உதிர்தல்பற்றி

மதிப்பிற்குரிய ஜெ.,

உதிர்தல் கட்டுரையிலுள்ள  கவிதை படித்தேன்.மூன்றாவது வரி.சின்ன பொம்மைப்பட வீரன் என்றிருக்கிறது. சின்ன படைவீரன் பொம்மை என்றிருப்பது சரியாயிருக்கும். மொழியாக்கம் பற்றி நீங்கள் சொன்னதை மனதில் கொள்கிறேன். அக்கவிதையை எடுத்து எழுதியிருந்ததற்கு நன்றி.

நீலக்கண் குட்டிப்பயல் , வளரந்து பெரியவனாகி, தன் குழந்தைமையை தொலைத்து விட்டான் என்பதாகவே புரிந்துகொண்டேன். பின், உங்களின் விளக்கத்தைப் படித்தபோதும், பலவருடங்கள் கடந்துவிட்ட என்ற ஒரு குறிப்பிலிருந்தும் , அவன் மரணமடைந்துவிட்டான் எனபது புரிந்துகொள்ள முடிந்தது.

/இந்தக்கவிதை என்ன சொல்கிறது என்று என்னால் வகுத்துச் சொல்ல முடிவதில்லை./

என்று சொல்லியிருக்கிறீர்கள். எதையும் மிக அற்புதமாக வரையறுத்துச் சொல்லும் திறன் பெற்றவர் நீங்கள் எனகிற என் கருத்துக்களுக்கு ,பல மேற்கோள்களை என்னால் சொல்லமுடியும்.முகுந்த் நாகராஐன் பற்றிய அண்மைய இடுகை, சிறு உதாரணம். நீங்களே , இவ்வாறு சொல்லியிருப்பது, எனக்கு ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆமாம், உங்களால் அதை வரையறுத்து என்ன சொலகிறது என்பதைச் சொல்லிவிட முடியும். ஆனால், உங்கள் மனம் அதில் விழையவில்லை.

கவிதைகள் அளிக்கும் உணர்வுகள் இன்னதென்று, அறுதியிட்டுக் கூற முடியாத நிலையிலும், அல்லது, விரும்பாத நிலையிலும், ஏன், முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத சில நேரங்களிலும் கூட , பல்வேறு உணர்வுகளை, சலனங்களை ஏற்படுத்திவிடுகிறது.இதுதான் நவீன கவிதைகளின் ருசியென நான் கருதுகிறேன்.

நாம் நினைத்திருக்கிற ஒன்றேபோல,நாம் அனுபவித்த ஒன்றேபோல..பிறர் மிகச் சரியான சொற்பிரயோகங்களின் மூலம் சொல்லிவிடும்போது, ஏற்படுகிற குதூகலம், அல்லது ,கவிதை சார்ந்த உணர்வுகள் காரணமாயிருக்கலாம்..இந்நேரத்தில், எனக்கு மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

நன்றி,

ச.முத்துவேல்.

அன்புள்ள முத்துவேல் அவர்களுக்கு

அது அச்சுப்பிழை, மாற்றிவிட்டேன்,நன்றி.

கவிதையை விளக்குவது இருவகை. நான் ஒரு கவிதையை ரசிப்பதற்கான முகாந்தரங்களைச் சொல்ல முற்படுவேனே ஒழிய அக்கவிதை என்ன சொல்கிரது என வகுத்துக்கூற முற்படுவதில்லை. அபப்டிச் சொல்லும்போது கவிதை மிகவும் பலவீனமடைந்துவிடுகிறது என்பது என் எண்ணம்.

பலசமயங்களில் மிக எளிமையான கவிதைகள், ஆழ்பொருள் ஏதுமில்லாமல் அம்மணக் குழந்தை போல ஓடிவந்து கைநீட்டி நம் இடுப்பில் ஏறிக்கொள்கின்றன. அவற்றைப் பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை. ஆம், நீங்கள் சொல்வது சரி, சொல்ல நாம் விரும்புவதில்லை

ஜெ

அன்புள்ள ஜெ..


   
பொம்மைகளையும் ,தேவதைகளையும் காணும் குட்டிப்பையனின் பார்வை ,வளர வளர ஒவ்வொருவரிடமும் இருந்து சிறிது சிறிதாக மறைந்து விடுகிறது! Being realistic and practical, என்ற தளத்தில் மனிதர்கள் வாழ்வின் சுவையை மறந்து விடுகிறார்கள் !ஆங்கிலத்தில் “Act like a grown up!ACT like a mature person” என்று சொல்லுவதிலேயே நீங்கள் அவ்வாறு நடியுங்கள் என்பது தெளிவாகிறது. எனவே நடிப்பதே இயல்பாகி விடுகிறது! ஒருவர் வாழ்க்கையின் இனிமைகளை திறந்த மனதோடு ரசிக்க,வியக்க ,வாழ  ஒரு குழந்தையின் unbiased  கண்ணோட்டம் தேவைப்படுகிறது! வாழ்கையில் பண்பட்டு அறிவில் முதிர்தல் தேவை..ஆனால் வாழ்வை ரசிக்கக்கூடிய குழந்தை போன்ற மனமும் வாழ்வை ருசிக்க தேவை! Unfortunately,பெரும்பான்மையான மக்கள் முன்னதை கடைபிடிக்காது  விடுத்து பின்னதை எள்ளி நகையாடி ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்தல் வருத்ததிற்குரிய ஒன்று!


இன்றும் குழந்தைகளின் வடிவான பொம்மைகளை ரசித்தும்,கனவில் தேவதைகளை கண்டும் வாழ்ந்து வரும்…

 

நிலா

 

அன்புள்ள நிலா
இறப்பே அர்த்தமில்லாதது. மானு ட அர்த்தம். அதிலும் குழந்தைகளின் இறப்பு என்பது கடவுள் விடுக்கும் புதிர் போன்ரது. எல்லா காலத்திலும் மனித மனம் அதன் முன் கையறுநிலை கொண்டிருக்கிறது. குழந்தைமையின் இழப்பும் ஒருவகை இறப்பே

 


ஜெ

 

உதிர்தல்

வீடு

முந்தைய கட்டுரைஆதிச்சநல்லூர் சிதம்பரம்
அடுத்த கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்