ஆனந்தராகம்

ஆனந்தபைரவி, அல்லது அதன் சாயல்கொண்ட பாடல்களை காலைவேளையின் நிறைவுக்காகக் கேட்பது பலருக்கும் வழக்கம், அப்படிப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னுடைய தெரிவு இரவு தூங்கப்போகும்போது அவற்றைக் கேட்பது. குறிப்பாக மிகக்கடைசியாகக் கேட்கும்பாடல் அந்த ராகச்சாயல் கொண்டிருந்தால் நன்று. அது ஒரு மெல்லிய மீட்டலாக நின்றிருந்தால் ஆழ்ந்த உறக்கம் உறுதி.

ஆனந்த பைரவியின் அமைப்பே ஒருவகையான பரந்துவிரியும் உளச்சித்திரத்தை உருவாக்குகிறது. ஒருவேளை அது மலையாளப்பண்பாட்டினருக்கு அப்படி தோன்றுவதாகக்கூட இருக்கலாம். ஏனென்றால், கேரளத்தின் கணிசமான நாட்டார்ப்பாடல்கள் ஆனந்தபைரவி சாயல் கொண்டவை. குறிப்பாக திருவாதிரைக்களி எனப்படும் நாட்டார் நடனம். (கீழே அளிக்கப்பட்டிருக்கும் இரு மலையாளப்பாடல்களிலும் ஆனந்தபைரவி என்னும்போதே கவிஞர்களுக்கு ஆதிரை நினைவுக்கு வந்திருப்பதைக் காணலாம்)

வயல்வெளிகள் மேல் காற்று அலைகொண்டுசெல்லும் உணர்வை ஆனந்த பைரவி எனக்கு அளிக்கிறது. கரைகளென அமைந்த தென்னைத்திரள்களில் அந்த அலை வானை உரசியபடி அசைகிறது. (அதுவும் ஆச்சரியம்தான், கீழே உள்ள இரண்டு பாடல்களிலும் கவிஞர்களுக்கு இலைத்தழைப்புகள் அலைந்தாடுவதாகவே ஆனந்தபைரவி காட்சிவடிவமாகிறது)

சிங்கார வேலவன் வந்தான் எந்தனை ஆள
சிங்கார வேலவன் வந்தான்

பொங்காதரவோடும் அடங்கா மகிழ்வோடும்
பெருங்காதலோடும் அய்யன் தங்கும் மயிலினிடை
துங்கவடிவினொடு சிங்கார வேலவன் வந்தான்

கந்தன் பணியும் அன்பர் சொந்தன் கருணை கொள்
முகுந்தன் மருகன் முருகன்
முந்தென் வினை பயந்த பந்தந்தொலைத்து அருளை
இந்தா இந்தா என்று ஏழைகுடி முழுதும் வாழ
அருள்புரிய சிங்கார வேலவன் வந்தான்

பாடல் பாபநாசம் சிவன்

பாடியவர் சௌம்யா

 

வால்நீட்டி விழிமையிட்ட மார்கழி நிலாவில்
மாம்பூவின் மணம் ஒழுகி வந்தது
திருவாதிரை நட்சத்திரம் ஆடும் தளிர் ஊஞ்சலாக
துளசிக்கதிர் அசைந்தது
நீட்டியிட்ட கூந்தல் அலைபாய்கிறது
கால்கொலுசு விழித்துக் கொள்கிறது
மங்கலப் பாலைமரத்தில் கந்தர்வன் வந்திறங்குகிறான்
விண்மீன் கொத்துகள் குலுங்கும் ஆனந்த பைரவியில்
தானமும் வர்ணமும் பாடுகின்றாள் தேன்சோலையெனும் பாடகி
என் தவச்சாலை நிலத்தில் அமுதம் பொழிகிறது
நாலுகட்டு வீட்டின் உள்ளே அன்னையே உலகமானாள்
தந்தை ஓதும் மந்திரத்துடன் உபநயனம் வரம் அருளியது
நெய்விளக்கின் பொற்கதிர் மங்கலம் அருளியது

 

பூவாம்குழலி பெண்ணினு உண்டு ஒரு

கிளுந்நு போலுள்ள மனசு

குஞ்ஞாய் விரிஞ்ஞு பொன்னிதழ் நிரந்நு

குளிர்ந்து உலஞ்ஞொரு மனசு

 

அக்கரக்காட்டில் ஆனமமல மேட்டில்

ஆதிரக் கன்னிக்கு ருதுசாந்தி

முத்தணி மாறத்ததே நாணம் பிடஞ்ஞப்போள்

மூகாம்பரமாகே துடி முழங்ஙீ

துடி முழங்ஙீ

 

ஆலோலம் காற்றில் பார்வள்ளி ஊஞ்ஞாலில்

பகலின்றே நீளும் நிழலாட்டம்

கைத்திரி கத்திச்சு காக்குந்ந்நோர் அந்திய

புல்குவான் கொதிக்குந்ந தரங்க கேளி

 

படம்: வாடகைக்கு ஒரு ஹ்ருதயம்

இசை தேவராஜன்

கவிஞர்: காவாலம் நாராயணப் பணிக்கர்

 

பூவார் குழல் கொண்ட பெண்ணுக்கு உள்ளது ஒரு

தளிர்போன்ற உள்ளம்

மொட்டென விரிந்து பொன்னிதழ் மலர்ந்து

குளிர்ந்து குலுங்கும் உள்ளம்

 

அக்கரைக் காட்டில் ஆனைமலை மேட்டில்

திருவாதிரைக் கன்னிக்கு முதலிரவு

முத்தணிந்த மார்பில் நாணம் துடித்தபோது

மோனத்திலாழ்ந்த வானத்திலெங்கும் துடி முழங்கியது

 

ஆலோலம் ஆடும் காற்றில்

முல்லைக் கொடியூஞ்சலில்

பகலின் நீளும் நிழலாட்டம்.

அகல்திரி கொளுத்தி காக்கும் அந்தியை

தழுவத்துடிக்கும் அலையாட்டம்!

 

முந்தைய கட்டுரைகட்டபொம்மன் வெள்ளையரால் தூக்கிலிடப் படவில்லை…!-கோவைமணி பேட்டி
அடுத்த கட்டுரைபொன்னொளிர் திசை -கடிதம்