அஜிதன் சிறுவனாக இருந்தபோது அவனுக்கு நான் விளையாட்டுப் பொம்மைகளே வாங்கிக் கொடுத்ததில்லை. பொம்மைகளை நானும் அவனும் சேர்ந்தே செய்வோம். பொம்மைகள் செய்யும்போது அவற்றைப் பற்றிய கதைகளையும் உருவாக்க வேண்டும். அப்படி வெள்ளைக்களிமண்ணில் நான் செய்த குத்துமதிப்பான ஒரு மனிதன் பனிமனிதனாக கதையில் விரிந்தான். 1998ல் அதை அன்று தினமணி சிறுவர் மணியின் ஆசிரியராக இருந்த நண்பர் மனோஜ்குமார் கேட்டு தொடராக எழுதவைத்தார். அன்று எழுதியது ஒரு வடிவம்தான். நான் அதற்கு முன்னரே அந்தக் கதையை அஜிதனுக்கு பலவாறக விரித்து விரித்துச் சொல்லி ஒரு குட்டிக்காவியமாகவே நினைவில் வைத்திருந்தேன்.
பனிமனிதன் அன்று சிறுவர்களால் மிக விரும்பி வாசிக்கப்பட்டது. அன்று நாளிதழ்களின் சிறுவர் இணைப்புக்களை பிள்ளைகள் காத்துக்கிடந்து வாசித்துக்கொண்டிருந்தனர். மின்னூடகம் வராத காலகட்டம். ஆங்கிலவழிக்கல்வி நிலைபெறாத காலகட்டமும் கூட. அன்று பனிமனிதனை வாசித்தவர்கள் பலர் இன்று என்னுடைய தீவிரமான வாசகர்களாகிவிட்டிருக்கிறார்கள். எனக்கான ஒரு வாசக அணியையே அந்நாவல் வழியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.
அதன்பின் ஆனந்தவிகடனின் இணைப்பிதழான சுட்டிவிகடன் இதழுக்காக ஒரு தொடர்கதை எழுதும்படி என்னிடம் கேட்டனர். பனிமனிதன் நாவலின் நிலம், கதைமுறை ஆகியவற்றின் தொடர்ச்சியாக வெள்ளிநிலம் நாவலை எழுதினேன். 2016 டிசம்பர் முதல் தொடராக வெளிவந்தது. ஆனால் சுட்டிவிகடன் சுருக்கமான வாசகச்சூழல் கொண்டதாக அப்போதே ஆகிவிட்டிருந்தது.அத்துடன் அது மாதமிருமுறை என்பதனால் வாசிப்புத்தொடர்ச்சியும் அமையவில்லை. பனிமனிதன் அளவுக்கு வாசக எதிர்வினை உருவாகவில்லை. ஆனால் விகடன் வெளியீடாக அது நூல்வடிவில் வந்தபோது தொடர்ச்சியாக எதிர்வினைகள் வந்தன. பல பதிப்புகள் பனிமனிதன் வெளிவந்துள்ளது.
பனிமனிதன் எழுதும்போது நான் இமையமலையில் கங்கோத்ரி வரைச் சென்றிருந்தேன். கைலாசத்தையும் பார்த்திருந்தேன். வெள்ளிநிலம் எழுதும்போது லடாக், ஸ்பிடி சமவெளி, வடகிழக்கு இமையமலைப்பகுதிகள் என விரிவான பயணங்களை மேற்கொண்டிருந்தேன். ஆகவே இந்நாவலில் இமையமலைப் பகுதியின் புத்தமதப் பண்பாடு சார்ந்த தரவுகள் சற்று மிகுதியாக உள்ளன. பனிமனிதன் நாவலில் இருந்த அதே கதைமுறைதான். ஒரு சாகசப்பயணம். அதனூடாக நிகழும் விவாதங்களில் வெளிப்படும் பண்பாடு மற்றும் அறிவியல் செய்திகள். கதையின் தருணங்கள் மற்றும் உருவகங்கள் வழியாக மெய்யியல் தரிசனங்கள்.
