ஒரு வரலாற்றுத்தருணம்

அண்ணா ஹசாரேவை முன்வைத்து ’ஊழலுக்கு எதிராக இந்தியா’  இயக்கம் எடுத்த போர் முதல்கட்டத்தில் பெரும்வெற்றியை அடைந்திருக்கிறது. அண்ணா ஹசாரே கோரியபடியே பாராளுமன்றத்தின் இரு அவைகளும் வலுவான லோக்பால் அமைப்பு ஒன்றை அமைப்பதை வாக்களிப்பதன் மூலம் ஒத்துக்கொண்டிருக்கின்றன.  அண்ணா கடைசி நிமிடம் வரை உறுதியாக இருந்த மூன்று கோரிக்கைகளும் பாராளுமன்றத்தால் கொள்கை அளவில் ஏற்கப்பட்டுள்ளன. ஒன்று, கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பாலுக்குள் கொண்டுவருவது, இரண்டு, ஊழலை தண்டிப்பதற்கான சட்ட வரையறை, மூன்று, மாநிலங்கள் முழுக்க லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவது. மூன்றையுமே இந்தியப்பாராளுமன்றம் கொள்கையளவில் அங்கீகரித்து வரவிருக்கும் லோக்பால் மசோதாவில் சேர்ப்பதாக ஒத்துக்கொண்டிருக்கிறது.

அண்ணா ஹசாரேவுடன் அவரது குழுவும் வணக்கத்துக்குரியது. ஐயத்திற்கு அப்பாற்பட்ட நேர்மை கொண்டவர்கள் அவர்கள். இல்லையேல் இப்படி பொதுமேடைக்கு வந்து நிற்கமுடியாது. அர்விந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, சந்தோஷ் ஹெக்டே, பிரசாந்த்பூஷன், மேதா பட்கர் போன்றவர்கள் தங்கள் கடந்தகாலச் செயல்பாடுகள் மூலம் இந்தியாவின் ஊழலுக்கும் அதிகாரவர்க்கச் சுரண்டலுக்கும் எதிராகத் திட்டவட்டமாகப் போராடிய வரலாறு கொண்டவர்கள். பொதுவாழ்வில் நேர்மையையும் துணிச்சலையும் களத்தில் பணியாற்றி நிரூபித்தவர்கள்.

தங்கள் தியாகத்தாலும் தகுதியாலும் இந்திய மக்களின் ஆதரவைப்பெற்று, அதைக்கொண்டு இந்தியாவின் ஆளும்கட்சியையும் எதிர்க்கட்சியையும் தார்மீகமான கட்டாயத்துக்கு ஆளாக்கி இந்த வெற்றியை அண்ணா ஹசாரேயும் அவரது குழுவும் சாதித்திருக்கிறார்கள். ஒரு சிறிய சாதாரணமான கோரிக்கைக்கு அரசையும் அரசியல்வாதிகளையும் பணிய வைப்பது எத்தனைபெரிய விஷயம் என அறிந்தவர்கள் உணர்ந்திருப்பார்கள் —  வாசகர்களில் ஓரளவேனும் தொழிற்சங்க அனுபவம் கொண்டவர்கள் அதை ஊகிக்க முடியும்.

ஆகவே இந்த வெற்றி மிகப்பிரம்மாண்டமான ஒன்று. உண்மையில் இது சாதிக்கப்படுமென நான் நினைக்கவில்லை. பாராளுமன்றம் இந்த விஷயங்களைப் பரிசீலிக்கும் என ஒரு பொது உறுதிமொழியைப் பெறுவதே அதிகபட்சமாக சாத்தியம் என்று நினைத்தேன். நான் பேசியவரை அனேகமாக எல்லா முக்கியமான இதழாளர்களும் அதையே நினைத்தார்கள். கடைசி நிமிடம் வரை நிகழ்ந்த இழுபறிகளும் பின்னடைவுகளும் அதையே உறுதிசெய்தன.

