மானஸாவின் காலடியிலிருந்து…

முதற்கனல் நாவலை எழுதியபோது இருந்த அனுபவமென்ன என்று ஒரு மலையாள இதழாளர் கேட்டார். ’அதை எப்படி நினைவுகூர முடியும்? அதன் நினைவுப்பதிவு என்பது ஒரு சிறு துளியாகவே இருக்க முடியும், அது எவ்வகையிலும் உண்மை அல்ல’ என்று நான் பதில் சொன்னேன்.

’ஆம், ஆனால் படைப்பிலக்கியமும் அப்படித்தானே? நீங்கள் அடைந்தவற்றின் ஒரு சிறு துளிதான் முதற்கனல். அந்த மொழிவடிவில் இருந்து அந்த அனுபவ முழுமைக்கு வாசகன் தன் கற்பனை வழியாகச் செல்லமுடிகிறதே” என்று அவர் சொன்னார். அது உண்மைதான் என்று தோன்றியது.

முதற்கனல் எழுதும்போது உள்ளக்கிளர்ச்சி ஏதும் தோன்றவில்லை. ஏனென்றால் மகாபாரதத்தை முழுமையாக எழுதுவது என்னும் கனவை நான் எனக்குள் மீட்டிக்கொள்ள ஆரம்பித்து அப்போது இருபத்தைந்தாண்டுகள் ஆகியிருந்தன. என் நூலகம் முழுக்க அதற்கான நூல்கள். பி.கே.பாலகிருஷ்ணன் முதல் அதன்பொருட்டு நான் சந்தித்த அறிஞர்களின் பட்டியல் பெரிது.

இருபத்தைந்து ஆண்டுகளில் செய்த பயணங்களின் வரிசை அதைவிட விரிவானது. ஆனால் தொடர்ச்சியாக ஒத்திப்போட்டுக் கொண்டே இருந்தேன். ’பின்னர்’ என ஓர் எண்ணம், ’தேவையா’ என பிறிதொரு எண்ணம். பகிர்ந்துகொண்டால் தேவையில்லை என்னும் முடிவுக்கு வந்துவிடுவேன் என்னும் அச்சத்தால் எவரிடமும் சொன்னதில்லை. ஆனால் பேச்சில் அந்த எண்ணம் வெளிப்படாத நாளும் இல்லை.

பலமுறை நாவலை தொடங்குவதை மனதுக்குள் நிகழ்த்திப் பார்த்துக் கொண்டேன். நாலைந்து முறை தொடங்கவும் செய்தேன். 1999 ல் காகிதத்தில் எழுதியது முதல் பல வடிவங்கள் இப்போதும் கையிலுள்ளன. அவை வளரவில்லை. சலிப்பும் சீற்றமுமாக கிழித்து எறிந்த பக்கங்களும் மிகுதி. ஆகவே மெய்யாகவே தொடங்கியபோது அது தொடக்கம்தானா, பாதியில் நின்றுவிடுமா என்ற ஐயமும் இருந்தது. ஆறு அத்தியாயம் ஆன பின்னரே நான் மகாபாரதத்தை எழுதவிருப்பதை அறிவித்தேன்.

அதன்பின்னரும் பதற்றமிருந்தது. பாதியில் நின்றுவிடும் என்ற கற்பனை அலைக்கழித்தது. அத்துடன் அன்று வந்த எதிர்வினைகள் எல்லாமே எதிர்மறையானவை. வெட்டிவேலை என்ற கருத்துக்களே மிகுதி. வசைகள், ஏளனங்கள், சில்லறைச் சீண்டல்கள் ஏராளம். அவற்றை நான் வழக்கபோல கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் ’உடனே நிறுத்திவிடுக’ என்று எனக்கு நேரடியாக எழுதியவர்களில் என் மேல் நல்லெண்ணம் கொண்டவர்களும் பலர் உண்டு.

