சுசி, அன்று நள்ளிரவில் நான் வீடுதிரும்பியபோது நள்ளிரவு.அம்மா தூங்கிவிட்டிருந்தாள். நீதான் கதவை திறந்தாய். விளக்கைப் போட்டுக்கொண்டு எனக்காக காத்திருந்தாய். நான் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியபோது உண்மையில் என் போதை தெளிய ஆரம்பித்திருந்தது.
ஜோவின் குடிலில் நான் மணிக்கணக்காக உளறிக் கொண்டிருந்தேன். சந்திராவைப் பற்றி. என்னைப் பற்றி. ஒன்றிலிருந்து ஒன்றாக எண்ணங்கள்… எண்ணங்கள் வாய்வழியாக ஒழுகின. நான் உளறுவதை நானே உணர்ந்து எற்கனவே உளறிய ஒன்றை சமன் செய்யும்பொருட்டு மீண்டும் உளறி பின்பு சோர்ந்து எப்போதோ தூங்கிவிட்டிருந்தேன். எழுந்தபோது ஜோ இல்லை.
நான் ஷுக்களை கழற்றி வைக்கும்போது நீ கதவைத் திறந்தாய். ஒற்றைக் காலில் எனக்கு சற்றே நிலை தடுமாறியது. கதவருகே வந்து உன்னைப் பார்த்து ”ம்ம்?” என்றேன்.
நீ முகத்தைச் சுளித்து ”யூ ஆர் டிரங்க்”என்றாய்.
”யா…” என்றேன் ”ஒருபார்ட்டி”
மெல்ல உள்ளே சென்றேன். என் உடலின் வியர்வை நாற்றத்தை என்னாலேயே உணர முடிந்தது. வாய் ரப்பரால் செய்யப்பட்டது போல இருந்தது. பின்னந்தலை வலித்தது.
நீ என் பின்னால் வந்து ”சாப்பிடுறியா?” என்றாய்.
”சாப்பிட்டுட்டேன்” என்ற பின் என் அறைக்குச் சென்று சட்டையை கழற்றிவிட்டு முகம் கழுவினேன். கண்ணாடியில் என்னைப் பார்க்க எனக்கே கொடூரமாக இருந்தது. என்ன ஆயிற்று எனக்கு. பித்தனின் முகம் அல்லது கொலைகாரனின் முகம்.
விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டேன். கட்டிலில் என் உடல் துணிவிரிப்பு போல பரவி செயலிழந்து கிடந்தது. மேலே சுழலும் மின்விசிறியின் ஒலியையே கேட்டுக்கொண்டிருந்தேன்.
கதவு மெல்ல தட்டப்பட்டது. அது தொலைவில் எங்கோ கேட்பது போலிருந்தது. பின்னர் அது சந்திரா என்று தோன்றி எனக்கு திடுக்கிட்டது. பின்னர் அது நீ என உணர்ந்ததும் கசப்பு எழுந்தது. மீண்டும் நீ தட்டினாய். ஒருகணம் தயங்கிவிட்டு எழுந்து திறந்தேன்.
நீ நின்றிருந்தாய். உன் முகத்தைப் பார்த்ததுமே நீ சாதாரணமாக வரவில்லை என்பதை உணர்ந்தேன். எனக்கு நீ அப்போது என்னை திட்டவேண்டும் போலிருந்தது சுசி. நீ என்னை அறைந்திருந்தால் மேலும் மகிழ்ந்திருப்பேன்.
”என்ன?” என்றேன். என் மன உணர்ச்சிகளுக்கும் குரலுக்கும் தொடர்பே இல்லை.
”நான் உன்கூட பேசணும்” என்றாய். கண்களில் குழந்தைத்தனமே அப்போது இருக்கவில்லை.
”நாளைக்குப் பேசலாமே… நான் இபப் டயர்டா இருக்கேன்” ஏன் அப்போது அசட்டுத்தனமாக சற்று சிரித்தேன் என்று எனக்குப் புரியவில்லை.
”நாளைக்கு வரை என்னால பேசாம இருக்க முடியாது” என்றாய். குரல் பிளேடு நுனிபோல் இருந்தது.
