தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு
அன்புள்ள ஜெ
கோவைமணி அவர்களின் பணிகளைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். மிகப்பெரிய சேவை ஆற்றியுள்ளார். தொடர்ச்சியாக முப்பதாண்டுகளுக்கும் மேலாக அறிவார்ந்த தளத்தில் பணியாற்றியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கொரு பாஸிடிவ் மனநிலை வேண்டும். எந்நேரவும் வெட்டிச்சண்டையில் ஃபேஸ்புக்கில் கிடப்பவர்களால் அதை புரிந்துகொள்ளவே முடியாது. உண்மையான ஆய்வாளர்கள் நம் சொசைட்டிக்குள் இல்லை. அவர்கள் இன்னொரு உலகத்திலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
அவருடைய சுவடியியல் குறித்த நூலை இணையத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். சுவடியியல் என்பது ஒரு தனி அறிவுத்துறை என்பதே எனக்கு இப்போதுதான் அறிமுகம். மிக விரிவாக அந்த துறையை அறிமுகம் செய்கிறார். அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.
சி.ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
நான் நண்பர்களுடன் நான் அரசு ஊழியர்களின் ஊதியம் பற்றிய கட்டுரையை வாசித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். பேராசிரியர்களின் சம்பளம் பற்றிய பேச்சு வந்தது. நான் கோவைமணி அவர்களை உதாரணம் காட்டினேன். அவரைப்போன்ற ஆய்வாளர்கள் ஏராளமானவர்கள் இங்கே இருக்கிறார்கள். ஒரு கௌரவமான வாழ்க்கைக்கான ஊதியம் அவர்களுக்கு இல்லை என்றால் அவர்களால் பணி செய்ய முடியாது. அவர்கள் எதிர்காலம் பற்றி கவலையே படக்கூடாது. உலகியல் சிக்கல்களே அவர்களுக்கு வரக்கூடாது. அப்போதுதான் அவர் ஆற்றியிருக்கும் பெரும்பணி சாத்தியமாகும்.
பேராசிரியர்களில் பலர் அதைச் செய்வதில்லை என்பது உண்மை. ஆனால் பத்துக்கு ஒருவராவது அரிய பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். கல்வெட்டியல், சுவடியியல், மொழியியல் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களின் பங்களிப்பு என்ன என்பதையே சாமானிய மக்களால் புரிந்துகொள்ள முடியாது. நம்மைப்போல ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் வேலைசெய்பவர்களின் ஊதியம் அறிஞர்களுக்கு அளிக்கப்படுவதில் என்ன பிழை? நம் பணியால் வணிகம் உருவாகலாம். ஆனால் சமூக நன்மை, பண்பாட்டுக்கு நன்மை என ஒன்றும் இல்லை. ஆகவேதான் அறிஞர்களுக்கு சிறந்த ஊதியம் தேவை என்று நான் சொன்னேன். கோவை மணி அவர்களின் பணி அரியது, அவருடைய உழைப்புக்கும் பங்களிப்புக்கும் வணக்கம்
ரங்கராஜ் ஶ்ரீனிவாசன
கோவைமணி தூரன் விருது, கடிதம்
கோவைமணி தூரன் விருது, கடிதம்
பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு -கோவைமணி. இணையநூலகம்
கோவைமணி தூரன் விருது, கடிதம்