நித்ய சைதன்ய யதி அவருடைய தன்வரலாற்றில் சொல்லும் ஒரு நிகழ்வே என்னை அப்போது ஆற்றுப்படுத்தியது. பெரிய பணிகளுக்கு பெரிய அளவிலான எதிர்விசைகள் உருவாகும், காரின் வேகம் கூடுந்தோறும் காற்றின் எதிர்விசை பெருகுவதுபோல. அது இயற்கையின் நெறி. எதிரென திரண்டு வருபவை தனிநபர்கள் அல்ல, இயற்கையின் அந்த நெறி தனக்கெனக் கண்டடைந்த கருவிகள். என்னால் அந்த எதிர்விசையை வெல்லமுடியுமென்றால் மட்டுமே நான் எண்ணியதை இயற்ற முடியும்.

இன்று நோக்கும்போது இத்தனை பெரிய ஒரு படைப்பு நிகழ்வதற்குச் முதன்மையான காரணம் சரியான தொடக்கத்தை நான் அடைந்ததே என்று படுகிறது. அந்த தொடக்கம் அமையாததனால்தான் அதுவரை அந்நாவல்தொடர் நிகழவில்லை. அலகிலாப் பெருங்கடலைக்கூட நம் இல்லத்தருகே ஓடும் சிற்றோடைவழியாகச் சென்றடைவதே இயல்பாகும். இந்நாவல் மகாபாரதத்தின் எந்த கதைமாந்தர் வழியாகவும் நிகழவில்லை. மானஸாதேவியில் இருந்து தொடங்கியது.

மானஸா என் இளமையிலேயே கேட்டுவளர்ந்த கதைகளின் அரசி. என் குலதெய்வங்களில் எப்போதும் நாகங்கள் உண்டு. நாகவழிபாடு கேரளத்திற்கு உரிய தனிச்சிறப்புகளில் ஒன்று, குறிப்பாக நாயர் குடும்பங்களில் சொந்தமாகவே நாகங்களுக்குரிய காட்டுக்கோயில்கள் இருக்கும். என் அம்மா, அப்பா இருவரின் குடும்பங்களிலும் நாகங்களுக்குரிய குறுங்காடுகளும் கோயில்களும் இருந்தன. இ.எம்.எஸ். ஒரு கட்டுரையில் நாகர் என்பதே நாயர் என திரிந்தது என்று கூறுகிறார்.

நாகர்குலத்து அன்னையாகவே மானஸாதேவி இங்கே வழிபடப்படுகிறாள். கோயில்களில் இடைக்குமேல் பெண்ணும், கீழே நாகச்சுருள் உடலுமாக அவளைக் காணலாம். நாகயட்சி, நாகதேவி என்னும் பெயர்களுமுண்டு. என் இளமையில் கேட்ட ஏராளமான கதைகளினூடாக அணுக்கமாக நான் அவளை அறிவேன். மானஸம் என்றால் உள்ளம். உள்ளமெனும் நாகம்!

இயல்பாக அந்தக் கதை மானசாதேவியில், மாநாகங்களில் தொடங்கியது. அது மகாபாரதத்தின் சுருள்பாதைகளின் புதிர்களை அவிழ்க்கும் அழகிய வழிகாட்டியாக ஆகியது. இந்துத்தொன்மவியல் மிகப்பிரம்மாண்டமானது. அது சம்ஸ்கிருத -பிராமணப் பற்றாளர்களும் அவர்களின் எதிரிகளும் ஒரேகுரலில் சொல்வதுபோல சம்ஸ்கிருத-பிராமண மரபில் இருந்து மட்டும் உருவானதல்ல என்பதை ஆய்வாளர்கள் மிக விரிவாகவே எழுதியுள்ளனr. நாகர், நிஷாதர், அசுரர் என்றெல்லாம் புராணமரபால் குறிப்பிடப்படும் பிற மரபுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கதைகளும் உருவகங்களும் புராணமரபால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அவை தத்துவார்த்தமாக விரிவாக்கப்பட்டும், உருமாற்றமடைந்தும் கிடைக்கின்றன.

