இந்தியப்பயணம் என்பது நாங்கள் திட்டமிட்டும் திட்டமிடாமலும் நடத்திய ஒன்று.நான் எப்போதும் பயணிதான். என் பத்தொன்பது வயதில் வீட்டை விட்டுக் கிளம்பி இந்தியாவெங்கும் அலைந்து மீண்டேன். புறப்பாடு என்னும் நூலாக அப்பயண அனுபவங்கள் வந்துள்ளன.
அதன் பிறகு சில மாதங்களுக்குப்பிறகு மீண்டும்ஒருபயணம். அது சில ஆண்டுகள் நீடித்தது. காசர்கோடில் பணிக்குச் சேர்ந்த பிறகு 1989ல் நேரு நூற்றாண்டை ஒட்டி ரயில்துறையால் ‘நெஹ்ரு யாத்ரி’ என்ற ’இந்திய தரிசனத்துக்கான ‘ ரயில் பயணச்சீட்டு ஒன்று அறிவிக்கப்பட்டபோது நானூற்றைம்பது ரூபாய் கொடுத்து அதை வாங்கிக்கொண்டு இந்தியாவின் விரிநிலத்தினூடாக ரயிலில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டேன். இமயமலை அடிவாரம் வரை சென்றேன்.
திரும்பி வந்தபிறகு அதே பயணச்சீட்டைமீண்டும் வாங்கிக்கொண்டு மீண்டும் ஒரு பயணம். இம்முறை இமயம் மீது மசூரி நைனிடால் ஆகிய ஊர்களுக்கு சென்றேன். மூன்றாவதாக அதே பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு அதே ஆண்டு மீண்டும் ஒரு பயணம் ஒரிசா வரைக்கும் சென்றுவந்தேன்.
திருமணமானபிறகு இந்தியப்பயணம் என்பது நிகழவில்லை. ஆனால் அருண்மொழியுடன் சிறுசிறு தொடர் பயணங்களில் இருந்துகொண்டிருந்தேன். நண்பர்களும் சுற்றமும் அமைந்தபிறகு அந்தப்பயண விழைவு மீண்டும் தலைதூக்கியது. என் பயண அனுபவங்களை நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். அதைக்கேட்டு ஊக்கமடைந்த என் நண்பர் மதுரை சண்முகம் அவர் அப்போது வாங்கியிருந்த வேகன் ஆர் என்ற வண்டியில் ஒரு பயணம் செல்ல விரும்பினார்.
2000- த்தில் வசந்தகுமார் நானும் அ.கா.பெருமாள் அவர்களும் இணைந்துகொள்ள மதுரையிலிருந்து கிளம்பி பாலக்காடு வழியாக கேரளாவிலுள்ள முக்கியமான பகவதி ஆலயங்களை வரிசையாகப் பார்த்துக்கொண்டு வடக்கே தலைச்சேரியில் தொடங்கி தெற்கே திருவனந்தபுரம் வரைக்கும் வந்து தமிழகத்துக்குள் நுழைந்து ஒரு வட்டத்தை முழுமைப்படுத்தினோம். ஒரு வாரம் நீண்டு நின்ற அந்தப்பயணம் ஒரு கனவுத் திளைப்பாக அமைந்தது. அது கொற்றவை எழுதுவதற்கான உந்துதலாகவும் திகழ்ந்தது.
அதன்பின் சண்முகத்தால் அடங்கி இருக்க முடியவில்லை. பயணம் பயணம் என்று துடித்துக்கொண்டே இருந்தார் ஆகவே மீண்டும் சில நாட்களில் அவருடைய வண்டியில் நாஞ்சில் நாடனையும் உடன் அழைத்துக்கொண்டு ஓர் இந்தியப்பயணத்தை மேற்கொண்டோம். ஒருவார காலம் மையஇந்தியாவைச் சுற்றி வந்தோம்.
மீண்டும் சில மாதங்களில் நாஞ்சில் நாடனுடன் கிளம்பி மேற்குக் கடற்கரையோரமாக சிவாஜியின் கோட்டைகளைப் பார்த்துக்கொண்டே மும்பையிலிருந்து மங்களூர் வரைக்கும் வந்து தமிழகத்துக்குள் நுழைந்தோம்.அதன்பிறகு மேலும் சில மாதங்களில் அதே வண்டியில் யுவன் சந்திரசேகரை இணைத்துக்கொண்டு மைய இந்தியப்பகுதியில் உள்ள பௌத்த ஆலயங்கள் தோறும் ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டோம்.
