அண்மையில் நான் என் அருந்துணையாக எட்டாண்டுக்காலம் திகழ்ந்த லாப்ரடார் நாய் ஹீரோவுடன் இருக்கும் ஒரு படத்தை நண்பர் ஆனந்த்குமார் அனுப்பியிருந்தார். அந்த படத்தால் ஆழ்ந்த உணர்வெழுச்சிக்கு ஆளாகி நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதன்பின் நாய்களைப் பற்றி எத்தனைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என்று பார்த்தேன். பதினைந்துக்கும் மேல் என தெரிந்தது. இன்னும்கூட இருக்கலாம். அவற்றை ஒரு நூலாக ஆக்கலாமென்று தோன்றியது.
என் அப்பா விலங்குகளை எல்லாம் நேசித்தவர். அவருடன் நாய் இல்லாமலிருந்த காலமே இல்லை. எல்லா நாய்க்கும் ஒரு பெயர்தான், டைகர். டைகர் இறவாமைகொண்டு அவருடன் இருந்தது. அவரைப்போலவே நாய்களும் தங்களை ஆக்கிக்கொண்டன. பேசுவதில்லை. பெரும்பாலான நேரங்களில் தங்களில் ஆழ்ந்து தனித்திருக்கும். ஓசைகேட்டால் மெல்ல தலைதிருப்பிப் பார்ப்பதில் சாதிமேட்டிமை, ஆணாதிக்கம், அரசாங்கவேலையில் இருப்பதன் அலட்சியம் எல்லாமே இருவரிடமும் தெரியும்.
நான் சொந்தமாக வீடு வாங்கியதுமே வீட்டில் நாய்களும் வந்துவிட்டன. தொடக்கநாய் தெருவில் இருந்து நான் பொறுக்கியது. என் பின்னால் பிடிவாதமாக வந்து தூக்கிக்கொண்டு செல் என அடம்பிடித்தது. சாரல் மழைவேறு. கொண்டுவந்து குளிப்பாட்டி வளர்த்தேன். பெட்டை. ஆகவே ’வள்சலா’ என வேடிக்கைப்பெயரும் போட்டேன். எப்போது பார்த்தாலும் உடைந்த குரலில் குரைப்பு. எதுவுமே புரிவதில்லை. தீனி சாப்பிட்டதுமே வெளியே பார்த்து குரைத்துக் கொண்டும் ஊளையிட்டுக்கொண்டும் இருக்கும். கதவை திறaக்கமுடிந்தால் தப்பி ஓடி தெருநாய்களுடன் இணைந்துவிடும். வெளியே சென்று குப்பைக்கூடையில் எதையோ சாப்பிட்டு உயிரிழந்தது
இன்னொரு நாயும் நாட்டுநாய் வகை. அதுவும் வெளியே ஓடிவிடுவதிலேயே குறியாக இருந்தது. நாங்கள் அதற்கு அதன் சுற்றமாகத் தெரியவில்லை. தப்பியோடி திரும்ப வரும். மீண்டும் செல்லும். அதேபோல குப்பையில் எதையோ தின்று உயிர்விட்டது.
அதன்பின்னர்தான் ஹீரோவும் டெட்டியும் வந்தனர். முன்னவன் லாப்ரடார். பின்னவன் டாபர்மான்.எட்டாண்டுகள் எங்களுடன் இருந்தனர். அதன்பின் டோரா. அவள் ஒன்பதாண்டுகள் இருந்தாள். அதன்பின் அருண்மொழிக்கு மூட்டுவலி ஆகையால் நாய்களை பராமரிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள். நாங்கள் பெரும்பாலும் பயணங்களிலும் இருந்தமையால் நாய்களை எங்குவிட்டுச்செல்வது என்னும் சிக்கலும் உண்டு. இப்போது நாய்களின் நினைவு மட்டுமே.
எங்கள் வாழ்க்கையை பொருள்கொண்டதாக ஆக்கியவை நாய்கள். எங்கள் பிள்ளைகளின் இளமை நினைவுகளை அழகுறச்செய்தவை. நாய்கள் நம்மிடம் வருவது தற்செயலல்ல, அவை நம்முடன் பிறவிப்பெருக்கின் நெறியால் பிணைக்கப்பட்டவை. நம்மைப்போலவே சிறு குமிழிகள். தொட்டுக்கொண்டு, இணைந்துகொண்டு, சிலதூரம் பயணம் செய்கின்றன. பெருக்குக்கே அந்த உறவின் பொருள் தெரியும்.
என்னைப்போலவே நாய்களின் அன்பரான மலேசியா படைப்பாளி ம.நவீன் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