புத்தகப்பதிப்பின் வீழ்ச்சி

வாசகர்கள் இல்லையா?

வாசிப்புப் பழக்கம் குறைவது பற்றிய விவாதத்தின்போது நண்பர்கள் எழுப்பிய முதன்மையான வினா அது நம் கல்வி வீழ்ச்சியைக் காட்டுகிறதா என்பதுதான். உண்மையில் இதை அவ்வளவு துல்லியமாகச் சொல்லிவிடமுடியாது. நம் கல்வியின் தரம் குறைவு என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

தமிழகத்தின் மாபெரும் கல்விமையங்கள் (Education hubs) என்று சொல்லப்படும் நகரங்களில் புத்தகவிற்பனை அறவே இல்லை என்னும் நிலைதான் உள்ளது. மாபெரும் தமிழ்ப்பற்கலைக்கழகம் செயல்படும் தஞ்சையில் புத்தகங்களுக்குச் சந்தையே இல்லை, புத்தகக் கண்காட்சிகளும் இல்லை. அதைவிடப் பெரிய கல்விமையமான கோவையின் புத்தகவிற்பனை என்பது மிகமிகக்குறைவு.  சென்னை புத்தகக் கண்காட்சி மட்டுமே இப்போதைக்கு பதிப்பாளர்களுக்கு சற்றேனும் லாபகரமானது.

ஏன்? இங்கே கல்வி என்பது பாடநூல்களை பயில்வது மட்டுமே. அதுவும் பாடநூல்களை அச்சு அசலாக அப்படியே மூளைக்குள் நகலெடுத்து தேர்வில் பதிவுசெய்யும் மாணவரே தலைசிறந்தவர். அவர் வெற்றிமேல் வெற்றிபெற்று உயர்நிலைகளை அடையமுடியும். நம் கல்விக்கு பாடநூல்களுக்கு வெளியே நூல்களே தேவையில்லை. சொல்லப்போனால் பாடநூல்கள்கூட தேவையில்லை, வழிகாட்டிநூல்களே போதுமானவை.

பதிப்புத்தொழிலில் தேக்கம் உள்ளதா?

பதிப்பகத் தொழில் தமிழகத்தில் இன்று நலிந்த நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் புத்தகப்பதிப்பு என்பது குடிசைத்தொழிலாகவே நிகழ்ந்து வந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு புத்தகக் கண்காட்சிகள் வழியாக ஒரு வளர்ச்சி உருவானபோது  பல புதிய புத்தகவெளியீட்டு நிறுவனங்கள் உருவாயின. ஆனால் அவையெல்லாமே வளர்ச்சிகுன்றி நின்றுவிட்டன. பல பெரிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட நின்றுவிடும் நிலையில் உள்ளன. மீண்டும் புத்தகவெளியீடு குடிசைத் தொழில்நிலைக்குச் சென்றுவிட்டது. அதாவது உரிமையாளரே உழைப்பாளியாகவும் இருந்து, குறைவான முதலீட்டில் நடத்தினாலொழிய இன்று பதிப்பகங்கள் வாழமுடியாத நிலை.

பதிப்புத்தொழில் தேக்கத்திற்கான காரணங்கள் என்ன?

பதிப்பகத் தொழிலின் தேக்கநிலைக்கான காரணங்கள் பல. அவற்றைப்பற்றி பதிப்பாளர்களின் பேச்சுகளில் இருந்து இவ்வாறு சொல்லலாம்

  • நீண்டகாலமாகவே தமிழ் பதிப்புத்துறை நூலக ஆணையை நம்பியே இருந்தது. சென்ற இருபதாண்டுகளாகவே நூலக ஆணை சீராக வருவதில்லை. பல ஆண்டுகள் நூல்களே வாங்கப்படுவதில்லை. வாங்கப்பட்டால் பலவகை ஊழல்கள்.ஒரு பதிப்பகம் இன்று எவ்வகையிலும் அதை நம்பி நடைபெற முடியாது.
  • பதிப்பகங்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தவை புத்தகக் கண்காட்சிகள். ஆனால் அண்மையில் சிற்றூர்களில் புத்தகக் கண்காட்சிகள் நிகழ ஆரம்பித்தபோது பதிப்பகங்களுக்கு அதனால் லாபமே இல்லாமல் ஆகிவிட்டது.
  • தனிப்பட்ட முறையில் நூல்களை வாங்கியவர்கள் இருபதாண்டுகளில் மெல்லமெல்ல பழைய தலைமுறையினராக ஆகிவிட்டனர். புதியதலைமுறை வாசகர்களும், புத்தகம் வாங்குபவர்களும் மிகக்குறைவாகவே உள்ளனர்.

இன்று புத்தகங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. காரணம் நூறு அல்லது ஐம்பது பிரதிகளே அச்சிடப்படுகின்றன. விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆண்டுக்கு ஆயிரம் பிரதிகள் விற்பனையாகும் நூல்கள் ஐநூறுக்கும் குறைவானவையே.

புத்தகக் கண்காட்சிகளின் வீழ்ச்சி

புத்தகக் கண்காட்சிகள் தொடர்ச்சியாக பதிப்பகங்களுக்கு ஏமாற்றமளிப்பவையாக ஆகிக்கொண்டிருக்கின்றனசிற்றூர்களில் அண்மையூர்களைச் சேர்ந்த சிறு கடைக்காரர்களே கண்காட்சியில் கடைபோடமுடியும்பதிப்பகங்கள் நேரடியாகக் கடைபோடமுடியாது, கடைபோடும் செலவுக்குக்கூட நூல்கள் விற்பதில்லை. சிறுகடைகளுக்கு அவர்கள் கோரும் லாபம் அளித்து நூல்களை அளித்தால் பதிப்பகத்துக்கு மிகக்குறைவான லாபமே எஞ்சும், அல்லது அதுவும் எஞ்சாது.