மகாபாரதத்தின் பிரபஞ்சத்தோற்றவியல் (Genesis) நாகர்களிடமிருந்து பெறப்பட்டது. கத்ரு-வினதை என்னும் இருநாகங்களின் கதை அது. அக்கதைகள் பிற்பாடு புராணங்களில் பலவாறாக உருமாற்றம் அடைந்தன. கத்ருவும் வினதையும் இட்ட முட்டைகளில் இருந்தே உயிர்க்குலங்கள் தோன்றின என்னும் கற்பனையே அது நாகர்களின் தொன்மம் என்பதற்கான சான்று. மானஸா வழியாக இயல்பாக அந்த தொன்மத்தைச் சென்றடைய முடிந்தது. அது என்னுள் இருந்த எனக்கு அப்பாற்பட்ட கனவுகளின் களஞ்சியத்தின் கதவைத் திறந்தது. நான் சொல்ல விரும்பியது மகாபாரதக் கதையை அல்ல. மகாபாரதம் வழியாக வெளிப்படும் நம் அகப்பரிணாமத்தை. நம் பண்பாட்டிலும் வரலாற்றிலும் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வு அந்த வளர்சிதை மாற்றம்.

மகாபாரதத்தின் திகைப்பூட்டும் முரண்பாடு அந்தப்பாதையினூடாகவே தெரியவந்தது. மகாபாரதத்தின் நீண்ட கதை கத்ரு- வினதை என்னும் நாக அன்னையரில் இருந்து தொடங்குகிறது, ஜனமேஜயன் நாகங்களை முற்றாக அழிக்க முயலும் வேள்வியில் முடிகிறது. மகாபாரதம் என்னும் இதிகாசத்தின் அமைப்போ நாகங்களின் அழிவின் சித்தரிப்பில் தொடங்கி, அவற்றின் அழிவின்மையை காட்டி, அங்கிருந்து முதலன்னையரான கத்ருவுக்கும் வினதைக்கும் செல்கிறது. ஆழ்படிமங்களின் நகர்வு வழியாக யோசித்தால் மகாபாரதத்தின்  பரிணாமம் என்பதே இதுதான். நாகங்கள் முதல் நாகங்கள் வரை.

அந்த தரிசனம் நாவலை எழுத எழுதத்தான் என்னால் அடையாளம் காணப்பட்டது. அக்கனவை என்னுள் பெருக்கிக் கொள்ள, என் வாசகர்கள் உடன் வர ஷண்முகவேலின் ஓவியங்கள் உதவின. அந்தக்கோணத்தில் பார்க்கையில் மகாபாரதத்தின் முதன்மையான திருப்புமுனைகளில் எல்லாம் நாகங்கள் இருப்பதைக் காணமுடிந்தது. இந்தியாவெங்கும் கர்ணன் நாகபாசனாகக் கோயில் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஓர் ஆழத்து இணைப்பாக இந்நாவல் முழுக்க மகாபாரதத்தை மானஸா அளித்த தரிசனம் இணைப்பதைக் காணலாம்.

இன்று எண்ணும்போது இந்த தொடக்கம் மானஸாவின் அருள் என்றே தோன்றுகிறது. அவளுடைய சொல் வந்து தீண்டி இந்தப்பெரும்படைப்பை எழுப்பியுள்ளது. அது நிகழ்ந்தபோது அதன் ஆற்றலென்ன என்று புரியவில்லை. மிக இயல்பாக நிகழ்ந்தது. இன்றைய பேருருவம் இப்படைப்புக்கு அமைந்தபின் திரும்பிப் பார்க்கையில் அவள் கையிலுள்ள அமுதத்தின் இனிமையும் அழிவின்மையும் தெரியவருகிறது

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887) 
முந்தைய கட்டுரைதமிழ்விக்கி- தூரன் விழா விருந்தினர்: க.த. காந்திராஜன்
அடுத்த கட்டுரைவேண்டுதலா தியானமா எது தேவை?