”என்ன விஷயம்?” என்றேன். அப்போதும் கதவைப் பிடித்து உன்னை வெளியே விட்டு நின்றிருந்தேன்.
”அத்தைக்கு தெரியவேண்டாம். அதான் உள்ள வந்து பேசலாம்னு நெனைக்கிறேன்”
”என்ன விஷயம்?”
”அத்தை ஒரு நாளும் தெரிஞ்சுக்ககூடாத விஷயம்.. போருமா?” உன் கண்களின் உக்கிரம் என்னை அச்சுறுத்தியது. எல்லா மயக்கமும் விலகி என் மனம் உச்சகட்ட கூர்மையை அடைந்தது. மௌனமாக கதவைத் திறந்து உன்னை உள்ளே விட்டேன்.
நீ உள்ளே வந்து கதவைச் சாத்தினாய். ”அருண், நீ மெதுவா பேசணும்… அத்தைக்குக் கேட்டிரக்கூடாது”
”ம்ம்” என்றேன். கட்டிலில் அமர்ந்து சப்பணமிட்டுக்கொண்டேன். சப்பணம் போட்டுக்கொண்டதும் அந்த அமரும் முறையாலேயெ ஒரு நிதானம் மனதில் உருவாகியது.
”சந்திரா ஆன்டி கூப்பிட்டிருந்தாங்க” என்றாய், என் கண்களைக் கூர்ந்து நோக்கி.
”யா.. நான் ஈவினிங் அவங்களைப் பாக்க போறதா சொல்லியிருந்தேன்”
”லூக்… நீ காலையிலே அவங்க வீட்டுக்குப் போனே. அப்றம் கெளம்பினே… வேற எங்கியோ போய் குடிச்சே… மொபைலை ஆ·ப் செஞ்சு வச்சிருந்தே.. அவங்க உன்னை கூப்பிட்டுட்டே இருந்தாங்க. இங்க மட்டும் ஒன்பது வாட்டி கூப்பிட்டாங்க…”
நான் ”இப்ப என்ன அதுக்கு?” என்றேன்
”அவங்க கூப்பிட்டவிதம் சரியா இல்லை. அருண் நானும் பொண்ணுதான். என்னாலயும் பலவிஷயங்களை ஊகிக்க முடியும். நான் இங்கவந்த முதல்நாளிலே முதல் செகண்டிலேயே உங்க உறவு வேறன்னு ஊகிச்சுட்டேன்… அதை எனக்கு நானே ஒப்புக்காம இருந்தேன்…”
”ஓ” என்றேன். அது ஆச்சரியம் அளிக்கவில்லை. எப்படியோ அது தெரிந்திருக்கும் என்று என் ஆழ்மனம் அறிந்திருந்தது.
”முதலிலே நீங்க ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டதைக் கவனிச்சேன். அப்பவே எனக்கு சந்தேகம் வந்தது. நான் சந்திரா ஆன்ட்டியைப்பத்தி உங்கிட்ட பேச்செடுத்ததே அதனாலதான். மகாபலிபுரத்திலே நான் அழுததுகூட அதை நெனைச்சுத்தான். அந்தபயத்துலதான் நானே உங்கிட்டே என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன்…. தப்பா ஏதாவது இருந்தா நீயே சொல்லிடுவேன்னு நெனைச்சேன்… எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்டிருவேன்னு…. அருண், எனக்கு இப்ப எல்லாமே தெரிஞ்சாகணும்… ”
”அதான் தெரிஞ்சாச்சே”
”நீயே சொல்லணும்”
”என்ன?”
”அவங்க உனக்கு யாரு?”
”அவசியம் தெரிஞ்சுக்கணுமா?”
”எஸ்”
”உன்னை மாதிரி” என்றேன்
”ச்சீ” என்று கூவி பின்னால் நகர்ந்து கதவில் முட்டிக்கொண்டாய்.