அதன்பிறகு தான் சென்னை செந்தில் , ஈரோடு கிருஷ்ணன், ஈரோடு சிவா முதலிய நண்பர்கள் அறிமுகமானார்கள்.அவர்களிடம் இந்தப் பயணத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தபோது அவர்கள் தாங்கள் ஒரு பயணம் மேற்கொள்ள விரும்பினார்கள். அவ்வாறுதான் இந்த இந்தியப்பயணம் திட்டமிட்டோம். இந்தப் பயணத்துக்காகக் கிளம்பியபோதுதான் ராஜமாணிக்கம் எங்களை வழியனுப்ப ஈரோடு வந்து அறிமுகம் செய்துகொண்டார். அதன்பின் அவர் நீங்காத பயணத்துணைவராக ஆனார்.
ஒரு வண்டியில் எந்த விரிவான திட்டமும் இல்லாமல் கிளம்பிச் செல்வது அவ்வளவுதான். ஏறத்தாழ பதினைந்து நாட்கள். பெரும்பாலும் கிராமப்புறங்களினூடாக இப்பயணத்தை மேற்கொண்டோம். அன்று கூகிள் இல்லாததனால் அச்சிட்ட வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு அதில் வழியைத் தேடித்தேடி கண்டடைந்து சென்றோம்.
இப்பயணத்தின் திட்டமிடாமையே பெரும்பரவசத்தை அளித்தது. ஒவ்வொரு நாளும் எதைப்பார்க்கவிருக்கிறோம் என்று தெரியாது. அன்று இணையத்தில் இடங்கள் பதிவாகவில்லை என்பதனால் நாங்கள் பார்த்த பெரும்பாலான இடங்கள் அங்கு சென்றபிறகு தான் அப்படி ஒரு இடம்இருப்பதே எங்களுக்கு தெரியவந்தன. அந்தக் கண்டுபிடிப்பு அளிக்கும் கொந்தளிப்பை இனி எவரும் அடையமுடியாது, ஒவ்வொன்றும் ஏற்கனவே முழுமையாகப் பதிவாகிவிட்டன. அனேகமாக இன்று காட்சி வடிவில் முழுமையாகப் பார்த்துவிட்டுத்தான் ஓர் இடத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
அப்போது ஒரு விதி செய்திருந்தோம். ஒவ்வொரு நாளும் காலையில் ஓர் இடத்தில் இருக்கவேண்டும். ஒருபோதும் சூரியஉதயத்தையோ கதிரணைவையோ தவறவிடக்கூடாது. ஆகவே விடியற்காலையிலேயே எழுந்துவிடுவோம். காலைஉணவிற்கு முன்னரே ஒரு முதன்மையான ஆலயத்தையோ தொல்லியல் நிலத்தையோ பார்த்துவிடுவோம். எங்கு கதிரணைகிறதோ அங்கு அரைமணிநேரம் நின்று அந்நாளை முழுமை செய்வோம். மாலை ஏழரை மணிக்குள் ஏதேனும் ஒரு சிறு நகரத்தில் ஓர் அறை கண்டுபிடிப்போம்.
முற்றிலும் புதிய ஊருக்குச் சென்று அன்று தங்குவதற்கான இடத்தைத் தேடிக்கண்டுபிடித்து பேரம் பேசி அமர்த்திக்கொள்வதென்பது இப்பயணத்தின் மிகுந்த குதூகலங்களில் ஒன்றாக இருந்தது. அவ்வாறு சென்று கொண்டே இருந்த பயணத்தில் இன்று நினைக்கையில் அலையலையாக எழுந்து வந்த மலைகள், ஒளிர்ந்து ஓடிச் சென்ற ஆறுகள், ஒவ்வோர் இடத்திலும் நிரம்பியிருந்த மனிதமுகங்கள், நினைவில் எழுந்தபடியே உள்ளன.அவையனைத்தும் இன்று எங்கள் நினைவில் மட்டுமே எஞ்சியுள்ளன.
அன்று இணையம் வரத்தொடங்கியிருந்தது. அன்றன்று எழுதிய குறிப்புகளை எனது இணைய தளத்தில் பதிவேற்றினேன். ஒவ்வொரு ஊரிலும் கணிப்பொறியை வைத்துக்கொண்டு அன்றைய நிகழ்வை எழுதி அடுத்த பயணத்தில் எங்கு இணைய நிலையம் இருக்கிறதோ அதைக் கண்டுபிடித்து உடனடியாக மின்னஞ்சலில் ஹரன் பிரசன்னாவுக்கு அனுப்பினேன். ஹரன் பிரசன்னா அவற்றை என் இணையதளத்திற்கு ஏற்றினார். சில தருணங்களில் பயணத்தை பதிவு செய்து அவருக்கு அனுப்பி அவர் அதைத் தட்டச்சு செய்து ஏற்றினார். அவ்வாறாக பயணம் முடித்து திரும்பி வரும்போது மொத்த பயணமும் பதிவாகியிருந்தது. பின்னர் இவற்றை ஒரு நூலாக ஆக்கலாம் என்று தோன்றியது.
