தெரியும். உளச்சோர்வுக்காக நான் எதைப் பார்க்கிறேனோ அதுவே எனக்கு காட்டப்படும். உளச்சோர்வு கொண்டவர்கள்தான் நண்பர்களாக அமைவார்கள்.
அண்மையில் நான் இந்தியன் 2 படம் வந்தபோது அதை கீழ்த்தரமாக வசைபாடினேன். ஏனென்றால் அதில் சமூகவலைத்தளத்தில் எழுதுபவர்களைப் பற்றி எதிர்மறையாக சொல்லியிருந்தார்கள் என்னும் எண்ணம். ஆனால் உண்மையில் பாஸிட்டிவாகவே சொல்லியிருந்தார்கள். கரியால் கழிப்பறையில் எழுதுவதுபோல மறைந்து எழுதியவர்களெல்லாம் இன்றைக்கு வெளிப்படையாக எழுத வாய்ப்பு வந்துவிட்டது என்றுதான் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அது எனக்குத் தெரிந்தாலும் வசைபாட ஒரு வாய்ப்பு என்பதனால் அதை விடவில்லை.
ஆனால் இப்படி ஒவ்வொரு விஷயத்திற்குப் பிறகும் மனச்சோர்வு கூடத்தான் செய்கிறதே ஒழிய எந்த விடுதலையும் இல்லை. உங்களுக்கே எழுதவேண்டும் என நினைத்ததுகூட இந்த விஷச்சூழலை கொஞ்சம் உடைக்கலாமே என்றுதான்.
அன்புள்ள க
நீங்களே அதை உடைத்தால்தான் உண்டு. உடைப்பதற்கான வழிகளைத்தான் பிறர் சொல்லமுடியும். உங்களுடைய அடிப்படையான ஒரு குறைபாட்டில் இருந்தே இச்சிக்கல் உருவாகிறது. அதாவது நீங்கள் மிகமிக சுயமைய பார்வை கொண்டவர். தன்முனைப்புடன் சிந்தனை செய்துகொண்டே இருக்கிறீர்கள். சுயவிருப்பக் கற்பனைகளில் திளைக்கிறீர்கள்.
இன்றைய வேலைச்சூழல் சலிப்பூட்டுவது. அத்துடன் அதில் நீங்கள் ஒரு சின்ன உறுப்புதான். உங்களுக்கென எந்த தனித்தன்மையும் இல்லை. எந்த தனிச்சாதனையும் இல்லை. எந்த தனிமகிழ்வும் இல்லை. அந்த சலிப்பை வெல்ல இந்த தன்முனைப்பை உருவாக்கிக்கொள்கிறீர்கள். நான் யார் தெரியுமா என்று சொல்லிச் சொல்லி உங்களை வீங்கவைக்கிறீர்கள்.
இன்றைய வாழ்க்கை எத்தனையோ இனியதும் எளியதும் ஆகியுள்ளது. உயிர்வாழ்வதற்கே போராடிய சூழல் சென்ற தலைமுறையில் இருந்தது. ஒரு குடும்பத்துக்கே ஒரு ஆண் முழுப்பொறுப்பையும் ஏற்றாகவேண்டிய நிலை இருந்தது. எட்டு பத்து உடன்பிறந்தவர்களை கரையேற்றவேண்டிய பொறுப்பை கொண்டவர்களாக அன்றைய ஆண்கள் இருந்தனர். இன்று அப்படி இல்லை. அன்று எதற்கும் சுயமாக முடிவெடுக்க முடியாத சமூகக் கட்டுப்பாடுகள் இருந்தன. இன்று தனிமனித சுதந்திரம் உள்ளது.
கொஞ்சம் உளம்விரிய முடிந்தால் இன்று ஒருவர் மெய்யான சமூகப்பணிகளை ஆற்றலாம். அறிவியக்கத்தில் ஈடுபடலாம். பயணங்களை மேற்கொண்டு உலகைக் காணலாம். வாழ்க்கையை ரசனைமிக்கதாக ஆக்கிக்கொள்ளலாம். அதைச் செய்பவர்கள் குறைவு. காரணம் சோம்பல். தன் கூட்டைவிட்டு வெளியே கிளம்பமுடியாத தேக்கநிலை.
