நலம்தானே?
உங்கள் புனைவுக்களியாட்டுக் கதைகளை மீண்டும் ஒரு வாசிப்புக்கு உள்ளாக்கினேன். அதில் பல கதைகள் அன்று வாசிக்கும்போது ஆழமாக உள்வாங்காமல் தவறவிட்டுவிட்டேன் என்று இப்போது தெரிந்தது.அன்றைய மனநிலையில் உற்சாகமான கதைகளை மட்டும்தான் ரசித்தேன். இன்று வாசிக்கும்போது மணிபல்லவம், அனலுக்குமேல், எழுகதிர் ஆகியவை முக்கியமான கதைகளாகத் தெரிகின்றன.அவற்றை அற்புதமான நவீன சினிமாக்களாக ஆக்கமுடியும். (தமிழ்ச்சூழலில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் தெரியும்) இப்போது வாசிக்கையில் பிரமிப்பூட்டி, சிந்தனையை உறையவைக்கும் பல கதைகளை கண்டடைந்தேன். வாசித்துத்தீராத கதைகள் அவை.
எம்.ஆர்.மணிகண்டன்
அன்புள்ள ஜெ
புனைவுக்களியாட்டுக் கதைகளை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருந்தேன். பெண்களின் மனநிலைகளுக்குள் நுணுக்கமாக ஊடுருவிச்சென்று மீளும் பல கதைகளை கண்டேன். பொலிவதும் கலைவதும், தேவி இரண்டு தொகுப்புகளுமே அவ்வகையில் மிக முக்கியமான கதைகள் கொண்டவை. தேவி ஓர் அழகான பிரபஞ்சநாடகம் என்ற எண்ணம் வந்தது
சி.கிருஷ்ணன்