உள்ளூர்க்கடைக்காரர்கள் பலசமயம் எழுத்தாளர்களே சொந்தப்பணத்தால் அச்சிட்டு கிட்டத்தட்ட சும்மாவே அளிக்கும் உள்ளூர் நூல்களையே காட்சிப்படுத்துகிறார்கள். உள்ளூர் நூலகங்களும் அவற்றை வாங்கி அடுக்கிவிடுகின்றன. அதனால் நூலகங்களுக்கு நூல்களை வாங்குபவர், விற்பவர் அனைவரும் லாபம் அடைகின்றனர். இது நடைமுறையில் உள்ளூர் நூலாசிரியர்களின் முதலீட்டுப் பணத்தை பங்கிட்டுக்கொள்ளுவதுதான். நல்ல நூல்கள் விற்பனையாவதில்லை. சிறிய ஊர்களில் அவை கிடைப்பதே இல்லை.

நான் நாகர்கோயில் புத்தகக் கண்காட்சியில் இதை திகைப்புடன் பார்த்திருக்கிறேன். முக்கால்வாசி நூல்கள் நாகர்கோயிலில் யாரென்றே தெரியாதவர்கள் அச்சிட்டு அடுக்கியிருக்கும் கவிதைகள், கதைகள். பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம், அறிவியக்கம் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் சிலர் நூறு நூல்களைக்கூட வெளியிட்டிருக்கிறார்கள். எவருமே அவற்றை படிப்பதில்லை. காகிதம் நூல்களாகி நூலகங்களுக்குச் சென்று அப்படியே மட்கி அழிகிறது. அது எந்த வகையிலும் அறிவியக்கத்துக்கு உதவுவது அல்ல, அறிவுச்செயல்பாட்டுக்கே எதிரான ஒரு நிகழ்வு.

ஆனால் இதன் விளைவாக பெருநகர்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சியின் விற்பனை வீழ்ச்சி அடைந்து அங்கும் பதிப்பகங்கள் நஷ்டமடைகின்றன. முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல்களை வாங்க செங்கல்பட்டு, காஞ்சீபுரம் என பல ஊர்களில் இருந்து வருவார்கள். அங்குள்ள நூலகங்களுக்கு நூல்களை வாங்குவார்கள். இன்று அந்தந்த ஊர்களில் அச்சிடப்படும் உள்ளூர் சரக்குகளைக்கொண்டு நூலகங்களை நிரப்பிவிடுகிறார்கள். சென்னை விற்பனையே குறைந்துவிட்டிருக்கிறது.

நூல்களை கொண்டுசென்று சேர்ப்பதில்லையா?

பலர் சொல்வது, நூல்கள் கொண்டுசென்று சேர்க்கப்படுவதில்லை என்று. ஆனால் அது உண்மை அல்ல. இரண்டு வகைகளில் நூல்களைக் கொண்டுசென்று சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

  • கிழக்கு போன்ற பதிப்பகங்கள் அனைவரும் வாசிக்கத்தக்க நூல்களை பெட்டிக்கடைகள் வரை கிடைக்கும்படிச் செய்தன. அம்முயற்சி பெரும் இழப்பையே சந்தித்தது
  • சிற்றூர்களில்கூட அரசு முயற்சியால் புத்தகக் கண்காட்சிகள் நிகழ்கின்றன. ஆனால் அங்கே எங்குமே பெரிய அளவில் நூல்கள் விற்பதில்லை. தரமான நூல்களின் விற்பனை மிகமிகக் குறைவாகவே உள்ளது.

புத்தகம் என்பது ஒரு நுகர்பொருள் அல்ல. அதை சந்தைப்படுத்தினால் விற்றுவிட முடியாது. நூல்விற்பனை நூல்வாசிப்புடன் இணைந்தது. நூல்வாசிப்பு கலாச்சாரம் சார்ந்தது. ஒரு சமூகத்தில் வாசிப்பு ஒரு மக்களியக்கமாக ஆனாலொழிய நூல்விற்பனை பெருகாது. அது இங்கே இப்போது நிகழ்வதில்லை. நூல்களுக்கான தேவையே நம் சமூகத்தால் உணரப்படுவதில்லை.

இன்றைய அரசியலியக்கங்களும் நூல்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவற்றுக்கான பிரச்சாரத்திற்கு இணைய ஊடகமும் காட்சியூடகமுமே போதும் என அவை நினைக்கின்றன. கல்வித்தளத்திலும் நூல்களின் இடம் இல்லாமலாகிவிட்டது. கல்விநிலையங்களின் நூலகங்கள் செயலற்று பாழடைந்து கிடக்கின்றன.

*

ஆனாலும் நூல்களை அச்சிடுவோம். வெளியிடுவோம். நூல்கள் வழக்கொழிந்தால் அன்றுள்ள வடிவில் நூல்களின் உள்ளடக்கம் வெளிவரும். ஏனென்றால் அறிவியக்கம் நிகழ்வது அறிவியக்கத்தை நிகழ்த்தியே ஆகவேண்டும் என மனிதனின் அகத்தில் எழும் விசையால் மட்டுமே. அறிவியக்கத்தால் மட்டுமே  நிறைவுறும் துடிப்பு ஒன்று மனிதனுக்குள் உள்ளது. வெளியே உள்ளவர்களால் புரிந்துகொள்ளவே இயலாத ஒன்று அது.

 

முந்தைய கட்டுரைஆத்ம சூக்தம்
அடுத்த கட்டுரைதத்துவம் செயலின்மைக்கு இட்டுச்செல்லுமா?