விடுதலை இரண்டாம் பகுதிக்கான விளம்பரம் வெளியாகியுள்ளது. முதல் பகுதியில் இருந்த தீவிரம் இன்னும் உச்சமடைந்துள்ளது. துணைவன் என்னும் என் கதையில் இருந்து உருவான படம்.
நான் ஒன்று கவனித்திருக்கிறேன். ஒரு பெரிய நாவலாக எழுதவேண்டும் என எண்ணி, எப்படியோ சிறுகதையாக அல்லது குறுநாவலாக நின்றுவிட்ட கதைகள் சினிமாவுக்குச் சிறப்பானவை. துணைவன் நான் மிகப்பெரிய நாவலாக எழுதக் கனவுகண்ட கதை. ஆனால் தர்மபுரியில் இருந்து பணிமாற்றம் அடைந்தபோது அந்த யதார்த்தத்தில் இருந்தும் உள்ளம் விலகிவிட்டது.
என் கதை விடுதலை திரைப்படத்தின் தொடக்கம். ஆனால் எந்தப் படமும் முழுக்க முழுக்க இயக்குநருடையதுதான். நம் எழுத்து இயக்குநரால் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் நிறைவடையலாம், இல்லை என்றால் அது அவருடைய தெரிவு என அமைதிகொள்ளவேண்டியதுதான். விடுதலை அதன் வழியில் வளர்ந்து சென்றது குறித்து எனக்கு நிறைவுதான்.
அண்மையில் துணைவன் தெலுங்கு மொழியாக்கம் வெளிவந்தது. உதயினி என்னும் இதழில். தெலுங்கு தலைப்பு காம்ரேட். ஸ்ரீனிவாஸ் தெப்பாலா மொழியாக்கம். தொடர்ச்சியாக வாசக எதிர்வினைகள் வந்துகொண்டே இருந்தன. இடதுசாரி இயக்கங்களின் தீவிரம், வீழ்ச்சி ஆகிய இரண்டும் தெலுங்கில் இன்னும் பரவலாக அறியப்பட்டவை. போலீஸ் ஒடுக்குமுறையும்கூட. ஆகவே கதை உருவாக்கும் வீச்சு அதிகமாக இருக்கிறது (தெலுங்குக் கதை. உதயினி இதழ்)
அக்கதையை வெட்டி ஒட்டி கூகிளில் போட்டு திரும்ப தமிழாக்கம் செய்து பார்த்தேன். ஆச்சரியம், பெரும்பகுதி சரியாகவே உள்ளது. கூகுள் மொழியாக்கங்கள் மிகச்சிறப்பாக மாறிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சிலகாலத்தில் புனைவுகளுக்கு மட்டுமே மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுவார்- செம்மை செய்வதற்கு.
துணைவன் தொகுதியில் இதுவரை இணையத்தில் வெளிவராத இரு கதைகள் உள்ளன. தனிப்பட்ட முறையில் அவை எனக்கு பிடித்தமானவை. ஏனென்றால் நான் முன்பு பார்த்திராத ஆர்ட்டிக் வட்டத்துக்கு சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு சென்றேன். அந்நிலம் உருவாக்கிய அழுத்தமான அகநிலம் அக்கதைகளில் உள்ளது.
தெலுங்கில் என் கதைகள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அறம் கதைகளின் தெலுங்கு மொழியாக்கங்கள் வெவ்வேறு இதழ்களில் வெளியாகின. அவை தொகுப்பாக வரவிருக்கின்றன. (மயில்கழுத்துதான் தலைப்புக் கதை. நெமலிநீலம். மொழியாக்கம் பாஸ்கர் அவினேனி) விரைவிலேயே கன்னட வடிவம் வெளிவரவுள்ளது.
ஹர்ஷணீயம் என்னும் இணைய வானொலியில் என் பேட்டி வெளியாகியது. தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் பேசும் பேரிடரில் சிக்கியிருந்தாலும் ஓரளவு நான் எண்ணியதைச் சொல்லமுடிந்துள்ளது என நினைக்கிறேன். பேட்டி நன்றாக இருந்ததாக பலர் கூப்பிட்டுப் பேசினார்கள்.
சிறுகதைகள், புனைவுகள்