”அவ்ளவுதான். அவளும் எனக்கு உன்னை மாதிரித்தான். அவ என் மனசுக்குள்ள வந்த முதல்பெண். நான் அறிஞ்ச முதல்பெண்… அதான்”
அப்படி நான் சொன்னதுதான் உனக்கு உச்சகட்ட துயரை அளித்திருக்கும் சுசி. உன் முகம் அப்போது பாறையால் அடித்து நசுக்கப்பட்டதுபோல் இருந்தது.
”அப்ப நீ என்னை ஏன் என்னை ஏமாத்தினே? ஏன் என் வாழ்க்கையோட வெளையாடினே?” என்று ஆவேசத்துடன் கேட்டாய். சுசி, சுசி,சுசி, அந்த ஆவேசத்திலும் உன் குரல் மேலெழவில்லை. எப்பேற்பட்ட பெண் நீ!
”வேணும்ணே செய்யலை சுசி. நான் உன்னை பாக்க வராததே அதனாலதான். உன்னை பொருட்படுத்தவே கூடாதுன்னுதான் இருந்தேன்… ஆனா உன்னை ஏர்ப்போர்ட்டுலே பாத்த முதல் செகண்ட் முதல் என்னை மீறி நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சேன்… நீ எனக்கு வேணும்ணு தோணிச்சு. உன்னை என்னால விடமுடியலை. அவ்ளவுதான்”
”ஷட் அப்” என்று நீ சீறினாய். ”சீ… நீயெல்லாம்…” என்றாய். என்ன சொல்வதென்றே உனக்கு தெரியவில்லை. சுசி, உனக்கு வசைபாடவும் சாபமிடவும் பழக்கம் இல்லை. ஆண் மனதின் நுண்ணிய மென்பகுதியில் அறைவதற்கு நீ கற்றிருக்கவில்லை. சுசி, அது ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி பெண்கள் கற்றுக்கொள்வது. நீ ஒரு சிறுமி
”அருண் நீ என்னை கொன்னுட்டே.. ஆம்பிளங்கன்னாலே அசிங்கம்னு என்னை நெனைக்க வச்சிட்டே..” நீ மேலும் எதையோ சொல்ல முயன்றாய். சொற்கள் கிடைக்காமல் திணறியபின் சட்டென்று வாசலை திறக்க முற்பட்டாய்.
”சுசி ஒரு செகண்ட் நில்லு… நான் சொல்றதைக் கேளு… ப்ளீஸ்”
”நீ சொல்ற எதையும் நான் கேக்கவிரும்பலை… ஐ ஹேட் யூ… உன்னைப் பாத்தாலே அருவருப்பா இருக்கு”
நான் எழுந்து உன் கைகளைப் பிடித்தேன் ”ப்ளீஸ், சொல்றதைக் கேள்…”
”விடு…என்னை தொடாதே… விடப்போறியா இல்லியா?”
”மாட்டேன். நான் சொல்றதை நீ கேக்கணும்… ஒரு அஞ்சு நிமிஷம்… கேட்டாகணும்”
”கேக்க வேண்டியதையெல்லாம் கேட்டாச்சு.. கைய விடு..”
”சொல்றதைக் கேள்டீ ” என்றேன் உரக்க
”ஷட் அப்”என்று நீ கிசுகிசுத்தாய் ”அத்தை கேக்கப்போறா… தெரிஞ்சா செத்திருவா”
நான் தணிந்தேன். ”சுசி… இதுதான் உண்மை. என் சின்னவயசிலே நான் பாத்த ஒரே பெண் சந்திரா. அவளோட கம்பீரம், நிதானம், அழகு எல்லாமே எனக்கு பிடிச்சிருந்தது. பிடிச்சதை சொந்தமாக்கிக்கணும்கிறது ஆம்பிளையோட காமம்… தப்புசரிகள் தெரியாத பிராயம். நான் சமாதானம் சொல்லலை… ஆனா… என்ன சொல்ரது.. சுசி, என் உடம்புமேலதான் எல்லா தப்பும்… நான் உடம்பை நம்பி அது போக்குல போய்ட்டேன்….
