எஞ்சும் நிலங்கள்

கிரஹாம் ஹான்காக் என்னும் ஆழ்கடலாய்வாளர் பொது ஊடகங்கள் வழியாகப் புகழ்பெற்றவர், அவர் ஒரு பயில்முறை ஆய்வாளர் என்பதே காரணம். பரபரப்பு ஆய்வாளர் என்றும் சொல்லலாம். மெய்யான ஆய்வாளர்கள் அவரை ஒரு பரபரப்பு இதழாளர் என்ற அளவிலேயே மதிப்பிடுகிறார்கள். அவருடையது மிதமிஞ்சிய முன்யூகங்கள் மற்றும் அவற்றுக்கு தேவையான அளவுக்கு மட்டுமே ஆய்வு. ஆனால் அந்த ஆய்வுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டிருக்கிறார், அதுவும் சொந்தப் பணம்.

கிரஹாம் ஹான்காக்

ஹான்காக் எப்படிப் பிரபலமாகிறார்? அவர் தன்னுடைய ஆய்வுக்கான இலக்குகளாக எடுத்துக் கொள்பவை பெரும்பாலும் ஏற்கனவே பல லட்சம் பேரால் நம்பப்படும் தொன்மங்கள் அல்லது நவீனத்தொன்மங்கள். ஒரு தொன்மம் ஏற்பு பெறுகிறது என்றால் அதற்கு கூட்டுநனவிலியில் ஆழ்ந்த காரணங்கள் இருக்கும். மதம்சார்ந்த காரணங்கள், இனமேட்டிமை சார்ந்த காரணங்கள். அவர் அவற்றை ஆராய்ந்து பெரும்பாலும் அவற்றுக்கு முதல்பார்வைக்குக் கிளர்ச்சி ஊட்டும் ஆதாரங்களை அளிப்பார். உடனடியாக அவை பரபரப்பை உருவாக்குகின்றன. அவற்றுக்கு தீவிர ஆதரவாளர்கள் உருவாகிறார்கள். அவர் தொடர்ச்சியாக மேற்கோள் காட்டப்படுவார். எந்த ஆய்வாளர் எப்படி மறுத்தாலும் அவரை பல லட்சம்பேர் கைவிட மாட்டார்கள்.

இன்னொன்றையும் சொல்லவேண்டும். ஹான்காக் சொல்வனவற்றை முழுமையாக தள்ளிவிடவும் முடியாது. அவை மேற்கொண்டு ஆய்வுசெய்வதற்கான மெல்லிய சான்றுகளையும் கொண்டிருக்கும். ஹான்காக் மிகையாக முன்னகர்ந்து வெறும் கற்பனையிலேயே முழுச்சித்திரத்தையும் உருவாக்கிவிடுவார் என்பதே சிக்கல்.  அறிவியலாய்விலும் பண்பாட்டாய்விலும் அத்தகைய மிகையான முடிவுகள் அறியாமையைவிட ஆபத்தானவை, ஏனென்றால் அவை சரியான பாதைக்கு பெருந்தடையாக ஆகிவிடும். பண்பாட்டாய்வுகளில் உள்ள பிழை அரசியலில் மோசமான விளைவுகளையும் உருவாக்கும்.

உதாரணமாக, ஹான்காக் முன்வைத்த இரண்டு ஆய்வுகளைச் சொல்லலாம். இரண்டுமே கடலடி ஆய்வுகள். ஒன்று கிருஷ்ணன் வாழ்ந்த துவாரகை. இன்னொன்று, கரிகால்சோழனின் பூம்புகார். கிரகாம் ஹான்காக் இன்றைய துவாரகைக்கு அருகே, கடலுக்கு அடியில், ஆழத்து சேற்றுத்தட்டில், மனிதனால் செய்யப்பட்டவை என்ற தோற்றம் கொண்ட கட்டுமானங்கள் இருப்பதாக சொல்கிறார். அங்கே கடலடி ஆய்வு செய்து சில புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிட்டிருக்கிறார்.

அதேபோல, இன்றைய சென்னைக்கும் மயிலாடுதுறைக்கும் நடுவே, நேர் எதிரில் ஆழ்கடலுக்குள் லாடவடிவமான ஒரு சதுக்கத்தின் இடிபாடுகள் பவளப்பாறைகளால் மூடப்பட்டு தென்படுவதாக ஆழ்கடலாய்வு செய்து சில புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டிருக்கிறார். இவை கடல்கொண்ட தென்னாட்டின் ஏதோ நகரைச் சேர்ந்தவை என்கிறார். அது தொல்நகர் பூம்புகாரா அல்லது வேறேதும் நகரமா என சிலர் விவாதிக்கின்றனர். ஆனால் முறையான ஆழ்கடலாய்வாளர்கள் இந்த ஆதாரங்களை இதுவரை பொருட்படுத்தியதில்லை.

இவை அரசியல்ரீதியாக உடனடியாகப் பயன்படுத்தப்படுகின்றன. அண்மையில் நரேந்திர மோதி தேர்தலின்போது நீரில்மூழ்கி கடலடியில் பழைய துவாரகை என ஓர் இடத்தில் பூஜைசெய்து அதை காணொளியாக வெளியிட்டார். பூம்புகாரும் அப்படி அரசியலாக்கப்படலாம்.

