கோவை, காந்தி, எதிர்பாராமல் ஓர் உரை
கோவை காந்தி நினைவகம் இணையப்பக்கம்
அன்புள்ள ஜெயமோகன்
கோவை காந்தி இல்ல பதிவைப் பார்த்ததும் என் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.தமிழகத்தில் காந்தியை இன்றும் மறவாமல் அவர் ஒரு நாள் வந்து தங்கிய இடத்தை இவ்வாறு கொண்டாடுவது மிக சிறப்பு.
அதே வேளையில் என் மனம் கடந்த வருடம் நான் போர் பந்தரில் உள்ள காந்தி பிறந்த இல்லத்துக்கு சென்றேன். அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன். அவ்விடம் மிக மோசமாக பராமரிப்பு இல்லாமல் மிகவும் உதாசீனப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது.புகைப்படகாட்சி அறையிலும் நூலகங்களிலும் நாய்கள் படுத்து கிடந்தன.காந்தி பிறந்த அறை மிக அசுத்தமான முறையில் இருந்தது.
அங்கு இருந்த ஓரே பணியாளரிடம் இதைப் பற்றி கேட்ட போது அவர் மிக ஏளனமாக இந்த இடத்தை இன்னும் இடிக்காமல் இருப்பதே பெரிய விஷயம் என கூறினார்.குஜராத்தின் கடந்த இருபதாண்டு அரசியல் சூழலில் அவர் சொல்வது உண்மை என தோன்றியது.ஏனென்றால் நான் வல்லபாய் பட்டேல் சிலையை பார்த்து விட்டு தான் அங்கு சென்றேன்.இரண்டையும் ஒத்து பார்க்கவே என்னால் இயலவில்லை.எவரெஸ்ட் சிகரத்தையும் கடற்கரையில் குழந்தை மண்ணால் கட்டி விளையாடும் கோபுர சிகரத்தையும் காண்பது போல் தான்.
இச்சூழலில் தான் உங்கள் இன்றைய பதிவு மனதிற்கு மிகுந்த உவகை அளித்தது.
மிக்க நன்றி
துரைராஜ் சுகுமார்
அன்புள்ள துரைராஜ்
குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே அரசு நிர்வாகம் செய்யும் காந்திய அமைப்புகள், காந்தி நினைவிடங்கள் எல்லாமே கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. பல காந்திய கல்வி அமைப்புகள் வழக்கமான கல்விநிறுவனங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அக்கறையே இல்லாதவர்கள் அங்கே தலைமையேற்றிருக்கிறார்கள். பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்
காந்தியை ஒரு ‘வரலாற்றுச் சின்னம்’ ஆக முன்வைத்தால் அப்படித்தான் நிகழும். வரலாற்றுச்சின்னங்கள் எல்லாமே இந்தியாவில் பாழடைந்தே கிடக்கின்றன. அண்மையில் ரத்னகிரியில் பாலகங்காதர திலகர் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்றோம். முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.
காந்தியை எதிர்காலத்திற்குரியவராக அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசெல்லவேண்டும். அவரை அவர்கள் பயனுள்ளவராக எண்ணினால், அவரை மேலெடுத்தால் காந்தி வாழ்வார். அதுவே உண்மையான நினைவுப்பணி.
கோவையில் எப்போதுமே மெய்யான காந்தியவாதிகள் இருந்திருக்கிறார்கள். கோவை அய்யாமுத்து, தி.சு. அவினாசிலிங்கம், பெரியசாமி தூரன் என. இன்றும் உள்ளனர். உண்மையில் வட இந்தியா காந்தியை கைவிட்டு விட்டது. தென்னிந்தியா காந்தியை மீண்டும் இந்தியாவுக்கு அளிக்கும். நாம் அப்படித்தான் பக்திப்பேரியக்கத்தை இந்தியாவுக்கு அளித்தோம். காந்தியையே நாம்தான் காந்தியாக ஆக்கினோம்.
காந்திக்கு உருவாகும் தனியார் நினைவிடம் அவ்வகையில் ஒரு பெரிய தொடக்கம்
–ஜெ