அண்ணா ஹசாரே- என் விமர்சனங்கள்

ஜெயமோகன்,

நேரடியாகவே ஒரு கேள்வி. இதற்கு நீங்கள் மழுப்பாமல் பதில் சொல்லியாகவேண்டும். நீங்கள் அண்ணா ஹசாரேவை ரட்சகராக நினைக்கிறீர்களா? அவர் மேல் உங்களுக்கு விமர்சனமே இல்லையா?

ராம்குமார் , மதுரை

அன்புள்ள ராம்குமார்,

நான் ரட்சகராக எவரையுமே நினைக்கவில்லை. காந்தியைப்பற்றி நான் முன்பு எழுதிய கட்டுரைகளில் கூட அவரை ரட்சகராக முன்வைக்கவில்லை. அந்த வரலாற்றுச்சூழலுக்கு அவர் ஒட்டுமொத்தமாக அளித்த பங்களிப்பை பார்க்கத்தான் முயன்றிருக்கிறேன். நான் மகாத்மா காந்தி என்றுகூடச் சொல்வதில்லை.

அண்ணா ஹசாரேவின் இயக்கத்தை இன்றைய வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் பொருத்தி, இன்றைய சிவில்சமூகத்தின் கருத்தியலுக்கு  அவரது பங்களிப்பைப் பார்க்க முயல்கிறேன். அவரது போராட்டம் இந்தியவரலாற்றில் ஊழல்கள் இனி பொறுக்கமுடியாது என்ற நிலையை அடைந்திருக்கும் நேரத்தில் நிகழ்வதனால் மிக முக்கியமானது. அது இந்தியாவின் அரசியலற்ற பெரும்பான்மைக்கு ஊழலை முக்கியமான அரசியல்பிரச்சினையாகக் காட்டுகிறதென்பதனால் அதன் பாதிப்புகள் பெரிய ஒரு தொடக்கமாக அமையும் என நான் நினைக்கிறேன்.

அண்ணா ஹசாரேவோ அவரது இயக்கமோ ஊழலை ஒழித்துவிடும் என நான் நினைக்கவில்லை. என் எழுத்துக்களில் எப்போதும் அத்தகைய எளிமைப்படுத்தல்கள் கிடையாது.  அதன் பங்களிப்பு என்பது ஊழலுக்கு எதிராக இன்று உருவாகி வரும் சமூகப்பொதுக்கருத்தை வடிவமைப்பதில்தான் உள்ளது. அந்த சமூகப்பொதுக்கருத்துதான் ஊழலை எதிர்க்கும் அரசியல் சக்தியாக ஆகும். ஆகவே அவரது போராட்டம் முக்கியமானது. இதுவே என் தரப்பு- இதையே பலமுறை எழுதியிருக்கிறேன்

காந்தியின் சாதனையே அவர் சத்தியாக்கிரகம் இருந்து போராடி பிரிட்டிஷாரை வென்றார் என்பது அல்ல என்றுதான் சொல்லிவருகிறேன். இந்திய குடிமைச்சமூகத்தின் பொதுக்கருத்தியலை அந்தப் போராட்டம் மூலம் காந்தி மெல்லமெல்ல மாற்றினார் என்பதே அவரது சாதனை.

அண்ணாவை விமர்சிப்பவர்கள் அவரது போராட்டம் இன்றைய சமூகப்பொதுக்கருத்தில் உருவாக்கும் பெரும் மாற்றத்தை பார்க்க மறுக்கிறார்கள். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே அவர்கள் கவனிப்பதில்லை. அவர்கள் இந்த லோக்பால், அதற்கான உண்ணாவிரதம், அதையொட்டிய அரசியல் ஆகியவற்றை மட்டுமே பார்த்து எதிர்வினையாற்றுகிறார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையேயான வேறுபாடு இதுவே. நான் இப்போராட்டத்தை மிகைப்படுத்தவும் இல்லை, பல அறிவுஜீவிகளைப்போலக்  குறைத்துப்பார்க்கவும் இல்லை.