அருகே திறந்திருக்கிறது வாசல். பொன்னொளிரும் பாதை தெரிகிறது. ஆனால் வாசலை மூடிக்கொண்டு செல்பேசி அளிக்கும் மாயங்களில் திளைத்து வாழ்கிறீர்கள் என்றால் அது நீங்களே அள்ளி அணிந்துகொண்ட கைவிலங்கும் கால்விலங்கும்தான். எதிர்மறைத்தன்மையுடன், கசப்புடன் இருக்கையில் உங்களுக்குள் இருகும் ஊமைவன்முறை ஒன்று ஆற்றல் கொள்கிறது. எங்கோ எப்படியோ அதை உமிழ்ந்தால் நிறைவடைகிறீர்கள்.
ஆகவே இன்று தேவையற்ற சோர்வுகளைப் பெருக்கிக்கொண்டு, திரும்பத்திரும்ப ‘டிப்ரஷன்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் காண்கையில் முதலில் பரிதாபமும் மெல்லமெல்ல ஒரு சலிப்பும் உருவாகிறது. இயல்பான உளச்சோர்வு அவ்வப்போது வந்துசெல்லலாம். சிலருக்கு நோய் போன்ற தவிர்க்கமுடியாத உளச்சோர்வுக்காரணங்கள் இருக்கலாம். அவ்வாறன்றி உளச்சோர்வில் நீடிப்பவர்கள் உள்ளூர அதை விரும்புகின்றனர். அதை ஓர் அடையாளமாகக் கொள்கின்றனர்.
பெரும்பாலும் நீடித்த உளச்சோர்வு கொண்டவர்கள் சோம்பல், செயல்திறனை வளர்த்துக்கொள்ளாமை, தன்னலம் ஆகியவற்றிற்கான சாக்குபோக்காக உளச்சோர்வை கொண்டிருக்கின்றனர். நான் பார்த்தவரை பிறருக்காக எதையேனும் செய்பவர்கள், சமூகப்பணி ஆற்றுபவர்கள், அளித்துச்செல்பவர்கள் ஒருபோதும் உளச்சோர்வில் நீடிப்பதில்லை. அவர்கள் செயலூக்கம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
களச்செயல்பாடே இல்லாமல், உளச்சோர்வுக்கான ஒரு வெளிப்பாடாக மட்டுமே அரசியலைக்கொண்டிருப்பவர்கள் இங்கே ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்கள் தங்களை போராளிகள் என்றெல்லாம் கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால் அரசியலில் உள்ள எதிர்மறை மனநிலைக்காகவே அதில் இருக்கிறார்கள்.
உளச்சோர்வில் வாழ்பவர்கள் பெரும்பாலும் எளிமையான சுயமைய நோக்கு கொண்டவர்கள். பிறருக்கு எதையும் அளிக்காதவர்கள், இந்த உலகமே தனக்கு எல்லாவற்றையும் அளிக்கும்பொருட்டு உருவாகி தன்னைச் சூழ்ந்திருப்பது என நினைப்பவர்கள். ஆகவே பிறர் பற்றிய உளக்குறைகள் கொண்டிருக்கிறார்கள். பிறரைச் சார்ந்திருப்பார்கள், ஆனால் பிறரை மிக எளிதாக அவமரியாதையும் செய்வார்கள், புண்படுத்துவார்கள்.
எனக்கு ‘வெறும் குமாஸ்தாக்கள்’ ஆகவே வாழ்ந்து மடிபவர்கள் மேல் ஓர் அருவருப்பு எப்போதுமுண்டு. குமாஸ்தா வாழ்க்கையின் எளிமையான அன்றாடச்சுழற்சி, பாதுகாப்புவளையம் ஆகியவற்றை உதறி தனக்கான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்பவர்களை மட்டுமே நான் பொருட்படுத்துகிறேன். ஒருவன் பொருளியல் பாதுகாப்புக்காக குமாஸ்தாவாகப் பணியாற்றலாம். ஆனால் அவனுடைய ஆன்மா குமாஸ்தாவுடையதாக ஆகிவிடலாகாது. சிறிய விஷயங்களில் உழன்று, சிறிய விஷயங்களையே பேசி, சோர்வுற்று, நக்கலும் நையாண்டியும் வசைபாடலுமாக வாழ்ந்து முடியவேண்டியிருக்கும். மீறிச்செல்வது அவரவர் தெரிவு
ஜெ