நீ முகத்தைச் சுளித்தபடி சூடான ஒன்றின்மேல் நிற்பது போல நிலை கொள்ளாமல் தவித்தாய்
”சுசி, அப்டி அந்த உறவு உண்டாச்சு… அப்றம் நீ என் லைப்ல வந்தே. உன்னையும் எனக்கு பிடிச்சிருக்கு. அவ முன்னால் நான் சின்ன பையன். உன் முன்னாடி நான் மெச்சூர்டான ஆம்பிளை… அப்டி இருந்தேன், இப்ப இப்டி ஆயிட்டேன். எனக்கு நான் செய்றது தப்புன்னு தெரியும். ஆனா உன்கிட்ட நான் தப்பு பண்ணலை… ப்ளீஸ்… உன்னை நான் ஏமாத்தலை. உன் மேல எனக்கு இருக்கிற காதல் பொய் கெடையாது. அது நெஜம்… அவ்ளவுதான்”
சட்டென்று நீ கசிந்து அழ ஆரம்பித்தாய். ”நீ மறுக்கணும்னு ஆசைப்பட்டேன் அருண். எல்லாம் பொய்னு ஒருவார்த்தை நீ சொல்லியிருந்தா அதையே நம்பிட்டு நான் இருந்திருப்பேன். நான் அந்த அளவுக்கு உன்னை லவ் பண்ணிட்டேன். அந்த அளவுக்கு உன்னை டிபெண்ட் பண்ணி இருந்திட்டேன்…” மூக்கை உறிஞ்சியபடி வளையல் குலுங்க கண்ணீரை மாறி மாறித் துடைத்தபடி நீ அழுவதை நான் செயலற்றவனாகப் பார்த்திருந்தேன்
”நீ என்னை ஏமாத்திட்டே அருண்… நீ என் நம்பிக்கையை எல்லாம் சிதறடிச்சிட்டே”
நான் மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டேன். உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கணம் என்ன இது என்று தோன்றியது. மூன்று பெண்களின் கண்ணீரை மாறி மாறிக் கண்டுகொண்டே இருக்கிறேன். நான் அறிந்த வாழ்க்கை இதுதான்
நீ அழுது முடித்தாய். நான் சொன்னேன் ” இதோ பார் சுசி, அட்லீஸ்ட் நான் உங்கிட்டே பொய் சொல்லலை… நீ அதை நம்பணும்.. அதுபோதும் எனக்கு”
நீ என்னை கண்ணீர் வழியும் கண்களுடன் பார்த்தாய். ஓர் உடைவின் கணம். சட்டென்று என்னருகே ஓடிவந்து என் மடியில் விழுந்து ”உன்னை வெறுக்க என்னால முடியலை அருண்… நீ என்ன செஞ்சாலும் உன்னை என்னால வெறுக்க முடியலை… மானசீகமா நான் உன்கிட்ட தாலி கட்டிகிட்டாச்சு அருண்… ஐ லவ் யூ… ஐ லவ் யூ” என்று அரற்றினாய்
நான் உன் தலையை மெல்ல தொட்டேன். என் கைகள் அப்படி நடுங்கின. உன் தலைமயிரின் பிசிறுகள் தீண்டியபோதே என் உடல் அதிர்ந்தது. சுசி, அதி தூய ஒரு புனிதப்பொருள் போலிருந்தாய் நீ.
நீ தலையை தூக்கி என் கையைப் பிடித்துக் கொண்டாய். ”அருண், நடந்ததை விட்டுடு… பிளீஸ்… நானும் மறந்திருறேன்… ஆனா நீ இனிமே அவங்களை விட்டுடணும்… அவங்ககிட்ட எந்த தொடர்பும் வைச்சுக்கக் கூடாது.. அவங்களை நீ பாக்கவோ பேசவோ கூடாது… எனக்கு சத்தியம் செஞ்சுகுடு…”
நான் கைநீட்டவில்லை. என் மனம் செயலற்றிருந்தது
”பிளீஸ் அருண்… அவங்க கிட்ட சொல்லிரு… நீ அவங்ககூட வாழமுடியுமா என்ன? உன் வயசு என்ன? பின்ன எதுக்கு அது… தப்பு அருண்… வேணாம். அத்தைக்கு இந்த விஷயம் தெரிஞ்சா உசிரோட இருப்பாங்களா? நீ அவங்களை நெனைக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்கொடு. ப்ளீஸ்”
”நான் பொய் சத்தியம் பண்ண விரும்பலை”
நீ பாய்ந்து எழுந்து அமர்ந்து பிரமித்த கண்களுடன் என்னைப் பார்த்தாய்
”இதுதான் உண்மை சுசி… எனக்குள்ள இருக்கிற பையனுக்கு சந்திராதான் தேவைப்படுறா…. எனக்குள்ள இருக்கிற ஆம்பிளைக்கு உன்னை தேவைப்படுது… எனக்கு ரெண்டுபேரும் வேணும்னு தோணுது… என்னால ரெண்டுபேரையுமே மறக்க முடியல்லை”
”ச்சீ”என்று சீறினாய் ”அப்ப நீ என்னைப்பத்தி என்ன நெனைச்சே? அவளையும் தாங்கிக்கிட்டு நான் உன்கூட இருக்கணுமா?”
