இனிய ஜெயம்
இந்தியாவுக்குள் தொடர்வண்டி பயண அனுபவங்கள் இன்னல் நிறைந்த ஒன்றாக மாறிக்கொண்டிருப்பது சார்ந்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நானும் எப்போதேனும் இந்தியாவுக்குள் குறுக்கும் நெடுக்குமாக அலைபவன் என்ற வகையில் இந்திய ரயில்வே அளிக்கும் சேவையில் சிக்கி சீரழியும் வாய்ப்பு அவ்வப்போது அமைந்திருக்கிறது.
முறையற்ற பயண நிரல் காரணமாக முன்பதிவற்ற ரயில் பெட்டியில் பிதுங்கும் கூட்டத்தில், ஆறு மாதம் முன்பு டில்லி முதல் சென்னை வரை கழிவறை அருகே நின்றபடியே, பயணித்திருக்கிறேன். இத்தகு நிலையில் எனக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால் இரண்டு மாதம் முன்னரே முன்பதிவு செய்த பயணமும் தற்சமயம் இவாறுதான் மாறிக்கொண்டு இருக்கிறது என்பதைதான் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.
நட்ட நடு இரவில் தனது படுக்கைக்கு செல்வதற்கு பதிலாக, பிழையாக உங்களை எழுப்பி (அதுவும் இரு முறை வேறு வேறு நபர்) இது என் இடம் கிளம்பு என்று தகராறு செய்யும் நபரை எதிர்கொண்டது உண்டா.
நட்ட நடு இரவில் உங்கள் படுக்கைக்கு கீழே, என் செல்போனை காணோம் என்று புலம்பியபடி ஒரு நபர் எதையோ தேடினார் என்றால் நீங்கள் எப்படி எதிர்வினை செய்வீர்கள்.
நட்ட நடு இரவில் உங்கள் கூபேயில் குறுக்கே ஊளையிட்டு அழுதபடி ஒரு பைத்தியக்காரன் கடந்து போனால் நீங்கள் என்ன செய்வீர்கள்.
நட்ட நடு இரவில் மூத்திரம் பெய்ய சென்ற இடத்தில் நீங்கள் திறக்க முயன்ற கழிவறையை திறந்து கொண்டு அதன் உள்ளிருந்து ஐந்து பெண்கள் (அதில் இருவர் இடையில் கை குழந்தை) வெளியே சென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்.
நட்ட நடு இரவில் திடீர் என்று காள் காள் என்று ஆபத்துக்கான அலாரம் ஒலிக்க, கால் மணி நேரம் கழித்து அது என்ன என்று பார்க்க எவரோ ஊழியர் வந்தால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்.
இது எல்லாமே சமீபத்தில் பூரி இல் இருந்து சென்னைக்கு நண்பர்களுடன் நான் செய்த பயணத்தில், ஏ சி கோச்சில் நள்ளிரவு துவங்கி விடியும் வரை நடந்தது. ரொம்ப நாள் கழித்து கெட்ட வார்த்தையில் திட்டினேன். அப்படி திட்டிய என்னை புதுச்சேரி மணிமாறன் அதிசயமாக பார்த்தார்.
சென்னையில் துவங்கிய பூரி போகும்போதான பயணம் இன்னமுமே அற்புதமானத்து. ஒரு மணி நேரம் முன்னரே சென்றிருந்தும், அதற்கும் முன்பாகவே நாங்கள் ரிசர்வ் செய்து வைத்திருந்த ஸ்லீப்பர் கோச்சில் எங்கள் இடம் முழுக்க வட நாட்டு “உழைக்கும் ஏழை மக்கள்” நிறைந்திருந்தனர். அவர்களை கஷ்டப்பட்டு கிளப்பினாலும் சீட்டுக்கு கீழே எங்கள் லக்கேஜுகளை வைக்க எந்த வழியும் இல்லை. ஒவ்வொருவரும் கொண்டு வந்த ஆள் உயர மூட்டைகளை அங்கே முன்னரே பதுக்கி இருந்தனர். கிடைத்த இடுக்கில் லக்கேஜுகளை செருகி விட்டு, அவர்கள் விட்டு கொடுத்த சீட்டில் அமர்ந்தோம்.
ஒரு அம்மாள் நகர மறுத்து குத்துக்கல் போலவே அமர்ந்திருந்தார். அவர் பெற்ற மழலை செல்வம், இந்த பக்கம் அமர்ந்திருந்த புதுச்சேரி சரவணன் மீது வாந்தி எடுத்து வைத்து. மிச்ச வாந்தியை சீட்டில் கொட்டி வைத்தது.
எங்கெங்கும் மனித உடல்கள் இடையே அவர்களை ஊடுருவி வந்து ராக்கெட் முதல் பான்பராக் வரை விற்கும் வியாபாரிகள். டாய்லெட் கூட போக வழி விடாது எங்கெங்கும் தொங்கும் மூட்டை முடுச்சுகள். எல்லா ஹோல்டர்களிலும் தொங்கும் சார்ஜர். பயணிகளை மிதித்து பிழிந்து அவற்றை பரிபாலிக்கும் “ஏழை உழைக்கும் மக்கள்”.
