தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு
அன்புள்ள ஜெ
முனைவர் கோவைமணி அவர்களின் இணையப்பக்கம் ஒன்றில் அவருடைய ஆய்வுப்பணிகள் மற்றும் கல்விப்பணிகளின் பட்டியல் அடங்கியுள்ளது. மிகப்பெரிய சேவை. அதுவும் சலிக்காமல் தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்துள்ளார் (முனைவர் கோவைமணி. பணிகள். இணையப்பக்கம்) அவருடைய காணொளிகளைப் பார்த்தேன் (முனைவர் கோவைமணி யூடியூப் சானல்) மிகக்குறைவானவர்களே அவருடைய இணையப்பக்கத்தையும் யூடியூப் காணொளிகளையும் பார்த்துள்ளனர். இன்றைய ஷார்ட்ஸ் காலகட்டத்தில் இதற்கெல்லாம் எந்த வகையான ஆதரவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும் முப்பதாண்டுகளில் அவருடைய ஊக்கம் எந்த வகையிலும் குறைவுபட்டிருப்பதைக் காணமுடியவில்லை.
அவரைப் போன்றவர்களால்தான் தமிழ் வாழ்கிறதே ஒழிய தமிழ் தமிழ் என்று அரசியல் வெறுப்பைக் கக்குபவர்களால் அல்ல. வெறுப்பைக் கக்குபவர்களுக்கு ஆய்வாளர்கள் மேல் அக்கறையும் இல்லை, மதிப்பும் இல்லை. இப்போதுகூட அவர்கள் இந்த விருதுக்காக ஓர் எளிய வாழ்த்தைக்கூட கோவைமணி அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை. ஆனாலும் தமிழ்மேல் பெரும்பற்றுடன் இப்படிப்பட்ட பணிகள் நிகழ்வது நிறைவளிக்கிறது.
கிருஷ்ணமூர்த்தி எம்.ஆர்.
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
இந்த விருது அறிவிக்கப்பட்ட பின் இதுவரை தமிழ் அறிவுச்சூழலில் அறியப்பட்ட ஆளுமைகள் எவரிடமிருந்தும் ஒரு சொல் கூட வாழ்த்து வரவில்லை. விதிவிலக்கு, கோவைமணி அவர்களின் நண்பரான மு.இளங்கோவன். எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மட்டும் அல்ல; வழக்கமாக இலக்கியம் சார்ந்து கருத்துக்கள் சொல்லும் வாசகர்கள்கூட வாழ்த்து சொல்லவில்லை. முகநூலில் இச்செய்தியை ஒரே ஒருவர் கூட பகிரவுமில்லை.
இது இங்குள்ள பொதுவான மனநிலை. இந்தப் பொதுவான சுரணையின்மைக்கு எதிரான சோர்விலாத போராட்டமாகவே இன்று எந்த அறிவுச்செயல்பாடும் உள்ளது. இன்று தமிழ் வளர்ச்சிக்கு எவரும் எதையும் செய்வதில்லை. குறைந்தபட்சம் உண்மையான பங்களிப்பாற்றுபவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்வதன் வழியாகவாவது அவருக்கு ஓர் ஏற்பை அளிக்கலாம். அவருடைய பணிகளை அறிந்துகொண்டோம் என்று அவருக்குத் தெரிவிக்கலாம். ஆனால் அதையும் செய்வதில்லை.
உண்மையில் காழ்ப்பும் கசப்புமாக வசைபாடுபவர்கள், அமைதிகாப்பவர்கள் மீதுகூட எனக்கு பெரிய வருத்தம் இல்லை. அவர்களின் உளநிலை அது. தீராத சோர்வும் எதிர்மனநிலையும் கொண்ட பரிதாபத்துக்குரிய நபர்கள் அவர்கள். ஆனால் உரிய தருணத்தில் இதைச் செய்யாமல் பின்னர் நேரில் பார்க்கையில் என்னிடம் சாக்குபோக்கு சொல்லி பசப்புபவர்கள் பலர் உண்டு. அவர்களின் அந்த தந்திரம்மேல் ஓர் அருவருப்பே உருவாகிறது. ஆனால் அதையும் விழுங்கிக்கொண்டு, அவர்களையும் இணைத்து எதையேனும் செய்ய முடியுமா என்று பார்க்கிறோம்.
அரும்பணி ஆற்றுபவர்களை கௌரவிக்க நாம் ஏதாவது முயற்சி செய்தால் அதை பழிப்பவர்கள் ஒரு சாரார். எஞ்சியோர் ஆழ்ந்த அமைதி காப்பவர்கள். ஆனால் உ.வே.சாமிநாதையர் காலம் முதல் தமிழ் அறிவுச்சூழல் இப்படித்தான் இருந்து வருகிறது. உ.வே.சாமிநாதையரும் , சி.வை. தாமோதரம் பிள்ளையும் இதைப்பற்றி எழுதியுள்ளனர்.
கோவைமணி போன்றவர்கள் இந்த ஏற்புகளை, விருதுகளை பொருட்படுத்துபவர்கள் அல்ல. பொருட்படுத்துபவராக இருந்தால் இத்தனை ஆண்டுகள் இப்பணியை இத்தனை அர்ப்பணிப்புடன் செய்ய முடியாது. இத்தகைய விருதுகள் நம் பொது அறிவுச் சமூகத்தின் உலகியல் வெறி, அக்கறையின்மை ஆகியவற்றுக்காக நாம் கொள்ளும் குற்றவுணர்ச்சியை கொஞ்சம் சமன் செய்வதற்காகவே. அந்த குற்றவுணர்ச்சியேகூட உயர்வானதுதான்.
ஜெ