பொருட்களை வாங்குவதன் மகிழ்ச்சியை முழுமையாகத் துறந்துவிடவேண்டும் என்பது ஹிப்பி இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்று. ஒருவர் தன் முதுகில், எடையே தெரியாமல், கொண்டுசெல்லும் அளவுக்கான பொருட்களையே உடைமையாகக் கொண்டிருக்க வேண்டும். அதுவே சுமை, டூத்பிரஷ் மட்டுமே போதும் என ஒருவர் சொல்ல, பல்தேய்க்கும் ஒழுங்கை ஒரு பொறுப்பு என ஒருவர் ஏற்றுக்கொள்ளலாகாது என இன்னொருவர் சொல்ல ஹிப்பிவிவாதம் ஒன்று ஒரு காலத்தில் நடந்துள்ளது.
இப்போதுகூட அமெரிக்காவிலும், இந்தியாவில் டார்ஜ்லிலிங், காசி, கன்யாகுமரி, கோவளம் என பல ‘பொந்து’களிலும் ஹிப்பிகளைப் பார்க்கமுடிகிறது. ஒருமுறை நான் வாஷிங்டனில் ஒரு உணவகத்தில் சந்தித்த ஹிப்பி இளம்பெண் ஓர் இளவரசி போலிருந்தாள். எங்கோ சித்தம் மிதக்க, கிழிந்த ஆடையுடன், பரட்டை தலையுடன், எவரிடமோ ஏதோ கேட்டாள். ஹிப்பிகள் என்றுமிருப்பார்கள், நம் நவீன தொழில்நுட்ப நாகரீகம் உருவாக்கும் எதிர்விளைவு என அவர்களைச் சொல்லலாம்.
ஆனால் ஹிப்பிகளுக்குக் கூட தொழில்நுட்பத்தின்மேல் காதல் வரவழைக்கும் ஒரு விஷயம் இருந்தது. அவர்களில் பலர் உடைமையாக அதைச் சுமர்ந்தலைந்தனர்.அது நவீன இசை கேட்கும் கருவிகள். ஹிப்பி இயக்கத்தின் காலகட்டத்தில்தான் டேப்ரிக்கார்டர் சந்தைக்கு வந்தது. ஈரோசை தொழில்நுட்பம் (ஸ்டீரியோஃபோனிக்) வந்தது. அவர்கள் அந்த கருவிகளுடன் அலைவதை எழுபதுகளில் நான் நிறையவே கண்டிருக்கிறேன்.
நான் முதல்முறையாக ஒரு டேப்ரிக்கார்டரைக் கண்ணால் பார்த்தது ஒரு ஹிப்பி கையில்தான். நேஷனல் பானாசோனிக். அந்த ஹிப்பி திருவனந்தபுரத்தில் இருந்து கன்யாகுமரி செல்லும் வழியில் கஞ்சா அல்லது காளான் தேடி பேச்சிப்பாறை போக முயன்று வழியில் முழுக்கோட்டில் பேருந்தில் இருந்து இறங்கி எங்கள் வீட்டருகே இருந்த ஆசாரியின் கடையில் (ஆச்சரியம், அந்தக் கடை அப்படியே இப்போதும் இருக்கிறது. என் கதைகளிலும் கட்டுரைகளிலும் வந்த இடம்) கொஞ்சநேரம் இருந்தார். அந்த டேப்ரிக்கார்டரை விற்க முயன்றார். அதை வாங்குமளவுக்கு செல்வந்தர்கள் அப்போது அங்கே இல்லை. அதுல் அவர் போனி எம் நிறுவனத்தின் ரா ரா ரஸ்புடீன் போன்ற பாடல்களைப் போட்டுக்காட்டினார்.
