கேரளத்தின் கணக்கு

அன்புள்ள ஜெ,

என்னுடன் வேலைபார்க்கும் நண்பர்களில் பலர் மலையாளிகள். மஞ்ஞும்மல் பாய்ஸ் விவாதம் உருவானபோது பலர் உங்களை வசைபாடினார்கள். அவர்களில் சிலருக்கு நீங்கள் அப்போதுதான் அறிமுகமானீர்கள். இனி ஜெயமோகனை மலையாளிகள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். கேரளத்தில் ஜெயமோகன் நடமாடமுடியாது என்றார்கள்.

என் நண்பர்களில் அரசியல் சார்ந்து உங்கள்மேல் காழ்ப்பு கொண்டவர்கள் நாலைந்துபேர் உண்டு. சிலர் முகநூல் பதிவுகூட போட்டிருந்தனர். நான் அனுப்பியிருந்தேன் (அவர்களின் காழ்ப்புக்கு உண்மையான காரணம் நீங்கள் பலமுறை சொன்னதுபோல மதவெறிதான். ஆனால் அதற்கு அரசியல் காரணங்களைச் சொல்வார்கள்). அவர்கள் இதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஜெயமோகன் மலையாள உலகை ஒட்டுமொத்தமாக பகைத்துக்கொண்டார், கேரளத்திலே காறித்துப்புகிறார்கள் என்றெல்லாம் பதிவு போட்டார்கள்.

ஆனால் நேற்று பேசிக்கொண்டிருந்தபோது இரண்டுபேர் உங்கள் சோற்றுக்கணக்கு கதையை ஆகா ஓகோ என்று புகழ்ந்தனர். மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். காழ்ப்பு கொண்டிருந்த அரசியல்நண்பர்களுக்கு ஒரே திகைப்பு. ’இந்த மலையாளிகள் அவங்காளை விட்டிரவே மாட்டாங்க. நாமள்லாம் அதப்பாத்து கத்துக்கணும்’ என்றார்கள்.

ராஜேஷ் கோபாலகிருஷ்ணன்

அன்புள்ள ராஜேஷ்

சென்ற வாரம் சோற்றுக்கணக்கு சிறுகதை மாத்ருபூமி இதழில் எம்.எஸ்.சஜித் என்னும் இளைஞரின் மொழியாக்கத்தில் வெளியாகியது. என்னிடம் மாத்ருபூமி ஆசிரியர் சுபாஷ் சந்திரன் அழைத்து இப்படி ஒரு மொழியாக்கம் வந்துள்ளது, உங்களுக்கு அனுப்பலாமா என்று கேட்டார். உங்களுக்குப் பிடித்திருந்தால் வெளியிடுங்கள் என்று சொன்னேன். அது வெளியானது முதல் என் செல்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே நூறுநாற்காலிகள், யானைடாக்டர் வெளியானபோது உருவான அதே உணர்வலைகள். ஏராளமானவர்கள் அதைப்பாராட்டி மிக உணர்ச்சிகரமான குறிப்புகள் எழுதியுள்ளனர்.

உங்கள் நண்பர்கள் சொல்வதுபோல அது ‘மலையாள உணர்வு’ ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட ‘செண்டிமெண்ட்’ மலையாளிகளுக்கு இல்லை. சொல்லப்போனால் அவர்களின் பொதுவான ஒரு நையாண்டிமனநிலை எல்லா செண்டிமெண்ட்களுக்கும் எதிரானதாகவே செயல்படும். அந்தக் கதை உருவாக்கும் உணர்வுகளே காரணம். அக்கதை திருவனந்தபுரத்தின் கதை. அதற்கிணையான வாழ்வனுபவங்கள் அடைந்தவர்கள் பலர் இருப்பார்கள்.

அத்துடன் ஒன்றுண்டு, கேரளப்பண்பாட்டில் ’எழுத்தாளனின் திமிர்’ பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எழுத்தாளர்கள் சமூக அரசியல் விவகாரங்களில் கடுமையாகக் கருத்துச் சொல்வதும், அது விவாதமாக ஆவதும் ஐம்பதாண்டுகளாக நிகழ்கிறது. எழுத்தாளன் என்றாலே கொஞ்சம் ’தன்றேடம்’ கொண்டவனாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம் உண்டு. வள்ளத்தோள் நாராயணமேனன் , வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன் முதல் எம்.கோவிந்தன், பி.கே.பாலகிருஷ்ணன், சகரியா வரை அதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் உண்டு. அத்துடன் எழுத்தாளன் கொஞ்சம் சமநிலை பிறழ்ந்தவன் என்பதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே. ஆகவேதான் ஜான் ஆப்ரகாம் அல்லது ஏ.ஐயப்பன் அங்கே கொண்டாடப்படுகிறார்கள்.