இன்று அந்த ஆய்வுகளுக்கு ஆய்வுமதிப்பு இல்லையென்றாலும் கற்பனையை வெகுவாகத் தூண்டக்கூடியவை. நான் கொற்றவை எழுதிய காலகட்டத்தில் இன்னொன்றும் என் கவனத்திற்கு வந்தது. ஒரிசா பாலசுப்ரமணியம் என்னும் ஆய்வாளர், அவரும் கிரஹாம் ஹான்காக் போன்ற மனநிலை கொண்டவர்தான், என்னை தேடிவந்து சில புகைப்படங்களையும் காணொளிகளையும் காட்டினார். அவை குமரிமாவத்தில், முட்டம் பகுதியில், ஆழ்கடலுக்குள் எடுக்கப்பட்டவை. அவை சதுரம், வட்டம் போன்ற வடிவம்கொண்ட கடலடிப்பாறைகள். இயற்கையாக அப்படி பாறைகள் வரமுடியாது என்று அவர் சொன்னார். முட்டம் பகுதியில் கடலுக்குள் இடுப்பளவு ஆழமே உள்ள பல இடங்கள் உள்ளன என நான் முன்னரே அறிந்துள்ளேன்.

1988ல் என் நண்பருடன் சென்று அப்படி ஒரு பகுதியை கண்டதும் உண்டு. ஆர்வமூட்டும் இன்னொரு தகவலும் அன்று என் கவனத்திற்கு வந்தது. வெள்ளுவன் என்ற பேரில் தொன்மையான வானியல்செய்திகளை ஆய்வுசெய்யும் நண்பர் ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என் நண்பரும் குமரிக்கண்ட கொள்கையின் மிகப்பெரிய ஆதரவாளருமானகுமரிமைந்தன்அவர்களின் நண்பர். வெள்ளுவனின் கொள்கைப்படி மதுரை இன்றிருக்கும் குமரிமுனைக்கு கீழே இந்தியப்பெருங்கடலில் உள்ள ஓர் ஆழமற்ற நிலத்தில் இருப்பதாகக் கொண்டால் தொன்மையான பஞ்சாங்கத்தின் வானியல், நிலவியல் கணிப்புகள் எல்லாமே சரியாக அமைகின்றன. மதுரையை இன்றிருக்கும் மதுரையாகக் கொண்டால் எல்லா கணிப்புகளும் பிழையாகின்றன.

நான் அன்று பல ஆண்டுகள் கிரஹாம் ஹான்காக் மற்றும் இந்நண்பர்கள் வாழ்ந்த அந்த உலகில் என் கற்பனையால் வாழ்ந்துகொண்டிருந்தேன். கடல்கொண்ட குமரிநிலம், தென்மதுரை, கபாடபுரம்… கொற்றவை நாவல் அந்தக் கனவின் விளைவு. வெண்முரசு எழுதத் தொடங்கியபோது மீண்டும் அந்தக் கனவு மேலெழுந்தது. துவாரகை என்றால் தமிழில் கபாடபுரம்தான். இயல்பாகவே வெண்முரசின் மூன்றாவது நாவல் கடல்கொண்ட தமிழ்நிலமாகிய தென்மதுரையில் தொடங்கியது. தொன்மையான பாரதநிலம் வழியாக இளநாகன் கிளம்பிச்சென்று அஸ்தினபுரியை அடைகிறான்.

ஆனால் துவாரகைகள், கபாடபுரங்கள் நம் மொழியில் பல உள்ளன. மதுரையின் இன்னொரு பெயர் அலைவாய், கபாடபுரத்தின் இன்னொரு வடிவம். திருச்செந்தூரின் மறுபெயரும் அலைவாய்தான். துவாரசமுத்திரம் என்பது மைசூர் அருகே இருந்த பழைய நகரம். மதுரை அங்கும் உள்ளது, இங்கும் உள்ளது. அஸ்தினபுரி பல பெயர்களாக வடக்கே பல இடங்களில் உள்ளது. ஹாத்திப்பூர், ஹாத்திபுரா… இளநாகன் அவற்றில் எங்கே சென்று சேர்வான்? மொழியினூடாக அத்தனை நகர்களும் இன்றும் வாழ்கின்றன. எனில் மகாபாரதத்துக்கே அவை மொழி வழியாக வந்து சேர்ந்திருக்கலாம். மொழியின் வழியாகச் செல்லும் இளநாகன் சென்றடைவது மொழி மட்டுமே அறிந்த ஓர் ஆழமாக ஏன் இருக்கலாகாது?

மகாபாரதத்தில் வெவ்வேறு வடிவில் இந்தியப்பெருநிலம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோரின் திசைவெற்றிப் பயணங்களாக இந்தியநிலம் சொல்லப்படுகிறது. தெற்கே வந்தவன் சகாதேவன். ஆனால் வெண்முரசு மகாபாரதப் பெரும்போருக்குப்பின் நீட்சியடையாது என்று எனக்கு தோன்றியது. ஆகவே அந்த நிலங்களை விரிவாகச் சொல்லும் தருணமாக வண்ணக்கடலை எடுத்துக்கொண்டேன்.

வண்ணக்கடல் நிறைவடைந்தபோது நான் ஆழ்ந்த நிறைவொன்றை அடைந்தேன். இளநாகன் செய்தது என்னுடைய பயணத்தைத்தான். மகாபாரதத்தின் கதை நெடுக்காக முன்செல்ல இளநாகனின் பயணம் குறுக்காக இன்னொரு திசையில் நிகழ்ந்திருந்தது. அவ்வாறு ஒன்று என்னை மீறி நிகழ்கையில்தான் நான் என்னைக் கண்டடைகிறேன். அது நிகழ்ந்து முடிந்தபின் வரும் ஆழ்ந்த அமைதியே நான் ஒவ்வொரு நாவலிலும் எதிர்பார்த்தது.

விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887) 

 

மழைப்பாடகர்கள்

மானஸாவின் காலடியிலிருந்து…

முந்தைய கட்டுரைதமிழ்விக்கி-தூரன் விழா: சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன்
அடுத்த கட்டுரைVipassana and Renunciation