பெருந்தலையூர் வெற்றிவிழா

ஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர் 

யான் அறக்கட்டளை என்னும் சமூகப்பணி அமைப்பு ஈரோடு மாவட்டம் பெருந்தலையூரில் ஒரு ஜனநாயகச் சோதனையை மேற்கொண்டது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் வாக்குக்குப் பணம் வாங்க மாட்டோம் என்னும் உறுதிமொழியை கிராம மக்களைக்கொண்டு எடுக்க வைத்து, அதை முன்னரே வெளிப்படையாக அறிவித்து ஊருக்கு வெளியே தட்டிகள் வைத்தனர்.

ஒவ்வொரு வீட்டிலும் அவ்வறிவிப்பு எழுதி ஒட்டப்பட்டது. அதன்பின் அவ்வுறுதிமொழி அம்மக்களால் காப்பாற்றப்பட்டதா என சோதனையிட்டனர். மிகமிகச் சில விதிவிலக்குகள் தவிர அவ்வுறுதிமொழி வெற்றிகரமாக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டது என தெரிந்தது.

 

கல்லூரி மாணவர்களை சமூகப்பணியில் ஈடுபடுத்துவது, சமூக யதார்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளச் செய்வது என்னும் நோக்குடன் அவர்களைக்கொண்டு இப்பணி நடத்தப்பட்டது. பெருந்தலையூரிலேயே ஓர் அலுவலகம் தொடங்கப்பட்டு மாணவர்கள் அங்கேயே தங்கி பணியை நடத்தினர். முக்கியமான ஆளுமைகளையும் அவர்களே சந்தித்து பணியை ஒருங்கிணைத்தனர். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், களப்பணி அனுபவத்தையும் அளிக்கும் நோக்கம் இந்த செயல்பாட்டில் இருந்தது

இப்பணியுடன் இணைந்து பெருந்தலையூரில் தூய்மைப்பணிகள், அடிப்படை வசதிகள் செய்துதருவது ஆகியவை மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டன. கோலப்போட்டி போன்ற விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. மாணவர்களுக்கும் ஊர்க்காரர்களுக்குமான உறவு உருவான விதம் மகிழ்வூட்டுவதாக அமைந்தது.

பெருந்தலையூர் வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு யான் அறக்கட்டளை ஓரு நினைவுச்சின்னத்தை பெருந்தலையூரில் நிறுவுகிறது. அவ்விழா  ஜூலை 21 அன்று நிகழ்கிறது. இந்த பணியில் எல்லா அரசியல் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு யான் அறக்கட்டளைச் செயல்பட்டது. இடதுசாரிக் களச்செயல்பாட்டாளரான வி.பி.குணசேகரன் போன்றவர்கள் உடனிருந்தனர். அனைவரும் பங்கெடுக்கும் விழாவில் நான் விருந்தினராகக் கலந்துகொள்கிறேன்.

முந்தைய கட்டுரைபேசும்பொம்மைகள்
அடுத்த கட்டுரைநம் மனம், நாம்