ஜெ,
நாளைக்கே அப்சல் குருவுக்கு ஆதரவுக் கட்டுரை போட்டமாதிரி உங்க முன்னாள்நண்பர் மனுஷ்யபுத்திரன் அஜ்மல் கசாப்புக்கும் கட்டுரை போடுவார். அஜ்மல் கசாப் நிரபராதி என்றும் இந்திய நீதிபதிகள்தான் குற்றவாளிகள் என்றும் சொல்லுவார். ‘நாம் எப்படிப்பட்ட கொடுங்கனவில் வாதையை அனுபவிக்கிறோம்! அஜ்மல் கசாப் என்ற நிரபராதியான பாலகனை நம் இந்து அரசியல் கொல்லும்போது நாம் என்ன செய்கிறோம்’ என்றெல்லாம் எழுதுவார், அப்போது நீங்கள் இப்போது சொல்லும் எல்லா வரிகளையும் உப்பைத் தொட்டு கொண்டு முழுங்கவேண்டியிருக்கும்.பிறகு உங்கள் இஷ்டம்
அரங்க.முத்தையா
ஜெ,
தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று நீங்கள் எழுதின கட்டுரையை வாசித்தேன். பொதுவாக ஒரு நியாயத்தின் அடிப்படையிலேயே நீங்கள் பேசுவீர்கள். ஆனால் இங்கே அந்த நியாயத்தையே காணோம். மேம்போக்கான ஒரு உணர்ச்சிவேகம் மட்டுமே காணப்படுகிறது. மிகுந்த மனவருத்ததுடன் இதை எழுதுகிறேன்.
நீங்கள் இந்த விசயத்திலே இணையத்திலும் வெளியே மேடைமேலும் கூப்பாடு போடும் அரசியல்வாதிகளுக்கு செவி கொடுத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேசுவதிலே ஒரு நியாயமான லாஜிக் கூட கிடையாது. எனக்கொரு நீதி மற்றவனுக்கு வேறு நீதி என்ற தடிகாரன்போக்குதான் தெரிகிறது.
இந்த விஷயத்தில் இறங்கிப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். இவர்கள் இன்றுவரை இந்தியாவில் நடந்த எந்த ஒரு நல்ல விசயங்களுக்கும் தோள்கொடுத்தவர்களே அல்ல. இந்தியா அழியவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள். அதற்காக இவ்வளவுநாளாகப் பிரச்சாரம் செய்யகூடியவர்கள்.எவ்வளவோ வெளிநாட்டுக் காசு வாங்கிக்கொண்டு பேசுபவர்கள். இவர்கள் இந்திய தேசியத்தையும் நம் அரசியல்சட்டத்தையும் நீதிமன்றங்களையும் எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தினார்கள்.
இவர்கள் காந்தியையும் இந்தியாவின் பெரிய இலட்சியமனிதர்களையும் இவ்வளவுநாளாக எப்படியெல்லாம் அவமதித்தார்கள். அன்னா ஹசாரேயின் போராட்டம் பற்றி என்னென்ன நக்கலும் கிண்டலும் செய்கிறார்கள். அவர் ஊழல்வாதி என்றும் சாதியவாதி என்றும் மனசாட்சியே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நம்முடைய மனசாட்சியை நோக்கிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
இப்போதுகூட 2047லே இந்தியாவைத் துண்டுதுண்டாக சிதறடிப்போம் என்றுதான் வைகோ பேசிக்கொண்டேஇருக்கிறார். ’இந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா’ என்று இந்திய அரசாங்கத்தையே மிரட்டுகிறார். இவர்களை நம்பியா நாம் ஆதரவு கொடுப்பது?
இன்றைக்கு ஒரு மனவலிமையும் நேர்மையும் இல்லாத அரசாங்கம் நமக்கு உள்ளது. இந்த நாட்டையே சீரழிக்கும் குற்றவாளிகளை சட்டம் பேசித் திறந்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் காந்தியின் கொலை என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. ராஜீவ்காந்தி இந்தியாவின் அதிபராக இருந்தவர். ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்கு இருந்தவரும் கூட என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அவரைக் கொன்றது கொலை அல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களைப் புண்படுத்தியது. அது ஒரு தேசிய அவமானம்.
