உங்கள் எழுத்தை நான் சென்ற ஆண்டுதான் அறிமுகம் செய்துகொண்டேன். உங்கள் உரையைக் கேட்க பெங்களூருக்கு வந்திருந்தேன். அங்கிருந்து தொடங்கிய வாசிப்பு. இதுவரை உங்கள் நாவல்கள் எதையும் வாசிக்கவில்லை. ஓரிரு கதைகளை இணையதளத்தில் வாசித்தேன்.
புனைவுக் களியாட்டுக் கதைகளில் எட்டு வாசித்தேன். அதன்பின் ஓர் எண்ணம் வந்தது. கதைகளை இப்படி வாசிக்கக்கூடாது. நீங்கள் அவற்றை பொதுவான களம் என்னும் அடிப்படையில் தொகுத்து நூல்களாக ஆக்கியிருக்கிறீர்கள். அவற்றைத்தான் வாசிக்கவேண்டும். ஏனென்றால் ஒரு களத்தில் ஈடுபட்டு வாசித்தால் வாசிப்பனுபவம் முழுமையடைகிறது. ஒரு கதையின் அனுபவம் இன்னொன்றை வளர்க்கிறது.
இந்த தொகுதிகளில் பல கதைகள் அச்சில் மட்டுமே வெளிவந்தவை என நினைக்கிறேன். இணையத்தில் வாசித்தவர்கள் அந்தக்கதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்பதைக் கண்டேன். குறிப்பாக புனைவுக்களியாட்டுக் கதை வரிசையிலேயே உச்சமான மூன்றுகதைகள் படையல் தொகுதியில் உள்ள மங்கம்மாள் சாலை , துணைவன் தொகுதியில் உள்ள பனி ஆகிய கதைகள் மிக முக்கியமான்வை. உங்கள் கதைகளிலேயே உச்சமானவை.
இந்தக்கதைகளை வாசித்துக்கொண்டே சென்றபோது எனக்குப் பட்டது ஒன்று உண்டு. பத்துலட்சம் காலடிகள், ஆயிரம் ஊற்றுகள், தங்கப்புத்தகம் எல்லாம் நாவலாகவே எழுதியிருக்கத் தக்கவை. ஒன்றையொன்று தொடர்புள்ள கதைகள். படையல் கூட அப்படிப்பட்ட கதைத்தொகுப்புதான். இந்தக் கதைகளை ஏன் தனிச்சிறுகதைகளாக எழுதவேண்டும்? ஒரே நாவலாக எழுதினால் அவை இன்னும் ஆழமாக மனதில் பதியும் அல்லவா?
கிருஷ்ணா
அன்புள்ள கிருஷ்ணா
நாவல் என்பது வேறு, சிறுகதை என்பது வேறு. நாவல் என்ற பேரில் தனித்தனிக் கதைகள் அல்லது நிகழ்வுகளின் தொகுப்பை எழுதுபவர்கள் உலகமெங்கும் உண்டு. அந்தக் கதைகளுக்கிடையே இணைப்பை உருவாக்கிக்கொள்ளும் பொருட்டு வாசகன் தத்தளிப்பதை படைப்பின் மர்மச்சுழல்பாதை என விவரித்துக்கொள்வார்கள். எனக்கு அத்தகைய உத்திகளில் ஆர்வமில்லை. நான் கதையில் உத்தி என எதையுமே செயற்கையாகச் செய்வதில்லை. நாவல், சிறுகதை இரண்டிலுமே செவ்வியல் வடிவங்கள் மீதுதான் என் ஆர்வம்.
என் ஆர்வமிருப்பதெல்லாம் மானுடர்களின் வாழ்க்கைத் தருணங்களில்தான். அவற்றை நான் நடித்துப் பார்த்து, அவற்றினூடாக என் உண்மைகளைக் கண்டடைகிறேன். அவற்றை வாசகர் நடித்துப்பார்த்து தங்கள் உண்மைகளைக் கண்டடையவேண்டும் என கதைகளாக முன்வைக்கிறேன். என் வரையில் கதைகளே முக்கியம், நான் இலக்கியவாதி என்பதை விட கதையாசிரியன் என்றே என்னைச் சொல்லிக்கொள்வேன். கதைகளை எழுதுவதில் உள்ள ஆர்வம் வேறெதிலும் இல்லை. கதைகளைச் சும்மா கற்பனை செய்யவே கூட எனக்கு பிடித்திருக்கிறது.
எல்லாமே கதைகள்தான். நீங்கள் சொன்ன பனி போன்ற கதைகள் ஃபின்லாந்து சென்று உறைபனியில் அமைதியுடன் இருண்டு கிடந்த காடுகளைக் கண்ட அனுபவத்தில் இருந்து உருவானவை. இன்னும் கண்ட நிலங்கள் ஏராளம். நிகழ்த்திக்கொண்ட வாழ்க்கைகள் ஏராளம். இன்னும் சிலநூறு கதைகளையாவது என்னால் எழுதிவிடமுடியும் என தோன்றுகிறது.
நாவலுக்கும் கதைகளுக்கும் ஒரே வேறுபாடுதான். நாவல் அத்தனை நிகழ்வுகள் வழியாகவும் ஒரே கேள்வியை உசாவிச்செல்கிறது. வாழ்க்கை, இயற்கை, பிரபஞ்சம் சார்ந்த கேள்வியை. சிறுகதை ஒரே கேள்வியை கேட்டு உடனே நின்றுவிடுகிறது. ஒரு கதைக்குள் உள்ள கேள்வி எவ்வளவு பெரிதாக முளைக்கும் என்பதுதான் ஒன்று கதையா நாவலா என்பதை தீர்மானிக்கிறது. சிறுகதையாக எழுதத் தொடங்கிய பல நாவல்களாக ஆகியிருக்கின்றன. கன்யாகுமரி, இரவு, அனல்காற்று ஆகியவை. நாவலாக நினைத்திருந்தவை சிறுகதையாகவே நின்றுவிட்டிருக்கின்றன. அதிலொன்றுதான் மங்கம்மாள் சாலை. அது அந்த சத்திரத்தில் முனைகொண்டுவிட்டது, ஆகவே அங்கேயே அதன் முழுவெளிப்பாடும் நிகழ்ந்துவிட்டது. விளைவாக நாவலாக ஆகவில்லை.
கதைகள் எனக்கு ஒரு விந்தையான உணர்வை அளிக்கின்றன. பல துளித் துளிக்கனவுகளில் பல வாழ்க்கைகளை வாழ்ந்து முடித்ததுபோன்ற ஓர் உணர்வு உருவாகிறது. சட்டென்று நிகழ்ந்து முடியும் அவ்வுலகு எனக்கு மிக நீளமானது, முழுமையானது. பலசமயம் கதைகளைப் பற்றிச் சிலர் சொல்லும்போது நான் அவற்றை நாவலாக எழுதினேனா என்னும் உளமயக்கம் எனக்கு ஏற்படுகிறது
ஜெ