’பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் முதன்மையாக ஸ்டாலின் காலகட்டத்தின் மானுடஅழிவையும் படுகொலைகளையும் முன்வைப்பது. இன்றைக்கு ஒரு கூட்டம் இடதுசாரிகள் ஸ்டாலினின் ஆட்சிக்காலக் கொடுமைகள் பற்றிய எல்லா பதிவுகளும் பொய்ப்பிரச்சாரங்கள் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். அவையெல்லாம் ஏகாதிபத்தியப் பொய்பிரச்சாரம் என எழுதுகிறார்கள். என் நண்பர்களிலேயே சிலர் அதை நம்பி பின் தொடரும் நிழலின் குரல் நாவலும் அப்படிப்பட்ட ஒரு அரசியல்சார்ந்த பொய்ப்பிரச்சாரம்தான் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் இந்தக் கேள்வியை இப்படி முன்வைப்பேன். ஸ்டாலின் காலகட்டத்தின் அழிவுகள் பற்றி பின் தொடரும் நிழலின் குரல் முன்வைக்கும் தரவுகளுக்கு ஆதாரம் உண்டா? (உதாரணமாக, மக்ஸீம் கோர்க்கி ஸ்டாலினால் கொல்லப்பட்டார் என நீங்கள் எழுதியுள்ளீர்கள். ஆனால் அவர் இயற்கையாக மறைந்தார் என்றுதான் வரலாற்றுச் செய்தியிலேயே உள்ளது)
சரவணன் முருகானந்தம்
அன்புள்ள சரவணன்,
பின்தொடரும் நிழலின் குரல் ஸ்டாலின் காலகட்டத்து அழிவுகளை ‘வெளிப்படுத்தும்’ புலனாய்வு நூல் அல்ல. அதில் அரிய, தெரியவராத செய்திகள் ஏதுமில்லை. பொதுவெளியில் ஐயமற நிரூபிக்கப்பட்ட செய்திகள் மட்டுமே உள்ளன.
சோவியத் ருஷ்யாவே அதிகாரபூர்வமாக ஸ்டாலின் காலகட்டத்து அழிவுகளை அறிவித்தது. கொல்லப்பட்ட பலரின் வழக்குகள் திரும்ப விசாரிக்கப்பட்டு, அவர்கள் அநீதியாக கொல்லப்பட்டனர் என அறிவித்தது. அதில் ஒன்றுதான் 1935ல் நிகழ்ந்த நிகலாய் புகாரின் வழக்கு. 1988 ல் அது மறுவிசாரணைக்கு வந்தது. அன்னா புகாரினினா சாட்சியமளித்தார்.1938 ல் கொல்லப்பட்ட புகாரின் விடுதலை செய்யப்பட்டார். அதையொட்டியே பின் தொடரும் நிழலின் குரல் நாவல் எழுதப்பட்டது.
புகாரின் ஸ்டாலின் காலகட்டத்திலேயே ஸ்டாலின் சாமானிய மக்களை கொன்று குவித்ததை மிகுந்த குற்றவுணர்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். அத்தகைய நேரடி ஆவணப் பதிவுகள் குறைந்தது இருநூறாவது இன்று கிடைக்கின்றன. டிராட்ஸ்கி முதல் சைமன் பெட்லியூரா வரையிலான அரசியல் தலைவர்கள், ஆசிப் மாண்டல்ஸ்டம் போன்ற கலைஞர்கள் கொல்லப்பட்டதும் கொடுமைப்படுத்தப்பட்டதும் எழுதப்பட்டுவிட்ட வரலாறு. அலக்ஸாண்டர் சோல்ஷெனிட்ஸின், போரீஸ் பாஸ்டர்நாக் வரையிலான பல்வேறு இலக்கியவாதிகளால் விரிவாக, உணர்ச்சிகரமாக பதிவுசெய்யப்பட்ட மானுட அழிவு அது.
1992 ல் சோவியத் ருஷ்யா வீழ்ச்சி அடைவது வரை அவையெல்லாம் ஏகாதிபத்தியக் கட்டுக்கதைகள் என்று கம்யூனிஸ்டுகள் சொல்லிக்கொண்டிருந்தனர். 1992 முதல் ஒரு பத்தாண்டுக்காலம் ஸ்டாலினை நிராகரித்தனர். ஏனென்றால் அப்போது எல்லாமே மறுக்கமுடியாதபடி அப்பட்டமாக முன் வைக்கப்பட்டு விட்டிருந்தன. ஆகவே அவர்கள் ஸ்டாலின் உருவாக்கிய அழிவுகள் ‘தவிர்க்கமுடியாதவை’ என்றோ ‘மார்க்ஸியச் செயல்திட்டத்தில் நிகழ்ந்த பிழைகள், மார்க்ஸியத்தின் குறைபாடால் விளைந்தவை அல்ல’ என்றோ திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தனர்.