நான் 1991 ல் எனக்கு திருமணமாகும்வரை உடைமைகள் அற்றவனாகவே இருந்தேன். புத்தகங்கள் உடைமைகளல்ல, சொந்தங்கள். படுக்கைவிரிப்புகூட சொந்தமாக கிடையாது. நான்கே நான்கு ஆடைகள். செருப்புகள். அவ்வளவேதான். திருமணம் செய்ய முடிவெடுத்தபோதுதான் பொருட்கள் வேண்டும் என முடிவுசெய்து அதற்கு பணம் தேவை என்னும் கண்டடைதலை அடைந்தேன். தமிழிலும் மலையாளத்திலும் அன்று அறிவிக்கப்பட்டிருந்த எல்லா சிறுகதைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு, ஒன்றில் தவிர எல்லாவற்றிலும் பரிசுபெற்றேன். (ஒரு போட்டியில் முதல்பரிசு எனக்கு, இரண்டாம்பரிசு என் புனைபெயருக்கு)
அருண்மொழி வந்தபின் கட்டில், எரிவாயு உருளை, அடுப்பு என ஒவ்வொரு பொருளாக வாங்கினோம். ஓரளவு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி முடிக்க ஓராண்டு கடந்தது. அதன்பின் அருண்மொழி அவளுடைய நீண்டநாள் ஆசையைச் சொன்னாள், ஒரு டேப்ரிக்கார்டர் வாங்கவேண்டும். எனக்கு ‘ஜில்’ என்றிருந்தது. எனக்கும் ஒரு டேப்ரிக்கார்டர் கனவுதான் இருந்தது. குறிப்பாக என் இளமையில் நான் கேட்ட போனி எம். பாடல்கள். ஈரோசை முறையில் அமைந்த, இளையராஜா இசையில் வெளிவந்த ப்ரியா படத்தின் பாடல்கள். என்னுயிர் நீதானே பாட்டில் அந்த கித்தாரின் ம்ம் தனியாக, மிக அருகே ஒலிக்கும் விந்தை.
மேலும் ஆறுமாதம் பணம் சேர்த்து ஒரு பிலிப்ஸ் டேப் ரிக்கார்டர் வாங்கினோம். தனித்தனியாக அகற்றி வைக்கத்தக்க இரண்டு ஒலிப்பெருக்கிகள் கொண்ட ஈரோசை கருவி. அதன் கரிய நிறம், அதன் மின்னும் சிறு சிவப்புப் புள்ளிக் கண்கள், அதை பார்ப்பதே பரவசமாக இருந்தது. சட்டென்று நான் நவீனத் தொழில்நுட்பத்தின் உலகுக்குள் சென்றுவிட்டிருக்கிறேன்.
அன்று என் வீட்டில் வானொலி இல்லை. தொலைக்காட்சி அப்போது பரவலாக இல்லை. (நான் தொலைக்காட்சி வாங்கியது மேலும் ஆறாண்டுகள் கழித்து 1998ல் கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சி. 2000த்தில்தான் ஒனிடா வண்ணத் தொலைக்காட்சி. புதிய வீடு கட்டி குடிவந்த போது. ஆனால் அதற்கு முன்னரே கணிப்பொறி வாங்கிவிட்டேன், அமெரிக்க வாசகர் காஞ்சனா தாமோதரன் உதவியுடன். 1992 ல் என் வீட்டில் மின்விசிறியே கூட வீட்டு உரிமையாளருடையதுதான்.
நானும் அருண்மொழியும் ’கேஸட் வேட்டை’யில் ஈடுபட்டோம். அருண்மொழிக்கு மரபிசை கேட்க ஆசை. அவளுடைய தஞ்சைப் பின்னணி காரணம். எனக்கு அந்த இசை பழக்கமே இல்லை. (இத்தனைக்கும் என் வீட்டுக்கு அருகே என் அப்பாவின் இளம்பருவத்தோழரும், வயலின் கலைஞரும், திருவனந்தபுரம் ஆகாசவாணியின் முதல்நிலை இசையமைப்பாளருமான ஆர்.சோமசேகரன் வாழ்ந்தார். என் அப்பாவின் இளம்பருவத் தோழர் நாராயணன் போற்றியின் மனைவி திருவனந்தபுரம் இசைக்கல்லூரியில் முறையாக இசை கற்றவர்).
மகாராஜபுரம் சந்தானம் கேட்கலாம், அவரிலிருந்து தொடங்குவதே சிறந்தது என்று சொன்னார்கள். சந்தானம் மற்ற மரபிசைப் பாடகர்களைப்போல கிழக்குரலில், செயற்கையான வித்தைகளுடன் பாடுபவர் அல்ல. பாடலின் உணர்ச்சிகரம் அவர்குரலில் அற்புதமாக வெளிப்படும். நான் கேட்ட முதல்பாடலிலேயே அவர் என்னுடைய பாடகராக ஆனார். அவர் வழியாக மரபிசை என் செவிக்குப் பழகியது.