இரவு உறக்கமோ இன்னும் நரகம். மிடில் பர்த்தில் என்னுடன் இன்னொருவரும் படுத்திருக்கிறார் என்பதை நள்ளிரவில் புரண்டு படுக்க முயன்று, முடியாத நிலையில் கண்டு கொண்டேன். உதைத்து எழுப்பி கீழே போக சொன்னேன். கீழே இடம் இல்லை என்று அவன் கையை காட்டிய இடம் முழுக்க மனித உடல்கள். இரண்டு சீட்டுக்கு இடையே கால் வைக்கும் இடத்தில் கூட படுத்திருந்தார்கள். குனிந்து பார்தேன். லோயரில் படுத்திருந்த விஜய பாரதி நிலை இன்னும் பரிதாபம். குப்புற படுத்திருந்த அவர் மேல் இன்னொருவர் குப்புற படுத்திருந்தார்.
இந்த அசம்பாவிதங்களுக்கு முதன்மைக் காரணம் மூன்று. முதலாவது மனிதனோ மந்தியோ எவரும் ரயில் நிலையத்துக்குள் எந்த கேள்வியும் இன்றி புழங்கலாம் எனும் நிலை. ஆதார் கார்ட் என்பதை என்ன மணிக்கு அரசு கொடுத்ததோ அதை செயல்படுதினாலே பாதி கும்பலை குறைத்து விட முடியும். ஆதார் செராக்ஸ் கொடுத்து முன்பதிவற்ற டிக்கட் எடுக்கவேண்டும். ஆதார் உள்ளவர் மட்டுமே நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும். என்ற நிலையை உறுதியாக பின் பற்றினாலே போதும் பல இன்னல்களை குறைக்க முடியும்.
இரண்டாவது காரணம் எங்கும் எதையும் முறைப்படுத்தி ஒருங்கிணைந்து செயல்பட வைக்கும் நிர்வாகமோ, ‘கவனிக்கும்’ உயர் அதிகாரமோ, குற்றம் களையும் ரயில்வே போலீஸ் என்ற ஒன்றோ எங்குமே செயல்பாட்டில் இல்லை.
மூன்றாவது மிக மிக முக்கிய காரணம் t t r கள். கடந்த ஒரு வருடமாக நான் செய்த எல்லா ரயில் பயணத்திலும் ஒன்றை கவனித்தேன். முன்பதிவற்ற டிக்கட் வாங்கி கொண்டு ஸ்லீப்பர்ப் கோச்சில் ஏறி கொள்வார்கள். T t r வந்து அந்த டிக்கட் பின்னால் பெர்மிட்ட to ட்ராவில் in ஸ்லீப்பர் என்று எழுதி 500 ரூபாய் வாங்கி ஜெபிக்குள் போட்டு கொண்டு போய் விடுவார். வந்த ஜனம் முன்பதிவு செய்து வந்த பயணிகளை உயிரை உருவும். T t r வசம் புகார் செய்தாலும் ஒன்றும் நடக்காது. சோதித்து பார்க்க மத்திய இந்தியாவில் இருந்து ஒரு முறை நானே இப்படி பயணித்து பார்த்தேன். டிக்கட் கவுண்டரிலேயே இதை தான் ஆலோசனையாக வழங்கினார்கள்.
கடந்த இரண்டு வருடமாக இந்திய ரயில்வேயை நம்பி முன் பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் அனைவரும், பாதுகாப்பு வரைமுறைகள் எதுவும் இன்றி கைவிடப் பட்டு, எந்த வரைமுறைக்கும் உட்படாத t t r கள் எனும் தீவட்டி கொள்ளையர் வசம், எந்த பாதுகாப்பும் இன்றி சிக்கி பயணித்து மீள்கிறார்கள் என்பதே யதார்த்தம். இந்திய ரயில்வே நிர்வாகம் அதன் வரலாற்றில் வந்து நிற்கும் மிக இழிந்த காலம் இதுவாகவே இருக்கும்.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு
நான் என் ரயில் அனுபவங்களை எழுதியதும் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் கிளம்பி வந்து கடிதங்களாகப் போட்டு தாக்கிவிட்டார்கள். மத்திய அரசின் புள்ளிவிபரங்களை அடுக்கி எப்படி ரயில்துறை ‘மறுமலர்ச்சி’ அடைந்துள்ளது என நிரூபிக்க முயன்றனர். ஒரு பழைய நண்பர் இணையப்பதிவாக ஒரு நீண்ட பிலாக்காணம் எழுதி ரயில்வே வளர்ச்சியை நிரூபித்திருந்தார். இதைப்போலவே தமிழகத்தில் கல்வியின் சீரழிவு பற்றி அத்தனைபேரும் அன்றாடம் அறியும் ஒரு சித்திரத்தைச் சொன்னபோது தமிழகம் கல்விக்கொடி நாட்டியிருப்பதாக கடிதங்கள் கட்டுரைகள். இன்னொரு பழைய நண்பரின் புள்ளிவிவரப் பீராய்தல்.
அரசியல் அனுதாபிகள் என சில என்றும் உண்டு. அரசியல் வெறியர்களும் சிலர் உண்டு. ஆனால் இன்று அரசியல் நோயாளிகள் என ஒரு புதியவகையை இணையம் உருவாக்கியிருக்கிறது. ஒருவர் நம்மை குத்திக்கொன்றால்கூட நாம் புகார் சொல்லக்கூடாது. அது சம்பந்தப்பட்ட அரசை நடத்தும் கட்சிக்கு எதிரான குரலாக கருதப்படும். நோயாளிகள் கிளம்பி வருவார்கள். வசைபாடுவார்கள். புள்ளிவிபரப்படி குத்து நிகழவில்லை என நிரூபிக்கப்படும்.
ஆகவே இவையெல்லாம் புள்ளிவிபரங்களின்படி உங்களுக்கு நிகழவே இல்லை, சரியா?
ஜெ