உங்களுடைய பொன்னிறப்பாதை என்ற நூலை ஒரு நண்பர் என்னிடம் ‘ஜெயமோகனும் சுயமுன்னேற்ற நூல் எழுதி கல்லா கட்டியிருக்கிறார்’ என்று கேலியாகச் சொன்னார். நான் ஏன் சுயமுன்னேற்றம் பற்றி பேசக்கூடாது என்று விவாதித்தேன். சுயமுன்னேற்றம் என்ற வார்த்தையே தப்பானது என்று சொன்னார். ’சமூக முன்னேற்றம்’ என்பதை பற்றி மட்டுமே ஒருவர் யோசிக்கவேண்டும். சுயமுன்னேற்றம் என்பது சமூக முன்னேற்றத்திற்கு எதிரான மனநிலை என்று பேசினார். நீண்டநேரம் இந்தச் சர்ச்சை ஓடியது. உங்கள் நூல்களை சுயமுன்னேற்ற நூல்கள் என்று வரையறை செய்வீர்களா?
இதையொட்டிய விவாதத்தில் ஒரு நண்பர் சொன்னார். முதன்மையான எழுத்தாளர்கள் எவருமே சுயமுன்னேற்ற நூல்களை எழுதியதில்லை என்று. அதைப்பற்றியும் உங்கள் கருத்துக்கள் என்ன?
ஜே. ராகவன்
அன்புள்ள ராகவன்,
இந்தவகையான பொத்தாம்பொதுவான ‘அறிவிப்புகள்’ எல்லாமே தன்னை ஒரு குறிப்பிட்டவகையில் காட்டிக்கொள்ளும் முயற்சிகள் மட்டுமே. முற்போக்கானவன், சீர்திருத்தப் பார்வை கொண்டவன், சமூக அக்கறை கொண்டவன், புரட்சியாளன், கலகக்காரன், நம்பிக்கையிழந்தவன், இருத்தலியல் சிக்கல் கொண்டவன்… இந்தவகையான அடையாளங்கள் நூறாண்டுகளுக்கு முன்பு தேவைப்படவில்லை. ஐம்பதாண்டுகளுக்கு முன் சிறிய அறிவுஜீவிக் குழுக்களுக்குள் தேவைப்பட்டன. இன்று அனைவருக்குமே தேவையாக உள்ளது.
ஏனென்றால் இன்று ஒவ்வொருவருக்கும் தன்னை முன்வைக்க களம் ஒன்று உள்ளது. ஊடகம் அமைந்துள்ளது. முன்பு ஒரு சிறு நண்பர்குழுவுக்குள் செய்துகொண்ட பாவலாக்களை எல்லாம் இன்று சமூக வலைத்தளங்கள் வழியாக உலகத்தின் முன் நிகழ்த்த முடிகிறது. இந்த வாய்ப்பு பெரும்பாலானவர்களை நடிகர்களாக ஆக்குகிறது. அந்நடிப்பு ஒரு சமூகக்கூட்டுப்பாவனையாக ஆகும்போது தனிநபர் வேறிட்டு நிற்க முடியாது. அவரும் இந்த பாவனைகளுக்குள் தன்னை பொருத்திக்கொள்ள நேர்கிறது.
உங்கள் நண்பர் என்ன சமூகப்பணி செய்கிறார், சமூக முன்னேற்றத்திற்காக என்னென்ன முயற்சிகள் செய்கிறார் என்று கேட்டுப்பாருங்கள். பெரும்பாலும் ஏதேனும் அரசியல் கட்சியைச் சார்ந்து, அதன் இணைய அணியின் பிரச்சாரங்களை விழுங்கி, திரும்பி கக்கிக்கொண்டிருக்கும் வெறுப்புத்தொழிலாளியாக இருப்பார். அதை சமூகப்பணி என்று நம்பிக்கொண்டிருப்பார் என்றால் அவர் அப்பாவி. அதை ஒரு வேடமாகப் போட்டுக்கொண்டிருந்தார் என்றால் காரியவாதி. அப்பாவிகள் இன்றைக்கெல்லாம் மிகமிக அரிதானவர்கள்.