இந்தக் குறிப்புகளை விரித்து கூடுதல் தகவல்களுடன் எழுதலாம் என்ற எண்ணத்தினால் அவற்றை நூலாக்குவதை தவிர்த்துக்கொண்டே இருந்தேன். ஏனெனில் இவை எல்லாமே அந்தந்த இடங்களில் அவ்வப்போது எழுதப்பட்டவை.ஆகவே அவசரக்குறிப்புகளாக இருந்தன. சில இடங்களில் ஓரிரு பத்திகள் மட்டுமே எழுதியிருந்தேன். ஆனால் பயணம் முடிந்து ஓராண்டு தாண்டியபிறகு அவற்றை நினைவில் இருந்து மீட்டெழுதும்போது செயற்கையாக இருந்தது. வெறும் தகவல்களாக அமைந்திருந்தது. நினைவுகூர்தல் வேறு அன்றன்று எழுதுதல் வேறு என்று உணர்ந்தேன்.
அதன்பின்னர் குறிப்புகளாகவே இவற்றைப் பிரசுரித்தால் என்ன, அந்தத் தற்காலிகத்தன்மைக்கு ஓர் அழகும் முக்கியத்துவமும் இருக்கத்தானே செய்கிறது என்று தோன்றவே அப்படியே அந்நூல் வெளியாகியது.என்னுடைய பயணநூல்களில் மிக விரும்பப்பட்ட நூல்களில் ஒன்றாக இதுஇருப்பதற்குக் காரணம் இந்த உடனடித்தன்மைதான். இந்த நூலைப்படித்த பலரும் ஒருபயணக்கட்டுரை படிப்பது போல அல்ல. என்னுடன் சேர்ந்து பயணம் செய்வதுபோலவோ அக்குறிப்புகளை தாங்களும் சேர்ந்து எழுதுவது போலவும் இருந்தது என்றுசொன்னார்கள்.
என்னுடைய பயணங்கள் தொடர்ந்து இணையத்தில் வந்துகொண்டிருந்தபோது பல ஆயிரம் வாசகர்கள் ஒவ்வொரு நாளும் வாசித்து உடன்வந்துகொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் எழுதிய வரி எங்கள் உடன் சேர்ந்துபயணம் செய்த அனுபவம் கிடைத்தது என்பது தான்.அடுத்த ஆண்டே அருகர்களின் பாதை என்று நூலாக வெளிவந்த இன்னும் ஒருவிரிவான இந்தியப்பயணத்தை நடத்தினோம். ஈரோட்டிலிருந்து சமயத்தலங்களினூடாக பாகிஸ்தானின் எல்லையில் இருக்கும் லொதுர்வா என்னும் ஊர்வரைக்கும் சென்று வந்த ஒரு பெரிய வட்டம். அந்நூல் நான் எழுதிய பயணக்கட்டுரைகளிலேயே எல்லாவகையிலும் முழுமையானது என்பது என்னுடையஎண்ணம்.
இந்த நூல் அந்த நூலுக்கான ஒரு தொடக்கம் போல அமைந்தது. தமிழ்ப்பயணக்குறிப்புகளில் இந்த நூல்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. இன்று ஒருவர் கேட்கலாம். இத்தகைய பயண நூல்களால் இன்று என்ன பயன். இன்று எல்லாஊர்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. காட்சி வடிவிலேயே அவற்றைப் பார்க்கமுடியும். நூற்றுக்கணக்கானோர் அங்கெல்லாம் சென்று ஏராளமான குறிப்புகளைஇணையத்தில் எழுதியிருக்கிறார்கள். ஓர் இணையம் வழியாகவே ஒவ்வொருஊரைப்பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். அதற்கான பதில் இதுதான்.அனைத்துத் தகவல்களும் முன்னரே இங்குள்ளன. ஆனால் பயணம் நாம் தான்செய்யவேண்டும்.
இப்பயணக்கட்டுரைகள் எங்கள் உடன் பயணிக்கும் அனுபவத்தை அளிக்கின்றன.இவை எளிய பயணக்குறிப்புகளாக இல்லை. என்ன இருந்தாலும் ஓர் எழுத்தாளன்எழுதியவை. அந்த எழுத்தாளனுடைய தேடல்கள் கண்டடைதல்கள் இலக்கியவாதிக்கேஉரிய நுணுக்கமான அன்றாட அவதானிப்புகள் ஆகியவை இக்குறிப்புகளில் உள்ளன.ஆகவே இவை ஒருவகையான இலக்கிய முக்கியத்துவம் கொண்டவை. பெரிதும்விரும்பப்பட்ட இந்த நூல் விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக மீண்டும் வெளிவருகிறது. இதை முன்பு வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பத்திற்கும் எனதுமனமார்ந்த நன்றி.
ஜெ
03.07.2024
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்தியப் பயணம் நூலின் முன்னுரை)