”நான் எதையுமே சொல்ல விரும்பலை சுசி… என் மனசில என்ன இருக்கோ அதைச் சொல்றேன்…இதுதான் உண்மை… பெண்கள் என்ன வேணுமானாலும் நெனைக்கலாம். ஆனா ஆம்பிளை மனசு இப்டித்தான். நான் இப்ப இப்டித்தான் நெனைக்கிறேன். ஒரு ஆம்பிளைக்கு அட்லீஸ்ட் ரெண்டு மனைவி வேணும். அம்மா மாதிரி ஒருத்தி தோழி மாதிரி ஒருத்தி… அவ்ளவுதான்”
”புல் ஷிட்!” என்றாய் ”நீ ஒரு மிருகம். காமம் மட்டும்தான் உனக்கு தெரியும்… பொம்பிளைன்னா என்னன்னு நெனைச்சே? வெறும் சதை இல்ல? வெறும் மார்பும் இடுப்பும் இல்ல? யூ நேஸ்டி ·பக்கர்”
”இல்ல சுசி, பொண்ணுண்ணா அம்மா அப்றம் தோழி. அப்டித்தான் நான் சொன்னேன்… வெறும் அம்மாவும் வெறும் தோழியும் மட்டும் பத்தாது. இது ஒரு அடிபப்டை விஷயம்… அவ்ளவுதான்”
”உங்கிட்ட பேச நான் விரும்பலை…” என்று மூச்சிரைக்கச் சொல்லி கதவை நோக்கி சென்று தாழில் கைவைத்தாய். கதவைத் திறக்க உன்னால் முடியவில்லை. உன் விரல்கள் தாழில் வழுக்கின. இழுத்து இழுத்துப் பார்த்தபின் அப்படியே சரிந்து தரையில் அமர்ந்தாய். மீண்டும் உடைந்தாய் ”மை காட், மைகாட்! நான் என்னவெல்லாம் நெனைச்சேன்… என்னென்ன கற்பனை செஞ்சேன்…. மைகாட் மைகாட்!.”
தலையையும் முகத்தையும் மூர்க்கமாக ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டாய். அந்த அறைகள் ஒவ்வொன்றையும் நான் என் மிக மென்மையான பகுதியில் வாங்கிக்கொண்டேன். அந்த வலி எனக்குத் தேவைப்பட்டது. நான் உன்னையே பார்த்தபடி சிந்தனை செய்தேன். இதோ உனக்கு என்னிடம் இருந்த எல்லா மதிப்பையும் இல்லாமல் செய்துவிட்டேன். இதோ உன் மனதில் கீழ்மகனாக நின்றுகொண்டிருக்கிறேன்.
இதோ நீ எழுந்து ஆங்காரத்துடன் கண்ணீரைத்துடைத்துக் கொண்டு வெளியே செல்லக்கூடும். எஞ்சிய வாழ்நாள் முழுக்க நீ என்னை வெறுத்து வெறுத்து வாழக்கூடும். பெண்ணுக்கு ஓர் ஆண் போதும் வாழ்நாள் முழுக்க விரும்பவோ வாழ்நாள் முழுக்க வெறுக்கவோ ஒரு முகம். அதைக்கொண்டே வாழ்ந்துவிடுவார்கள். நீ எண்ண எண்ண கசந்து கசந்து ஊறும் ஒரு நினைவாக இருப்பேனா நான்?