ஒரு ஜனநாயகநாடு இந்தமாதிரி விஷயங்களில் என்னென்ன உரிமைகளைக் கொடுக்குமோ எல்லாவற்றையும் நாம் கொடுத்துவிட்டோம். எல்லா சலுகைகளையும் கொடுத்துவிட்டோம். இனி சட்டம் தன் கடமையைச் செய்வதே சரியானது. இதிலே உணர்ச்சிகளுக்கெல்லாம் இடமே கிடையாது
சாமிநாதன்
*
ஜெ,
இன்றைக்கு சிலர் ஒரே குரலிலே அண்ணா ஹசாரேவைப் பற்றியும் தூக்குத்தண்டனை மன்னிப்பு பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணா ஹசாரேவைப் பற்றிப் பேசும்போது இவர்கள் பேசுவது பெரிய அறிவுஜீவிகளைப்போல. ஆனால் அதே சமயம் தூக்குத்தண்டனை பற்றிப் பேசும்போது தெருவில் இறங்கி நின்று பேசும் தோரணை.
1. அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான ஒரு சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரிக்கவேண்டும் என்று போராடுகிறார். தன்னையே வருத்திக்கொள்கிறார். நாடு அவருக்கு ஆதரவளிக்கிறது. அதை இவர்கள் ஜனநாயக விரோதம் என்கிறார்கள். அண்ணா எலக்ஷனில் நின்று ஜெயித்து வரட்டுமே என்று சொல்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அண்ணா பேசக்கூடாதாம். அது மக்களை அவமதிக்கும் பிளாக்மெயிலாம். அவர் அரசியல்சட்டத்தின் மாண்பை அழிக்கிறாராம்.
ஆனால் வை.கோ போன்றவர்கள் ‘ரத்த ஆறு ஓடும்’ ‘நாடு துண்டுதுண்டாகும் ‘ என்று அரசாங்கத்தை மிரட்டுவது ஜனநாயக நடவடிக்கை என்கிறார்கள். இத்தனைக்கும் வை.கோவால் ஒரு தொகுதியில்கூட டெப்பாசிட் பெறமுடியாது. அவர்களுக்குப் பின்னால் பத்துப்பேர் கூடக் கிடையாது. உச்ச நீதிமன்றமே தண்டித்த குற்றவாளிகளை வை.கோ நிரபராதிகள் என்று அறிவிக்கிறார். இது அரசாங்கத்தையோ மக்களையோ அவமதிப்பது கிடையாதாம். அரசியல் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றும் செயலாம்.
2. அண்ண ஹசாரேவுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதை ஷோ என்று கிண்டல்செய்கிறார்கள். காந்தியவழிகள் எல்லாம் வெறும் காமெடி என்கிறார்கள். இவர்களும் அதே மெழுகுவர்த்திகளைத்தான் ஏந்துகிறார்கள். அதே மாதிரி உண்ணாவிரதம்தானே இருக்கிறார்கள்.
3. ஒருபக்கம் வை.கோவும் ராமதாஸும் இவர்கள் நிரபராதிகள் என்கிறார்கள். அதனால் இவர்களை விட்டுவிடவேண்டுமாம். ஆனால் இன்னொரு பக்கம் தூக்குத்தண்டனையே வேண்டாம் என்கிறார்கள். தூக்குத்தண்டனை வேண்டாம் என்று சொல்வதற்குத்தான் அருந்ததி ராய் போன்றோர் ஆதரவு அளிக்கிறார். இவர்கள் இந்தக் குற்றவாளிகள் மூவரும் நிரபராதிகள் என்று சொல்லி அவர்களின் ஆதரவு திரட்டட்டுமே. இதென்ன மோசடி?
4 .இந்த மூன்று குற்றவாளிகளும் ராஜீவ் கொலை தப்பு என்றும் வருத்தப்படுகிறார்களென்றும் இன்றைக்கு வரை சொல்லவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி செண்டிமென்டுகளை உண்டுபண்ண முயற்சி செய்கிறார்கள். ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான் என்று இப்போதும் இவர்கள் மேடையிலேயே சொல்கிறார்கள். ‘தமிழ்ப்பெண்களைக் கற்பழிக்க ராணுவத்தை அனுப்பியவர்களுக்கு உரிய தண்டனையைத் தமிழர்கள் கொடுத்தார்கள். அதை அவர்கள் செய்திருக்க கூடாது, நாம் செய்திருக்கவேண்டும்’ என்று சீமான் ஈரோட்டிலே பேசினதை நானே கேட்டேன். அமிர்தலிங்கம் போன்றவர்கள் கொல்லப்பட்டதை ’துரோகிகளுக்குப் புலிகள் கொடுத்த தண்டனைகள்’ என்று சொன்னார் வை.கோ. இப்போது மரணதண்டனை தப்பு என்கிறார்கள். இஸ்லாமிய நாட்டிலே அல்லாஹூ அக்பர் என்று சொல்லிக் கழுத்தை அறுப்பது நியாயம். இந்தியாவில் அப்சல்குருவைத் தூக்கிலே போட்டால் அநியாயம். அதாவது அவர்கள் நம்மைக் கொல்வது நியாயம், நம் அரசு திருப்பி அவர்களைக் கொல்வது அநியாயம். இதுக்கு என்ன அறிவுஜீவி பசப்பு?
