’வன ஜ்யோத்ஸ்ன’

அன்புள்ள ஜெ

அண்மையில் காடு நாவல் வாசித்தேன். சென்னை முதல் டெல்லி வரை ஒரு ரயில் பயணம். அதில் கிடைத்த நேரம்தான் வாசிக்கச் செய்தது. அண்மைக்காலமாக நீண்டநேரம் ஓரிடத்தில் அமர்ந்து ஒன்றை ஈடுபட்டு வாசிப்பதென்பது இல்லாமலாகிக்கொண்டிருக்கிறது. காடு ஒரு நல்ல அனுபவம். ரயிலில் நான் மழைக்காட்டில் இருப்பதாகவே உணர்ந்தேன். எனக்கு காடு பிடிக்கும். வால்பாறையில் முன்பு வியாபாரநிமித்தம் சென்று தங்குவதுண்டு. மழைபெய்துகொண்டே இருக்கும் காடு எனக்கு மிகப்பெரிய ஒரு ஈர்ப்பு.

ஆனால் ஓர் எண்ணம் வந்தது. நம்முடைய மரபில் இப்படி காடு சிலாகிக்கப்பட்டுள்ளதா? ராமச்சந்திர குகா அவருடைய Environmentalism: A Global History நூலில்  காடு பற்றி இன்றைக்கிருக்கும் எல்லா ரொமாண்டிக் மனநிலைகளும் மோட்டார்வாகனம் வந்து, மலைகளில் ஏறி காட்டுக்குள் செல்ல ஆரம்பித்த பிறகு வந்தவை என்று சொல்கிறார். நவீன தொழில்மயமாக்கல் நிகழ்ந்தபிறகு அதன் விளைவாகவே இயற்கை பற்றிய ஏக்கம் உருவானது என்கிறார். இந்த நாவலில் வரும் ரொமாண்டிக்கான காடு என்பது அப்படி ஒரு சமகால மனநிலையின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?

ரா.கிருஷ்ணன்

Vector asian seamless tropical rainforest Jungle background pattern illustration with animals

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

அன்புள்ள கிருஷ்ணன்,

அந்நாவலிலேயே அதற்கு எதிரான தரவுகள் கொட்டிக்கிடக்கின்றன. கபிலர் பாடியது முழுக்க குறிஞ்சித்திணையைத்தான், மலையையும் காட்டையும்தான். சங்கப்பாடல்களில் காடு எதிர்மறை மனநிலையுடன் சொல்லப்பட்டதே இல்லை. எல்லா பாடல்களிலும் காடு குளிர்ந்து, செழித்து, உணவும் நீருமாக நிறைந்திருக்கும் நிலம் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆகவேதான் அது காதலின் நிலம்.

ஏன்? ஐரோப்பியர்களின் காடு வேறு, நமது காடு வேறு. ஐரோப்பியர்களின் காடு பனிமூடியது. உண்பதற்கு உணவில்லாத வெற்றுநிலமாகவும் அது பலசமயம் இருக்கும். காடு கொல்லும் நிலம் அவர்களுக்கு. ஆகவே காடு என்பது இயற்கையின் கொடிய முகம். அதற்கு எதிராகப் போராடி அடையவேண்டியதுதான் வாழ்க்கை. அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் எல்லா காடுகளையும் அப்படித்தான் பார்த்தனர். அழித்து விவசாயம் செய்தனர், செய்யமுடியாதபோது வெட்டவெளியாக்கினர். புகழ்பெற்ற ஐரொப்பிய அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளில் காடு ஓர் அடங்காத அழிவுச்சக்தியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நமக்கு காடு என்றும் அப்படி அல்ல. இந்தியாவின் காடுகள் இனியவை, அவற்றில் வனவிலங்குகளுண்டு, அபாயங்களும் உண்டு. இருந்தாலும் அவற்றில் இனிது வாழமுடியும். மகாபாரதம் முதல் சம்ஸ்கிருத காவியங்களில் வனவர்ணனை என்பது முதன்மையான அழகியல்கூறு. காடு நாவலின் அதே மனநிலையையும் சித்தரிப்பையும் ஆதிகவி வான்மீகியின் ராமாயணத்தில் சீதையும் ராமனும் காட்டில் வாழும் காலகட்டத்தில் காணலாம். இயற்கை பொலிந்து, காதல்கொண்ட இருவரைச் சூழ்ந்து நின்றிருக்கும் காட்சி அதில் உள்ளது. கம்பனின் ஆரண்யகாண்டமும் அப்படித்தான்.

அதற்கு முன்னரே காடு என்பது துறவோரும், ஞானம் தேடுவோரும் சென்று தங்குமிடமாகவே இருந்தது. வேதங்களின்மீதான மெய்ஞான உசாவல்கள் எல்லாமே காடுகளில் நிகழ்ந்தன. ஆகவே அவை ஆரண்யகங்கள் எனப்பட்டன. ஆரண்யகங்களே உபநிடதங்கள் உருவான வேர்நிலம். அவற்றைப் பற்றிய நாவல் வெண்முரசு வரிசையில் சொல்வளர்காடு என தலைப்பிடப்பட்டது.

காளிதாசன் முதல் அனைத்து கவிஞர்களும் வனத்தின் அழகைப் பாடியவர்களே. இதை எழுதும்போது காளிதாசனின் வனஜ்யோத்ஸ்ன என்னும் சொல்லாட்சி நினைவிலெழுகிறது. வனத்தில் ஒளிரும் முழுநிலவு. அந்த நிலவொளி நம் காவியங்கள் அனைத்திலும் விரிந்துள்ளது

நமக்கு பாலைதான் சாவுநிலம். அங்கே வழிதவறியோர் சாகக்கூடும். தமிழில் மட்டுமல்ல இந்திய இலக்கியங்களில் முழுக்கவே பாலை பற்றிய சித்திரங்களே கொடூரமாக உள்ளன.

ஐரோப்பியர் காடு என்பதன்மீதான தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ள குகா சொன்ன காரணிகள் உதவியிருக்கக் கூடும். நமக்கு என்றுமே காடு ஒரு கனவுதான். காதலின் நிலம். தவநிலம்.

காடு நாவலில் காடு வெறுமே ஒரு நிலப்பின்னணி அல்ல. மானுடவாழ்க்கை வேறொரு வகையில் அங்கே செறிவுடன் நிகழ்கிறது. அதன் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு பொருளும் கவித்துவமான ஆழம் பெறுகின்றன. நகர்மேல் பொலிவதும் நிலவே. ஆனால் காட்டில் சுடரும் நிலவை பாருங்கள் (மாதந்தோறும் பார்க்கிறேன் இப்போதெல்லாம்) அதிலுள்ள பித்து முற்றிலும் வேறொன்று. அதை எழுத முயன்ற படைப்பு காடு

ஜெ

காடு அதிமதுரம் தின்ற யானை- அழகுநிலா

காடு- கதிரேசன்

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்

காடு இரு கடிதங்கள்

காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி

காடு – கடிதம்

முந்தைய கட்டுரைம.வே.சிவகுமார்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: ஆர்.பொன்னம்மாள்