வழக்கமாக போராட்டம் ஒருகட்டத்தை தாண்டி நீளும்போது போராடும்தரப்பு பலவீனமாகிறது. ஆரம்பகட்ட ஊக்கம் குறையும், போராடும் தரப்பில் உள்மோதல்கள் உருவாகும். நான் சந்தித்த எல்லா தொழிற்சங்கப்போராட்டங்களிலும் அதைக் கண்டிருக்கிறேன். ஐந்தாறு நாட்கள் போராட்டம் நீண்டால் நாலைந்து அமைப்புகள் பிரிந்து வெளியேறும். கீழ் மட்டத்தில் இருந்து தலைமைக்கு மிக அதிகமான அழுத்தம் அளிக்கப்படும். முடிவைநோக்கி அவரை அவரது தரப்பே தள்ளிச்செல்லும். அந்த கடைசிச் சிலமணி நேரங்களிலேயே எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது. [அந்த சிலமணிநேரங்களை சமாளிப்பதில் மறைந்த தொழிற்சங்கவாதி கெ.டி.கெ.தங்கமணி நிபுணர் என சொல்லிக்கேட்டிருக்கிறேன்.]

கிரண் பேடி

இங்கும் அந்த கடைசிக்கட்ட நெருக்கடி உச்சத்தை எட்டியது. சந்தோஷ் ஹெக்டே போன்ற ஆதரவாளர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி வற்புறுத்தினர். ஆதரவான ஊடகங்கள் வற்புறுத்தின. ஆதரவான மக்களின் பொதுமனநிலையும் அதுவே. போராட்டத்தலைமையும் இக்கட்டைச் சந்தித்தது. அண்ணா ஹசாரேவின் உடல்நிலை மோசமடைந்தது. அவரது எடையிழப்பு மிக அபாயகரமான நிலையை எட்டியிருந்தது என்றே சொல்கிறார்கள். வருடக்கணக்காக தினம் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவர் என்பதனால் அவர் தாக்குப்பிடித்தாரென்றாலும் அவர் அதிக நேரம் அங்கே நீடிக்க முடியாதென்று தெரிந்தது. அவருக்கு ஏதாவது ஆயிற்றென்றால் அந்தப்பழி போராட்டத்தலைமை மேல்தான் விழும்

அந்தத்தருணத்தை அரசு கடைசிகட்ட சீட்டாகக் கண்டு விளையாடிப்பார்த்தது. அதற்கான பேர நிபுணர்கள் அதற்கு எப்போதுமிருப்பார்கள். பிரமிக்கத்தக்க மன உறுதியுடன் அதைத் தாண்டிவந்தார் அண்ணா ஹசாரே. அவரது குழுவும் அவருடன் இருந்தது. ஆகவே வேறு வழியில்லாமல் பாராளுமன்றம் இறங்கி வந்தது. இந்த வெற்றி சாத்தியமானது. அண்ணா ஆதரவாளர்களின் கொண்டாட்டம் புரிந்துகொள்ளத்தக்கதே.

ஆனால் இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டியது, இது ஒரு தொடக்கம் மட்டும்தான் என்பதே. மொத்த தேசத்தின் சிவில்சமூகத்தையும் பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரான மனநிலையை நோக்கி கொண்டுசெல்லும் போராட்டத்தின் முதல்படிமட்டும்தான் இது. லோக்பால் போன்ற அமைப்பை இன்னும் வலுவான மக்களியக்கம் தொடர்ந்து நிகழ்வதன் மூலமே நிறைவேற்ற முடியும். அரசியல்வாதிகளைக் கண்காணிக்கும் அமைப்பை அவர்களைக்கொண்டே உருவாக்குவதென்பது எளிய செயல் அல்ல.