பல ஆண்டுக்காலம் சோவியத் ருஷ்யாவில் வாழ்ந்த ரகுநாதன் போன்ற மார்க்ஸியர்கள் அவர்களின் கட்சி இதழான தாமரையிலேயே அவ்வாறு ஸ்டாலின் கால கொடுமைகளை நிராகரித்தும், மார்க்ஸியத்தின் தத்துவத்துடன் அதற்குச் சம்பந்தமில்லை என்றும் எழுதியுள்ளனர். ஆனால் சோவியத் அழிவுகள் மெல்ல காலத்தில் பின்னகர்ந்து வரலாறாக ஆனபின்னர் மீண்டும் அவை நிகழவே இல்லை என விவாதிக்க ஆரம்பித்துவிட்டனார். ஏனென்றால் இனி வரலாற்றை கொஞ்சம் கொஞ்சமாக திரிக்கலாம்.
(ஒரு ஸ்டாலினிஸ்டை நான் ஸ்டாலினிஸ்ட் என்று 1999ல் சொன்னேன். அவர் தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும், தான் ஸ்டாலினின் கொலைவெறியாட்டை நிராகரிப்பவர் என்றும் சாமியாடினார். 2010ல் அவரே ஸ்டாலினை நியாயப்படுத்தி, ஸ்டாலின் கால அழிவுகள் எல்லாமே கட்டுக்கதைகள் என்று பேச ஆரம்பித்தார்)
உலகம் கண்ட மாபெரும் கொடுங்கோலனும் தன் நாட்டுமக்களில் ஐந்தில் ஒருபகுதியினரை கொன்றவனுமாகிய கம்போடியாவின் போல்பாட்டை மார்க்ஸியர் இருபதாண்டுக்காலம் நியாயப்படுத்தினர். இன்று சீனாவே ஏறத்தாழ ஏற்றுக்கொண்டுவிட்டாலும்கூட மானுடப் பேரழிவுகளை உருவாக்கிய மாவோ சே துங்கின் கொடுங்கோன்மையை நம்மூர் மார்க்ஸியர் ஏற்க மறுக்கிறார்கள். உலகிலுள்ள எல்லா அழிவுசக்திகளுக்கும் அப்படி அதிதீவிர ஆதரவாளர்கள் உள்ளனர். கம்போடியாவில் போல்பாட்டை பெரும் புரட்சியாளர் என நம்புபவர்கள் உள்ளனர் என அங்கே சென்றபோது கண்டேன், அதிர்ந்தாலும் ஆச்சரியப்படவில்லை.
இது மத மனநிலை. மதம் என்பது ஒருவகை மூடத்தனமான நம்பிக்கையையே அடித்தளமாகக் கொண்டது. அதற்கு உண்மை முக்கியமல்ல. எந்த தரவையும் எப்படியும் திருத்தியும் திரித்தும் அது வாதிடும். அதன் மூர்க்கமான ஒற்றைப்படை நம்பிக்கையை மறுக்கும் எவரையும் அது எதிரியெனவே கருதும். அழித்தொழிக்கவே முயலும். ஸ்டாலின் காலகட்டத்துக் கொடுமைகளை நிகழ்த்தியதும் அந்த மனநிலைதான். அது அடிப்படையான ஒரு மானுட உளவியல், எளிதில் மாறாது. அவர்களுடன் விவாதிக்கவே இயலாது.
அந்த மனநிலையை எல்லா தரப்பிலும் நீங்கள் காணமுடியும். தமிழ்த்தேசியர்கள், இந்துத்துவர்கள், திராவிடத்துவர்கள் எல்லாமே ஒரே வார்ப்புதான். கருத்தியல் நோயாளிகள் இவர்கள். எவர் மீதும், எதன்மீதும் இவர்களுக்கு மதிப்பில்லை. ஏனென்றால் உண்மை, நேர்மை எதன்மேலும் நம்பிக்கை இல்லை. தங்கள் நிலைபாடுக்காக எதையும் செய்வார்கள்.
பின் தொடரும் நிழலின் குரல் மார்க்ஸியம் மீதான விவாதம் மட்டும் அல்ல. ஸ்டாலின் கால அழிவுகளை வெளிப்படுத்துவது அதன் நோக்கமும் அல்ல. மதமோ, அரசியலோ, நிறுவனமயமாக்கப்பட்ட நம்பிக்கைகளும் கருத்தியலும் உருவாக்கும் இந்த கண்மூடித்தனமான மூர்க்கத்தை, இதன் விளைவான அழிவை விவாதிப்பதே அதன் நோக்கம். அதாவது எந்த மாயையால் நீங்கள் குறிப்பிடுபவர்கள் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்களோ அந்த மாயையைத்தான் பின் தொடரும் நிழலின் குரல் விவாதிக்கிறது. கொஞ்சமேனும் திரைவிலகி அந்த மாயையை தாங்களே பார்க்க ஆரம்பித்துவிட்டவர்களால் மட்டுமே அந்நாவலை வாசிக்கமுடியும். அந்த வட்டத்திற்குள் இருப்பவர்களால் அதை வாசிக்கவோ உள்வாங்கவோ முடியாது.
