அண்ணா ஹசாரேயின் போராட்டம் பற்றிய என் கருத்துக்களுக்குத் திரும்பத்திரும்ப இரு குறிப்பிட்ட வகையான கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. ஏராளமான கடிதங்களை இணையத்தில் குவித்து பக்கங்களை வீணடிக்க நான் விரும்பவில்லை.
ஒரு தரப்பு, சோவின் ஆதரவாளர்கள். பொதுவான குரலுக்கு உதாரணமாக ஒரு கடிதத்தைச் சொல்வதாக இருந்தால்
திரு ஜெயமோகன்
இந்தக்கடிதம்தான்.
பெரும்பாலான சோ ஆதரவாளர்கள் சோ யதார்த்தத்தைப் பார்க்கிறார், அவ்வளவுதான், எதிர்க்கவில்லை என்கிறார்கள். அது அவர்களின் ஆசை மட்டுமே- உண்மை அல்ல.
இன்று போராட்டம் உச்சத்தில் இருக்கையில், தொலைக்காட்சியில் தோன்றிய சோ,அருந்ததி ராய் அண்ணா ஹசாரே பற்றி சொன்ன எல்லா அவதூறுகளையும் ஆவேசமான குரலில் கசப்பும் வெறுப்புமாகத் தானும் கக்கினார். நாட்டில் எந்த ஆதரவும் அண்ணா ஹசாரேவுக்கு இல்லை, இது ஒரு சின்ன விஷயம் என்கிறார். அண்ணா ஹசாரே ஒரு ஊடக மாயாபிம்பம் என்றும் மத்திய அரசு பணியக்கூடாது என்றும் சொன்னார்.
நான் ஏற்கனவே சொன்னது போல இது பாரதிய ஜனதாவின் குரல். இந்துத்துவ தரப்பில் இரு குரல்கள் உள்ளன. ஒன்று, அதன் தொண்டனின் குரல். அது ஆர்.எஸ்.எஸின் குரல். இன்னொன்று அதன் தலைமையைக் கைப்பற்றிக் கையில் வைத்திருக்கும் கார்ப்பரேட் மையங்களின் குரல். சோ ஒலிப்பது கார்ப்பரேட் எஜமானர்களின் குரலை. அது பாரதிய ஜனதாவுக்கு உள்ளேயே மோடியாலும் யஸ்வந்த் சின்காவாலும் தோற்கடிக்கப்பட்ட ஏமாற்றமே அவரது பொருமல்.
இன்னொரு வகை கடிதங்களின் சாரம் இதில் தலித்துக்களுக்கு என்ன இடம் என்பது. இன்றைய பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே நிற்கும் எல்லா ஆம்புட்ஸ்மன் அமைப்புகளும் தலித்துக்களுக்குச் சாதகமானவையே என்பது ஒரு அப்பட்டமான உண்மை. மனித உரிமைக்கழகம் போல.
லோக்பால் ஒரு தேர்தல் கமிஷனாக அமைந்தாலும் கூட அது தலித்துக்களுக்குச் சாதகமானதே. சென்ற இருபதாண்டுகளில் தேர்தல் கமிஷன் உண்மையான அதிகாரத்துடன் செயல்பட ஆரம்பித்த பின்னரே தலித்துக்களுக்கு என ஓர் அரசியலதிகாரம் உருவாக முடிந்தது என்பது கண்கூடு. குறிப்பாக வடமாநிலங்களில்.
பாராளுமன்ற மேலாதிக்கம் பற்றி, புனிதமான அரசியல் சட்டம் பற்றி திடீரென கவலைப்படுகிறார்கள் எல்லாரும். ஆனால் தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக, பிடிவாதமாக இயங்காவிட்டால் , உ.பியிலும் பிகாரிலும் தலித்துக்களின் அரசியல் ஒரேதேர்தலில் காணாமல் போகும். பாராளுமன்ற அரசியலின் உண்மையான நடைமுறைமுகம் இது.
லோக்பால் அமைப்பை தலித்துக்கள் தங்களுக்குரிய உரிமையும் பங்கும் பெறுவதாக ஆக்கிக்கொள்ள முடியும். ஆகவேதான் மாயாவதி யோசிக்கிறார்.
இந்தச்செய்தி எனக்கு மிகுந்த ஆறுதலை அளித்தது
புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாநிலைப் அறப்போரட்டத்தை மேற்கொண்டு வரும் அன்னா அசாரேவை நேரில் சந்தித்து போராட்டத்தைக் கைவிட்டு வேறு வடிவங்களில் போராட்டத்தை தொடரலாம் என கேட்டுக் கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் 26.8.2011 அன்று இரவு 8 மணியளவில் ராம்லீலா மைதானத்திற்குச்சென்றார்.
அன்னா அசாரேவின் போராட்டக் குழுவினரை சார்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் தொல்.திருமாவளவனை வரவேற்றார். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது அன்னா அசாரே மிகுந்த களைப்பினால் ஓய்வில் இருந்தார்.ஆகவே அவருக்கு இடையூறு செய்யக் கூடாது என்ற நிலையில் வாழ்த்துவதற்கான பூங்கொத்தினை அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களிடம் கொடுத்து வாழ்த்துகளையும்,போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்கின்ற வேண்டுகோளையும் அன்னா அசாரேவிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சரியான அர்த்தத்தில் சமகால வரலாற்றைப் புரிந்துகொண்ட திருமாவளவன் பாராட்டுக்குரியவர். ராமதாஸ் அல்லது முலயம்சிங் யாதவ் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதி ஊழல் அதிகாரவாதிகளும் இதன் உண்மையான உள்ளடக்கத்தைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் எதிர்க்கிறார்கள்.