யானை டாக்டர், கேரள பாடநூலில்

ஆகவே கொஞ்சம் இலக்கியமறிந்தவர்கள் எப்போதுமே எழுத்தாளனை புரிந்துகொள்பவர்களாகவே இருப்பார்கள். அரசியல் காழ்ப்புகள், இலக்கியக் காழ்ப்புகள் அங்கே உண்டு. அவர்கள் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்ல. மஞ்ஞும்மல் பாய்ஸ் விவாதம் உச்சத்தில் இருந்தபோதே அறிவுலகம் என்னை ஆதரித்தே எழுதியது. கேரளத்தின் இரண்டு முதன்மையான இதழ்கள் (மாத்ருபூமி, மாத்யமம்) என்னுடைய மிக விரிவான பேட்டிகளை அப்போதே வெளியிட்டன. என் பேட்டி இல்லாமல் சென்ற சில ஆண்டுகளாக கேரளத்தில் ஓணம் வந்ததே இல்லை.(இவ்வாண்டு ஜனயுகம் இதழில்)

மஞ்ஞும்மல் பாய்ஸ் விவாதத்தில் அங்கே எளிய சினிமா ரசிகர்களின் வசைகளே ஓங்கி ஒலித்தன. ஆனால் வணிக சினிமா ஒரு தற்காலிக நிகழ்வு. இன்று மஞ்ஞும்மல் பாய்ஸ் மறக்கப்பட்டுவிட்டது. இனி அது எப்போதுமே பேசப்படப் போவதில்லை. ஆனால் அந்த விவாதம் வழியாக என்னை கேள்விப்பட்ட ஒரு லட்சம் பேராவது புதிதாக வாசிக்க வந்திருப்பார்கள். நூல் விற்பனையில் அது தெரிகிறது. அவர்கள் என்னை அணுகியறிகிறார்கள். நான் சொன்னவற்றை புரிந்துகொள்கிறார்கள். அதுவே இன்றைய எதிர்வினை.

ஓர் எழுத்தாளனை அவனுடைய இலக்கிய ஆக்கங்கள் வழியாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அவனுடைய மொத்தக் கருத்துலகும் அந்த படைப்புகளுடன் தொடர்புடையது. கேரளம் போன்ற சூழலில் பாமர எதிர்வினைகள் உருவானாலும் மெல்ல மெல்ல அறிவியக்கவாதிகளின் குரல்களே மேலோங்கி ஒலிக்கும். இலக்கியப்படைப்புகள் எல்லா அவதூறுகளுக்கும் காழ்ப்புகளுக்கும் பதிலாக திகழும். எம்.ஏ.பேபி என்ற கேரள அமைச்சர் (இவ்வளவுக்கும் ஓரளவு வாசிப்பவர் என்று கேள்வி) என்னைப் பற்றி இங்கே தமிழில் எவரிடமோ விசாரித்துவிட்டு நான் இந்து மத வெறியன் என ஒரு கருத்து சொன்னார். நான் அதற்குக் கடுமையாக எதிர்வினையும் ஆற்றினேன். ஆனால் அதன்பின்னர்தான் டி.சி.புக்ஸ் வெளியிட்ட மாடன் மோட்சம் பெரும் விற்பனையை அடைந்தது. அந்தப்படைப்பு தவிர இன்னொரு பதில் இருக்க முடியாது

யானைடாக்டர் கேரளத்தில் 9 ஆம் வகுப்பு பாடநூலில் உள்ள கதை. கேரளக் குழந்தைகள் என் கதையை வாசித்து வளர்கின்றன. வைக்கம் முகமது பஷீர், தகழி ஆகியோருடன் இணைத்து. அண்மையில் ஒரு கட்டுரையில் வந்த வரியை நண்பர் அனுப்பியிருந்தார். ரயிலில் செல்லும் இளைஞர்களுடனான உரையாடலில் அவர்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் எவர் என்று கேள்வி. கட்டுரையாசிரியர் சொல்கிறார், எந்த மலையாளச் சமகால எழுத்தாளரும் அல்ல. பஷீரும் ஜெயமோகனும்தான் முக்கியமாக வாசிக்கப்படுகிறார்கள் என்று. என் எழுத்துக்களில் மலையாளத்தில் வந்துள்ளவை மிகமிகக் கொஞ்சம்தான்.

புகழ் அல்லது வெற்றியை நான் இங்கே குறிப்பிடவில்லை. தமிழிலானாலும் மலையாளத்திலானாலும் எழுத்தாளனின் தொடர்பு வாசகர்களுடன் மட்டுமே. சினிமா சார்ந்தோ, அரசியல் சார்ந்தோ, அல்லது ஜாதிமதம் சார்ந்தோ உருவாக்கப்படும் காழ்ப்புகளும் இலக்கியவாசகனிடம் எந்த மதிப்பும் இருப்பதில்லை. எழுத்தாளன் மிக விரிவான ஒரு காலப்பரப்பில் நின்று பேசிக்கொண்டிருக்கிறான். அங்கே சிந்தனையாளர்கள், மாபெரும் சமூகப்பணியாளர்கள் மட்டுமே பொருட்படுத்தப்படும் ஆளுமைகள். பிற அனைவருமே சிறு குமிழிகள்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைபார்த்தசாரதி பங்காரு
அடுத்த கட்டுரைஅரசியல் கடந்த கல்வி ஏன்?