ஒன்று செய்யலாம். நான் தற்கொலை செய்து கொள்ளலாம். அப்போது உன் கசப்பு முழுக்க இல்லாமலாகும். நீ குற்ற உணர்வும் துயரமுமாக என்னை வாழ்நாள் முழுக்க நினைத்துக்கொள்வாய். சுசி, அப்போது நான் விதவிதமாக தற்கொலை செய்துகொண்டேன். நீ போனதுமே பிளேடு எடுத்து என் கழுத்தை அறுத்துக்கொண்டு படுக்கை முழுக்க ரத்தமாகக் கிடந்தேன். ஃபேனில் தூக்கு மாட்டி ஆடினேன். கதவைத்திறந்து சென்று தண்டவாளத்தில் படுத்தேன். என் பிணம் மீது நீ படுத்து கதறுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் தற்கொலை என்ற எண்ணம் என்னை என் அம்மாவை நோக்கித்தான் கொண்டு சென்றது. மிஞ்சிய வாழ்நாள் முழுக்க அவளுக்கு வாழ்க்கை இருள்தான். ஏன் அவள் உயிர் வாழவேண்டும்? அவளுக்கு – ஏன் மண்ணில் எந்த ஒரு மானுட உயிருக்கும் – நான் அளிக்கக்கூடிய சித்திரவதை அது தான்.
நான் இறந்த பின் இருக்கும் அம்மாவை நினைத்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி கன்னங்களில் வழிய ஆரம்பித்தது. போர்வை நுனியால் கண்களை அழுத்தமாக துடைத்தேன். தலை கனத்தது தொண்டை கரித்தது.
நீ விசும்பி விசும்பி அழுதுகொண்டிருந்தாய். பின்பு விசும்பல்கள் ஓய்ந்தன. அரை மயக்கம் போல அப்படியே முழங்கால்களில் முகம் வைத்து அசையாமல் இருந்தாய்.
செல்போன் மின்ன ஆரம்பித்தது. அதை நான் வெறித்துப்பார்த்தேன். என் காலுக்குக் கீழே ஒரு விசித்திர ஒளி கொண்ட உலகம் இருப்பது போலவும் அதன் ஒளி ஒரு துளை வழியாகத்தெரிவது போலவும் இருந்தது. அது அதிர்ந்து படுக்கையில் ர்ர்ர்ர் என்றது.
நான் ஆவேசமாக எம்பி அதை எடுத்து அறைமூலை நோக்கி வீசினேன். நீ நிமிர்ந்து என்னை பார்த்தாய். பின்னர் அந்த செல்போனைப் பார்த்தாய்.
”அருண் நான் நாளைக்கே லண்டன் கெளம்பறேன்” என்றாய். குரல் நிதானமாக இருந்தது.
நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன்.
நீ முகத்தை துடைத்து “அத்தைகிட்டே சாதாரணமா ஏதாவது சொல்லிட்டு போயிடறேன். திரும்பி வந்திடறேன்னு சொல்றேன். ஆனா வரமாட்டேன். இனிமே நாம பேசவேண்டியிருக்காது, ப்ளீஸ்…. இனிமே என் மனசைக்கலைக்காதே”
“இல்ல… சுசி. நீ ரொம்ப நல்ல பொண்ணு. உனக்குப்பொருத்தமானவனா ஒருத்தன தேடிக்கோ. நல்லவனா சுத்தமானவனா. அவன் கூட நல்லா இரு. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வருத்தம் இல்லைன்னா துக்கம் இருக்கு, வலி இருக்கு. ஆனா நீ போகக்கூடாதுன்னு சொல்லமாட்டேன். அவ்வளவுதான்.”
நீ கதவைத்திறந்தபோது உன் முதுகுக்குப்பின்னால் நான் சொன்னேன். “ஆனா நீ எப்டி இருந்தாலும் ஒரு ஆணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். ஒரு ஆணுக்கு அம்மாவாகணும். ஆம்பிளங்க கூடத்தான் நீ வாழணும். நீ நெனக்கற மாதிரி அவங்க இல்லை. அவங்க எப்டி இருக்காங்கன்னு நீதான் புரிஞ்சுக்கணும்.”