கார்க்கியின் மரணம் பற்றி. கார்க்கியின் மரணம் ஸ்டாலின் ஆட்சிக்காலக்கொலைதான் என்பதை முன்வைத்தவர் ஸ்டாலின் ஆட்சியின் உளவாளியாக இருந்தவரும், தன் உயிருக்கு ஆபத்து வருகிறது என்று தெரிந்ததும் கட்சிதாவியவருமான இகோர் குஷெங்கோ. The Fall Of A Titan என்னும் நாவலாகவும் அதை எழுதியுள்ளார். நான் அதை நம்புகிறேன். ஏனென்றால் நான் கார்க்கி என்னும் படைப்பாளியின் மனசாட்சியை நம்புகிறேன். அவர் தன் கடைசிக்காலத்தில் பேசியவை எழுதியவை எல்லாம் கட்டாயத்தின்பேரில் செய்தவை என்றே நினைக்கிறேன்.
கார்க்கி ஸ்டாலின் கால கொடுமைகளை நியாயப்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் எல்லை கடந்து அதைச்செய்ய உடன்படாதவரானார். இல்லச்சிறையில் வைக்கப்பட்டார். அவருடைய மகன் மர்மமான நோயால் மரணமடைந்தார். தொடர்ந்து அவரும் மரணமடைந்தார். அவர் நிமோனியாவால் இறந்தார் என்று ரஷ்யத்தரப்பு ஆவணங்கள் சொன்னாலும் அவர் ரஷ்ய உளவுத்துறை தலைவர் யகோதாவால் நஞ்சூட்டப்பட்டா என்று நூற்றுக்கணக்கான ஆவணக்குறிப்புகளைச் சுட்டிக்காட்டி ஆய்வாளர்கள் இன்று நிறுவுகின்றனர்.
நான் அமெரிக்க அல்லது ஐரோப்பிய சித்தரிப்புகளையும் ஏற்பவன் அல்ல. ஸ்டாலின் அல்லது மாவோ அல்லது போல்பாட் இழைத்த மானுட அழிவுகளை அம்பலப்படுத்தியது அமெரிக்க, ஐரோப்பிய ஊடகம்தான். ஆனால் அதுதான் பிரான்ஸின் சார்ல்ஸ் டிகாலையும், ஸ்பெயினின் ஃப்ராங்கோவையும் ஆதரித்து நின்றது. ஆகவே அது நடுநிலையான தார்மிக சக்தி அல்ல. ஆனால் அதே காரணத்தால் அது முன்வைக்கும் எல்லாமே பொய் என்றும் சொல்ல மாட்டேன்.
நான் முதன்மையாக நம்புவது படைப்பாளிகளைத்தான். இதழியல் செய்திகளை, அரசியல் அறிக்கைகளைவிட புனைகதைகளே உண்மைக்கு அணுக்கமானவை. நான் பாஸ்டர்நாக்கையும் ஷோல்செனிட்ஸினையும் நம்புகிறேன். பின் தொடரும் நிழலின் குரல் அவர்களுக்கான இலக்கியக் காணிக்கை.
பின்தொடரும் நிழலின் குரல் ஸ்டாலின் அல்லது ரஷ்யா பற்றியதல்ல. கம்யூனிஸம் பற்றியதுகூட அல்ல. அவையெல்லாம் பழங்கதைகள். அது பேசுவது மானுடத்தை ஆட்டிப்படைக்கும் ’கருத்தியல்நோய்’ பற்றி. அது எங்கோ ரஷ்யாவில் இருந்த ஒன்று அல்ல. நம்மைச்சுற்றி இருப்பது, ஒவ்வொருநாளும் நாம் எதிர்கொள்வது, அதைத்தான் உங்கள் கடிதமும் சுட்டிக்காட்டுகிறது. அது இங்கே வெறும் சமூகவலைத்தள வாயலம்பலாக உள்ளது, ஆனால் கொஞ்சம் அதிகாரம் கைவருமென்றால் அதற்கு குருதிவெறி உருவாகும் என்பதையே வரலாறு மீண்டும் மீண்டும் காட்டுகிறது.
ஜெ
உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது?
உக்ரேன், உண்மை உருக்கப்படுவது பற்றி…