கோவைமணி தூரன் விருது, கடிதம்

தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு

அன்புள்ள ஜெயமோகன்

மோ.கோ.கோவைமணி அவர்களை இந்த விருது வழியாகவே கேள்விப்படுகிறேன். ஏற்கனவே இரு விருது பெற்றவர்களையும் நான் உங்கள் இணையப்பக்கம் வழியாகவே அறிந்தேன். கரசூர் பத்மபாரதி, மு.இளங்கோவன் இருவரும் எத்தனை பணியாற்றியிருக்கிறார்கள் என புரிந்துகொண்டேன் அறியப்படாத ஆய்வாளர்களை முன்வைக்கும் உங்கள் பணி சிறக்கட்டும். ஒரு பத்தாண்டுகளில் இப்படி பத்து ஆய்வாளர்களை அறிமுகம் செய்தால் அதுவே பெரும் தமிழ்ப்பணியாக அமையும். தமிழின் பெயரால் இங்கே அன்றாடம் சாதிச்சண்டையும் இனச்சண்டையும் அரசியல் சண்டையும் நடைபெறுகிறது. அவர்களுக்கு தமிழ்ப்பணி என்றால் என்ன என்றே தெரியாது. எந்த ஆய்வையும் ஆய்வாளரையும் அவர்கள் அறிந்திருப்பதுமில்லை. அறிவுப்பணிகள் இப்படித்தான் அறிஞர்களுக்குள்ளேயே நிகழும் என்று தெரிகிறது.

சந்தானகிருஷ்ணன்

மோ.கோ.கோவைமணி தமிழ் விக்கி

பெரியசாமித் தூரன் தமிழ் விக்கி

தமிழ் விக்கி

தமிழ் விக்கி தூரன் விருது

அன்புள்ள ஜெ

மோ.கோ.கோவைமணி அவர்களுக்கு தூரன் விருது வழங்குவது குறித்து மகிழ்ச்சி. அவர் எழுதிய பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு -கோவைமணி. இணையநூலகம் நூலின் இணைப்பு கட்டுரைக்குக் கீழே இருந்தது. அதை வாசித்தேன். அதுவே முக்கியமான சிறுநூல். சுவடிப்பதிப்பு பற்றி ஏறத்தாழ எல்லா செய்திகளையும் அடுக்கிச் சொல்லியிருக்கிறார். இதழ்களில் சுவடிகளைப் பதிப்பித்தவர்களே இத்தனைபேர் இருக்கிறார்கள்.

உதாரணமாக 138 ஆம் பக்கத்தில் சுவடிப்பதிப்பாளர்களாகிய அறிஞர்களின் ஒரு பட்டியல் உள்ளது. அதிலுள்ள ஒரு பெயரைக்கூட நான் அறிந்தது இல்லை. எந்த பொதுவான தமிழார்வலர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நூலுக்கு வெளியே இப்படி ஒரு பட்டியலையும் எங்கும் பார்க்கமுடியாது என நினைக்கிறேன்.

தமிழ்ச் சுவடிகளை முழுமையாக வாசித்தாகிவிட்டது, அது இனி தேவையில்லை என்ற மனநிலை நிலவுகிறது. இன்றைய தலைமுறையில் பெரும்பாலானவர்களுக்கு அதில் ஆர்வமில்லை. அவர்கள் விடாப்பிடியாக அதை தன் பணியாகச் செய்துகொண்டிருந்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்

ஜி.வேலுச்சாமி

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு -கோவைமணி. இணையநூலகம்

கோவைமணி தூரன் விருது, கடிதம்

 

முந்தைய கட்டுரைStories Of the True – கட்டுரை போட்டி,சியாட்டில்
அடுத்த கட்டுரைதி.சங்குப்புலவர்