உண்மையிலேயே சமூகம் முன்னேறும்பொருட்டு பணியாற்றுபவர்கள் சுயமுன்னேற்றம் பற்றி சிந்திக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த களத்தில் பல சோர்வுகளும் சிக்கல்களும் வினாக்களும் உண்டு. அவற்றுக்கான தீர்வுகளும் பதில்களும் வேறு. ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் தங்களுக்காக வாழ்பவர்களே. தொழில், குடும்பம் என்னும் இரு களங்களில் அன்றாடத்தை நடத்துபவர்கள். அந்த களங்களில் மட்டுமே நிகழ்காலத் திட்டங்களும் எதிர்காலக் கனவுகளும் கொண்டவர்கள். அவர்களுக்கான சோர்வுகளும், சிக்கல்களும், வினாக்களும் வேறு. வழிகளும் விடைகளும் வேறு.
இந்தச் சிக்கல்கள் இருவகை. உலகியல் சார்ந்தவை பெரும்பாலானவை. அவை சென்ற ஐம்பதாண்டுகளில் உருவானவை. அவற்றுக்கான விடைகளும் சென்ற ஐம்பதாண்டுகளில் கண்டடையப்பட்டவைதான். உதாரணமாக உழைப்பில் எந்த வகையிலும் படைப்பூக்கத்தன்மை, சாதனை இல்லாமல் இருப்பது என்பது இருநூறாண்டுகளாக இருந்து வரும் பிரச்சினை. கார்ல் மார்க்ஸ் விளக்கிய சிக்கல். ஆனால் அது சமூகத்தின் மிகப்பெரும்பாலானவர்களின் சிக்கலாக ஆனது சென்ற ஐம்பதாண்டுகளில்தான். அன்றாட உணவு, உறைவிடச் சிக்கல் பெரிதாக இருக்கையில் இந்த படைப்பில்லா உழைப்பு பெரும் பிரச்சினையாகத் தெரிவதில்லை. ஆனால் உயிர்வாழ்தலின் சவால் இல்லாமலானதுமே படைப்பில்லா உழைப்பு சகிக்க முடியாதது ஆகிவிடுகிறது.
அந்த சிக்கலால்தான் இன்று உலகமெங்கும் பலவகையான போதைகள் இத்தனை பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளன. சூதாட்டம் நவீனப் பண்பாட்டின் ஒரு பிரிக்கமுடியாத அம்சமாகியுள்ளது. கேளிக்கை மாபெரும் தொழிலாக ஆகியுள்ளது. சமூகவலைத்தளங்களின் அர்த்தமற்ற தொடர்பாடல் ஒரு புதைசேறாக மக்களை உள்ளிழுக்கிறது. அரசியல் சார்ந்த பூசல்கள் அதனால் பேருருக்கொள்கின்றன. இனம், சாதி, மதம் சார்ந்த காழ்ப்புகள் பெருகுவதற்கும் இது ஓர் அடிப்படைக் காரணம். ஏனென்றால் மனிதனைச் சூழ்ந்துள்ள சலிப்பில் இருந்து இவை விடுவிக்கின்றன. மூளையை எப்படியோ ஆட்படுத்தி வைத்திருக்கின்றன. செயற்கையான தற்காலிகப் பரபரப்புகளையும் அளிக்கின்றன.
இப்பிரச்சினையை எவர் பேசமுடியும்? வெவ்வேறு துறையினர் தங்கள் துறைசார்ந்து பேசலாம். உளவியலாளர்களும், சமூகவியலாளர்களும் பேசலாம். ஆனால் அவர்களுக்கான கச்சாப்பொருளாக அமைபவை பெரும்பாலும் இலக்கியப்படைப்புகளே. அத்துறைகள் தோன்றிய காலம் முதல் அப்படித்தான். இந்த ஒவ்வொரு துறையும் தன்வழியில் தனக்கான தீர்வுகளை தேடலாம், முன்வைக்கலாம். இலக்கியம் அதில் ஒன்றும் சொல்லக்கூடாது என எந்த மூடனும் சொல்ல மாட்டான்.
இலக்கியவாதி தன் வாழ்வனுபவங்களின் வழியாக, சமூக அவதானிப்புகளின் ஊடாக ஒரு சிக்கலை அடையாளம் காண்கிறான். அதை தன் புனைவுகளில் நிகழ்த்திக் காட்டுகிறான். புனைவுகளுக்கு வெளியே அவற்றைப் பற்றி பேசவேண்டும் என்றால் பேசுகிறான். அப்படிப் பேசாத பேரிலக்கியவாதிகள் அரிதினும் அரிதானவர்கள். இலக்கியவாதிகள் அதையெல்லாம் பேசுவதில்லை என்பவர்களுக்கு இலக்கியமென்றால் என்ன என்று தெரியாது.
