ஞானக்கூத்தனின் மோசமான கவிதைகளிலொன்றில் “ தவளையின் கூச்சல் கேட்டுத்
தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன்” என்று ஒரு வரி. அது என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தது. அப்படி கம்பன் ஏன் சொன்னான்?
அதைப் பற்றி கம்பராமாயணத்தில் ஊறிய பேராசிரியர் ஜேசுதாசனிடம் கேட்டேன். அவர் சொன்னார். “அப்டி ஒரு உவமை உண்டு. ஆனா அதை வேதபாடசாலைன்னு சொல்றதுதான் வழக்கம். அங்கதான் அப்டி சேந்து பாடுவாங்க…வையாபுரிப்பிள்ளை அப்டித்தான் அர்த்தம் எடுக்குதார்” என்றார்
கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
பல்விதச் சிறார் எனப் பகர்வ பல்அரி,
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம்
என்ற பாடலை பேராசிரியர் உடனே எடுத்துப் பாடிக்காட்டினார்.
(கல்விசிறந்த ஆசிரியர்கள் ஓங்கும் ஓசையுடன் பயிற்றுவிக்க பலவகையான சிறுவர்கள் சேர்ந்து ஓதுவதுபோல ஏராளமான தவளைகள் தங்கள் சொல் செல்லுபடியாகும் இடத்தில் அல்லாது வேறெங்கும் ஒரு சொல்லும் உரைக்காமல் இருக்கும் அறிஞர்கள்போல அடக்கம் கொண்ட நாவுகள் கொண்டவை ஆயின.)
ஆனால் அந்த வரி என்னைக் கிளர்ச்சிகொள்ளச் செய்தது. பெரும்பாலான கம்பராமாயண அறிஞர்களே அதை கம்பனின் நகைச்சுவைக்கு உதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதில் தவளையின் சிறப்பைத்தான் சொல்லியிருக்கிறான் கவிஞன். எங்கு மதிப்பிருக்குமோ அங்கு மட்டுமே பேசுபவர்கள் அறிஞர்கள். தவளைகளும் அந்த அறிஞர்களுக்கு நிகரானவை என்கிறான்.
தவளைகளைப் பற்றிய அந்த மகத்தான உருவகம் வேறெங்கும் தமிழிலுண்டா என்று தெரியவில்லை. அது வேதகாலத்து உருவகம். தவளை நாவெடுத்து உரைத்தால் மழை பெய்தேயாகவேண்டும். இப்புவியில் வான்மழை தவளையின் குரலுக்கும் வேதத்தின் ஓசைக்கும் மட்டுமே கட்டுப்பட்டது என்பது வேதகால நம்பிக்கை. ஆகவே தவளை ஓதுவதும் ஒருவகை வேதம்தான்.
ரிக் வேதத்தில் மாண்டவர்களை எரியூட்டிய அந்தச் சாம்பலைக் கரைத்தபிறகு அந்த இடத்தில் ஒரு தவளையை வைக்கவேண்டும் என்ற சடங்குக்குறிப்பு உள்ளது. அதர்வ வேதத்தில் கால்வாய் வெட்டும் சடங்கில் தவளையை விடவேண்டும் என்னும் செய்தி உள்ளது. தவளைகள் வந்துகொண்டே இருக்கின்றன வேதத்தில்
அதன்பின் கடவல்லூர் என்னும் ஊரில் நிகழ்ந்த வேள்விச்சடங்கில் வைதிகர்கள் முருக்கமரத்தால் செய்யப்பட்ட தவளைகளுடன் வந்து அமர்ந்து வேள்விசெய்வதைக் கண்டேன். அந்த வேள்வியின் இறுதிநாள் அது. அன்று மழைவரும் என்றனர். மழை பெய்தது. தவளையின் குரலாக வேதமே ஒலிப்பதை, அதற்குரிய சந்தஸ் அமைந்திருப்பதை அன்று கண்டேன்.