அப்படி உருவான பின்னரும்கூட அந்த அமைப்பின் நடைமுறைக்குறைகளைக் களைந்து அதைப் பயனுறச் செயல்படச்செய்வதற்கு தொடர் விவாதமும் தொடர் மேம்பாடும் இன்றியமையாதவை. அதற்கும் தொடர்ச்சியான மக்களியக்கம் தேவை. அது இதைப்போல ஒட்டுமொத்த தேசிய போராட்டம் அல்ல. பிராந்திய அளவில் நிகழவேண்டிய போராட்டம் அது. அதாவது ஊழலுக்கு எதிரான மக்கள் கண்காணிப்புக்கான ஒரு கருவி மட்டும்தான் லோக்பால். அது ஊழலை ஒழிக்கும் மந்திரம் அல்ல. அண்ணா ஹசரே ஊழலை ஒழிக்கும் சூப்பர்மேனும் அல்ல. அந்த கருவியை அடையவும் பயன்படுத்தவும் மக்கள் விழிப்புணர்வு முக்கியம்.

லோக்பால் அமைப்பின் குறைபாடுகள் போதாமைகள் குறித்த எந்த விவாதமும் இனிமேல் வரவேற்கத்தக்கதே.  அண்ணா குழுவினரின் மசோதாவை எந்த நிலையிலும் இனிமேல் விமர்சிக்கலாம். ஆனால் போராட்டத்தை அழிப்பதற்காக அதைப்பற்றி கிண்டிக்கிண்டி பேசியவர்கள் இனிமேல் பேசமாட்டார்கள். உண்மையான ஆர்வம் கொண்ட நிபுணர்கள் பேசலாம்.

இந்தப்போராட்டத்தை நான் இருவகையில் வெற்றிகரமானது என்று சொல்வேன். ஒன்று கண்கூடானது, இந்தியப்பாராளுமன்றத்தை லோக்பாலுக்காக வெளிப்படையாக ஒத்துக்கொள்ளச்செய்தது. இரண்டு மறைமுகமானது, இந்த தேசத்தை எந்த சாதி மத இன அடையாளங்களும் இல்லாமல், சுயநலக் கோரிக்கைகள் இல்லாமல் ஒரு தேசிய இலட்சியத்துக்காக ஒருங்கிணையச்செய்தது.  பெரும்பணத்தை குவித்து வைக்காத, எந்த அதிகாரப்பின்னணியும் இல்லாத ஒரு சிறு செயல்பாட்டாளர் குழு  ஒரு மக்களியக்கத்தை நிகழ்த்திக்காட்டியது. அதன் மூலம் இச்சமூகத்தில் மீண்டும் நம்பிக்கையை உருவாக்கியது.

ஆரம்பம் முதலே இந்தப்போராட்டம் இந்தியசமூகத்தில் ஒரு திருப்புமுனை என்ற எண்ணம் எனக்கிருந்தது. வேறெந்த விஷயத்தை விடவும் இதில் நான் ஈடுபட்டமைக்குக் காரணம் இதுதான்.  பெண்கள், படித்த இளைஞர்கள் என  அரசியல்மயப்படுத்தப்படாத ஒரு பெரும் மக்கள்திரள் இந்தியாவில் உள்ளது. அவர்களை இந்தப்போராட்டம் அரசியல் மயப்படுத்தியிருக்கிறது. அந்த அரசியலின் மையமாக  சுயநலத்துக்குப் பதிலாக ஊழல் எதிர்ப்பு என்ற இலட்சியம் வைக்கப்பட்டுள்ளது.

உடனே இந்தியாவில் ஊழல் ஒழிந்துவிடும் என நான் நினைக்கவில்லை.  ஆனால் என்றாவது ஒழியும் என்றால் அது இங்கே இப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதே சமகால வரலாறு. இந்த விழிப்புணர்ச்சி தொடர்ந்து வளர்ந்து, தேர்தல்களில் எதிரொலித்து , அதற்கான அரசியல்வாதிகள் உருவாகி வந்து அதிகாரமாற்றம் நிகழவேண்டும். அது நினைக்கையில் பெரியதாக, சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால் அந்த மாற்றம் நிகழ்ந்த எல்லா நாடுகளிலும் இப்படித்தான் பல படிகளாக அது நிகழ்ந்துள்ளது.