இதை எழுதும்போது டி.எச்.லாரன்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுதியை வாசித்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கை பற்றிய விரிவான விவாதப்பார்வையை முன்வைக்கிறார். தன் நூல்களையே பேசுபொருளாகவும் கொண்டிருக்கிறார். விக்டர் யூகோ, பால்ஸாக், மாப்பஸான், தல்ஸ்தோய், தாமஸ் மன் என அத்தனை பேரிலக்கியவாதிகளும் அத்தகைய எழுத்தை விரிவாகவே எழுதியுள்ளனர். விதிவிலக்காகச் சுட்டப்படத்தக்கவர்கள் நவீனத்துவ காலகட்டத்தில் வெறும் கசப்பை மட்டுமே முன்வைத்த எழுத்தாளர்கள்.
’சுயமுன்னேற்ற எழுத்து’ என்று சொல்லப்படும் எழுத்து உருவானது சென்ற முக்கால் நூற்றாண்டில்தான் . அதற்கான தேவை அமெரிக்காவில் உணரப்பட்டது. 1950களில் அமெரிக்காவின் மாபெரும் பொருளியல் மந்தநிலை விலகத் தொடங்கியபோது அறுபதுகளில் நடுத்தரவர்க்கம் பெரிதாகியது. அவர்களின் உலகம் போட்டி மிக்கதாக ஆகியது. கீழ்மட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் நடுத்தரவர்க்கத்துக்குள் நுழைந்தனர். நடுத்தரவர்க்கத்தினர் உயர்நடுத்தர வர்க்கத்திற்கும் சென்றார்கள். சுயமுன்னேற்ற எழுத்து அந்த அலையின் துணைவிளைவாக உருவாகியது.
பொருளியல் வளர்ச்சியால் புதியசூழலுக்குள் நுழைபவர்களுக்கு அச்சூழலுக்குரிய மனநிலைகளை, நடத்தைநெறிகளை பொதுவாக, புறவயமாகக் கற்பிக்க வேண்டியிருந்தது. பெரும்பாலான தன்னம்பிக்கைநூல்களின் உள்ளடக்கம் என்பது சூழலில் நம்பிக்கையுடன் புழங்குவதற்கான மனநிலைகளையும் நெறிகளையும் கற்பிப்பதாக இருப்பதைக் காணலாம். கணிசமான தொடக்ககால தன்னம்பிக்கை நூல்களில் கைகுலுக்குவது, புன்னகைப்பது, முகமன்கள் சொல்வது பற்றியே விரிவாக பேசப்பட்டிருக்கும். அதை அப்படி கற்பிக்கவேண்டியிருந்தது.
அமெரிக்காவில் ஐம்பதுகளில் நிகழ்ந்தது இந்தியாவில் எண்பதுகளில் தொடங்கி பின்னர் உச்சம்கொண்டது. ஆகவே அதே தன்னம்பிக்கை நூல்கள் இந்தியாவில் தழுவி எழுதப்பட்டன. இந்தியாவில் சமையல்நூல்கள் அதற்கும் ஐம்பதாண்டுகளுக்கு முன் அதே பணியை ஆற்றின. அடித்தளத்தில் இருந்து நடுத்தர வாழ்க்கைக்கு வருபவர்களுக்கு தேவையான சமையல்பாடங்கள் அவை. அவர்கள் அவற்றை எவரிடமும் கேட்டு கற்கமுடியாது. அடித்தளத்தில் அவர்களுக்குச் சமையற்கலையே இல்லை என்பதை எவரிடமும் பகிரமுடியாது.
அதேதான் தன்னம்பிக்கைநூல்களும் இந்தியாவில் செய்தன. ஒரு அலுவலகச் சூழலில் அல்லது தொழிற்சூழலில் என்னென்ன பேசவேண்டும், எதையெல்லாம் பேசக்கூடாது, எப்படி தோற்றமளிக்கவேண்டும் என்பதையெல்லாம் இந்நூல்களே கற்பித்தன. நூல்கள் புறவயமானவை, ஆகவே சங்கடப்படாமல் கற்றுக்கொள்ளலாம். இந்நூல்கள் எத்தனை லட்சம் பேரின் வாழ்க்கையை மேம்படுத்தின என எனக்குத் தெரியும். ஆகவே ஒருவர் இந்நூல்களை கேலியும் கிண்டலும் செய்தால் அவரை அறிவிலி என்றே வகுத்துக்கொள்வேன்.