ஆண்டுதோறும் திருவையாறு தியாகராஜர் இசைத்திருவிழாவுக்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தோம். அங்கே நல்ல மரபிசை ஒலிநாடாக்கள் விற்கப்படும் பல கடைகள் இருக்கும். கையிலிருக்கும் அத்தனை பணத்துக்கும் ஒலிநாடா வாங்குவோம். ஒருமுறை பட்டுக்கோட்டைக்குத் திரும்பிச்செல்லத் தேவையான பேருந்துக் கட்டணம் தவிர அனைத்துப் பணத்துக்கும் வாங்கிவிட்டோம். அன்று ஏதோ சிக்கல். பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகளை நிறுத்திவிட்டனர். கையில் மொத்தம் இருபது ரூபாய்தான். அருண்மொழியின் உறவினரான அன்பழகன் தஞ்சையில் போலீஸ் குடியிருப்பில் வாழ்ந்தார். அங்கே சென்று தங்கி அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு மறுநாள் ஊருக்குச் சென்றோம்.
இரவில் நீண்டநேரம் நானும் அருண்மொழியும் பாடல்கேட்டுக் கொண்டிருப்போம். எனக்கு பாடலில், எந்த மொழியாக இருந்தாலும், இசையளவுக்கே வரிகளும் முக்கியம். ஆகவே முத்துசாமி தீட்சிதரோ, சியாமா சாஸ்திரியோ கவரவில்லை. கவர்ந்தவர்கள் முதன்மையாகத் தியாகராஜரும், புரந்தரதாசரும். எங்களூர்க்காரரான சுவாதித் திருநாள் அடுத்தபடியாக..
புரந்தரதாசரை நான் ஒரே இரவில் அணுக்கமாக அறிந்தேன். மகாராஜபுரம் சந்தானம் பாடிய ‘புரந்தரதாசர் கிருதிகள்’ என்னும் ஒலிநாடாவில் ஐந்து பாடல்கள் இருந்தன. அவற்றில் ‘கோவிந்தா நின்னே’ ‘நாராயணா’ ஆகிய பாடல்கள் என்னை கனவில் ஆழ்த்தின. ஏதோ ஒரு கணத்தில் என் அம்மாவுடன் அமர்ந்து அவற்றைக் கேட்பதாக உணர்ந்து விம்மி அழுதேன். அருண்மொழி என்னை அணைத்து ஆறுதல்படுத்தினாள்
பொயு 1470ல் கர்நாடக மாநிலத்தில் நகை வணிகம் செய்து வந்த மாத்வ பிராமண குலத்தில் பிறந்தவர் புரந்தரதாசர். இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக். புரந்தர விட்டலர் என்பது அவர் தன் பாடல்களில் தனக்கென போட்டுக்கொண்ட பெயர். ஆயிரக்கணக்கான பாடல்களை புரந்தரதாசர் இயற்றினார் என்றும் சிறுபகுதியே கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. துறவியாகி 1564 ஆம் ஆண்டு மறைந்தார்.
நான் அன்றுமுதல் இன்று வரை புரந்தரதாசரின் பாடல்களில் மயங்கியிருப்பவன். சட்டென்று ஒரு பாடல் நினைவுக்கு வந்தால், பயணங்களில் ஒரு வரி செவிதொட்டுச் சென்றால் பெரும் மலர்வை அடைபவன். மகாராஜபுரத்தின் குரலாகவே எனக்கு புரந்ததாசர் நினைவில் பதிந்திருக்கிறார்.
இன்று, தற்செயலாக கோவிந்தா நின்னே என்னும் புரந்தரதாசர் பாடலைக் கேட்டேன். நினைவுகளினூடாக நெடுந்தொலைவு சென்றேன். அருண்மொழியுடன் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து பேசிக்கொண்டேன். நினைவில் அத்தனை நெகிழ்வாக இருந்த எண்ணங்கள் பேசும்போது வேடிக்கையும் சிரிப்புமாக மாறிவிட்டிருந்தன.