பனிமனிதன் மானுடப் பரிணாமத்தின் சித்திரத்தை அளிக்கும் நாவல். வெள்ளிநிலம் மதங்களின் பரிணாமத்தை, தெய்வங்களின் உருவாக்கத்தை விளக்கும் நாவல். அறிவியல்நோக்கிலும் வரலாற்று நோக்கிலும் அச்சித்திரம் அளிக்கப்படுகிறது. கூடவே தொடர்ச்சியான சாகசமும், குழந்தைகளுகுரிய ஓர் உலகும் விரிகிறது. இந்நாவல் வெளிவந்தபோது இதிலுள்ள நாக்போ என்னும் லாப்ரடார் நாய்தான் சிறுவர்களால் மிக அதிகமாக விரும்பப்பட்டது.
என்னிடம் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்வி ஒன்றுண்டு, ஒரு சிறுவர்கதையில் இத்தனை அறிவியல்செய்திகள், வரலாற்றுச்செய்திகள், பண்பாட்டு வரலாறு தேவையா? சிறுவர்களுக்குப் புரியுமா? அதைவிட சிறுவர்களின் கதைகளில் தத்துவமும் மெய்யியலும் எதற்கு?
என் பதில் இதுதான். நான் வாசித்த மகத்தான சிறுவர்கதைகளில் என்னென்ன உள்ளனவோ அவற்றையே நானும் இந்நாவலில் கொண்டுவர முயன்றிருக்கிறேன். இவை மிக எளிய குழந்தைக்கதைகள் அல்ல. என்னுடைய தீவிரமான நாவல்களில் என்னென்ன உள்ளனவோ அவையெல்லாம் இவற்றிலும் உண்டு. அவை குழந்தைகளுக்குரிய எளிய மொழிநடையில், குழந்தைகளுக்குரிய சாகசக்கதைவடிவில் அமைந்துள்ளன.
குழந்தைகளை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை, குறைந்தபட்சம் புத்தகம் வாசிக்கும் குழந்தைகளை. அவர்கள் நவீன அறிவியலின் உலகில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மொழிப்பயிற்சிதான் குறைவு, சிந்தனைத்திறனும் கற்பனைத்திறனும் மிகுதி. ஒரு படைப்பில் அவர்களுக்கு புரியாமல்போன பகுதிகளைப் பற்றித்தான் அவர்கள் சிந்திப்பார்கள், கற்பனைசெய்வார்கள், மேலும் அறிய முயல்வார்கள், அவர்களில் அந்த அறியப்படாத பகுதியே வளரும்.
இந்நாவல்களை வாசித்த எந்தக்குழந்தையும் இதுவரை இவை புரியவில்லை என புகார் சொன்னதில்லை, எந்தப் பெற்றோரும் அப்படிச் சொன்னதில்லை. நம் குழந்தை எழுத்தாளர்கள் மட்டுமேதான் அந்த குற்றச்சாட்டை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் எழுதும் கதைகளை குழந்தைகள் வாசிக்கட்டும், அவை போதாது என உணரும் அறிவுத்தரம் கொண்ட குழந்தைகள் மட்டும் இவற்றை வாசிக்கட்டும் என்பதே என் பதிலாகும்.
இந்நாவல் உருவாக்கும் கேள்விகள் இளம் நெஞ்சங்களில் விரியவேண்டுமென நினைக்கிறேன். குழந்தைகளுக்கு நாம் அறிமுகம் செய்யவேண்டியது இந்தப் பூமியிலும் பண்பாட்டிலுமுள்ள புதிர்களைத்தான். நாமறிந்த விடைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கலாகாது.
இந்நாவலின் முதல்சில பதிப்புகளை வெளியிட்ட ஆனந்தவிகடன் பதிப்பகத்திற்கும் இப்பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி
ஜெ
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)