ஜூலை மாத வழி இதழ் வெளியாகியுள்ளது. இந்த இதழில் “அருவி – வள்ளி வாண தீர்த்தம் ஆடின கதை” என்ற நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரை வெளியாகி உள்ளது. பாரதியாரின் மனைவி செல்லம்மாள் எழுதிய இந்தப் பயணக்கட்டுரை, 1920 இல் (பாரதி காலமான இரண்டு மாதத்தில்) சுதேசமித்திரனின் “கத மாலிகா” என்ற நூலில் வெளியானது. அதன்பின்னர் வேறு எங்கும் வெளியாகவில்லை. செல்லாமள் நூல்கள் எழுதியுள்ளாரா என நண்பர்கள் ஆச்சரியமாக வினவினார், இந்த பயண கட்டுரை அல்லது வேறு ஒரு பயண கட்டுரையும் அவர் எழுதி உள்ளார். வரும் மாதங்களில் அந்த கட்டுரையும் வழி இதழில் வெளியாகும். இந்த கட்டுரையை தட்டச்சு செய்து, இணையத்தில் பிரசுரிக்க சென்னை கவிதாவும், நிக்கிதாவும் உதவினர்.
நூறு வருடங்களுக்கு முன்னர் திருநெல்வேலி ஜில்லாவில் தான் தங்கியிருந்த ஊரிலிருந்து, பாபநாசம் சொரிமுத்தைய்யனார் கோவில் வரை பயணித்த செல்லம்மாளின் சாகச பயணம் இந்த கட்டுரையில் பதிவாகியுள்ளது. செல்லம்மாளின் இயல்பான, யதார்த்தமான மொழிநடை அவரின் காலத்தை கச்சிதமாய் வாசகரின் முன் நிறுத்துகிறது. இந்த நூறு ஆண்டுகளில் பயண முறைகளும், பயண எழுத்தும் எவ்வாறெல்லாம் மாற்றமடைந்துள்ளது என்பதை செல்லம்மாளின் கட்டுரையிலிருந்து அறியமுடிகிறது. செல்லம்மாவின் இந்த பயணக் கதையை வாசித்தது, வீட்டு முற்றத்தில் உக்காந்து பாக்கு இடித்துக்கொண்டே என் பாட்டி சொல்லும் பழைய வாழ்வின் கதைகளை கேட்டதை போல் உள்ளது.
இந்த இதழில், சுபஸ்ரீ எழுதி வரும் “வாழிய நிலனே” என்ற வெண்முரசு நில சித்தரிப்பு சார்ந்த தொடர் கட்டுரையின் அடுத்த பகுதிகள் வெளியாகியுள்ளது. இந்த மாத கட்டுரை பகுதிகளில் வெண்முரசில் வரும் இமயமலை நாடுகளை பற்றியும், கோட்டை நகரங்களை பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
வெ. சாமிநாத சர்மா தன் நாட்குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய பயண நூல் “எனது பர்மா வழிநடைப் பயணம்” . 1978 ஆம் ஆண்டு அமுதசுரபி இதழில் அந்த நூலின் முதல் அத்தியாயம் வெளியானது. இன்றளவும் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்ட பயண நூல்களில் ஒன்றாக உள்ளது. “எனது பர்மா வழி நடைப் பயணம்” நூலின் வாசிப்பு அனுபவம் குறித்து வாசகி சகுந்தலா எழுதியுள்ள கட்டுரையும் இந்த இதழில் வெளியாகியுள்ளது.
எனது கிழக்கு தேசங்களுக்கான பயண அனுபவங்கள், கிழக்கு நோக்கி என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியாகி வருகிறது , இந்த இதழில் சிங்கப்பூர் இலை பூங்காவை கண்டுவந்த அனுபவமும், ஹாக்கர் நிலையங்கள் என்ற சாலையோர உணவகங்களின் தோற்றமும், சிங்கப்பூர் சமையலில் அவை செலுத்திய தாக்கமும், அங்கே நாங்கள் அடைந்த அனுபவங்களும் நிறைந்த பகுதிகள் பிரசுரமாகியுள்ளன.
இந்த மாத இதழின் சிறப்பம்சம் ஒன்று உண்டு, முதல் முறையாக புகைப்பட கதை ஒன்றை வெளியிட்டுள்ளோம். உங்களின் கொற்றவை நாவலை வாசித்து, பின்னர் முனைவர் வி.ஆர்.சந்திரனின் கொடுங்கோளூர் கண்ணகி புத்தகத்தை வாசித்து அதன் தாக்கத்தால் பயணம் கிளம்பிச் சென்றுள்ளார் புகைப்பட கலைஞர் அருண்மொழி. அவர் பதிவு செய்த மீனபரணித் திருவிழாவின் புகைப்படங்களின் தொகுப்பாக வெளியாகி உள்ளது, “மா மங்கலதேவி” என்ற படக்கட்டுரை. புனைவும், நிகழ்வும் இணையும் உச்ச தருணங்கள் மட்டுமே பதிவாகியுள்ள புகைப்படங்கள் நிறைந்துள்ள, இதை தமிழ் இலக்கிய சூழலில் ஒரு புது முயற்சி என்றே எண்ணுகிறேன்.
நன்றி,
இளம்பரிதி
பதிவுகளுக்கான சுட்டிகள்
அருவி – வள்ளி வாண தீர்த்தம் ஆடின கதை – https://www.vazhi.net/post/_cb01
மா மங்கலதேவி படக்கதை – https://www.vazhi.net/post/_am01
கிழக்கு நோக்கி – https://www.vazhi.net/post/__kn5
எனது பர்மா வழிநடைப் பயணம் வாசிப்பனுபவம் – https://www.vazhi.net/post/burmabook1
வாழிய நிலனே – https://www.vazhi.net/post/s00009