வாழப்பாடி ராஜசேகரன்

சேலம் அருகே வாழப்பாடியைச் சேர்ந்தவர் நண்பர் ராஜசேகரன். வாசகராக ஆறாண்டுகளுக்கு முன் நண்பர் விஸ்வநாதன் உட்பட சிலருடன் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்திருந்தார். முதல்முறை சந்திக்கையில் ஒரு பொன்னாடையைப் போர்த்தி, சிலை ஒன்றை பரிசாகத் தந்தார். ஆச்சரியமென்னவென்றால் அதன் பின் இதுவரை ஒவ்வொரு சந்திப்பிலும் அதையே செய்துள்ளார்.

ராஜசேகரனை நான் ’நினைத்துக்கொள்வது’ இல்லை, ஆனால் அவ்வப்போது நினைவில் வருவார். குறிப்பாக எங்காவது வாழப்பாடி என்று பெயர் கண்ணில்பட்டால். அவருடைய சாயல்கொண்ட எவராவது கூட்டத்தில் தென்பட்டால். பின்னர் சேலம் என்று யாராவது சொன்னால் ’வாழப்பாடி ராஜசேகரனை தெரியுமா?” என்று கேட்க ஆரம்பித்தேன். அது முதியவர்களின் மனநிலை என எனக்குத் தெரிந்தாலும் கேட்டுவிடுவேன். நண்பர்களே கேலியாக ‘வாழப்பாடி ராஜசேகனை தெரியாதவங்க சேலம் ஜில்லாவிலேயே இல்ல சார்” என்று சொல்ல ஆரம்பித்தனர்.

ராஜசேகரன் என்னை வாசிக்க ஆரம்பித்து, நண்பராகக் கொண்டு, மிக அணுக்கமானவராக உணரத் தொடங்கியவர். அவருடைய கடையின் ‘விசிட்டிங் கார்டில்’ என் படம்தான். அவருடைய குடும்ப விழாவிலும் என் படம் இருந்தது. வாழப்பாடியில் அவர் இல்லத்திற்கு ஒருமுறை செல்லவேண்டும் என எண்ணி நீண்டநாட்களாக தள்ளிப்போகிறது. நான் என் பயணங்களை என்னை மீறிய அலுவல்களை அடிப்படையாகக்கொண்டு திட்டமிட ஆரம்பித்து நாளாகிறது.

ராஜசேகரன் போன்ற வாசகர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருவரிடமும் எனக்கு ஓர் அகத்தொடர்பு உண்டு. ஆனால் அதை என்னால் சரியாக எதிர்கொள்ள முடிவதில்லை. அதைப் பேசினாலோ, அல்லது காட்டிக்கொண்டாலோ செயற்கையாக அல்லது மிகையாக ஆகிவிடும் என்று படும், அன்போ விழைவோ தோன்றுமிடங்களில் நாணி, பேச்சில்லாமல், முகம்சிவப்பது என் அப்பாவின் வழக்கம். அது எனக்கும் உண்டு.

அதேபோல மகிழ்ச்சியான உச்ச தருணங்களில் அசட்டுத்தனமாக விழித்தபடி ஒதுங்கிவிடுவேன். அதுவும் என் அப்பாவின் இயல்புதான். தன் மகள் கல்யாணத்திலேயே கூட்டத்துடன் கூட்டமாக நின்றிருந்தார் அவர். ஆகவே எவர் எனக்கு மிக அணுக்கமானவரோ அவர்களை ஒருமுறை தொட்டேன் என்றால் உடனே வேறெங்கோ மனதையும் கண்களையும் திருப்பிக் கொள்வேன். பெரும்பாலும் எவரிடமும் அதைப்பற்றிச் சொல்வதுமில்லை.

எழுத்து அத்தகைய உளத்தொடர்பை உருவாக்குமா? நவீன எழுத்தாளர்கள் பலர் சொல்வதுண்டு, எழுத்து வேறு எழுத்தாளன் வேறு என்று. எழுத்தைப்பார் எழுத்தாளனைப் பார்க்காதே என்று. பல எழுத்தாளர்கள் அப்படிப்பட்டவர்களும்கூட. எழுத்தை வாசித்து உணர்வுபூர்வ ஈடுபாடு கொள்வது அது முதிர்ச்சியின்மை என்று ஒரு எண்ணம் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

என் கருத்து நேர் மாறு. உண்மையில் ஓர் எழுத்துடன் உணர்ச்சிபூர்வமாக ஈடுபட முடியவில்லை என்றால் அதை எதற்காகப் படிக்க வேண்டும்? அதிலிருந்து வெறும் செய்திகளின் தொகுப்பை மட்டும் எடுப்பதென்றால் எவ்வளவுபெரிய வெட்டிவேலை. பேசாமல் தகவல்களை வாசிக்கலாமே. நான் வாசிப்பதெல்லாமே உணர்வும் கனவும் கொண்டுதான். நான் விரும்பும் எல்லா படைப்பாளிகளுடனும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடுண்டு. மறைந்துபோன தல்ஸ்தோய் ஆனாலும் சரி, வைக்கம் முகமது பஷீரோ அசோகமித்திரனோ ஆனாலும் சரி, என் முன் உள்ள தேவதேவன் ஆனாலும் சரி.

ஆகவே அந்த உணர்வுநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எழுத்தும் எழுத்தாளனும் ஒன்றல்ல. எழுத்து என்பது அவ்வெழுத்தாளனின் உச்சநிலை மட்டுமே. ஆனால் அதுவே அவனுடைய சாராம்சமும் கூட. அதன் வழியாக அவனை அறிபவரே அவனை மெய்யாக அறிகிறார், ஆழ்ந்து அறிகிறார். அந்த உறவு ஆழமான ஒன்று. இப்புவியில் நிகழும் ஆழ்ந்த உறவுகள் சிலவற்றில் ஒன்று.

ராஜசேகரன் இப்போது நோயுற்றிருக்கிறார். சுவாசப்பிரச்சினையால் ஆக்ஸிஜனுடன் நடமாடும் நிலை. ஆனால் உரிய கருவிகளுடன் விஷ்ணுபுரம் விழாவுக்கு வருவேன் என்றார். நான் வரவேண்டாம் என்றேன். அண்மையில் குமரகுருபரன் விழாவுக்கு வந்திருந்தார். வழக்கம்போல தழுவிக்கொண்டோம். மேலோட்டமான சில சொற்கள் பேசிக்கொண்டோம்.

அதற்கும் மேல் அவரிடம் சொல்ல எனக்கு நிறையவே உண்டு. ஆனால் அதை நான் என்னுடைய ஏதேனும் புனைகதையில், அவற்றின் உச்சத்தருணங்களில், சொல்லியிருப்பேன்.

முந்தைய கட்டுரைஇளம்பாரதி
அடுத்த கட்டுரைகாலம், யுவன் சந்திப்பு, டொரெண்டோ