நீ திரும்பிப்பார்த்தாய். நான் உன் கண்களையே பார்த்தேன். “வை ஷுட் ஐ?” என்றாய்.
“நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டியா என்ன?”
”போதும், ரெண்டு ஆம்பிளங்களைப் பார்த்தாச்சு. ரெண்டு பேரும்… அப்பா ஒரு டர்ட்டி பீஸ்ட். ஆனா நீ ஓகே” உதடுகளைக் கடித்தாய். உன் மனம் பொங்கி வந்ததைக்கண்டேன். அப்போதும் உடைந்து கதறி அழப்போகிறவள் போல.
“பெஸ்ட் ஆஃப் லக் சுசி. நீயே போகப்போகப் புரிஞ்சுக்குவே. என்னை மன்னிச்சுரு. நான் உன் காலைப்பிடிச்சு மன்னிப்பு கேட்டதா வச்சுக்கோ. ப்ளீஸ்.”
நீ திரும்பிக்கொண்டாய்.
”நீ என்னை மன்னிக்கிறது தான் உனக்கு நல்லது சுசி. என் மேலே இருக்கிற கசப்பிலே நீ ரொம்ப தப்பான முடிவுகளை எடுத்திருவே. நீ இங்க வரல்லை, என்னை சந்திக்கலைன்னு நெனச்சுக்கோ. அதுதான் உனக்கு நல்லது நீ ஒரு ஏஞ்சல். உன்கிட்ட ஒரு சின்ன தப்புக்கூட என் கண்ணுக்குப்படலை. அப்டி மத்தவங்களையும் எதிர்பார்க்காதே. அவ்வளவுதான் சுசி. ஐ வில் ப்ரே ஃபார் யூ”
நீ வெளியே போய் கதவை மூடினாய். நான் மூடிய கதவையே பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டு மூடிய கதவைப்பார்த்தேன். அதற்கு எத்தனையோ அர்த்தங்கள். நான் மெல்ல புன்னகைத்தேன். சுசி, முள்ளைப்பிடுங்கிவிட்ட பின் எரிச்சல் மிக்க ஒரு நிம்மதி எழுமே அதுதான் அப்போது.
ஆம், முடிந்துவிட்டது. அவ்வளவுதான். இனிமேல் ஏதுமில்லை. இதைப்போல் ஏன் நான் சந்திராவின் உறவையும் வெட்டிக்கொள்ளக்கூடாது? அப்படிச்செய்தால்தான் நான் ஆண்மகன். முடியுமா என்னால்? ஏன் முடியாது? ஒரே ஒரு சொல், ஒரே சொல்லில் அப்படியே முறித்துக்கொள்ளக்கூடிய உறவுதான். உண்மையில் என் ஆழத்துக்கு முக்கியமான் உறவு என்பது நீதான் என்று அப்போது அறிந்தேன். அதையே என்னால் முறித்துக்கொள்ள முடிந்திருக்கிறது.
எழுந்து போய் செல்போனை எடுத்தேன். எண்பது மிஸ்டு கால்கள். sஎல்லை கையில் வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அழைப்பதற்கு விரல்கள் தயங்கின. என்ன சொல்வாள்? அழுகை கொஞ்சல், கெஞ்சல். வெறியும் கண்ணீரும் கலந்த அவள் குரலைக்கேட்டேன். என் செல்போன் சந்திராவாகவே அப்போது மாறி என் கையில் இருந்தது.
செல்போன் என் கையில் இருந்து அதிர்ந்து ஒளிவிட்டபோது எனக்கு திடுக்கிட்டது. பித்தானை அழுத்தி காதில் வைத்துக்கொண்டேன். ஆனால் என்னால் பேச முடியவில்லை. தொண்டையில் குரல் எஞ்சியிருக்கவில்லை. பேசாமல் காதிலேயே வைத்துக்கொண்டிருந்தேன்.
