திருவாசக வாசிப்பு, கலந்துரையாடல்

அன்புமிக்க ஜெ

ஒரு மாலை வேளை இருக்கும். நண்பர்களாக கூடி பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென திருவாசகம் பற்றி பேச்சு வந்ததது. நான் எனக்குப் பிடித்த ஒரு பாடலை சொன்னேன். திருவாசகத்தில் திருச்சதகம் என்ற பதிகத்தில்சிந்தனை நின் தனக்கு ஆக்கிஎன்ற பாடல் பற்றி பொருள் சொல்லி பேசிக் கொண்டு இருந்தேன். அந்தப் பாடலின் கடைசி வரி இப்படி முடியும். “இரண்டுமிலி இத்தமயனேர்கேஎன்று. சிவபெருமான் மாணிக்கவாசகரை அழைக்கிறார். கூட இருந்தவர்கள் எல்லோரும் செல்கிறார்கள், ஆனால் இவருக்கு ஒரு தயக்கமும், தடுமாற்றமும் வந்துவிட்டது. தான் ஒரு முதலமைச்சர். இதை துரந்து விட்டு செல்லவா என்கிற ஒரு தடுமாற்றம். இருந்தும் மனதில் ஆசை, இந்தப் பக்கம் செல்லவா அல்லது உலகியலுக்குள் போகவா என்கிற ஒரு வகை தயக்கம்.

உடனே வந்த சிவபெருமான் இதை உணர்ந்து விட்டுவிட்டு சென்று விடுகிறார். அவர் போனபின்பு தான் இவர் உணர்கிறார், ஐயோ எவ்வளவு பெரிய வாய்பை நான் இழந்து விட்டேன் என்று. கதறலும் ஓலமுமாக கடந்து தவிக்கிறார் என்று சொல்லி முடித்தேன்.

பின் என் நண்பன் சொன்னான், நவீன வாழ்க்கையும் அப்படித் தானே இருக்கிறது. எது என் வழி, எது என் பாதை என்கிற தடுமாற்றம், மாணிக்கவாசகர் தொட்டு நம் வரையிலும் இருக்கிறதே என்று. அன்றைக்கு என் நண்பர்கள் அனைவருக்குமே உரையாடலின் தாக்கம் மனதில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருந்தது.

உடனே ஒரு முடிவு செய்தோம். திருவாசகம் முழுவதும் வாசித்தால் என்ன? என்று. மறு வாரமே ஆரம்பித்தோம். முனைவர் பா சரவணன் மிக நேர்த்தியாக அதற்கு உரை எழுதி இருக்கிறார். அந்த உரையை வைத்துக் கொண்டு தற்போது வரை வாசித்து வருகிறோம். இதை அறிந்து அகரமுதல்வன், லோகமாதேவி, புதுச்சேரி தாமரைக் கண்ணன், இளம்பரிதி இவர்களும் பார்த்தி, அனீஷ், பாமா, சூர்யபிரகாஷ் என்று பலர்  எங்களுடன் சேர்ந்து வாசித்து ஊக்கப்படுத்தினார்கள். மேலும் சிலர் இணைந்தார்கள்.

தற்போது, வருகிற ஞாயிற்றுக்கிழமை 07/07/2024 அன்று திருவாசக வாசிப்பு தொடங்கி 25 ஆவது வாரம் . 25 என்பது ஒரு சிறு மைல்கல் தான். ஆனால் மனதிற்கு மிகுந்த ஊக்கம் தருகிறது. இதை ஒரு சிறு கொண்டாட்டமாக மாற்ற முடிவு செய்தோம்.

முதலில் இதற்கென ஒரு blog அமைக்க முடிவு செய்து அதில் சைவம் சார்ந்த கட்டுரைகளை அறிஞர்களிடம் பெற முடிவு செய்து உள்ளோம். ஜா ராஜகோபாலன், அகரமுதல்வன், தாமரைக்கண்ணன், லோகமாதேவி, அந்தியூர் மணி என்று பலரிடம் இதைப்பற்றி விளக்கி கட்டுரைகள் கேட்டுள்ளோம். அனைவரும் எழுத்தித் தருகிறேன் என்று சொன்னது எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தந்தது. இனி சைவம் சார்ந்த கட்டுரைகள் அதில் பதிவு செய்யப்படும். யார் வேண்டும் என்றாலும் எழுதலாம்

அடுத்ததாக ஒரு சைவ அறிஞரின் உரையாடல் இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டோம். உடனே திரு கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். அவரும் மகிழ்ந்து ஒப்புக் கொண்டார்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 7 மணி முதல் 8 மணி வரை இந்த 25 ஆவது திருவாசக வாசிப்பு கொண்டாட்டம் நடக்க இருக்கிறது. Google Meet வழியாக நடைபெறும் இந்த நிகழ்வில் திருவாசகம் பற்றின உரையாடலை கரு. ஆறுமுகத்தமிழன் நிகழ்த்த உள்ளார்.

இந்த வாசிப்பு ஒரு சிறு அகல் ஒளியாக ஆரம்பித்தது. தற்போது ஒரு நெருப்பாக பற்றி எரியத்தொடங்கி இருக்கிறது. அது ஜ்வாலையாக மாற வேண்டும். செயலாற்றுக என்ற உங்களின் ஒற்றைச் சொல் வழியாக, இதை நிகழ்த்திக் கொண்டு வருகிறோம். உங்களின் ஆசியும் அன்பும் இருக்க வேண்டும்.

இப்படிக்கு

. முத்துமாணிக்கம்

முந்தைய கட்டுரைLayman and Philosophy
அடுத்த கட்டுரைஎஸ். தனபால்