இந்த முரட்டுமுட்டாள்தனத்துக்கெல்லாம் துணைபோகாதீர்கள் , தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்
சரவணன் ஆ
அன்புள்ள நண்பர்களுக்கு,
என் கருத்து இதுவே.
மனிதாபிமானக் கண்ணோட்டத்தால் மட்டுமே உண்மையான ஆதரவைத் திரட்டவும் முடியும். நீதிமன்றத்தைப் பழி தூற்றுவதும், காங்கிரஸை வசைபாடுவதும், பிரிவினைவெறி பேசுவதும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.
காரணம் அரசியல்கட்சிகளுக்குப் பல கட்டாயங்கள் உண்டு. அவை நீதிமன்றத்தைத் தாண்டிச்செல்லமுடியாது. ராஜீவ் காந்தி கொலை போன்ற நுட்பமான விஷயத்தை அவை கவனமாகவே கையாள முடியும். உதாரணமாக பாரதிய ஜனதா. அது இவ்விஷயத்தை ஆதரித்தால் அது காங்கிரஸ் எதிர்ப்பால் ராஜீவ் கொலையாளிகளை ஆதரிக்கிறது என்ற நிறம் வரும். இதே இக்கட்டு மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் எல்லாம் உண்டு. காங்கிரஸ் அதை வசதியாக இந்தியா முழுக்க பரப்பும். ஆகவே யோசிப்பார்கள். பிரிவினைவாதம் பேசினால் எந்த அரசியல்கட்சியும் ஆதரவை அளிக்காது.
ஆகவே மனிதாபிமானக் கண்ணோட்டம் மட்டுமே உண்மையாக செல்லுபடியாகக் கூடியது. ஆனால் நம்மில் அந்த விவேகமுள்ளவர் அனேகமாக யாருமில்லை. ’தமிழகம் தனிநாடாகவேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த மூவருக்கும் விடுதலை தேவை என்று சொன்னால் மட்டுமே அவர்களை ஏற்போம் , இல்லையேல் கீழ்த்தரமாக வசைபாடுவோம்’ என்கிறார்கள் தமிழிய ஆதரவாளர்கள். அவர்களின் எதிர்ப்பு கடைசியில் ஒரு சின்னக் குமிழியாக உடைந்து போகும். அதிகபட்சம் 10 நாள் நீடிக்கும் ஒரு அனுதாப அலை -அதிலும் பெண்கள் பொருட்படுத்தவே போவதில்லை
இவர்களின் இந்த அரசியல்கண்மூடித்தனமே அம்மூவரையும் தூக்கு நோக்கி உந்திச்செல்கிறது என நான் அஞ்சுகிறேன். இப்போதிருக்கும் சின்ன வாய்ப்பையும் அரசியல் மூலம் கெடுக்கிறார்கள். தூக்கு நடக்கட்டும், அதை அரசியல் கருவியாக ஆக்குவோம் என்று நினைக்கிறார்கள். மிச்சபேருக்கு இந்தத் தருணத்தில் முற்போக்காகத் தோற்றமளிப்பது தவிர ஆர்வம் இல்லை.
நாம் நம்மைக் காட்டிக்கொள்வதற்கான தருணம் அல்ல இது. இவர்கள் [ஏன் நானும்தான்] தூக்கு முடிந்த பத்தாம் நாள் யார் அந்த மூவரும் என்று கேட்கும் நடுத்தரவர்க்கம். மாபெரும் மானுடப்படுகொலையைக் கண்டும், தீக்குளிப்புகளைக் கண்டும், காங்கிரசுக்கு வாக்களித்த நம் மக்கள் முன்னால் இதை ஒரு நேரடியான மனிதாபிமானப் பிரச்சினையாக அல்லவா வைக்கவேண்டும்? ’ரத்த ஆறு ஓடும்’, ’ராஜீவ் குடும்பமே பதில் சொல்லவேண்டியிருக்கும்’ என்று நாகர்கோயிலில் இவர்கள் பேசுவதைக் கேட்டேன். துரதிருஷ்டம், வேறென்ன சொல்ல?
இனி இதில் பெரிதாக நான் சொல்ல ஏதுமில்லை. எனக்கு வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்களுக்கு மாதிரியாக இவற்றை வெளியிடுகிறேன். இவ்விஷயத்தை இங்கே முடித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்.
ஜெ