அண்ணா ஹசாரே பற்றி நான் இந்தப் போராட்டங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறேன். அவரது காந்தியப்பொருளாதாரம்-கிராமசுயராஜ்ய அமைப்பு பற்றி. இந்த தளத்திலும் . இன்றைய காந்தி நூலிலும் காந்திய பொருளியல் பற்றிய என் விரிவான பார்வையை பதிவுசெய்திருக்கிறேன். அதன் சாத்தியங்களையும், அதன்மேல் எனக்குள்ள ஐயங்களையும் விரிவாக சொல்லியிருக்கிறேன்.

காந்தியின் கிராம சுயராஜ்ய உருவகம் என்பது உலகளாவ உருவாகி வரும் மூலதனத்துக்கு எதிரான பிராந்தியப் பொருளியல் தன்னிறைவு மையங்களாக இந்திய கிராமங்களைக் கட்டி எழுப்புவதுதான்.  ஆகவே நவீன தொழில்நுட்பம், நவீன செய்தித்தொடர்பு எல்லாவற்றையும் அது நிராகரிக்கிறது. காந்திய கிராம சுயராஜ்யம் மையமற்ற அதிகார கட்டமைப்பை , நேரடியான மக்கள் அதிகாரத்தை முன்வைக்கிறது. எனக்கு முன்னதில் ஐயம், பின்னதில் நம்பிக்கை.

காந்தியின் கிராமசுயராஜ்யக் கொள்கைகளை ஒரு மதநம்பிக்கை போல எடுத்துக்கொண்டவராகவே அண்ணா ஹசாரே இருந்திருக்கிறார். ராலேகான் சித்தியில் அவர் அதை உருவாக்க முயன்றிருக்கிறார். ராலேகான் சித்தி பொருளியல் தன்னிறைவு பெற்ற கிராமம். தனக்கான பஞ்சாயத்துக் கொண்ட ஒரு சுதந்திர அரசியல் வட்டம். ஆனால் புற உலகுடன் தொடர்பைக் குறைத்துக்கொண்டுதான் அதை அது அடைந்தது

அது தேசிய அளவில் சாத்தியமானதா என நான் ஐயப்படுகிறேன். அண்ணா ஹசாரேயும் காந்தியைப்போல ஒட்டுமொத்த மேலைப்பண்பாட்டை, சர்வதேச மூலதனத்தை, நவீன அறிவியலை நிராகரிக்கிறார். இந்த இருபதாண்டுக்காலத்தில் அவரது கருத்துக்கள் இன்னும் இறுகியிருக்கின்றன. குறிப்பாக மேதாபட்கர் போன்றவர்கள் அவரை எல்லாவகையான நவீனமயமாக்கல்களுக்கும் எதிரானவர்களாக ஆக்கியிருக்கிறார்கள்.

நான் முக்கியமாக எடுத்துக்கொள்ளும் காந்தியர்கள் காந்தியத்தை இன்றைய தேவைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய முயன்றவர்கள். நெல்சன் மண்டேலா, ஷூமேக்கர் , இவான் இலியிச் என ஒரு வரிசை. அவ்வரிசையில் அண்ணா ஹசாரேவை நான் சேர்த்ததில்லை. அவர் காந்தியக் களப்பணியாளர் மட்டுமே.

அவரது காந்தியம் மேல் எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் சொல்வதற்கு இது தருணமல்ல. இன்று அவர் செய்துகொண்டிருப்பது வேறு ஒரு பணி. தியாகம் என்பதற்கு அரசியலில் என்ன மதிப்பு என இளையதலைமுறைக்குச் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறார். இந்தப் போராட்டத்தை அவநம்பிக்கையால் மூட நான் என் விமர்சனங்களைப் பயன்படுத்த மாட்டேன்

அண்ணா ஹசாரேவின் பொருளியல்நோக்கு-அது மேதாபட்கரின் நோக்கும்கூட-மேல் எனக்கிருக்கும் ஐயங்களை இந்தப் போராட்டம் ஓய்ந்தபின் எழுதுகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே- இரு தரப்புகள்
அடுத்த கட்டுரைஒரு வரலாற்றுத்தருணம்