எழுத்தாளர்களில் சிலர் தன்னம்பிக்கைநூல்கள் எழுதியதுண்டு. ஆனால் பெரும்பாலும் எழுத்தாளர்கள் எழுதுவது அடுத்தகட்ட நூல்களை. அவை வாழ்க்கையைப் பற்றிய அவ்வெழுத்தாளரின் அவதானிப்புகள், பரிந்துரைகள் அடங்கியவை. எளிய சமூகப்புழக்கநெறிகளை அவை புகட்டுவதில்லை. அறிவுரைகளைச் சொல்வதுமில்லை. அந்த எளிய பிரச்சினைகளுக்கு அப்பால் இன்றைய காலத்தில் நுண்ணுணர்வுள்ள ஒருவர் உணரும் பல உணர்ச்சிகரமான, அறிவார்ந்த, ஆன்மிகமான சிக்கல்கள் உள்ளன. அவற்றை அவன் தானே சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான சில வழிகாட்டுதல்களையே எழுத்தாளர்கள் அளிக்கிறார்கள்.
என் நூல்களை வாசிப்பவர் எவரும் அவை சுயமுன்னேற்ற நூல்கள் என்று சொல்ல மாட்டார்கள். அவற்றில் இன்றைய உறவுச்சிக்கல்கள், அகச்சிக்கல்கள் பேசப்படுகின்றன. தத்துவார்த்தமான விவாதங்கள் உள்ளன. ஆன்மிகமான வினாக்கள் விவாதிக்கப்படுகின்றன. அவை ஒருவகையான கூட்டுச் சிந்தனைகள். இந்தக் காலகட்டம் இப்பிரச்சினைகளை உருவாக்குகிறது, அவற்றைப் பற்றிய ஆய்வுகள் அவை. அவற்றை புரிந்துகொள்ளவும் கடக்கவும் அந்த ஆய்வுகள் வாசகனுக்கு உதவலாம்.
சுயமுன்னேற்ற நூல்களுக்கும் இவற்றுக்கும் இடையே முதன்மை வேறுபாடு ஒன்று உண்டு. சுயமுன்னேற்ற நூல்கள் ஒரு அவர்கள் இலக்காக்கும் ஒரு சராசரி மனிதனைப் பற்றி பேசுகின்றன. பிரச்சினைகள், தீர்வுகள் எல்லாமே சராசரியானவை, பொதுவானவை. (ஆகவே அதிகம் பேருக்குப் பயனுள்ளவை) இத்தகைய நூல்கள் குறிப்பாக சில பிரச்சினைகளைப் பேசுகின்றன. அவற்றை தனித்தன்மை கொண்ட வாசகர்களை நோக்கி முன்வைக்கின்றன. இந்நூல்களில் அப்படி மிகப்புதிய, மிகநுட்பமான பிரச்சினைகள் பேசப்பட்டிருப்பதைக் காணலாம்.
அவை எப்படி பேசுபொருள் ஆகின்றன? வாசகர்கள் எழுத்தாளருடன் உரையாடுவதன் வழியாகத்தான். சென்றகாலங்களில் எழுத்தாளர்களுக்கு வாசகர்களுடன் இத்தகைய விரிவான உரையாடலுக்கான களம் இல்லை. சென்ற நூற்றாண்டு எழுத்தாளர்களின் நூற்றுக்கணக்கான கடிதங்கள் பிரசுரமாகியிருப்பதைக் காணலாம். பலசமயம் அவர்களின் எழுத்துக்களைவிட கடிதங்களே அளவில் மிகுதி. அக்கடிதங்களின் நவீன வடிவமே இந்த உரையாடல். இணையம் அதைச் சாத்தியமாக்குகிறது.
இவற்றிலுள்ளது ஓர் உரையாடல். எழுத்தாளன் தன்னை இரண்டுவகைகளில் முன்வைக்கிறான். நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டு வாழ்க்கையை கவனிப்பவன். தீவிரமான சொந்த அனுபவங்கள் கொண்டவன். அந்த இருநிலைகளிலும் அவன்மேல் ஈர்ப்பும், நம்பிக்கையும் கொண்டவர்கள் அவனை வாசிக்கிறார்கள். தன் வாழ்க்கை கடந்து வந்த பாதையை, தன் உள்ளம் செல்லும் பாதைகளை அவன் இவற்றினூடாகப் பகிர்ந்துகொள்கிறான். அந்தப் பாதைக்குறிப்பு எந்தப் பயணிக்கு உதவியாக உள்ளதோ அவர் அதை பயன்படுத்துகிறார்.
ஜெ