அந்த உருவகத்தின் அழகு அன்றிலிருந்து என்னை ஆட்கொண்டது. அதை மட்டுமே ஒரு நாவலாக எழுதவேண்டும் என்னும் கனவு இருந்தது – ஒரு முறை அதை எழுதவும் முயன்றிருக்கிறேன். வேதகாலத்தில் நிகழும் கதை. தவளைகள் மனிதர்களின் செயல்கள்மேல் சீற்றம்கொண்டு சாபமிட்டு சிந்துவில் குதித்து மறைந்துவிடுகின்றன. மழைபெய்யாமலாகிறது. புல்வெளிகள் வரள்கின்றன, ஆநிரைகள் அழிகின்றன, வேதமே நின்றுவிடுகிறது. வேதத்தின் தலைவன் தவளையே என உணர்ந்து பிழையீடு செய்கிறார்கள். முதல்தவளை பிறந்து மெல்லிய சிறுகுரலான் வான் நோக்கி ஆணையிடுகிறது. மழை வீழ்கிறது. இப்போதுகூட அந்நாவலை எழுதும் எண்ணம் உள்ளது. எழுதக்கூடும்.
முதற்கனல் என்னை அஞ்சவைத்தது என்று சொல்லலாம். அந்நாவலை எழுதிய நாற்பது நாட்களுக்குள் நான்குமுறை பாம்பைக் காணநேர்ந்தது. அது இங்கே அரிதானதொன்றும் அல்ல, என்றாலும் வீட்டுக்குள் குப்பைத்தொட்டிக்குள் அது சுருண்டு கிடந்தது அதிர்ச்சி அளித்தது. எனக்கு அத்தகைய ’மூடநம்பிக்கைகள்’ இல்லை என்றாலும் என் சொல்லுக்கும் என் ஆழுள்ளத்துக்குமான தொடர்பை நான் அஞ்சுவேன். ஆகவே அடுத்தநாவல் குளிர்மழையில் முடிவது என முடிவுசெய்தேன். மழைப்பாடல் என பெயருமிட்டேன். மகாபாரதத்தின் மையக்கதாபாத்திரங்கள் தளிர்விட்டு எழும் நாற்றங்கால்.
மழையிலேயே கதை தொடங்கியது. மழையினூடாகச் சென்று பெய்து நிலம்மூடும் பெருமழைக்கான காத்திருப்பாக நிறைவுற்றது. மழைப்பாடலை எழுதும்போதே தவளையில் தொடங்கவேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் அதன் ஆயிரம் பக்கங்களில் தவளை வரவே இல்லை. நானே கதைப்போக்கில் மறந்தும் விட்டிருந்தேன். இயல்பாக கதை வந்து அங்கே முடிந்தபோது ’ஆம்’ என்னும் நிறைவை அடைந்தேன்.
மழைப்பாடலின் அட்டைக்காக ஷண்முகவேல் வரைந்த தவளையின் அழகிய படத்தை நீண்டநாட்கள் என் மேஜைமேல் வைத்திருந்தேன். நான் தவளையின் நிலத்தில் பிறந்தவன். என் இளமையில் இரவு என்பதே தவளைமுழக்கத்தாலானதுதான். இன்று நினைவுறுகிறேன், அன்றெல்லாம் எங்குவேண்டுமென்றாலும் படுத்து உறங்குவோம். கொசுக்கடி என்பதை பெரிதாக உணர்ந்ததில்லை. காரணம் தவளை. சில குளங்களில் தூரத்தில் பார்த்தால் நீர் கருமையாக இருக்கும். அருகே சென்றால் ஒரே கணத்தில் தெளிந்துவிடும். அத்தனை லட்சம், கோடி தலைப்பிரட்டைகள். தவளைகளே எங்கள் நிலத்தின் காவல்தெய்வங்கள்.
இன்று என் பிரியத்திற்குரிய நிலம் தவளைகளாலானது. மாண்டூக்ய வனம் என நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. தவளைகளின் பேரோசையைக் கேட்டபடி தன்னந்தனியாக அங்கே அமர்ந்திருப்பேன். ஆதிவேதம். மானுடவேதங்களெல்லாம் அதன் பிரதிவடிவங்கள்தான்.