மறுமுனையில் சந்திராவும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் மறுமுனையில் இருப்பது எந்த ஒலியும் இல்லாமலேயே துல்லியமாக தெரிந்தது. நான் என் மொத்தப்பிரக்ஞையும் செவியில் குவிய அமர்ந்திருந்தேன். சந்திராவின் உலர்ந்து ஒட்டிய உதடுகள் மெல்லப்பிரியும் ஒலியைக்கேட்டேன். என் மனம் படபடக்க ஆரம்பித்தது. அழுவாளா வசைபாடுவாளா, மிரட்டுவாளா? என்ன சொல்வது நான்? எனக்கு அப்போது ஒரு சொல் கூட மனதில் இல்லை.
“அருண்” என்ற கனமான ரகசியக்குரல்.
“ம்ம்” என்றேன்.
“என்ன பண்றே?”
“தூங்கப்போறேன்.”
“ எப்ப வந்தே வீட்டுக்கு”
நான் மெல்ல பெருமூச்சுவிட்டு தளர்ந்து “கொஞ்சநேரம் ஆச்சு” என்றேன்.
“சுசி உங்கிட்ட பேசினாளா?”
நான் ஒன்றும் சொல்லவில்லை. சந்திரா நானும் சுசியும் பேசிக்கொண்ட ஒவ்வொரு சொல்லையும் கேட்டவளாக அந்த அறைக்குள் நின்றுகொண்டிருந்தவள் போல எனக்குத்தோன்றினாள்.
“என்ன பேசாம இருக்கே?”
“ஒண்ணுமில்லை”
“ நீ என்ன சொல்லியிருப்பேன்னு எனக்குத்தெரியும்”
”ம்ம்?”
”உன்னால என்னை விட்டிர முடியாது. அது எனக்குத் தெரியும்”
நான் செல்போனுடன் அப்படியே மல்லாந்து மெத்தைமேல் சரிந்தேன். ஒருநாளில் எத்தனை நிகழ்ச்சிகள், எத்தனை உணர்ச்சிக்கொந்தளிப்புகள். என் ஆத்மாவே களைத்துபோனது போலிருந்தது. நான் மல்லாந்து கிடக்க எல்லா நிகழ்ச்சிகளுடன் காலம் என் மேல் ஒரு நீரோடை போலப் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது.
“தூங்கு கண்ணா. எல்லாம் சரியாப்போயிரும்”
“ம்ம்” சட்டென்று எனக்கு அழுகை வந்துவிட்டது. உதடுகளைக் கடித்து தொண்டையை இறுக்கி துளி ஓசைகூட இல்லாமல் அழுகையை உள்ளேயே நிறுத்திக்கொண்டேன்.
“என்னம்மா அழறியா?”
ஒரு விம்மல் என்னை மீறி வந்துவிட்டது.
“என்ன அழுகை? சும்மாரு. நீ ஆம்பிளை அழலாமா… பேசாம இரு”
“ம்ம்”
”ஒண்ணுமில்லை. எல்லாம் நீ நெனக்கிறது மாதிரித்தான் நடக்கும். ஒண்ணும் ஆகல்லைல்ல இப்ப. எதைப்பத்தியும் நெனக்காம பேசாமப்படு என்ன?”
”ம்ம்”
“சமத்தா தாச்சுக்கோ. கண்ணுக்குத் தூக்கம் வருதில்ல?”
நான் புன்னனைத்தேன். அந்தப்புன்னகையை அவள் கண்டது போல அவள் குரலிலும் புன்னகை இருந்தது. “என்ன சிரிப்பு?”
“ஒண்ணுமில்லை”
“என் மேல கோபமா?”
“இல்லை”
“பின்ன?”
“சும்மாதான்”
“நீ ரொம்பத்தான் துள்றே”
“நீதான் அப்டி பேசினே…”
“ஒண்ணுமே பேசலை” என்றாள். “பேசாம தூங்கு என்ன?”
நான் மெல்ல மெல்ல இலகுவாகியபடியே சென்றேன். இருளில் அந்த செல்போன் என் கைக்கடக்கமான சந்திராவாக என்னுடன் பேசிக்கொண்டே இருந்தது.