நம் அவநம்பிக்கையுடன் அண்ணா ஒரு பெரும் போர் புரிந்திருக்கிறார். இந்த பன்னிரு நாட்களில் அவர் மேல் பொழியப்பட்ட அவதூறுகள், வசைகள், ஏளனங்கள் எவ்வளவு என மனசாட்சியுள்ளவர்கள் திரும்பிப்பார்க்கட்டும். இந்தியாவில் எந்தக் கேடுகெட்ட ஊழல் அரசியல்வாதியும் இந்த அளவுக்கு எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை!  இந்த அளவுக்கு வசைபாடப்பட அண்ணா என்னதான் செய்தார்? என்ன சுயநலத்துக்காக அவர் செயல்பட்டார்? எதை கொள்ளையடித்துச்சென்றார்? நாம் எங்கே எப்படி அழுகியிருக்கிறோம் என்பதை காட்டும் சமகால நிகழ்வு இது.

சந்தோஷ் ஹெக்டே

இந்தப்போராட்டத்தில் ஒவ்வொரு அரசியல் விமர்சகரும் எடுத்த நிலைப்பாடு கவனிக்கத்தக்கது.  சிலருக்கு இதன் வரலாற்றுத்தருணத்தை பார்க்கும் கண் அமையவில்லை. சிலர் தங்களைப் பெரிய ஆளுமைகளாகக் கற்பனைசெய்துகொண்டு மேட்டிமைநோக்குடன் பேசினர். சிலர் பொறாமையால் பேசினர். சிலர் தெளிவான அரசியல் உள்நோக்குடன் பேசினர். இந்த மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனைத்  தருணத்தைக் கண்டுணர்ந்தவர்கள் மிகச்சில அறிவுஜீவிகளே.

இந்த அகிம்சைப்போரில் நம் ஆங்கில பத்தி எழுத்தாளர்களின் ஆழமின்மையும் கீழ்த்தர அகங்காரமும் வெளிப்படையாகவே தெரியவந்தது என்பது முக்கியமான விஷயம். நெடுங்காலம் மக்களிடையே நேரடியாக களப்பணியாற்றி சாதனைசெய்தவர்களான அண்ணா ஹசாரேவின் குழுவைச்சேர்ந்த அர்விந்த் கேஜ்ரிவால், மேதா பட்கர், கிரண் பேடி போன்றவர்களை வெறும் பத்தி எழுத்தாளர்கள் கிண்டலும் கேலியும் செய்யவும் , ஆலோசனைகள் சொல்லவும் துணிந்ததை ஒரு சமகால இந்திய அவலம் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தப் போராட்டத்தை ஆரம்பத்தில் அவநம்பிக்கையுடன் எதிர்கொண்டாலும் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக்கட்சி போன்ற இடதுசாரிகளும் ஆர்.எஸ்.எஸ் போன்ற வலதுசாரிகளும் மெல்ல இதன் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டு ஏதோ ஒருவகையில் இப்போராட்டத்தை இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நோக்கில் இந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வலுவான லோக்பாலுக்காக, அதன் தொடர் அமலாக்கத்துக்காக ,அவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும்.

பிரசாந்த் பூஷன்

வரலாற்றுத்தருணங்கள் நிகழும்போது அதற்கேற்ப உயர்வதற்கு ஒரு மனம் வேண்டும். தமிழகத்தில் இருந்து அண்ணாவுக்கு நேரில்சென்று ஆதரவளித்த ஒரே தலைவரான தொல்.திருமாவளவன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

திருமாவளவன்

இது ஒரு தொடக்கம். பெரிய விஷயங்களுக்கான தொடக்கம். நம் அவநம்பிக்கைகளைத் தாண்டி இந்தப் பயணம் முன்னகரவேண்டும். அதற்கு இந்த வெற்றி உதவட்டும்.

முந்தைய கட்டுரைதூக்கு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்